புதன், 20 செப்டம்பர், 2023

ஸநாதனதர்மம்


சு. அறிவுக்கரசு 

3

ஸநாதனம் என்றால் நித்தியமான அல்லது புராதன விதி என்று பொருள்படும். ஹிந்து மதத்திற்கு ஆரியமதம் என்ற பெயரும் இடப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆரிய மகா ஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது. ஆரிய மகாஜாதியாரின் முதல் குடும்பங்கள் இந்தியா என இப்பொழுது கூறப்படும் நாட்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். அதற்கு ஆரிய வர்த்தம் என்று பெயர். கிழக்கு மேற்குச் சமுத்திரங்களுக்கும் ஹிமாலயம் விந்தியம் ஆகிய இரண்டு பர்வதங்கட்கும் மத்தியிலுள் பூமியை ஆரிய வர்த்தம் எனக் கூறுவர் பெரியோர். நூல் வடிவில் அல்லாது ஞாபகத்தில் வைத்து வருவதான "சுருதி" நான்கு வேதங்கள். ஸ்மிருதி என்பது தர்ம சாஸ்திரம் - மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, சங்கலிகிதஸ்மிருதி, பராசரஸ் ஸ்மிருதி - சுருதியும் ஸ்மிருதியும் ஸநாதனத்தின் அஸ்திவாரம். துணையாக 18 புராணங்களும் இரு இதிகாசங்களும்  ஆறு சாஸ்திரங்கள், சாங்கியம், யோகா, மீமாம்சம், வேதாந்தம், நியாசுரணம், விருத்தம், ஜோதிடம், 64 கலைகள் முதலியவை. இவையெல்லாம் மனிதன் மோட்சம் அடையும் வழிகளைக் கூறு கின்றனவாம்.

ஸநாதனத்துக்கு பிரமாணம், சாந்தேக்ய உபநிஷத் தின் வாக்கியமான "ஒன்றேயொன்று இரண்டற்றது" என்பதே. என்றால் அத்வைதமோ ஸநாதனம்? ஸநாதனத்தில் பிரம்மம்/ கடவுள் என்பதாம். புருஷன் என்றும் சொல்வார்கள். பிரகிருதி புருஷனுக்கு எதிரிடையானது. புருஷனிடம் சத்து, சித்து, ஆனந்தம் ஆகிய மூன்றும் விளங்குமாம். பிரகிருதியிடம் சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களாம்.

இந்துக்களனைவரையும் ஒன்று சேர்ப்பித்து ஒரே மதத்தவராக்கும் முயற்சியாக 1907இல் காசிப் பிரதான ஹிந்து வித்யா சாலைக் கமிட்டியாரால் பிரசுரம் செய்யப்பட்ட "ஸநாதன தர்மம்" என்ற நூலின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

ஹிந்துமதம் எனப்படுவது ஒரே மதமல்ல. ஆறு மதங்களின் கலவை, இதைச் செய்து ஹிந்து எனப் பெயர் வைத்தவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் ஜோன்ஸ்  - ஆண்டு 1801. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், ஸ்ரவம் எனும் ஆறு. ஷண்மதம் என்பார்கள். ஒன்றாக்கினாலும் வேறுபாடுகள் நீடித்தன. அவற்றை நீக்குவதற்கான சிறு முயற்சியே ஸனாதனம்.

வேதங்கள் நான்கும் அடிப்படை வேதத்தின் பாகமாக பிராமணங்கள் வைதிக கர்மங்களின் அனுஷ்டான விதிகளைக் கூறும். வேதம், வைதிக செயல்பாடுகள் மனிதர்கள் அனைவர்க்கும் உரியன அல்ல. அவை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியன. எனவே ஸநாதனம் பார்ப்பனர்க்கே உரியது.

ஸநாதனம் கூறுகிறது: உலகங்களை சிருஷ்டி செய்பவர் பிரம்மா. உலகங்களை பரிபாலனம் செய்து காத்து வருவது விஷ்ணு - காலக் கிரமத்தில் (க்ஷீணித்து) நலிவடைந்து அழியும்போது வயப்படுத்துவது மகாதேவன் அல்லது சிவன், இவையே மும்மூர்த்திகள்.

உலகில் அதர்மம் மேலிட்டு, கெட்டு வரும்போது முழுவதும் கெடாமல் காப்பதற்காக விஷ்ணு அவதாரங்கள் எடுத்ததாம். அவை மீன், ஆமை, பன்றி, நரசிம்மம், குள்ள பார்ப்பனன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், புத்தர், கல்கி இது இனிமேல் வரப் போவதாம். சுமார் 2650 ஆண்டுகளுக்கு முன் கபிலவாஸ்து மன்னர் குடும்பத்தில் பிறந்து பவுத்த மதத்தை உருவாக்கியவர் - ஸநாதனத்திற்குச் சவால் விட்டவர். அவரை ஸநாதன அவதாரம் என்பது எவ்வளவு மோசடியானது என்பதை யோசிக்க வேண் டும். ஸநாதனமே பித்தலாட்டம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.

மரணத்திற்குப் பின் பிரவேசிக்கும் உலகங்கள் மூன்றாம், பூர்வ, புவர், சுவர் என்று அவற்றிற்கு பெயர்களாம். இவை மூன்று தவிர, இன்னும் நான்கு மகாசிவாகங்கள் உண்டாம். புவர் லோகத்துள் பிரேத லோகமும் பிதுர்லோகமும் உண்டாம். சொர்க்கத்தில் இந்திர லோகமும் சூரிய லோகமுமாம்.

இவற்றைப் போய்ப் பார்த்து வந்தவர்கள் யார்? எல்லாம் கப்சா. கற்பனை.

இறப்பை, அதன் பிறகு நடப்பவற்றைச் ஸநாதனம் கீழ்க்கண்டவாறு பளுகுகிறது. உயிர் பிரிந்தவுடன் பிரேத லோகத்தில் வசிக்கிறான். பிறகு பிதுர்ரூபமாகி பிதுர் லோகம் போகிறான்.

ஓர் ஹிந்து ஆயுள் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கர்மங்களில் 10 முக்கியமாம். இதில் ஆறாவது, கைக் குழந்தைக்குச் சோறு ஊட்டுதல், அன்னப்பிராசனம் என்கிறது ஸநாதனம். ஏழாவது சூடாகரணம். தலைமயிரை மழுங்கச் சிரைத்து "குடுமி" வைத்தல். இப்போது புரிகிறதா ஸநாதனம் யாருக் கானது என்று! (குடுமி வைக்கும் பார்ப்பனர்க்கு) பிறகு உபநயனம் - பூணூல் அணிவித்தல்! பார்ப்பனர்க்கான சடங்குதானே - க்ஷத்ரியனோ வைசியனோ இங்கே பூணூல் அணிவதே இல்லையே! இன்னும் சொன்னால் சத்திரியனைப் பரசுராமன் அழித்து விட்டான். எல்லா வர்ணத்தாரும் வணிகம் செய்து வைஸ்யன் ஆகி விட்டான். பார்ப்பனர்  - சூத்திரர் மட்டுமே தற்போது உள்ளனர் என்று நீதிமன்றங்கள், தீர்ப்பு கூறியுள்ளன. எனவே ஸனாதனம் முதல் வர்ணமான பார்ப்பனர்க் கானது. எப்படி எல்லா ஹிந்துக்களுக்குமானது? பொய்தானே? பூணூல் அணிந்த பின் கல்வி, கல் யாணம் என்கிறது ஸநாதனம். பூணூல் போடக் கூடாத சூத்திரர், ஆதி திராவிடர் (பஞ்சமர்) பழங் குடியினர் படிக்கவே கூடாதே! பின் எப்படி அனைத்து ஹிந்துக்களுக்கும் பொருந்தும் ஸநாதனம்? அப்படிப் பேசுவது மோசடிதானே!

பிணத்தை எரிக்கச் சொல்வது ஸநாதனம். நீர்க் கடன் என்கிறது அதர்வன வேதம் - தொடர்ந்து, திதி, திவசம், கருமாதி, சிரார்த்தம் எனப் பார்ப்பனர்க்கு வருமானம் வரும் வழிகள் உண்டு. ஸநாதனிகள் தவிர்த்து பெரும்பான்மை ஹிந்துக்கள் புதைக் கின்றனர். உலகம் முழுக்க எல்லா மதத்தினரும் புதைக்கின்றனர். 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட எகிப்து பிரமிடுகள் மன்னர் பரம்பரையினரின் சமாதிகள் தானே!

எரிக்கப்பட்ட ஜீவன் பிரேதலோகத்தில் இருந்து, பிதுர்லோகத்திற்குச் செல்வதற்கு ஒரு சடங்காம். சபிண்டீகரணக்கிரியை என்கிறது ஸநாதனம். இதைச் செய்யும் பார்ப்பனரைத்தான் கொச்சையாக சவண்டிப் பார்ப்பான் என்கிறோம். பார்ப்பனர்களில் 1886 உட் பிரிவுகள் உள்ளன. திருமண சம்பந்தம் செய்யக் கூடாத தனித்தனிப் பிரிவுகள். இதில் சவண்டிகள் தாழ் நிலைப் பார்ப்பனர்கள். அர்ச்சகர்களும் அப்படியே!

பரிசுத்தமான சுற்றுச்சூழல் தேவை. அதே போல, பரிசுத்தமான உணவும் தேவை, அதற்காக வெள்ளைப் பூண்டு, வெங்காயம் முதலிய சில சரக்குகளை உண்ணக் கூடாது.

தினமும் செய்ய வேண்டிய யக்ஞங்கள் (யாகங்கள்) என ஸநாதனம் சொல்பவை.

1) ரிஷிகளுக்கு/வேதங்களுக்கு

2) தேவர்களுக்கு

3) பிதுர்க்களுக்கு

4) நரர்களுக்கு

5) பூதங்களுக்கு

யக்ஞம் செய்தலும் செய்வித்தலும் பார்ப்பனர்க்கே உரியன. அப்படியானால் ஸநாதனம் பார்ப்பனர்க்குத் தானே! எல்லா ஹிந்துக்களுக்குமானது என்பது மோசடிதானே!

ஸநாதனம் கூறுகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி குணங்கள் இருப்பது போல, பற்பல நாட்டினர்க்கும் தனித்தனி குணங்கள் உண்டு. ஆரிய வம்சத்தாருள் முதலில் பிறந்த வகுப்பினர்க்கு (பார்ப்பனர்) சில குறிப்பிட்ட படி நிலைகள் உண்டு. அவை நான்கு நிலைகள், பிரம்மசாயம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியன. கல்வி கற்று முடித்து கல்யாணம் செய்து நல்ல குடும்பி என்று பெயர் பெற வேண்டும். பின்பு வானப் பிரஸ்த வாழ்க்கைக்குப் பின் சன்யாசம் கொள்ள வேண்டும். இதற்கு நேர் விரோதமாக காஞ்சி சங்கர மடத்துச் சங்க ராச்சாரிகள் கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம் வாழாது, சன்னியாசி ஆகிறது ஸநாதன தர்ம விரோதமல்லவா?

அடுத்ததாக, ஸநாதனம் நான்கு வர்ணங்களைப் பேசுகிறது. "குருமார்கள், மந்திரிகள், ஆசிரியர்கள், நூலாசிரியர்கள், கவி போன்றோர்கள் பிராம்மண வருணத்தில் ஜனனம்" ஆகியும் இவர்களும் சத்திரி யர்களும் தத்தம் உயர்வைப் பேசியதால் பெருந்தீங்கு விளைந்துள்ளது. இவர்களிடம் மற்றவர்க்கு போட் டியும் வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. பூர்வ காலத் தில் இருந்த ஒற்றுமையும் பிரீதியும் போய் விட்டன.

சூத்திர வர்ணத்தவன் உழைப்பு, விசுவாசம், சிசுருஷை இவைகளுக்கு பெயர் பெற்றவனாக உழைத்து விளங்க வேண்டும். வைசியன் பிரயாசை, சாமர்த்தியம், தானம் அமைந்து விளங்க வேண்டும். சத்திரியன் தைர்யம், தயாளம், உறுதி ஆகிய குணங்களை பெற்று நடத்தல் வேண்டும். பிராமணன் பொறுமை, வித்தை, பரிசுத்த, சத்தியம், ஆத்ம தியாகம் இவற்றிற்குப் பெயர் பெற்றவனாக இருத்தல் வேண் டும்" (நூலின் பக்கங்கள் - 155,156)

மனிதர்கள் பிறப்பிலேயே நான்கு வர்ணங்களாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுவே ஸநாதனம். உலகத்தில் எந்த மதத்திலும் எந்த நாட்டிலும் இல்லாத பேதம் அல்லவா, ஸநாதனம்? ஒழிக்கப்பட வேண்டி யது தானே! சமத்துவத்திற்கு எதிரான தத்துவம் தானே ஸநாதனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக