திங்கள், 11 செப்டம்பர், 2023

ஸனாதனத்தை எதிர்ப்பதில் பெண்கள் முன் வரட்டும்!


'ஸனாதனத்தைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவதா? 'ஸனாதனம்' என்றால் சாதாரணமானதா? அது அழியாதது; காலம் காலமாக நிலை பெற்றது - ரிஷிகளால் அருளப்பட்டது' என்றெல்லாம் பார்ப்பனர்களும், பார்ப்பனீய கிருமிகளால் தாக்கப்பட்டவர்களும் 'தாம் தூம்' என்று குதிக்கிறார்களே தவிர 'ஸனாதனம்' என்றால் என்ன? அதன் பொருள் என்ன? என்று இதுவரை யாராவது அறிவு நாணயமாக, யோக்கியப் பொறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறார்களா?

காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தனது 'தெய்வத்தின் குரல்' முதல் பாகத்தில் அவரை அறியாமலேயே ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்.

'ஸனாதனம்' என்றால் வர்ணதர்மம் என்று கூறிவிட்டார்.

வர்ணதர்மம் என்றால் பிறப்பின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவாகும். இது கடவுள் பிர்மாவால் படைக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதற்கும் ஒரே கடவுளா? நாட்டுக்கு நாடு கடவுள் வெவ்வேறா? ஒரு மதக் கடவுளை இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர் ஒப்புக் கொள்கிறார்களா?

ஒரு மதத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மதத்தை ஏற்க மாட்டார். அப்படியானால் இந்த உலகத்தை ஒரு கடவுள் படைத்தார் என்பது அடிபட்டுப் போகவில்லையா?

வாழும் மனிதனுக்கோ, மற்ற உயிரினங்களுக்கோ கடவுள் எந்த வகையில் எல்லாம் கை நீட்டி உதவி செய்கிறார்?

காட்டு விலங்காண்டிக் காலத்தில் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆட் பட்டவன் தனது அறியாமையால் கற்பித்துக் கொண்ட கற்பனை யல்லாமல் கடவுளாவது வெங்காயமாவது -

இதில் இன்னொன்றையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மக்களை எல்லாம் கடவுள் படைத்தார் என்றால் அந்த மக்களுக்கிடையே வேறுபாட்டையும், ஏற்றத் தாழ்வையும், உயர்வு - மட்டத்தையும் படைத்தார் என்பதை வாதத்துக்காக ஒத்துக் கொண்டால், அந்தக் கடவுள் நேர்மையானவன் யோக்கியமானவன் என்று கருத இடம் உண்டா?

இதில் பரிதவிக்க வேண்டிய ஒன்று - கடவுள்களுக்குள் சண்டை, கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களுக்குள் மோதல் - கொலை! இது என்ன கூத்து - கேவலம்!

மக்களிலும் ஆண் உயர்வு, பெண் அடிமை என்றால், கடவுளின் பாரபட்சமும் குறுகிய கோணல் புத்தியும் வெட்கக் கேடானது அல்லவா?

இவ்வளவுக்கும் கடவுளுக்கு பெண்டாட்டி உண்டு. மகள் உண்டு. ஆனாலும் பெண் என்றால் கேவலம் - அடிமைகள்!

ஹிந்து மதத்தை எடுத்துக் கொண்டால், அதற்கென்று வரலாறு கிடையாது - அதை உண்டாக்கியவன் யார் என்று தெரியாது? காலமும் தெரியாது.

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறுகிறார் - 'ஹிந்து' என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்கிறார்.

இந்தியாவை 'பாரத்' என்று மாற்றுவதற்கு பிரதமர் மோடிஜியும், அவரின் வட்டாரங்களும் சொல்லும் காரணம் என்ன? அது வெள்ளைக்காரன் வைத்த பெயராம், அதனால் மாற்றுகிறார்களாம்.

அப்படியானால் வெள்ளைக்காரன் வைத்த ஹிந்து என்ற பெயரை மாற்ற வேண்டியதுதானே - தயார் தானா?

ஏற்கெனவே பைத்தியக்காரன் - அவன் சாராயம் குடித்த நேரத்தில் தேளும் கொட்டினால், எப்படி உளறுவானோ, அப்படியல்லவா உளறி வைத்திருக்கிறார்கள்.

நேற்று ஒரு தகவல் வந்துள்ளது; மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த தகவல் அது.

மத்தியப் பிரதேசத்தில் பன்னா மாவட்டத்தில் ஒரு கோயில் - பத்மாவதி கோயில் என்று பெயர். 

அந்தக் கோயிலைக் கட்டியவர்கள் சமஸ்தானத்து பட்டத்து மகாராணி ரித்தேஸ்வரி ராஜேவின் முன்னோர்கள்  - மகாராணி ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் வசுந்துரா ராஜேவின் நெருங்கிய உறவினர்.

கிருஷ்ணஜெயந்தி அன்று பத்மாவதி கோயில் பிரகாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் விழாவில் கலந்து கொண்டு ஆரத்தி எடுக்க பன்னா மகாராணி முனைந்துள்ளார். (வழக்கமாக மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் முறைதான் அது).

பன்னா மகாராணி ஆரத்தி  எடுத்தபோது, தட்டைத் தொட விடாமலும், ஆரத்தி எடுக்க விடாமலும், கோயிலுக்குள் நுழைய விடாமலும் அடித்து வெளியே தள்ளியுள்ளனர் அர்ச்சகப் பார்ப்பனர்கள்.

இவ்வளவுக்கும் பட்டத்து இளவரசர் அருகில் இருந்தும் தடுக்க முடியவில்லை. விழுந்த மகாராணியும், தனது தாயாருமான ரித்தேஷ்வர் ராஜேயைத் தூக்கிவிடத் தான் முடிந்தது.

பட்டத்து ராணி தள்ளி விடப்பட்டதற்குக் காரணம் என்ன என்று தெரியும் போதுதான் ஹிந்து மதத்தின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுகிறது.

அந்த ராணி கணவரை இழந்த விதவையாம் - அதுதான் காரணமாம்! இதுதான் அர்த்தமுள்ள ஹிந்துமதம். நம்பித் தொலையுங்கள்!

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததுபோல, மன்னர்கள் கட்டிய கோயிலில் மன்னர் பரம்பரையைச் சார்ந்த பட்டத்து ராணி ஆரத்தி எடுக்க முடியவில்லை - காரணம் - கணவனை இழந்தவர்.

ஹிந்து மதத்தில் 'ஸனாதனம்' என்பது என்ன என்று இப்பொழுது புரிகிறதா?

ஸனாதனத்தை எதிர்ப்பதில், எரிப்பதில் முன் வரிசையில் நிற்க வேண்டியவர்கள் பெண்களே!

குறிப்பு: தந்தை பெரியார் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 அன்று முற்பகல் 10 மணிக்கு "பெண்களும் ஸனாதனமும்" என்ற கருத்தரங்கத்தைக் கேட்க - பார்க்கத் தவறாதீர்கள்.

வீழட்டும் ஸனாதனம்!

வீறுகொண்டு எழட்டும் சமதர்மமும், சமத்துவமும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக