செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (3)

பதிலடிப் பக்கம்

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (3)

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

5

'பட்டேல்... சொன்ன மாதிரி மதங்களின் பிரதிநிதிகளான மடங்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும். மடாதிபதிகள் ராஜபோகங்களில் துயில்கிறார்கள். மிதக்கிறார்கள் என்ற தத்துவத்தை தகர்க்க வேண்டும். அதனால் தேஸத்தின் எல்லா மடங்களையும் இதற்காக நாம் வலியுறுத்த வேண்டும்.

எனவே பாரதிய மடங்களின் சபையை நாம் கூட்டவேண்டும். பாரதிய மடங்களின் சபையை கூட்டுவதற்கு முன், அவரவர்கள் மடத்துக்குப்போய் 'புது அரசியல் மூலம் ஸ்வதந்திர தேசமாகப் போகி றோம். இதுவரை இருந்த நிலை வேறு. இனிமேல் நாம் இருக்கப்போகும் நிலை வேறு. ஆகவே நம் மடங்களுக் கும் ஜீவாதார உரிமை பெற முயற்சிக்க வேண்டும்' என்று சொல்லச் சொன்னார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார்.

அதற்குப் பட்டபாடு அப்பப்பா - இந்த மாநாட்டைக் கூட்ட குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் என்ற உத்தமமான புருஷன் முன் வந்தார். இவர் சங்கராச்சாரி யாரிடம் அபார பக்தி கொண்டவர். மடங்களைப் பார்த்து பேசுவதற்காக மோட்டார் காரில் திருச்சியில் இருந்து புறப்பட்டு உடுப்பி, அதைத் தொடர்ந்துள்ள சிருங்கேரி மடம் ஆகிய மடங்களை நேருக்கு நேராய் போய்ப் பார்த்து விஷயங்களை விக்ஞாபித்தோம். உடுப்பியில் மத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த 8 மடங்கள் உள்ளன. இவை தவிர உத்தராதி மடம், சோதன மடம். சுமுதிர்த்த மடம். மந்த்ராலய மடம், எல்லாரையும் சந்தித்தோம்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் உள்ள "சுப்ரமண்யம்" என்ற மடத்துக்கும் போனோம்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்.

சிருங்கேரி மடத்துக்குப் போனபோது, மடாதிபதி நவராத்திரி உற்சவத்துக்கு வெளியே எழுந்தருளியிருந்தார். மாஜி ஜில்லா ஜட்ஜ் ஒருத்தர். இன்னொரு ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருத்தர் என முக்கியஸ்தர்களுடன் சிருங்கேரி மடாதிபதியை பார்த்தபோது... பெரியவர் சுத்தமான தமிழில் பேசினார்.

பெரியவாளின் கர்மானுஷ்டத்துக்கு நேருக்கு நேராக உதவிசெய்ய முடியாதே என்று சொல்லி விட்டார். 

பின்... அங்கிருந்து பாலேஹி என்னும் மடத்தின் மடாதிபதியை கடும் மழைக்கிடையே பார்த்து, மடங் களின் மாநாட்டுக்கு அழைத்தோம். சகடபுரம், அரி ஹரப்பூர் மடங்களுக்கு அலைந்துவிட்டு.. ஷிமோகா வந்து சங்க மேஸ்வர மடாதிபதி யையும் பார்த்தாச்சு.

அப்படியே மைசூர் போய் வைஷ்ணவ மடமான பரக்கார மடத்தைப் பார்த்து விஷ யத்தை விளக்கிவிட்டு கிழக்கு கருநாட காவில் வீர சைவ மடங்கள், வடக்கு கருநாடகாவில் கோதே, தும்கூர் இப்படியாக பாரதம் முழுதும் சுற்றி பூரிஜெகன்னாத் போனோம்.

அங்குள்ள பல வைஷ்ணவ மடங்களின் பிரதான மடத்தின் தலைவரான கிரிதாரிதாஸ் ராமானுஜர். அவரது வித்வான் துர்பலாச்சாரி மூலம் பல மடங்களை பார்த்தோம். பின் அயோத்திக்குப் போனோம்.

அங்குள்ள மடங்களைப் பார்த்து புது அரசியல் சாசனத்தில் மடங்களுக்கு சுதந்திரம் வேண்டி மகா பெரியவர் எடுத்துவரும் முயற்சிகளை விளக்கினோம்.

பின் இன்றைய பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சிந்து நகரத்து மடத்தையும் சென்றடைந்தோம்.

செட்டிநாட்டு குன்னக்குடி மடம், திருநெல்வேலி செங்கோல் மடம். முதல்.. சிந்து நகர மடம்வரை எல்லாரையும் நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு ஆட்சேபனையே தெரிவிக்கவில்லை. சரி...

டெல்லியில் மத மாநாடு நடந்ததா?

- - - - - 

மதஉரிமைகளுக்காக... அவற்றை நிறைவேற்றுவதற் காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை அலைந்து... பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதி களையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரி யத்தை விளக்கினேன்.

டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது.  யார் யார் கலந்து கொண்டனர்? கல், காடு, மலை, வெயில், மழை என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களில் இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. கராச்சி சிந்துநகர் மடத்தின் பிரதிநிதியை தவிர!

சின்ன வருத்தம்தான். அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்...

'Freedom of relation and maintaining religious institutions...' வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம். எங்கே? கலைவ தற்குக்கூட ஆட்கள் இல்லை.

இதன்பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து.... Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமெண்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று... பாகிஸ்தான், இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் 'All are  equal... All relegious are equal...' என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது Secular State என அரசியலமைப்பு சாசனம் அறிவித்தது. அதாவது எத்தனை மதங்கள், எத்தனை தர்மங் களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal  என்பதுதான்.

நமது மதாசாரப்படி.. தர்மம் எல்லார்க்கும் ஒன்று தான். அரசனும் தர்மத்துக்கு கட்டுப்படவேண்டும். ஏன் பகவானேகூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத் தருகிறது.

இதனைத்தான் 'தர்மவிதிக்கர்மம்' என்கிறோம். அதாவது. தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்குத் தண்டனை உண்டு.

இதனை பகவான் சம்பந்தப்பட்ட இரண்டு கதை களைக் காட்டி உங்களுக்கு விளக்குகிறேன். சில அத் யாயங்களுக்கு முன்... மனிதஉடம்பும் கிளித் தலையு மான ரூபம் கொண்ட சுகப்ரம்மம் என்பவர்... பரீட்சித்து என்னும் ராஜாவுக்கு 7 நாட்களில் பாகவதம் போதித்த கதையை சொன்னேன் ஞாபகம் இருக்கிறது.

சுகப்பிரம்மம்... பாகவதத்தை பரீட்சித்து ராஜாவுக்கு சொல்லும்போது... நடந்த உரையாடலை பாருங்கள். பாகவதம் என்றால் அதில் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறே வரும்.

சுகப்பிரம்மம் பரீட்சித்துவிடம் கதையை விளக்கு கிறார். 

“கோபியர்களோடு பகவான் கிருஷ்ணன் அலாதி ப்ரியம் வைத்திருக்கிறார். கோபியர்களும் கிருஷ்ணர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். எப்படியென்றால்... ராத்திரி மையிருட்டு நேரம்... நள்ளிரவுக்கு இன்னும் கொஞ்சநேரம்தான் பாக்கி

அப்போதும்...தங்கள் வீட்டை மறந்து, கணவனை மறந்து, எல்லாவற்றையும் மறந்து மெய்மறந்து கிருஷ் ணனுடன் ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறார்கள் கோபி யர்கள்.

எல்லாமே இளவட்ட கோபியர்கள். ஒருகட்டத்தில் அதில் ஒரேஒரு கோபிகையை மட்டும் தூக்கிக்கொண்டு கிருஷ்ணன் ஓடிவிடுகிறான். மற்ற கோபிகைகள் எல் லாம் அவளையும் கிருஷ்ணனையும் தேடுகிறார்கள்.

கிருஷ்ணனால் தூக்கிவரப்பட்ட கோபிகையும் 'என்னை விட்டுவிடு கிருஷ்ணா - வீட்டில் எல்லாரும் தேடுவார்கள் என பயப்படுகிறாள். இதுபோல பலசமயம் கிருஷ்ணன் பல கோபியர்களை தூக்கிச் சென்று லீலை கொண்டாடியிருக்கிறான்." என சுகப் பிரம்மம் சொன்னதும்.

பரீட்சித்து கேட்கிறான். 'என்ன ஸ்வாமி இது புரு ஷன் இருக்கும்போது ஒரு பத்தினியுடன் ஆடிப்பாடி அவளை கவர்ந்து கடத்திச்செல்வது. அந்த புருஷ னுக்கு பாவம் இழைப்பதாகாதா?- இதை கிருஷ்ணன் செய்யலாமா? நியாயமா இது... எனக் கேட்கிறான்.

அப்போது சுகப்பிரம்மம் சொல்கிறார்.

"ஆமாம் தப்புதான். பகவானாகிய கிருஷ்ணனா கவே இருந்தாலும் இதுபோல செய்தால் அது தப்புதான். அவனுக்கு இதற்கான தண்டனை உண்டு. நமது தர்மம் அப்படி சொல்லி யிருக்கிறது" என்கிறார்.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் இன்னொரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

- - - - -

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஓர் இடம். கதையைப் படிக்கும்போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கிடையே ஒரேயொரு விஷ யத்தில் மட்டும் கருத்து வேறு பாடு - என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்,

அப்படி என்ன கருத்து வேறுபாடு?

ப்ருந்தா விஷ்ணுவைத் தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படை யான் ஜலந்தருக்கோ சிவன்மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப் பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளை யாடிப் பார்க்க நினைத்தார். 

ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும்போது அவனை சந்தித்தார். 

"என்ன ஜலந்தர்? நீயோ சிவனை வழிபாடு செய் கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதிதேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவைவிட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?" என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

6

உடனே ஜலந்தரும்.... 'நான் பார்வதிதேவியை அடைய முடியுமா?- எப்படி? என கேட்கிறான்.

அதற்கு நாரதரே யோசனையும் கொடுக் கிறார்.

“சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப்பக்கம் போய் விடுவார். நீ என்ன பண்ணு- சாமவேதம் பாராயணம் செய்பவர் களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய். அதனைக்கேட்டு சிவ பெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு" சிந்திக்கத் தெரியாத ஜட மாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலகயோசனையை காதுகொடுத்து கேட்டான்.

அப்படியே...சாம கானம் பாட ஏற்பாடு பண்ணினான். இதைக்கேட்டு சிவன் லயித்திருக்க.. அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதிதேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோச னைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர். பார்வதி... தன்மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து 'ஸ்வாமீ...'-என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள்.

கைலாயத்தில் இப்படி

- - - - -

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப்பார்த்த விஷ்ணு... 'நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் - தேடிக் கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப் படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

'ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்' என சந் தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடி னாள். இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...

நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு இடையே வந்து 'பொத்'தென வந்து விழுந்தது ஒருதலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந் தத் தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தால் சிவனை மயக்கிய ஜலந் தர்... பார்வதியை கட்டிப்பிடிக்க இதனால் பார்வதி ஏழு கடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா? வேதத்தின் மயக்கத்தை, பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப் போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொரு வன் பலாத்காரப்படுத்துவதா? என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான். பிருந்தாவும் ஜலந்தர் போல ரூபம் எடுத்துவந்த விஷ்ணுவும், இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா. உடலோடு தன்மீது விழுந்தவன் கணவனா? இல்லை. தலைமட்டும் விழுந்தவன் கண வனா? சந்தேகம் அதிகரிக்க. அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். 'நான்தான் பக்தையே... என அறிமுகமும் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா.. 'அடப் பாவி உன் பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்து விட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்குச் சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக' பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம். அதாவது...கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பது தான் இக்கதை சொல்லும் நீதி. 

- - - - -

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகமரீதியாக இன்னும் அது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது. If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constitution, Bhraminism is Anti-law.

அதனால்... மநுதர்மத்தை பின்தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்வது கொள்கை தத்துவத்தை) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு மட்டும் அப்பாற்பட்டது. 

அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஹிந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்து விட்டு சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

'இளைஞர்களே... இதை நினைவில் கொள்ளுமாறு இருக்க.. தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்ல வேண்டும்.

ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது... உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர... நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்டகண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க தன்னைத்தானே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகி விடுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத் துக்கும் நல்லது...' என்று மதராஸ் ராஜதானியில் பேசி னார் விவேகானந்தர்.

இது-'இளையபாரதமே எழுக' என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக