ஞாயிறு, 5 மே, 2019

'தட்கலும்' சனாதனமும் ஒன்றா?

அகிலாண்டேஸ்வரி: சனாதன தர்மம் பிறப்பால் - மனிதனைப் பிரித்து வைத்திருப்ப தாகத் திராவிட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. உண்மையில் சனாதன தர்மம், பிறப்பால் மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறதா?
வேளுக்குடி கிருஷ்ணன்: நம்முடைய கைகளில் அய்ந்து விரல்களும் ஒரே அளவில் இருந்தால், நம்மால் எந்த ஒரு வேலையையும் சரிவரச் செய்ய முடியாது. அதே போல் மனிதப் பிறப்பில் வேறுபாடு இல்லாமல் இருந்தால், உலகம் இயங்க முடியாது. இருநூறு ஆண்டு களுக்கு முன்பு தேவைக்காக, மனிதப் பிறப்பில் இருந்த வேறுபாடுகளை, உயர்வு - தாழ்வு என்று மாற்றி, இவர்களெல்லாம் கோவிலுக்கு வரக்கூடாது என்று ஒரு சிலர் தவறாக நடந்து கொண்டார்கள். மனிதப் பிறப்பில் வேறுபாடு இருக்கிறதே தவிர, உயர்வு - தாழ்வு கிடையாது.
சனாதன தர்மத்தின்படி, யாரும் கோவிலுக்குள் போகலாம், கடவுளைத் தரிசிக் கலாம். எங்கு யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது நியதிக்கு உட்பட்டது. சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும், சிலரைத் தாழ்த்தியும் நடத்து கிறார்கள் என்று சொல்கிறோம். அரசாங்கம் நடத்தும் ரயில்வே துறையில் தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று இருப்பது எதற்காக? பணம் இருப்பவனுக்கு மட்டும் தான் அவசர வேலை வருமா என்ன? அரசாங்கமே பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் என்று ஏன் பிரிவினை ஏற்படுத்து கிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை . தங்களுடைய அரசியல் லாபத்திற்காக சனாதன தர்மத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் குறை கூறுகிறார்கள்.
(துக்ளக், 13.3.2019, பக். 31)
இவர்களின் விவாதத்தினைப் பார்த்தீர்களா? சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும், சிலரைத் தாழ்த்தியும் வைக்கவில்லையாம்! சிலர் தவறாக நடந்து கொண்டார்களாம். யார் அப்படி நடந்து கொண்டவர்கள்? ஏன் மூடு மந்திரம்? சாமர்த்தியமாக பதில் சொல்ல வந்த இடத்தில் கூட சமாளிக்க முடியாமல் உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதை கவனியுங்கள். அய்ந்து விரல்கள் ஒன்றாக இல்லையாம் - கேட்டுக் கேட்டு புளித்துப் போன வெண்டைக் காய் விளக்கெண்ணெய் விளக்கம் இது!
சரி, அவர்கள் கூற்றுப்படியே பார்ப்போம்! கட்டை விரல் பிராமணன், சுண்டு விரல் சூத்திரன், நடுவிரல் வைசியன், ஆட்காட்டி விரல் சத்திரியன் என்ற பேதம் உண்டா? சுத்த உளறல் - பேத்தல் - இவர்கள்தான் அவாளின் உச்சக்கட்ட அறிவுக் கொழுந்துகளாம் அறிவுக் கொழுந்துகளாம் - வாயால் சிரிக்க முடிய வில்லை. அரசியலுக்கு சென்றவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று கருதி விளையாடிப் பார்க்கிறார்கள். இதனை நம் திராவிட இயக்கத்தினர் புரிந்து கொண்டு பதிலடி கொடுத்தால் அந்த நொடியிலேயே தீர்ந்தது கதை.
பார்ப்பனர்களே உங்கள் முதுகில் பூணூல் எதற்கு? அதன் தாத்பர்யம் என்ன? பூணூல் போட்டவுடன் பார்ப்பனச் சிறுவன் துவிஜாதி (இரு பிறப்பாளன்) ஆவது எந்த அடிப்படையில்?
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் - மறுமைக்கும் உரிய உபயோக மான கருமங்களைத் தனித்தனியே படைத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).
இதுதான் ஹிந்து சனாதனத்தில் உயர்வு - தாழ்வுக்கு இடமில்லை என்பதற்கு ஆதாரமா?
சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும், சிலரைத் தாழ்த்தியும் நடத்துகிறார்கள் என்று சொல்லுகிறோம். அரசாங்கம் நடத்தும் ரயில்வே துறையில் தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று இருப்பது எதற்காக? பணம் இருப்பவனுக்கு மட்டும்தான் அவசர வேலை வருமா என்ன? அரசாங்கமே பணம் படைத்தவன், பணம் இல்லா தவன் என்று ஏன் பிரிவினை ஏற்படுத்துகிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. தங்களு டையே அரசியல் லாபத்திற்காக சனாதன தர்மத் தைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் குறை கூறுகிறார்கள் என்று துக்ளக்கில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கிறார் திருவாளர் வேளுக்குடி கிருஷ்ணன்.
தட்கல் - ப்ரீமியம் தட்கல் போல ஹிந்து மதத்தில் பார்ப்பனர்கள் அப்படி உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாரா? பொருளாதாரம் வளர்ந்தால் யார் வேண்டுமானாலும் அதில் பயணம் செய்யலாம். ஆனால் சனாதன தர்மத்தில் அவ்வாறு கிடையாதே! பிறப்பு தானே ஒருவனை நிர்ணயிக்கிறது? அதுவும் மறுமைக்கும், இம்மைக்குமான கருமங்களைத் தனித் தனியே வகுத்தாராம் பிர்மா - இது எப்படி தட்கலுக்கு ஒப்பீடாகும்?
கடைசியாக ஒரு கேள்வி; வேறொரு அரசு வந்து தட்கல், ப்ரீமியம், தட்கலை ஓர் ஆணை மூலம் எடுத்துவிட்டால் கதை தீர்ந்தது. அதுபோல ஹிந்து மதத்தில் சனாதனத்தை ஒழித்துக் கட்டத் தயாரா?


சாத்திரத்தில் உள்ளது உள்ளபடி வைத்து விவாதமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்பதை இது எடுத்துக்காட்டவில்லையா?
 -விடுதலை ஞாயிறு மலர், 20.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக