ஞாயிறு, 5 மே, 2019

வர்ணஜாதிப் பாகுபாடுகளும், இழிவுகளும்

இந்தியாவில் வாழ்ந்த ஆதிகுடிமக்களின் சமூகத்தில் ஜாதிப் பிரிவினைகள் இருக்க வில்லை. இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்து குடியேறிய பிறகே இந்த பிரிவுகள் ஏற் பட்டதாகத் தோன்றுகிறது. பொதுவான ஒரு பெயரைத் தாங்கியிருக்கும்,  பொதுவான ஒரு தோற்றத்தைப் பெற்றிருக்கும், பாரம்பரியமாக செய்யும் ஒரு தொழிலைப் பெற்றிருக்கும், பொது வடிவிலான வழிபாடு, சடங்குகள், கொண்டாட்டங்கள், சம்பிரதாயங்களைக் கொண்டிருக்கும், ஒன்று போலவே இருக்கும் குழு அல்லது குழுக்களின் தொகுப்பில் இருக்கும்,  இது போன்ற மற்ற குழுக்களில் இருந்து தனிப்பட்ட, ஒரு தெளிவான, அடை யாளம் காணக் கூடிய சமூகக் குழுவினர் என்று தங்களைத் தாங்களே கருதிக் கொள்ளும் அவர்களை மற்றவர்களும் அவ்வாறே கருதி வருவது என்பதையே  ஜாதி என்பதற்கான விளக்கமாகக் கூறலாம். இந்திய ஜாதி அமைப்பில் பொருளாதார, சமூக, மத அம்சங்கள் அடங்கியுள்ளன.
பொருளாதார ரீதியில் மக்கள் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை அது நிர்ணயிப்பதுடன், எதனை செய்யக் கூடாது என்று அதுவே தடுக்கவும் செய்கிறது. மத ரீதியில் ஒவ்வொரு ஜாதியும் செய்யவேண்டிய சடங்குகளையும், பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களையும் அது வரையறை செய்கிறது. ஒருவனது ஜாதியின் சடங்குகளைக் கடைப்பிடிப்பது மற்றும் சடங்குகளை செய்வதைப் பொருத்து  சமூக ஏற்பாட்டில் அவனது நிலை தீர்மானிக் கப்படுகிறது.  இந்திய ஜாதி அமைப்பின் முக்கிய பண்பாக விளங்கும் ஒருவனது செயல்களும் மற்றும் ஜாதி அந்தஸ்தில் அவனது நிலையும், ஒருவன் தொடர்ந்து தனது ஜாதிக்குள்ளாக மட்டுமே திருமணம் செய்து வந்ததால், தொடர்ந்து நீடித்து வந்தன.
1881 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 257 பெரும் ஜாதிகளும், 19,044 உப ஜாதிகளும் இருந்துள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவன் ஜாதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் முடியாது; மாற்றிக் கொள்ளவும் முடியாது. அவனது பிறப்பினால் மட்டுமே வருவது அது. பழங்காலந்தொட்டு, முடிவற்ற பல்வேறுபட்ட ஜாதி மரபணு மாற்றத்தினா லும், கலப்பினாலும், ஜாதிகளின் எண்ணிக்கை பெருகி வந்துள்ளன.  நிர்ணயிக்கப்பட்ட ஜாதி பழக்கவழக்கங்களைப் பின்பற்றத் தவறுவது,  சமூக நடைமுறைகள், மதக்கலாச்சாரம், சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக  மாற்றங்களை ஏற்றுக் கொள்வது, இணைவது அல்லது பிரிவது என்ற முறையில் புதிய ஜாதிகள் உருவாவ தற்கான காரணங்களாகிறது.
அரசியல் ரீதியிலான கூட்டணிகள் கொண்ட இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் என்று நான்கு குழுக்களாகப் பிரிக் கப்படுவதற்கு வழி வகுத்தன. சமஸ்கிருதத்தில் வர்ணம் என்றால், பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதையும்,  ஜாதி என்றால் இந்த நான்கு வர்ணங்களுக்குள் உருவான பல்வேறுபட்ட ஜாதிகள் என் பதையும் குறிப்பவையாகும்
வேதகாலத்துக்குப் பிந்தைய கால இந்திய சமூகத்திற்கு  சதுர் வர்ண என்ற நான்கு ஜாதிப் பிரிவினை பொருந்தாது. வர்ணநடைமுறைக்கு வெளியே அமைந்தி ருந்த அவர்ண ஜாதிகளை சேர்த்ததால் அவர்ணா (பஞ்சமர்) என்ற அய்ந்தாவது வர்ணம் உருவானது. சில ஜாதி மக்கள் வர்ணஜாதி தர ஏற்ற இறக்க வரிசை முறையில் தங்களைத் தாங்களே முன் நிலைக்குக் கொண்டு வர முயன்றதாலும்,  ஜாதிகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும், இந்த நான்கு வர்ண பிரிவினையில் குழப்பம்  ஏற்பட்டது. சென்னை மாகாணத் தில்  சத்திரிய, வைசிய வர்ண மக்கள் குறைந்துவிட்டதால்,  பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று வர்ணங்கள் மட்டுமே இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற் பட்டது. இவ்வாறு சமுதாய ஏற்றத் தாழ்வுப் பட்டியலில் பஞ்சமர்கள் கீழ்நிலையில் வைக்கப்பட்டனர்.
ஒரு பார்ப்பனரால் மட்டுமே கோயில் அர்ச்சகராக ஆகமுடியும். ஆனால் அவனால் அரசு அதிகாரியாகவோ, ராணுவ வீரனாகவோ ஆக முடியாது. குறிப்பாக அவன் எப்போதுமே விவசாயியாக ஆகமுடியாது.
- (சென்னை மாகாணத்தின் சிறுபான்மையின மக்கள்
- முனைவர் எஸ். சரஸ்வதி, இந்தோலாஜிகல் புத்தக நிலையம், மைலாப் பூர் சென்னை-4)
தீண்டாமை
தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமானது என்பதையும்,  அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறது என்பதையும், தீண்டாமை ஒழிந்தால்தான் நாட்டில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ முடியும் என்பதை இப்போது அனைத்துக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்து மதத்தை சாராதவர்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்களும், இந்துமதப் பற்றுடைய மக்களால் அந்நியர்கள்,    மிலேச்சர்கள்  என்று இழித்துக் கூறப்பட்ட வேற்று மதத்தினரும், உயர்ஜாதி இந்துக் களுடன் தீண்டாமை என்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தார்கள். ஆனால்,  நீண்ட காலமாக இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வரும்  தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களோ உயர்ஜாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும்,  அவர்கள் வசிக்கும் தெரு, தண்ணீர் எடுக்கும்  கிணறு அல்லது குளம்,  பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றை சமத்துவமாக அனுபவிக்க முடியாதவர்களாகவும், சண்டாளர்கள் என்றும் பாபிகள், என்றும் பஞ்சமர்கள் என்றும், பாதகர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின் றனர்.இந்தத் தகாத நடத்தைக்குக் காரணம் என்ன என்பதை கொஞ்சம் பொறுமை யோடு ஆலோசித்தால் விளங்காமற் போகாது.
அந்நியராக இருந்தாலும், மற்ற உயர் ஜாதி இந்துக்களைப் போலவே அவர் களிடம் கல்வி, செல்வம், திறமை, செல் வாக்கு, கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவை அமைந்திருந்ததே அவர்கள் மற்ற உயர்ஜாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகுவதற்குக் காரணமாகும். சகோதர இந்துக்கள் என்று சொல்லப் பட்டாலும்,  தாழ்த்தப்பட்ட மக்களிடம் இவை எல்லாம் இல்லாமல் இருப்பதே, அவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று உயர்ஜாதி இந்துக் களால் கொடுமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம்.
ஆகையால், உண்மையில் தீண்டப் படாத சகோதரர்கள் சமூக சமத்துவம் பெறவேண்டுமானால்,  கல்வி, செல்வம், திறமை, செல்வாக்கு, கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றில் மற்றவர்களைப் போல சமநிலையை அடையவேண்டும் என் பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இக்காரியத்தை இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ அல்லது ஒன்றிரண்டு மாதங்களிலோ அவசரப்பட்டு செய்து விடமுடியாது; நாளடைவில்தான் இதைச் செய்ய முடியும். ஆனால் தற்போது அவர்களுக்கு சமத்துவம் அளிக்கச் செய்யப்படும் சாதகமான செயல்கள் கோயில் பிரவேசம், தெரு, குளம், கிணறு, பள்ளிக் கூடம்  போன்ற பொது இடங் களைத் தடையின்றி அனுபவிக்க இட மளிப்பது போன்றவைதான்.
மற்ற விஷயங்களைக் காட்டிலும் கோயில் பிரவேசம் என்ற ஒரு விஷயமே இப்பொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட் டங்கள் நடந்து வருகின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை பயனின்றி கழிந்தன. பொது இடங்களுக்குப் போகும் உரிமை தீண்டாதவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கருத்தில் கோயில் பிரவேச முயற்சி நடைபெறுமேயானால்,  அதை மனப்பூர்வமாக ஆதரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறன்றி  கோயில்களில் உள்ள கடவுள்கள் எனப் படும் குழவிக் கல்களுக்கும், பொம்மை களுக்கும் ஏராளமான செல்வங்கயும் பாழாக்கிவிட்டு, மற்ற மூட மக்களைப் போலவே தங்களது கடின உழைப்பையும், அரும்பாடுபட்டு ஈட்டிய செல்வத்தையும், பொன்னான காலத்தையும் பயனற்ற வழியில் செலவிடுவதும், அதன் மூலம் மோட்சம் பெறுவதற்கும் கோயில் பிரவே சம் அவசியம் என்ற கருத்துடன் முயற்சி செய்யப் படுமானால்,  இம்முயற்சி கண்டிப்பாக தீண்டாதவர்களுக்குக் கேடு விளைவிக்கும் முயற்சியே என்றுதான் கூறவேண்டும்.
இப்பொழுது நமது நாட்டில் இருந்து வரும் எண்ணற்ற கோயில்கள் காரண மாகவும், அவைகளின் சார்பாக நடை பெறும் திருவிழாக்கள் காரணமாகவும், இவைகளின் மேல் பாமர மக்களுக்கு உள்ள நம்பிக்கை, பக்தி காரணமாகவுமே பொது ஜனங்களின் செல்வம் பாழாகின்ற தென்பதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அறியாமை நிறைந்தவர்களாகவும், மூட நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருந்து வருவதற்கும் கோயில்களே காரணமாகும். (குடிஅரசு 08.05.1932).
பார்ப்பனர் தன்னை மேல்ஜாதி என்று அழைத்துக் கொள்வதிலும், தான் பிராமணன் என்றும் அழைத்துக் கொள்வதிலும், நாமும் அவனை பிராமணன் என்று சொல் லுவதிலும் அவனுக்குப் பெருமை உண்டு. ஆனால், அவன் நம்மை சூத்திரன் என்று அழைப்பதிலும், சாஸ்திரமும் சட்டமும் நம்மை சூத்திரர்கள் என்று குறித்து வைத்துள்ளதிலும் நமக்கு மிகுந்த  இழிவும் வாழ்வுக் கேடும் முன்னேற்றத் தடையும் இருக்கிறது.
- த.க. பாலகிருட்டிணன்
-விடுதலை ஞாயிறு மலர், 20.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக