செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ரிக்வேதத்தில் கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும் இல்லை

ரிக்வேதம் முதல் நவீன யுகம் வரை என்ற கலாச்சாரக் கண்காட்சி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சிக்காக சமஸ்கிருத நூலாய்வுக் கழகமான லலித் கலா அகாடமி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
வாஸ்து, ஜோதிடம், ஆயுர் வேதம் மற்றும் அக்கால வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்கள் குறித்து கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், கங்கையைப் பற்றியதுதான். வேத அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டி ருப்பதாவது:
ரிக்வேதத்தில் ஒன்பது கண்டங்கள் மற்றும் பல்வேறு வேத நூல் குறிப்புகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்தோம்; எங்கள் ஆய்வில் சிறிய அளவில்கூடத் தவறு நேர்ந்திட வாய்ப்பில்லை. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் அமைப்பு களையும் ஆய்வு செய்தோம். ஆனால், எந்த இடத்திலும் கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும், குறிப்பும்கூட இல்லை; இது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லலித் கலா அகாடமியின் ஆய்வுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலை நாடுகளில் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கட்டுரைகள் என்றும், எந்த ஒரு நிகழ்வையும் அறிவியல் தளத்தில் இருந்தும் இதை நாம் பார்க்க வேண்டும் என்றும் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு இந்துத்துவாவாதிகளை ஒரு கலக்குக் கலக்கும் என்பதில் அய்யமில்லை. இதனை வேறு யாராவது கூறியிருந்தால், அதற்கு உள்நோக்கம் கற்பித்து விடுவார்கள். சொல்லுவதோ சமஸ்கிருத நூலாய்வுக் கழகமாகும்.
கங்கை என்றால் சாதாரணமா? சிவன் தலையில் (?) குடியிருக்கும் கங்காதேவியாயிற்றே - பாவங்களைப் போக்கும் தெய்வ சக்தி கொண்டது என்று நம்புபவர் களாயிற்றே! கங்கையைச் சுத்திகரிப்பதற்காக மத்திய பிஜேபி அரசு கொட்டியழப் போகும் தொகை ரூ.7000 கோடி.
புராணங்களை வரலாறாக மாற்ற நினைக்கும் புளுகுகளை பிஜேபி வட்டாரத்தையே சேர்ந்த ஆய்வுப் புலமே அம்பலப்படுத்தி விட்டது.
இரண்டாவதாக அதே சமஸ்கிருத நூலாய்வு கழகமான லலித் கலா அகாடமி சொல்லும் கருத்தும் கருத்தூன்றத் தக்கதாகும்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் ஆரியர்கள், 3000 ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். சிறிது சிறிதாக இந்தியத் தீபகற்பத்துக்குள் நுழைந்தனர்.
அந்தக் கால கட்டத்தில் இந்தியத் தீபகற்கம் முழுவதும் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்கள்;  ஆரி யர்களின் வருகையால் திராவிடர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு விரட்டப்பட்டனர் என்றும் கூறப் பட்டுள்ளது.
ஆரியராவது, திராவிடராவது - இவை எல்லாம் வெள்ளைக்காரன் கட்டி விட்ட கதை, அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பிதற்றும் ஆர்.எஸ்.எஸ். கம்பெனிகளுக்கு - அவர்கள் வட்டாரத்திலிருந்தே பதிலடி கிடைத்து விட்டதா இல்லையா?
ஆரியர்கள் இந்தியத் தீபகற்பத்தில் நுழைந்த காலந்தொட்டே ஆரியர் - திராவிடர்  போராட்டம் சண்டை என்பது தொடங்கப்பட்டு விட்டது.
அந்தச் சண்டைகளைத் தான் வேதங்கள் வேறு வார்த்தைகளில் கூறுகின்றன.
திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன.
(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜீம்தார் எழுதிய பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்) ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதி னார்கள்!
(சி.எஸ்.சினிவாசாச்சாரி எம்.எஸ். ராமசாமி அய் யங்கார் ஆகியோர் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம்)
இந்த ஆதாரங்களை நாம் எடுத்துச் சொன்னபோது ஆரியர் - திராவிடர் கட்டுக் கதை என்று கதைத்தவர்கள் - இப்பொழுது அவர்கள் வட்டாரத்து ஆய்வே ஆரியத் திராவிடர் பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார்களே - முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்?
இன்றுகூட பார்ப்பனர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகள் மூலம் தங்களை வேறுபடுத்தித்தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்;  ஆனால் அதனை ஒப்புக் கொண்டால், அவர்கள் வேறு இனத்தவர் என்ற உண்மை அம்பலப்பட்டு விடுமே - அது அவர்களுக்கு கேடாக முடியுமே- அந்தத் தந்திரத்தால்தான் இப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாக நடந்து கொண்டிருக் கிறார்கள் அல்லது நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
உண்மையை எவ்வளவுக் காலம்தான் திரை போட்டு மறைக்க முடியும்?
-விடுதலை,25.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக