ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பசுவதை பாடுவோரே.. உங்கள் வேதங்களின் பசுவதை பாரீர்!

- இரா.கண்ணிமை

பார்ப்பனர்களின் முன்னோர்கள் ஆடு, மாடு மாத்திரமல்லாமல் - பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள் - என்று தந்தை பெரியார் புகன்றார்.
ஆம் ஆரியர்கள் சொல்லி வைத்த இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் - என்னும் நான்கு வேதங்களில் யாகம் என்ற பெயரால் உயிர் பலி செய்யப் பட்டிருக்கிறது.
இதோ... ஆதாரம்
இருக்கு வேதம்
இருக்கு வேதத்தில் யாகச் செயல்களை உறுதிப் படுத்தும் சுலோகம்:
யஞ்ஞேனவை தேவா; ஊர்த்தவம் ஸ்வர்க்கம், லோக மாயம் ஸ்தே பிபயுரஸ்மின், நேத் ருஷ்டவா மனுஷியாக ரிஷ்யஸ் சரனுப் (ஜத்ரேயப்ராஹ்)
மணம் த்விதீய பஞ்சிகா பிரதம காண்டம்
விளக்கம்: தேவர்கள் யாகஞ்செய்து சொர்க்கத்தையடைந்தார்கள். ஆகவே மனிதர்களும், ரிஷிகளும் யாகம் செய்யக்கடமைப் பட்டவர்கள்.
யாகத்திற்குரிய - உயிர்களை தூண்களில் பிணைத்துக்கட்டி மந்திரத்தைச் சொன்ன பிறகு, தலைமைப் புரோகிதனான (பார்ப்பனர்) அத்வாயுவின் கட்டளைப் பெற்றவுடன், யாகப்பசுவை, சமித்ரசாலா என்னும் பசுவை கொலைபுரியும் இடத்திற்குக் கொண்டு போய், பசுவைக் கொல்லும் சமிநா என்னும் புரோகிதன், முஷ்டி எனும் குறுந்தடியால் பசுவின் கழுத்தில் அடித்துக்கொலை செய்வான்.
பிறகு சுரா, இடர் ஸீனு, ஸவதீதி எனும் மரப்பலகையில் - பசுவைக்கிடத்தி தோலை உரித்து சதையை அரிந்து எடுத்து நெருப்பிலிட்டு - மீதி மாமிசத்தைப் புரோகிதர்கள் அனைவரும் பங்குபோட்டு எடுத்துக் கொள்வர். யாகப்பசுவை மந்திரம் சொல்லிக் கொன்றபின் அதை அறுத்தெடுக்கும் முறை மந்திரம்
இதோ:-
அந்தரே வோஷ்மாணம் வாரியத் வாதிதி
பசுஷ் வேதத் புராணான், ததாதி ஸ்யேனமஸ் யவக்ஷ;
க்குருணுதாத் ப்ரத்ஸா பாஹீசலா தோஷணீ கஸ்ய
லேவாம், ஸாச்சிந்ரே ஸ்ரோணீக வஷோரூஸ்
ரேகர்ணாஷ்டி வந்தா ஷட்விம்சதி ரஷ்யவங்காயஸ்தா
அனுஷ்டயோச்ய வயதாத்; காத்ரம் காத்தமஸ்
யானூனம். (ஐந்தேய பஞ்சிக 3 - காண்டம் 6)
இதன் பொருள்:
மார்பிலிருந்து பருந்தின் வடிவில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் காலிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் காலிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளும்,  தோளிலிருந்து ஆமை வடிவமாக இரண்டு துண்டுகளும் அறுத்தெடுக்க வேண்டும். இவ்வாறே அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்.
புலால் உண்போரை, புலையர், தீண்டாதார் என்னும் பொய்க் குருக்களான - கள்ளக்குருக்கள் (ஆரியப் புரோகிதர்கள்) பசுக்களைக் கொன்று யாகம் செய்து, மந்திரம் சொல்லி அனைவரும் பங்கிட்டு இறைச்சியை புசிக்கும்போது தீட்டு எப்படி மறைந்ததென்பதை கேட்பார் இல்லையே!
மச்ச புராணத்தில் சொல்லியபடி யாகத்தில் பசுவை மட்டும் அல்ல; ஆடு, மாடு, குதிரை, பாம்பு மனிதன் ஆகிய அனைத்தையும் யாகம் செய்வதே முறையாய்க் காண்கிறது.
யசுர் வேதம்
யசுர் வேதத்தைப் படித்தவன் தான் அதர்வர்யு என்னும் யாக புரோகித பதவிக்கு ஏற்றவனாம். இப் பதவியை ஏற்றவனே புரோகிதர்க்கெல்லாம் தலைவன்.
யசுர் வேதம், கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் எனப் பெயர் கொண்டது. கிருஷ்ண யசுர் வேதத்தில் விவரித்துள்ள யாகக் கொலைகளுக்கு கணக்கேயில்லை. சில யாகங்களில், நாய், தித்திரி என்னும் பறவை, வெள்ளை கொக்கு, கருந்தவளை முதலிய பிராணிகளையும் கொன்று யாகபலி செலுத்த வேண்டும். பிராஹ்ம தேவனுக்கு பிராஹ்மனரையும் யாகம் செய்ய வேண்டும் (தைத்திரீயம் 3ஆம் காண்டம், 4ஆம் அத்தியாயம்)
கிருஷ்ண யசுர் வேத தைத்தரீய ஆரண்யம் என்னும் நூல்,  பத்து அதிகாரங்களையுடையது. இதன் ஆறாம் அத்தியாயம் பித்ருமேதம் என்பதை விளக்கிக் காட்டுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர் இறந்தால் இவர்களை எரிக்கும் முறை இதில் உள்ளது.
கிருஷ்ண யசுர் வேதத்தில் முப்பது யாகங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் சில:
ஸௌத்ராமணி- மதுவருந்தும் யாகம், சுராக்ரஹாமந்திரம் - லாகிரியருந்தும் யாகம்,
ஐந்த்ரபர  - இந்திரனுக்கு காட்டு புலி யாகம்
கோஸவம் - பசு, காளை யாகம், வத்ஸோபகரணம்- இளங்கன்று யாகம்
நஷ்த்ரேஷ்டி - தேவதை யாகம்,
புருஷயஜ்ரு - நரயாகம்,
வைஷ்ண பசு - விஷ்ணுவுக்கு ஆட்டுப்பலி,
அஸ்வமேதம் - குதிரை பலி யாகம்,
ரிஷிபாலம் பனவிதானம் - எருது யாகம் அஸ்வ, மனுஸ்ய அஜகோ - குதிரை, மனிதன், ஆடு, மாடு யாகம்.
சுக்கில யசுர் வேதம்
யசுர் வேதத்தில் - சுக்கில யசுர் வேதம் நாற்பது அதிகாரங்களைக் கொண்டது. யாகக் கொலை விளக்கத்திற்கு இது கிருஷ்ண யசுர் வேதத்திற்கு இணையானது.
இதில் அஸ்வலீலா பாஷாணம் என்பது மிக அருவருப்பான செயல் ஆகும். அஸ்வ மேத யாகத் திற்கு இருபத்தொரு தூண்கள் நட்டு, நடுவிலுள்ள தூணில் பதினேழு பசுக்களைக் கட்ட வேண்டும். மற்ற தூண்களில், தூண் ஒன்றுக்கு பதினைந்து பசுக்கள் வீதம், முன்னூறு பசுக்களைக் கட்ட வேண்டும். இத்துடன் காட்டுப் பசுக்கள் இருநூற்றறுபதும் சேர்த்து யாகம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில், அன்னம், எலி, மான், யானை, தவளை, அட்டை முதலியவை களும் பலியிடப்படுகின்றன.
ஸாமவேதம்
ஸாமம் என்பதற்கு சங்காரம் என்று பொருளாம். இந்த வேதத்தில் யாகக் கொலைகள் அதிகமாக விளக்குகிறது. முப்பத்தேழு  யாக சடங்குகள் உள்ளன. இதில் வைசியனையும், யாக பலி செய்ய - கூறப்பட்டுள்ளது.
அதர்வண வேதம்
அதர்வணம் என்பதற்கு அழித்தல் என்பது பொருள் இந்த வேதத்தில் தேவர்களுக்குரிய சில மந்திரங்களும் - பகைவர்களைக் கொல்ல உள்ள மந்திரங்களுமாக - பல கற்பனையாகவும் சொல்லப் பட்டுள்ளது.
இதில் ப்ராஹ்பாணம் கோபதம் எனப்படும் யாகம் செய்த பசுவைப் பங்கிடும்முறை சொல்லப்பட்டிருக் கிறது. (கோபசுப் பிராஹ் மணம், பிரபாடகம், 3ஆம் காண்டம் 10).
பிராமணரை மற்றவர்கள் நம்பும் வகையில் வேதம் கடவுளால் ஆக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் சொன்னாலும் - அது உண்மையே அல்ல.
வேதங்களை ரிஷகளே உண்டாக்கினார்கள் அவர்கள் கூறியது எதுவோ அதுவே தேவதை என்பதாம்.  சுலோகம்: யஸ்ய வாக்கியம் ஸதிஷி: யாதேனோச் யதேஸா தேவதாய தக்ஷா பரிமாணம் தச்சந்த..
பல ரிஷிகள் பல காலங்களில் பாடியதே வேதம். வேதங்களை ரிஷிகளே உண்டாக்கியிருக்க, அவை களைக் கடவுள் உண்டாக்கினார் என்பது புனைந் துரை. நிகண்டில், பிராமணர்களையும், ப்ரஹ்மா என்று குறித்துக் காட்டக் கூடிய சொல்லும் இருப்பதால்தான் பிராமணர்களாகிய ப்ரஹ்மாக்கள், தங்களை சிருஷ்டி கர்த்தாவாகிய பிர்மாவுக்குச் சமமாக்கி அவர் வாயி னின்று கோத்ரம் வந்ததாய் மாறாகச் சொல்லப்பட் டிருக்கிறது.
கீழ்க்காணும் சுலோகத்தில் பவபூதி என்னும் கவி தன்னையே ப்ரஹ்மாவென்று சொல்லிக் கொள்கிறார். இதைக் கூர்ந்து பார்க்கவும். இதனால் பிராமணர்கள், பரஹ்மாக்களாய் அழைக்கப்பட்டு - ரிஷிகளால் வேதம் வெளிப்பட்டது உண்மை என்றும் கடவுளால் இந்த  வேதம் உண்டாக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதை ஆழ்ந்து ஆராய்ந்து அறிய முடியாத பார்ப்பனரல்லாத மற்றவர்கள் ப்ரஹ்மா வென்ற தவறான பொருளை குறியாய்க் கொண்டு கடவுளால் உண்டாக்கப்பட்டதே வேதம் என்று பொய் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
சுலோகம்:
யாம் ப்ரஹ்மா  ணமியம் தேவி வாக்வஸ்யே,
வான்ய வர்த்தத உத்தரம் ராம சரிதம்  தத்பரணீதம் ப்ரக்ஷ்தோ இது உண்மையானாலும், வேதம் முகத்தி லிருந்து வந்ததென்பதை - விளக்கச் சிதைவு வார்த்தையேயன்றி உண்மையல்ல.
இவற்றுள் ஆஸ்வலாயனரால் செய்யப்பட்ட சிரௌத சூத்திரங்களில் - பதினேழு வகை யாகம் செய்யும் விதிமுறைக் கூறுகிறது.
இவற்றில் அக்கினி ஹோத்திரம் ஒன்று.
இதை செய்யாமல் - ஒருவன் விடுபட்டால் (திருமணம் முடிந்த மறுநாளிலிருந்து) அவர் தானாகவே சூத்திர னாகி விடுவானாம். இதனால் பிரம்மாவின் பாதத்தி லிருந்து பிறந்த சூத்திரனின் தாழ்ந்த நிலையை, பிராமணரும் அடையலாம் என்பதை விளக்குகிறது. இது உண்மையென்றால் வேதமென்பதும் துதிதோத் திர ஒழுக்கம் இது என்பதும் அறியாமல், பல துறை களில் பிழைப்புத் தொழில் அலுவலில் சிக்குண்டு,  ஈடுபட்டிருக்கும் பார்ப்பனரில் நூற்றுக்கு எத்தனை பேர் இதைக் கைக் கொண்டு நடப்போர் உண்டு என்பதை எடை போட்டால் - மிகைக் குறைவாக இருப்பர்.
அக்கினி  தோத்திரத்தை மேற்சொன்னவாறு தொடர்ந்து செய்து, சூத்திரர் ஆகா பிராமணர் எத்தனை பேர் உண்டு? இவ்வித யாகங்களை செய்து ஒருவன் முக்திசேர உள்ள இடுக்கமான வழியை கவனிக்கவும். இப்படி செய்துஒருவன் முக்தி சேர முடியுமென்றால் - இது சூரியனை ஏணிப்படியிட்டு ஏறிப் பிடித்து சிமிளியில் அடைத்த கதையை யொக்குமென்பது பொருத்தமல்லவா?
அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகத்தின் அருவருப்பை இங்கு எழுதவே கூடாது. இதை எழுத கைக் கூசும் மிக அசிங்கமான செயல். சுருக்கிச் சொன்னால் அஸ்வம் - குதிரை, மேதம் - சேர்க்கை குதிரையுடன் சேர்தல் என்று பொருள்.
அஸ்வமேத யாகத்தில், யாகப் பசுவாகிய குதி ரையை, எஜமான் மனைவியாகிய மஹிஷியோடு, இயற்கைக்கு மாறான வகையில் புணர்ச்சி செய்ய விடுதலாம். இதைப் போன்ற மற்ற பௌண்ட ரீகம் முதலிய அருவருப்பான பல யாகங்கள் வேதத்தில் இருக்கின்றன.
இவ்வித யாக பலிகளை நம்புகிறீர்களா? இதைச் செய்வோர் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள். யாக பலியால் முக்தி சேர்வோர் எத்தனை பேர் உண்டு? சொல்ல முடியுமா? இதெல்லாம் கள்ளக் குருக்களான பார்ப்பனரின் வஞ்சிப்பான போதனை என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகும்.
புலால் தின்போரை சூத்திரர் தீண்டாதார் என்று சொல்லும் பார்ப்பனர்கள் மறைமுகமாய் விருந்தின ருக்கு பசு, எருது, மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும் யாகப் பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவதும் - வேத  இரகசிய விதி முறைகள் உண்டு. இதை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!
மற்றோரை இழிகுலத்தோர் என்று இகழ்ச்சியாய் பேசி  - கள்ளக்குருக்கள் (பார்ப்பனர்கள்) வேதம் சொல்லி, யாக பலியின் இறைச்சியைப் புசிக்கும்போது தீட்டில்லை என்பதுதானே? இப்போது தீட்டு எவ்வகையில் மறைந்து போனது என்பதை விளக்கிச் சொல்வார் இல்லையே! இதெல்லாம் அடங்கியதே யாகமாகும் என்று யாரும் இதை மறக்க முடியாதே!
நான்கு வேதங்களிலும், அதன் துணைவேதம் நான் கிலும் (ஆயுள் வேதம், அழுத்தவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்) உள்ள முப்பத்திரண்டிலும் அடங்கியதே வேத உபதேச ரகசியங்களும், யாகப் பலிகளுமாம். இந்த வேதத்தை பிராமணர் தவிர, மற்ற சத்ரியர், வைசியர், சூத்திரர்கள் ஆகியோர் தொடவும், படிக்கவும் கூடாது. இதனை அன்றே ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும், இவ்வேதங்கள் அனைத் தையும் உண்மையற்றதென்று கூறியிருக்கிறார்கள்.
இன்பமாய் நால்வேதம் வந்தவாறு
மெழுதினார் வேதவியாசர் சாத்தான் போல
அன்பாகப் பலவிதத்தில் கட்டிப் போட்டா
ரதனாலே மானிடர்கள் கெட்டுப் போறார்
முன்போல சித்தரெல்லாங் கொஞ்சங் கொஞ்சம்
மூடினதைத் திறந்து விட்டார் முடுகி நானும்
அன்பாகத் திறந்து விட்டேன் வெளிச்சமாக
அரனார் உத்தாரப் படியறிவித்தேனே!
அகஸ்தியர் ஞானப்பாடல் - 13
குலம்குலம் என்ப தெல்லாம்
குடுமியும் பூணு நூலுஞ்
சிலந்தியு நூலும் போலச்
சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்ததரு நாலு வேதம்
நான்முகன் படைத்த துண்டோ
பலன்தரா பொருளு முண்டோ
பாச்சலூர் கிராமத் தாரே!
- பாச்சலூர் பத்து 6ஆம் பாடல்
சாத்திரத்தைச் சுட்டுசதுர்மறையைப் பொய்யாக்கி சூத்திரம் கண்டு சுகம் பெறுவதெக் காலம் - என்று ஏங்கித் தவிக்கும் காலம் இப்பொழுது வந்து விட்டதே! என்ற பாடல் களைப் பார்த்த - படித்த பிறகுமா - வேதத்தை நம்புகிறீர்கள்?
-விடுதலை,11.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக