சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…
நூல் குறிப்பு:
நூல் பெயர்: பண்டைய வேதத் தத்துவங்களும்
வேத மறுப்புப் பௌத்தமும்
ஆசிரியர்: நா. வானமாமலை
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண்.5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-600 089.
கைபேசி : 9841775112
பக்கங்கள் : 76; விலை: ரு.65/-
மீமாம்சத்தின் ஸ்தாபகர் ஜைமினி எனும் அறிஞர். தமிழ்நாட்டு நக்கீரர், அவ்வையார் என்ற புலவர்கள் பல காலங்களில் பலர் இருந்ததைப்போன்று, பல ஜைமினி முனிவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இது ஒரு கோத்திரப் பெயராக இருக்கலாம். மீமாம்ச சூத்திரம் என்னும் முதல் மீமாம்ச நூலை எழுதியவர் ஜைமினி என்றழைக்கப்படுகிறார். அவர் தமக்கு முன்வாழ்ந்த பல தத்துவஞானிகளை மேற்கோள் காட்டுகிறார். இந்நூலின் முதல் உரை நூல் சபர சூத்திரம் என்பது. இதை எழுதியவர் சபரர். அவருக்குப் பின் குமரிலபட்டர், பிரபாகரர் என்ற இரு பெரும் தத்துவ ஆசிரியர்கள் வாழ்ந்தனர். இவர்களுடைய தத்துவங்களைச் சங்கரர் எதிர்த்து வாதாடினார். சைவ சித்தாந்தத்தில் பரபக்க மறுப்பில் மீமாம்சத்தைப் பற்ற மறுப்புரை கூறும்போது, பிரபாகர மதம் என்றே மீமாம்சம் அழைக்கப்படுகிறது.
மீமாம்சம் அகவய ஆன்மிகவாதத்திற்கு, அதாவது சங்கரருடைய அத்வைதத்திற்கு அடிப்படையில் மாறுபட்டது.
மீமாம்சத்தில் பிற்காலத்தில் வேறுபாடுகள் தோன்றி இரு தனிப்பிரிவுகள் தோன்றின. அதில் ஒன்று பட்டர் மீமாம்சம் என்றும், மற்றொன்று பிரபாகர மீமாம்சம் என்றும் அழைக்கப்படும். இவை இரண்டிற்கும் பொதுவானது கடவுள் மறுப்புக் கொள்கையாகும். அறிஞர் ராதாகிருஷ்ணன் மீமாம்சத்தின் நாத்திகக் கொள்கை பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
“இந்தத் தத்துவத்தில் கடவுளுக்கு இடமில்லை. பூர்வகால மீமாம்சத்தில் இந்தப் பலவீனமான துளையின் வழியாகப் பிற்காலத்தில் கடவுள் நுழைத்துவிடப்பட்டார். கடவுள் இல்லாத மீமாம்சத் தத்துவம் பூர்வ மீமாம்சம் என அழைக்கப்படும்.”
மீமாம்ச சூத்திரத்திற்கு முதலில் உரை எழுதிய சபரர் நாத்திகர். அவர் கடவுளுண்மையை வன்மையாக மறுத்தார். “புலனுணர்வு மூலமாகக் கடவுளை அறிய முடியவில்லை. மற்றெல்லா அறிவு மூலங்களும் புலனுணர்வை அடிப்படையாய்க் கொண்டவை. எனவே, எந்த அறிவு மூலமாகவும் கடவுளை அறிய முடியவில்லை. எந்த அறிவுச் சாதனத்தாலும் அறிய முடியாத ஒன்று இருக்கிறது என்று எப்படி முடிவு சொல்ல முடியும்?” என்றார் சபரர். குமரிலரும் நாத்திகரே. அவர் கடவுள் உண்டென்று வாதிக்கும் நியாய வைசேடிகச் சித்தாந்தங்களை எதிர்த்து வாதாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நியாய வைசேடிகங்கள் கடவுள் உண்டென்று
கீழ்வருமாறு விவாதித்தார்கள்:
“பாண்டம் இருந்தால் அதைச் செய்த குயவன் இருக்கவேண்டும். குயவன் அறிவுடைய படைப்பாளி. இதுபோலவே பிரபஞ்சம் இருப்பதால் அதற்கு ஒரு படைப்பாளியும் இருக்க வேண்டும். அவன் பரிபூரண ஞானமும் எல்லா இடங்களிலும் நீக்கமற வசிப்பவனுமாக இருத்தல் வேண்டும். இப்பிரஞ்சத்தை அவன் அணுக்களாய்ப் படைத்து யுகாந்தரங்களில் அழிக்கிறான்.”
பிரபஞ்சப் படைப்பு, பிரபஞ்ச அழிப்புப் பற்றிய இக்கொள்கையை மீமாம்சர்கள் எதிர்த்தார்கள். அவர்கள் வாதம் வருமாறு:
“ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. உதாரணமாக நீ கூறும் பாண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதனால் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதோ அல்லது இது அழிக்கப்படும் என்பதோ நிரூபணமாகி விடவில்லை. புதிதாக உருவாவதும், இருப்பதும், அழிவதுமான ஒரு தொடர்ந்த செயல்முறைதான் பிரபஞ்சத்தில் காணப்படுகிறது. தனித்தனிப் பொருள்களைப் பொறுத்தவரை நம்மால் அறியப்படுவதற்கு மேல் அவற்றைப் பற்றிக் கற்பனை செய்துகொள்ள வேண்டியதில்லை. உன்னைப் பெற்றவர்கள் உனது தாயும் தந்தையும். நீ பிறக்க ஒரு கடவுளைக் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.”
கடவுள் கொள்கையைத் தவிர நியாய வைசேடிகமும் மீமாம்சமும் கர்மம் பற்றிய கொள்கையிலும் வேறுபட்டன. நியாய வைசேடிகக் கூற்று வருமாறு:
“நற்செயல்கள், தீச்செயல்களால் புண்ணியமும் பாவமும் முறையே உண்டாகின்றன. இவற்றின் தொகுதி அதிர்ஷ்டம் எனப்படும். இது விளைவுகளைத் தோற்றுவிக்கும். ஆனால், அதிர்ஷ்டம் அறிவற்றது. அது தன்னைத்தான் வழிநடத்திக் கொள்ளாதது. எனவே, அதை வழிநடத்த அறிபவன் ஒருவன் வேண்டும். எண்ணற்ற ஆன்மாக்களின் அதிர்ஷ்டத்தை வழிநடத்தி இயக்குபவன் எங்கும் வசிப்பவனாகவும் எல்லாம் அறிந்தவனாகவுமிருக்க வேண்டும். ஆதலால் பிரபஞ்சத்தில் ஈஸ்வரனுக்கு அவசியம் ஏற்படுகிறது.”
கர்மவினைகள் என்ற கொள்கையில் அதிர்ஷ்டம் என்ற கருத்தை உருவாக்கி, அதை இயக்குவதற்கு ஒரு ஈஸ்வரனை நியாய வைசேடிகர்கள் கற்பித்தார்கள். இந்த வாதத்திற்குப் பிரபாகரர் பின்வருமாறு விடையளித்தார்:
1. நீங்கள் சொல்லுகிற அதிர்ஷ்டம் அறிய முடியாதது என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் உங்களுடைய கடவுளுக்கு அறிவு இருக்க முடியாது. கடவுளுக்கு அதுபற்றி அறிவு இருக்கும் என்று நீங்கள் கூறினால், அவருக்கு மனம் என்ற ஒன்றும் இருக்கிறது என ஒப்புக் கொள்ளுகிறீர்களா? மனம், உடலோடு சேர்ந்துதான் இருக்கும். கடவுளுக்கு உடல் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
2. அதிர்ஷ்டத்தைக் கடவுள் அறிய முடியும் என்று வைத்துக்கொள்வோம். அறிந்தாலும் அதை மேற்பார்வை செய்ய அவரால் முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமானால் கடவுளுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் ஏதாவதொரு தொடர்பு இருக்க வேண்டும். தொடர்பு என்பது பொருள்களுக்கிடையில்தான் இருக்க முடியும். அதிர்ஷ்டம் ஒரு குணம். இது ஆன்மாவின் குணம். இந்தக் குணம் கடவுளோடு எப்படித் தொடர்பு கொள்ள முடியும்?”
குமரிலர், தெய்வம் உண்டு என்ற கொள்கையைக் கேலி செய்தார். “உடலில் இல்லாத ஆன்மா எதையும் படைக்க முடியாது. பிரபஞ்சத்தைப் படைக்க உடல் வேண்டும். தன்னுடலைத் தானே படைத்துக்கொள்ள முடியாது. அப்படியானால் கடவுளின் உடலைப் படைக்க இன்னொரு படைப்பாளி தேவை.” இப்படியே முடிவின்றிக் கூறலாம்.
ஒரு முட்டாள் கூட நோக்கமில்லாமல் எதையும் செய்ய மாட்டான். துன்பமும் துயரமும் நிறைந்த இந்த உலகில் சர்வ சக்தியும் பெருங்கருணையும் உடைய கடவுள் என்ன நோக்கத்திற்காகப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியும்? நோக்கமில்லை, அது அவன் திருவிளையாடல் என்றால் கடவுள் சிறுபிள்ளையா? பைத்தியக்காரனா?”
குமரிலர் உலகப் படைப்புப் பற்றிய வேதாந்தக் கொள்கையையும் மறுத்தார். “வேதாந்தத்தின் கொள்கைப்படி பிரம்மம் என்னும் தூய உணர்வுதான் இறுதி உண்மை
யாகும், படைப்புக்குக் காரணம் மாயை. மாயை, கனவுபோல் உண்மையில்லாதது. அப்படியானால் அது எதனைப் படைக்க முடியும்? பிரம்மம் மாயையைப் படைக்க முடியாது. ஏனெனில் பிரம்மம் தூய்மையானது; தொடர்பற்றது; விளைவற்றது; கிரியையில்லாதது.”
மேற்கூறியவற்றிலிருந்து ஆன்மீகவாதம், கடவுளுண்மைவாதம், அதிஷ்ட வாதம் முதலிய கருத்து முதல்வாதக் கருத்துகளை மீமாம்சர்கள் எதிர்த்தார்கள் என்றும் அதற்காகத் தர்க்க ரீதியான விரிவான விவாதங்களைப் படைத்தார்களெனவும் கண்டோம்.
(அ) மீமாம்ச நாத்திகம் – காரணம்
இவர்கள், தனிப்பெரும் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் எனும் கருத்தை ஏன் எதிர்த்தார்கள்? அவர்களுடைய நோக்கம் பழைய வேத காலத்து யக்ஞங்களைப் புதுப்பிப்பதும் யக்ஞங்களின் தெய்வங்களை மீண்டும் வழிபடுவதும் ஆகும். மாறிய சூழலில் யக்ஞங்களையும் தெய்வங்களையும் பற்றி அவர்கள் திருத்தியமைத்த விளக்கத்தைக் கூறினார்கள். யக்ஞங்களுக்கும் தேவர்களுக்கும் என்ன தொடர்பு? இக்கேள்விக்குப் பூர்வ மீமாம்சர்கள் அளித்த பதில் வருமாறு:
“வேதங்கள், சடங்காசாரக் கட்டளைகளே! சடங்காசாரங்கள் நடைபெறும்போது தேவர்கள் வழிபடப்படுவதில்லை. தேவர்களுக்கு வஸ்துவான உருவங்களில்லை. அவர்கள் பலிகளை ஏற்றுக்கொள்ளவோ அவற்றால் மகிழ்ச்சியடையவோ முடியாது. அவர்கள் நமது விருப்பங்களை நமக்கு அளிக்க முடியாது. பின் தேவர்கள் என்பவர்கள் யார்? _அவர்கள் யக்ஞங்களுக்கு அவசியமான பெயர்களும் ஒலிகளும் மாத்திரமே! மந்திரங்களையே தேவர்கள் என்கிறோம்.”
வேத காலத்து மாபெரும் தெய்வங்களான இந்திரனும் அக்கினியும் பூர்வ மீமாம்சரின் கருத்தில் வெறும் ஒலியாகவும் காற்றாகவும் போய்விட்டனர். இவர்களின் கருத்துப்படி சடங்காசாரங்களுக்கே சொந்த சக்தி இருக்கிறது. அவை தமது சுயவிதிகளின்படியே பலன்களைத் தருகின்றன. யக்ஞம் என்ற பொருளுக்குச் சபரர் கூறும் பொருள். இன்றைய மானிடவியல் அறிஞர்கள் கூறும் மந்திரம் (Magic) என்னும் சொல்லுக்குக் கூறும் பொருளாகவே காணப்படுகிறது.
இனக்குழு மந்திரவாதிக்கு (Magician, shaman) தனது மந்திரவாதச் செயல்களையும் அர்த்தங்களையும் விளக்க அவசியமில்லை. அவர்கள் செயலை விளக்க ஒரு கொள்கை (theory) அவசியமில்லை. தத்துவ வளர்ச்சி பெற்ற சூழ்நிலையில் மீமாம்சர்களுக்குத் தங்களது சடங்காசாரச் செயல்களையும் நம்பிக்கைகளையும் கொள்கை மூலம் விளக்க வேண்டியது அவசியமாயிற்று. இதனால்தான் வேதகாலத்தில் இயல்பாக இருந்த நம்பிக்கைகள், பிரம்மம், கடவுளுண்மை, கர்மம், ஒருமை முதலிய கருத்துகள் வளர்ந்துவிட்ட சூழலில்,சமுதாய அடிப்படை அற்ற, அழிந்துபோய்விட்ட பண்டைய சமுதாயத்தின் மேற்கோப்பு நம்பிக்கைகளை நிலைநிறுத்த வேண்டிய முரண்பாட்டில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக