நூல் பெயர்: ‘வேதங்கள் ஓர் ஆய்வு’
நூல் ஆசிரியர்: சனல் இடமருகு
தமிழில்: த. அமலா
பக்கங்கள்: 120
விலை: 90/-
வேத மந்திரங்கள் உருவம் பெற்ற காலத்தில், ஆரியர்கள் பயன்படுத்தி வந்த மொழிக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதுபோன்று இலக்கணத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. வேதங்களோ பார்ப்பனர்களின் இதயத்திலேயே ஒளிந்து நின்றது. அதை மாறிய சூழ்நிலையில் மொழியின் மூலம் அறிந்துகொள்வது சிரமமாக இருந்தது. யாஸ்கரின் நிருத்தமும், ஸாயணாச்சாரியாரின் வேத பாஷ்யமுமே வேதங்களைக் கடந்து செல்ல இன்று நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
மொழியியலறிஞர்கள் ‘இந்தோ_இரானியன்’ என்று அழைக்கப்படுகின்ற ஒரு மூல மொழியிலிருந்து பிரிந்த இரண்டு மொழிகளே இரானியனும் சமஸ்கிருதமும் என்கின்றனர். ‘இரான்’ என்ற சொல் ‘ஆரியன்’ என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையது. சவுராஷ்டிரர்களின் மத நூலான ‘அவெஸ்த’யில் இரானியன் மொழியின் பழைய வடிவைக் காணலாம். வேதங்களும் ‘அவெஸ்த’யின் முதல் பகுதியான ‘காத’ய்க்கும் வேதங்களுக்குமிடையே அற்புதமான மொழி ஒற்றுமை காணப்படுகின்றது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:1
சமஸ்கிருதம் அவெஸ்த
ஹிரண்ய ஸரண்ய
ஸேன ஹேன
யஜ்ஞ யஸ்ன
ஸோம ஹோம
ஆஹுதி ஆஸுதி
ஹோதர் ஸோத்ர
கடவுளின் பெயர்களிலும் இந்த ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமையை டாக்டர் ராதா குமுத் முகர்ஜி சுட்டிக்காட்டுகின்றார்.2
சமஸ்கிருதம் அவெஸ்த
இந்திர இந்திர
வாயு வாயு
மித்ர மித்ர
நாஸ்த்ய நவோன்ஹைத்ய
வ்ருத்ரக்ன வெரத்ரக்ன
மொழியின் அற்புதமான இந்த ஒற்றுமை-யைச் சுட்டிக்காட்டுவதன் காரணம். ‘அவெஸ்த’யை இயற்றியவர்களான இரானியரும் வேதங்களை இயற்றிய ஆரியர்களும் ஒரே குடியேற்றத்தின் இரு பிரிவினரே என்று காட்டுவதற்காகவேயாகும். வடமேற்கிலிருந்து வந்த குடியேற்றக்காரர்களின் ஒரு பிரிவினர் இரானில் (பெர்சியாவில்) தங்கினர். மீதியுள்ளவர்கள் மீண்டும் புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி தென்திசைக்கு வந்தனர். சிந்து சமவெளியை அவர்கள் அடைவது வரை, அவர்கள் சென்ற இடங்களிலுள்ள மொழிகளில், அவர்களது (ஆரியர்களது) மொழி ஆதிக்கம் செலுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன.3
ஹரப்பாவாசிகள் எழுத்துகளைப் பயன்படுத்தினரென்றாலும், அவர்களுடைய மொழியைப் படித்துப் புரிந்துகொள்ள இதுவரை நம்மால் இயலவில்லை. ஒரு சமயம் அந்த மொழி முழுமையாக அழிந்து போயிருக்கலாம். இந்தியாவில் இப்போது நிலவி வருகின்ற ஆரிய மொழியல்லாத மொழிகளில் ஏதாவதொன்றின் மூல மொழியா அது? திராவிட மொழிப் பிரிவைச் சேர்ந்த ஒரு மூல மொழியையே ஹரப்பர்கள் பயன்படுத்தியதாகப் பரவலான ஒரு வாதமுண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொத்த, தோட முதலிய தென்னிந்திய மொழிகள்; மத்திய பாரதத்திலுள்ள நாய்க்கி, கோலாமி, பார்ஸி, ஒல்லாரி, கோண்டி, கொண்ட, கயி போன்ற மற்ற முக்கிய மொழிகள்; வட இந்தியாவிலுள்ள குறுக், மாழ்ட்டோ போன்ற கோத்ரவர்க்க மொழிகள்; பலுசிஸ்தானிலுள்ள ப்ராஹுவி போன்றவை திராவிடப் பிரிவைச் சேர்ந்த மொழிகளாகும்.
ஆரியர்கள், வேதங்களைத் தோற்றுவித்த காலத்திலும் ஹரப்பர்கள் மீது ஆக்ரமிப்பு நடத்திய காலத்திலும் எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை. ஹரப்பர்களிடமிருந்தே அவர்கள் எழுத்துகளைப் படித்திருக்க வேண்டுமென நியாயமாகக் கருத இடமுள்ளது. நூற்றாண்டுகளாக நீண்டு நின்ற போர்களுக்கிடையில் நாகரிகமும் மொழியும் ஒன்றுக்கொன்று கலந்திருக்கலாம். இந்தக் கலவை தஸ்யூக்கள் தோல்வியடைந்த பிறகு அதிக சக்தி பெற சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய சமஸ்கிருதச் சொற்கள் திராவிட மொழியின் கலப்பாலேயே மாறியதென அறிஞரான டாக்டர் பரோவ்ஸின்டா கருதுகின்றார்.4 ரிக் வேதத்தில் உலுகல, குண்ட, தண்ட, பல, பில, மதூர போன்ற திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. ரிக் வேதம் எழுதப்பட்டதற்கு முன்பே திராவிட மொழி இருந்ததையே இது காட்டுகின்றது. மொகஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும் மக்கள் பேசியது திராவிட மொழியே என்ற வாதத்திற்கு வலிமை கூட்டுகின்ற ஆதாரமே இது.
அடிமைகளாக்கப்பட்ட தஸ்யூ(ஹரப்பர்) படை வீரர்களும், ஆரியர்களின் ஆசை நாயகிகளாகவோ மனைவியராகவோ ஆக்கப்-பட்ட அவர்களுடைய பெண்களும் திராவிட மொழிகள் பழைய சமஸ்கிருதத்தில் கலக்க முக்கியப் பங்கு வகித்திருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட திராவிடச் சொற்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்க பின்வரும் எடுத்துக்காட்டுகள் உதவுமெனக் கருதுகின்றேன்.5
அனல (தீ) _ அனல் (தமிழ்); அனலு, சூடு (கன்னடம்)
அர்க்க _ எருக்கு (தமிழ்); எருக்கு (மலையாளம்)
அலஸ(சோர்வு) _ அலசு (தமிழ், கன்னடம்)
உலூகல _ உரலு (மலையாளம்); ரொகலி, உலய்க்க (தெலுங்கு)
கங்க _ கொற்றி (மலையாளம்); கொங்க (தெலுங்கு); கொறங்கு(துளு)
கடின _ கெட்டி(தமிழ்); கட்டி (கன்னடம்)
கரக _ கரகம் (தமிழ்); காக்கல (மலையாளம்); காக்கன் (பார்ஸி); காக (குர்க்); காகோ (ப்ராஹுவி)
காஞ்சிக _ கஞ்சி (தமிழ்); கஞ்ஞி (மலையாளம்) கஞ்சி (தெலுங்கு)
காள (கருமை) _ கார் (தமிழ்)
குடி (வீடு) _ குடி (தமிழ், துளு, கன்னடம், தெலுங்கு)
குண்ட (பாத்திரம்) _ குடம் (தமிழ்)
குத்தளா _ குத்தாலி (கன்னடம்); குத்தோலி(துளு)
குந்தள _ கூந்தல் (தமிழ்); கூதல்(கன்னடம்)
குவலய(தாமரை) _ குவளை (தமிழ்); கோமலை (கன்னடம்)
கெமுக _ சேம்பு (தமிழ்); சேவ் (துளு); கேசு (கன்னடம்) சேம (தெலுங்கு)
கோண(மூலை) _ கோண், கோணை (கன்னடம்), கோண (தெலுங்கு)
கோரக _ குரை (தமிழ்); காரு (குயி); கொர்ஸன
(மொட்டு) (கோண்டி); கொரசே (மாழ்ட்டெ)
கள (களம்) _கன, கள (கன்னடம்); களாய் (குயி); கர (கோண்டி)
கல (மூர்க்கன்) _ கள்ள (கன்னடம், தெலுங்கு)
சூட _ சூடு (தமிழ்); ஸுடு (கன்னடம்);
தாமரஸ (தாமரை) _ தாமரை (தமிழ்); தாமர(தெலுங்கு); தாவரெ (கன்னடம்)
நீர (தண்ணீர்) _ நீர் (தமிழ், குயி); நீரு (துளு, தெலுங்கு); தீர்(ப்ராஹுவி)
பண்டித _ பண்டு (பழுஞ்ஞ, தெலுங்கு) பாண்ட் (பழுஞ்ச, கோண்டி)
புன்னாக _ பூனை (தமிழ்); பொன்னே (கன்னடம், தெலுங்கு)
பில _ பிளவு (தமிழ்); விள்ளு (மலையாளம்)
மஹிள _ மகள் (தமிழ்); மகளு (துளு); மள்(பார்ஸி)
மால _ மாலை (தமிழ்); மாலெ (கன்னடம்)
மீன _ மீன் (தமிழ், கோண்டி); மீனு (குயி, மால்ட்டோ, தெலுங்கு)
முக்த _ முத்து (தமிழ், கன்னடம், தெலுங்கு)
முரஜ _ முரசு (தமிழ்); மொரயு (தெலுங்கு)
முருங்கி _ முருங்கை (தமிழ்); முனக (தெலுங்கு) முளுங்க (பார்ஸி)
வலய _ வளை (தமிழ்)
வல்லி _ வள்ளி (தமிழ்); பள்ளி (கன்னடம்); வள்ளி (தெலுங்கு)
சவ _ சாவு (தமிழ்) சா (கன்னடம்)
சூர்ப்ப _ துறு(தமிழ்); துப்பு (துளு)
ஹேரம்ப (எருமை) _ எம்மெ (கன்னடம்); எர்மெ(எருமை) (துளு); எர்மி (கோண்டி)
ஆரியர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் அடிபணிந்தவர்கள் அவர்களது அடிமைகளாயினர். மலைகளுக்கும் காடுகளுக்கும் தப்பிச் சென்ற மற்றொரு கூட்டத்தினருமுண்டு. மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் கோத்திர வர்க்கத்தினராக வாழ்கின்ற அவர்கள், நாகரிக வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பழைய கோத்திர நாகரிகத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்-கின்றனர். அவர்களுடைய மொழி, பாடல்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றில் மிகவும் பழமையான அவர்களுடைய லவுகீக நடைமுறைகளே குறிப்பிடத்தக்க மாற்றங்களின்றித் தொடர்ந்தன.
திராவிட மொழிகளில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகவும் மெதுவாக ஏற்பட்டவையேயாகும். நாகரிக வளர்ச்சியின் முன்னோக்கியுள்ள பயணத்தினிடையில் பெருகிய ஆதிவாசிகளின் மொழிகளுக்கும் புதிய திராவிட மொழிகளுக்குமிடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதற்குக் காரணம் இதுதான்.
ஹரப்பர்களின் கோட்டை கொத்தளங்களைக் குடியேற்றக்காரர்களான ஆரியர்கள் தகர்த்தனர். செங்கற்களால் கட்டப்பட்ட அவர்களது கட்டடங்கள் தரைமட்டமாயின. கழிவு நீரோடைகளும் கழிப்பிடங்களும் பயனற்றுப் போயின. ஆனால், பழைமையான அந்த நாகரிகம் ஆரிய நாகரிகத்திற்குப் பல நன்மைகளையும் அளித்தன. அவற்றை உட்கொண்டு ஒரு புதிய நாகரிகம் வளர்ந்தது. மூலதிராவிட மொழி, சமஸ்கிருத மொழிக்குச் சிறந்த ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
இலக்கிய நூல்
வேதங்கள் பிரதிபலிக்கின்ற சமுதாய எண்ணங்கள் பயன் அற்றவையென்றாலும், அவற்றின் மனிதத் தத்துவம் பலவீனமானது என்றாலும், பழங்கால மனிதர்களின் நம்பிக்கை ஆச்சாரங்களின் கோர்வையென்பதில் பெரிய ஆழமொன்றும் வேதங்களுக்கு இல்லை-யென்றாலும் ஓர் இலக்கிய நூல் என்ற நிலையில் வேதங்களுக்குரிய இடம் ஒளிமயமானது. வேதங்களிலுள்ள பாவனைகளும் காவிய உணர்வும் மனோகரமானவை. பிற்கால சவுந்தர்ய சாஸ்திர (aesthetics) வளர்ச்சியில் வேதப் பாரம்பரியம் வகித்த பங்கு தெளிவானதாகும். ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக