எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (120) – 

நேயன்

பழமையான தமிழ் இலக்கியங்கள், வேதங்களைப் போற்றுகின்றன; வேதம், பண்டைய தமிழர் வாழ்க்கையில் ஆதார அச்சாக இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். 19ஆம் நூற்றாண்டில், தமிழர்களுக்குத் தனி அடையாளம் தேவைப்பட்டது. வெள்ளைக்காரர்கள் புகுத்திய ஆரிய-_திராவிட இனவாதத்தைச் சில தமிழறிஞர்களும் ஆராயாமல் ஏற்றார்கள். இப்பெரியோரின் தமிழ்ப்பற்று குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆனால், இவர்களிடம் சமஸ்கிருத வெறுப்புணர்ச்சி உருவாகியிருந்தது. அது, ஆரியர்களின் மொழி. இங்குள்ள பிராமணர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள்.

முதன்முதலாக, திராவிடமொழிக் குடும்பம் தனித்தன்மை கொண்டது என்பதைச்சொன்னவர் எல்லிஸ்தான். அதை அவர் கண்டுபிடிக்கத் துணை நின்ற சக ஆராய்ச்சியாளர்களே பிராமணர்கள்தான். ஆனால், இந்தியப் பண்பாடு குறித்த துவேஷம் எதுவும் எல்லிஸிடம் இல்லை. பின்னாள்களில், இந்த மொழியியல் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்த கால்டுவெல், அதனை இனவாதக் கோட்பாடாக உருமாற்றினார்.அரசியல் தளத்திலும் கொண்டு வந்தனர். அது
தான், திராவிட இயக்கம். ஜாதி மோதல்கள், சமூகப் பிளவுகள் எந்த அளவு ஆழமாகின்றனவோ, அந்த
அளவு தனக்கு நல்லது என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் இதனை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது. எனவே, ஒரு வலுவான தமிழ் அறிஞர்கள் கூட்டம், இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை. அதேபோல், பிராமணர்களிலும் தங்களை ‘ஆரிய இனத்தவர்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் கணிசமாக இருந்தார்கள். இதர தமிழக மக்களைக் காட்டிலும், பண்பாட்டிலும் இனரீதியாகவும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும், ஏதோ ஒரு விதத்தில் வெள்ளைக்காரனுடன் இன உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும் அவர்களுக்குப் பெருமை இருந்தது.

சைவத் திருமறைகளும் சரி, பழைமையான தமிழ் இலக்கியங்களும் சரி, நால் வேதங்களைப் புகழ்கின்றன. உதாரணமாக, திருமூலர் தனது திருமந்திரத்தில், ‘வேதத்தை விட்ட அறமில்லை, வேதத்தின் ஓதத் தகும் அறமெல்லாம் உள‘ என்கிறார். சைவ சமயத்தின் மூவர் முதலிகளாக அறியப்பட்ட அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் வேதத்தைப் போற்றிப் புகழ்கின்றனர். எந்தக் காலகட்டத்தைச் சார்ந்து நமக்குத் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்துள்ளனவோ, அந்தக் காலகட்டத்திலேயே தமிழர் பண்பாட்டில், ஒருங்கிணைந்த இன்றியமையாத அங்கமாக வேதம் விளங்குகிறது.

இவையெல்லாம், பிராமணக் காழ்ப்பால் வேதத்தைத் தவிர்த்த தனித்தமிழ்ச் சமயம் ஒன்று தமிழர்களுக்கு இருப்பதாகக் காட்ட எண்ணிய தமிழ் ஆர்வலர்களுக்குப் பிரச்சனையாக இருந்தது. எனவே, அவர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டனர். இங்கு வேதங்கள் எனச் சொல்லப்படுபவை ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள் அல்ல. அவை, தமிழருக்கென உருவான தனிப்பெரும் நால் வேதங்கள், கடல்கோளால் அல்லது ஆரிய சூழ்ச்சியால் அவை அழிந்தபிறகு, ஆரியர் தமது நால் வேதங்களை சூழ்ச்சியால் புகுத்திவிட்டனர். சைவப் பெருமான்களும், தொல் தமிழ் இலக்கியங்களும் நான்கு வேதங்கள் எனச் சொல்வது அவற்றையே அன்றி வடமொழி வேதங்களை அல்ல.

தமிழர்களின் வேதங்கள் வேறு; ஆரியர்களின் வேதங்கள் வேறு. தமிழர்களின் தொன்மையான நான்கு வேதங்களை கடல்கோள் அழித்து விட்டது. இதையே, ஆரியர்கள் கண்டு தங்களிடமும் நான்கு வேதங்கள் இருப்பதாக உருவாக்கிக் கொண்டனர். இதுதான், தமிழ்ப் புத்தெழுச்சியாளர்கள் கூறியது. இதற்கு என்ன ஆதாரம்? அன்று, இன்றளவுக்கு புவியியல் துறை வளரவில்லை. கடல் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பு குறித்த அய்தீகம், தியஸோபிக்கல் சொஸைட்டி என்கிற பிரம்மஞான சபையினரால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கை, தமிழ் இனவாதக் கோட்பாடுகளுடன் கலந்து, தமிழர் வாழ்ந்த லெமூரியாவாக, குமரிக் கண்டமாக உருவெடுத்தது. கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் வழ்ந்த நம் தொல்_தமிழ் மூதாதையர் உருவாக்கியதுதான் நான்மறைகள். அவற்றை நகலெடுத்து, பார்ப்பனர்கள் / ஆரியர்கள் உருவாக்கியவைதான் இன்றைய வேதங்கள்.

முக்கியமான தமிழ் அறிஞராகக் கருதப்படும் கா. சுப்பிரமணிய பிள்ளை என்கிற கா.சு. பிள்ளை, ‘திருநான்மறை விளக்கம்’ எனும் கட்டுரையை, 1920களில் வெளியிட்டார். அந்தக் கட்டுரையில், மேற்கூறிய கருத்துகளைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவத் திருமுறைகளையும், திருக்குறளையும் ஆதாரமாகக் காட்டி நிறுவ முற்பட்டார்.

அன்றைய உண்மையான வெறுப்புணர்ச்சி இல்லாத தமிழ் அறிஞர்கள், இந்த ‘தனித்தமிழ் மறை’ எனும் போலி ஆராய்ச்சிக்குத் தங்கள் மறுப்பை, பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ வைணவ இலக்கியங்கள் அடிப்படையாகவே அளித்து வந்தனர். அவர்களுக்கு அன்று ஆரியப் படையெடுப்பு – திராவிட இனவாதக் கோட்பாடுகளை எதிர்க்க புற ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இன்று நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் மரபணு சார்ந்து இந்த ஆரியப் படையெடுப்பு மற்றும் இனக்கோட்பாடுகளை நிராகரிக்க இயலும்.

தொல்காப்பியம், ‘நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ முன்னர் அரங்கேறியது என்பது தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர், ‘இவை தைத்திரியமும், பவுடிகமும், தலவகாரமும் சாம வேதமும்’ எனக் கூறுகின்றார். இவை ரிக், யஜுர், சாம, அதர்வம் என்பது பொருந்தாது என்கிறார். எனவே, நச்சினார்க்கினியர் கூறும் இவை நான்கும் எவை என்பதை நாம் காணலாம்.

ஆக, பவுடியம், தைத்திரீயம், தலவகாரம் என்பவை, தெளிவாகத் தரும சூத்திரங்களைக் குறிப்பவை ஆகும். அவை ரிக், யஜுர், சாம, அதர்வ சேவதங்களைக் குறிப்பவை அல்ல. மாறாக, அவற்றை அடியொற்றியதாகக் கூறி எழுந்த வாழ்வியல் சட்ட நூல்களான தரும சாத்திரங்களைக் குறிப்பவை ஆகும். இந்த நூல்கள், மனுவுக்கு முந்தையவையும் ஆகும். தொல்காப்பியம், வாழ்வியலை வரையறுக்கும் இலக்கண நூல் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது தெளிவாக விளங்கும்.

தென் திருப்பேரை (தூத்துக்குடி மாவட்டம்) கிராமத்தின் அந்தணர்கள் அனைவரும், சாம சாகையைச் சேர்ந்தவரே. திராவிடத்தின் தனித்தன்மையாகிய ‘ழ’காரம், இந்தச் சாமசாகை ஓதுதலில் (பாடுதலில்) காணப்படுகிறது.
ஆக, தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால், வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மைப் பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது. என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

(தொடரும்)