ஞாயிறு, 12 மே, 2024

ஸநாதன தர்மமே சங்கரர் தரும் நெறியா?



விடுதலை நாளேடு
Published October 21, 2023

மின்சாரம்

18.10.2023 ‘துக்ளக்’ இதழில் (பக்கம் 21) திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் “சனாதனம் பற்றி மஹா ஸ்வாமிகள்” என்ற தலைப்பில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தெரிவித்த கருத்தை – சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலிலிருந்து எடுத்துக் கூறியிருக்கிறார்.

இதோ அது: 

ஸநாதனம் பற்றி மஹாஸ்வாமிகள்

“நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு”  (Give the dog a bad name and hang it)  என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய் நன்றியறிதலும் விசுவாசமும் உள்ள பிராணி. அதைத் தூக்கில் போடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் அதற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுத்துவிட்டு, எவனோ தூக்கில் போட்டான் போலிருக்கிறது!

நவீன நாகரிக சீர்திருத்தக்காரர்கள் நமது தர்ம சாஸ்திரங்களின் விஷயத்தில் இதையேதான் செய்கிறார்கள். யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள்.

நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது. எனவே, தர்ம சாஸ்திரங்களால் வாஸ்தவத்தில் ஏற்படாத கொடுமைகளை இவர்களாகக் கற்பித்துச் சொல்கிறார்கள்.

‘நம் தேசத்தில் இன்னின்னார்தான் இன்னின்ன காரியம் செய்யலாம் என்ற அதிகார பேதத்தால் ஜனங்கள் பிரிந்து பிரிந்து போனார்கள். இதனால் ஹிந்து சமூகத்தில் ஒற்றுமை இல்லை; இதனால்தான் நம்மை அன்னிய தேசத்தார் பல முறை ஜயிக்க முடிந்தது’ என்று சொல்கிறார்கள். இது துளிக்கூடச் சரியில்லை.

பொது எதிரி வந்தபோது நம் தேசத்து ராஜாக்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஜனங் களிடையே பரஸ்பரம் பேதம் இருந்து, அவர்கள் எதிரிக்கு உதவி செய்ததாகச் சொல்வதற்குக் கொஞ்சம்கூட சாட்சியம் இல்லை.

பேதங்கள் போகவேண்டும் என்று சொல்கிற இப்போதுதான் உண்மையில் பேதமும் துவேஷமும் உக்கிரமாக இருக்கின்றன. இதற்கு மாறாக, சௌஜன்யத்தையே சமீப காலம்வரை கண்கூடாகப் பார்த்தோம்.

இரண்டு கிராமங்களுக்கிடையில் ஏதோ ஒரு வயல், வரப்பு, வாய்க்கால் அல்லது கோயில் பற்றிப் பாத்தியதை சண்டை வந்தால், அந்தந்த கிராமத்திலும் உள்ள அக்கிரகார ஜனங்களிலிருந்து சேரி மக்கள் வரையில் எல்லோரும் ஒரு கட்சியாகத்தான் நிற்பார்கள்; இந்தக் கிராமத்தில் உள்ள ஒருவன் தன் ஜாதியைச் சேர்ந்த எதிராளிக் கிராமத்தானோடு சேரவே மாட்டான். கிராமத்து விஷயமே இப்படி என்றால் தேசத்தின் விஷயத்தில் சொல்லவே வேண்டாம்.

இப்போது எல்லா சமூகங்களையும் மனமார்ந்த பிடிமானத்தோடு சேர்த்துப் பிடித்து வைக்க எந்த ஸ்தாபனமும் இல்லை. கட்டுக்கடங்காத ஒரே பெரிய அமைப்பில் இது சாத்தியமும் இல்லை. விளைவு? குற்றங்கள் கூச்சமில்லாமல் நடக்கின்றன; போலீஸின் வேலை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. சாஸ்திரங்களை எதிர்க்கிறவர்கள் இதை எல்லாம் யோசிக்க வேண்டும்.

விபூதி பூசுகிறவர்களில் சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே நாமம் போடுபவரிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள். எல்லாம் விஷ்ணு வடிவமான மண்ணில் தோன்றி மண்ணில் முடிவது என்பதற்கு அடையாளமே – திருமண். சரீரம் பஸ்மமான (சாம்பலான) பின்னும் சாசுவதமாக இருக்கிற சிவமயமான பரமாத்மாவிற்கு அடையாளம் திருநீறு. இப்படிப்பட்ட தத்துவச் சின்னங்களை கெட்ட பெயர் சூட்டித் தூக்குபோடலாமா?

பழைய தர்மங்களை எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் (ஆதி சங்கரர்) ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை.

ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

(தெய்வத்தின் குரல்)

இதுதான் துக்ளக்கில் எடுத்துக் காட்டப்பட்ட வாசகங்கள்!

எவ்வளவு சாமர்த்தியமாக நரித் தந்திரமாக அவாளின் ஜெகத் குரு நரியை நனையாமல் குளிப்பாட்டுகிறாங்க பார்த்தேளா!

பேதங்கள் போக வேண்டும் என்று சொல்கிற இப்போதுதான் உண்மையில் பேதமும், துவேஷமும் உக்கிரமாக இருக்கின்றனவாம்.

ஆக, பேதங்கள் போகக் கூடாது என்கிற தம் மூளையில் தேக்கி வைத்திருக்கிற நஞ்சை இலாவகமாகக் கொட்டியிருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் கூட எந்த ஒரு பார்ப்பானும் பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டம் போட்டுக் கொள்வது கிடையாதே!

கம்யூனல் ஜி.ஓ. வந்துவிட்ட காரணத்தால் பிராமணர்களுக்காக நான் கம்யூனல் பேஸிஸில் (வகுப்பு அடிப்படையில்) பேசுகிறேன். 

இந்த யோக்கியதை உள்ளவர்தான், பேதங்கள் போக வேண்டும் என்று சொல்கிறார். இப்போதுதான் உண்மையில் பேதமும், துவேஷமும் உக்கிரமாக இருக்கிதாம் என்று பம்மாத்துப் பேசுகிறார்.

“தீண்டாமை க்ஷேமகரமானது!” என்று பச்சையாகப் பேசிய இந்தப் பேர்வழிதான் பேதங்கள் பற்றிப் பசப்புகிறார். பாம்பு படம் எடுப்பதுகூட அழகாகத்தான் இருக்கிறது என்ற ஏமாந்துவிட வேண்டாம்.

தீண்டாமையை ஒழிப்பதற்காக இதே சங்கராச்சாரியாரின் ஆதரவைக் கேட்பதற்காக காந்தியார், அவர் முகாமிட்டிருந்த பாலக்காட்டில் சந்திக்கச் சென்றபோது, காந்தியாரை மாட்டுக் கொட்டடியில் வைத்துப் பேசிய இந்த ஜெகத்குரு கூறிய கருத்து என்ன? தீண்டாமையை ஒழிப்பது என்றால், அதில் நம்பிக்கையுள்ள மக்களின் மனதைப் புண்படுத்துவதாகும் என்று சொல்லவில்லையா?  

(ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி”, பக்கம் 575, 576)

தீண்டாமை இழிவுக்கு ஆட்படுத்தப் படக் கூடிய மக்களின் மனத் துன்பத்தைப் பற்றி ஜெகத் குருவுக்குக் கவலையில்லை. தீண்டாமையில் நம்பிக்கையுள்ள கேடு கெட்ட கூட்டத்தின் நம்பிக்கை புண்படுவது பற்றித்தான் சங்கராச்சாரியாருக்குக் கவலை!

இப்படிப்பட்ட பேர்வழிகள்தான் மகான்களாம்  மண்ணாங்கட்டிகளாம்!

ஸநாதனம் என்பதற்கு அதே சங்கராச்சாரியார் கூறும் பொருள் என்ன? 

‘துக்ளக்’கில் திருவாளர் குருமூர்த்தி அய்யர் எடுத்துக்காட்டும் அதே சங்கராச்சாரியார்தான் “சனாதன தர்மமே சங்கரர் தரும் நெறி” என்று தலைப்பிட்ட கட்டுரையில் (அதுவும் “தெய்வத்தின் குரல்” என்ற சங்காச்சாரியாரின் நூலில் இருந்துதான்.)

“நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது”  என்று தனது விசனத்தை வெளிப்படுத்துகிறார்.

‘ஸநாதனம்’ என்றால் ஏதோ சாக்குப் போக்குகளைச் சொல்லி சமாளிக்கும் பார்ப்பனர்களும், துதிபாடிகளும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஸநாதனம் என்றால் வர்ண தர்மம் தான் – ஜாதி தர்மம் தான் – என்று மட்டைக்கு இரண்டு கீற்றாகக் காஞ்சி முனி புங்கவர் பச்சைப் பார்ப்பனத் தனமாகக் கூறிய நிலையில், குருமூர்த்திகளின் நிலைப்பாடு என்ன? சங்கராச்சாரியாரைக் காப்பாற்றப் போகிறாரா அல்லது கை கழுவப் போகிறாரா?

இன்னும் இருக்கிறது இவர்களின் தோலை உரிக்கும் சங்கதிகள்.

“பழைய தர்மங்களை எல்லாம் முறிவு படாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு சிறீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள்” (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் – பக்கம் 284)

யார் இந்த சிறீ சங்கர பகவத்பாதர்? நாம் அடையாளங் காட்டத் தேவையில்லை.

அமெரிக்கா வரை சென்று இவாளின் தர்மங்களை நீட்டி முழங்கியதாகப் பெருமிதப்படும் அந்த விவேகானந்தர் ஆதி சங்கரரை நார் நாராகக் கிழித்து தோரணம் கட்டித் தொங்க விட்டுள்ளாரே!

இதோ படியுங்கள் – படியுங்கள்!

பார்ப்பனர்களைத் தோல் உரிக்கிறார்

ஆதி சங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர்!

ஆணவக்காரர், இதயமில்லாதவர், கொலைகாரர்

“சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக் காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கு இடமாகின்றன. விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால், என்கின்றார். நல்லது;

இந் நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று. வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின, அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! “வாதத்திலே தோல்வியுற்றோம்! என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன? புத்த(ர்) தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; `பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய- பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!”

(“சுவாமி விவேகானந்தர் சம்பாஷைணைகள்” பக்கம் 81, 82)

‘துக்ளக்’ கும்பலே, பதில் சொல்!

நீங்கள் சாட்சிக்குக் கொண்டு வந்த சங்கராச்சாரியார், ஆதி சங்கரர்களின் தராதரம் என்ன என்று இப்பொழுது புரிகிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக