திங்கள், 27 மே, 2024

2024லும் வேதத்திற்கு வக்காலத்தா? ‘தினமணி’க்குப் பதிலடி


பதிலடிப் பக்கம் : 

Published May 18, 2024, விடுதலை நாளேடு

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்

8.5.2024 நாளிட்ட ‘தினமணி’யில் ‘வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் கோதை ஜோதிலட்சுமி என்பவர் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.
“ஜனநாயக அமைப்பு என்றவுடன் தமிழர்கள் அனைவருக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்த செய்தி நினைவுக்கு வரும். உத்தரமேரூர் கல் வெட்டில் குடவோலை முறையில் தேர்தல் நடத்தப் பட்ட விதம், தேர்தலில் நிற்பவருக்குத் தேவையான தகுதிகள், எவையெல்லாம் தகுதியின்மை என்பன போன்ற தகவல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி பெற்றவரின் அதிகார வரம்பு, பொறுப்பு, முறைகேடு நடந்துவிட்டால் அதன் விளைவும் தண்டனையும் என விரியும் குறிப்புக்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

தகுதி உடையவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி நமது முன்னோரின் தெளிந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தகுதி இழப்பு பற்றிய செய்திகள் இன்னும்கூட நாம் ஜனநாயகப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. உத்தரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் செங் கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், உத்தரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோயிலில், முதலாம் பராந்தக சோழனின் (907-955ஆம் ஆண்டு) 12-ஆம் ஆட்சி ஆண்டிலும், 14-ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஆகும். சோழர் களின் நிர்வாகம் மக்களாட்சி கொள்கைகளின் அடிப் படையில் செயல்பட்டு வந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் நிறுவுகின்றன.

இந்தக் கல்வெட்டுகளின் காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் பதினோரு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இத்தகைய கிராமிய உள்ளாட்சி அமைப்பு களின் சுயாட்சி முறை ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால், ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏதென்ஸ் நகரில் பிரபுத்துவத்தை எதிர்கொள்ள “டெமோகிராடிக்கா’ என்ற ஜனநாயக அமைப்பு செயல்பட்டதைப் பார்க்கி றோம்.
உத்தரமேரூரில் சொல்லியிருக்கும் குடவோலை முறையைப் போலவே ஏதென்ஸிலும் இரண்டு குடங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஆதரவு நிலை, எதிர்நிலை என ரகசியமாகக் கற்களை இடு வதன் மூலம் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்கள் கூடும் “அசெம்பிளி’ என்ற ஆட்சி மன்றம் அமைத்து செயல்பட்டார்கள் என்பதில் இருந்தே உலகின் ஜனநாயக சித்தாந்தம் தொடங்குகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
ஜனநாயகம் என்பது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமரச சிந்தனையின் வெளிப்பாடு. அனை வருக்கும் அனைத்து வளங்கள் மற்றும் அதிகாரத்தில் சமமான பங்கு உண்டு என்பதை நிலைநாட்டவே ஏற்பட்டது ஜனநாயகம். பாரத தேசத்தைப் பொறுத்த வரை, அனைத்து ஜீவராசிகளும் இறைவனின் அம்சம் என்ற கோட்பாடும் சித்தாந்தமும் கொண்டது.

இந்த சிந்தனையே இந்த மண்ணில் ஜனநாயக நடைமுறையை சுலபமாக்கியிருந்தது என்பதுடன் இயல்பாக்கியிருந்தது. நமது தேசத்தின் ஜனநாயக சிந்தனை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உத்தர மேரூர் கல்வெட்டிலிருந்தும் முன் நகர்ந்து பார்த்தோ மானால் அது ரிக் வேதத்தில் கொண்டுபோய் நம்மை நிறுத்துகிறது.”
என்று கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது.
எவ்வளவு சாமர்த்தியம்! இருட்டடிக்கும் யுக்தி! ஓ, அய்யா. கொஞ்சம் ஏமாந்தால் தலையில் மிளகாய் அரைத்து குழம்பும் வைத்து விடுவார்கள்.

உண்மையில் உத்தரமேரூர் கல்வெட்டு உரைப்பது என்ன?
ஜனநாயம் தழைத்தோங்குகிறதாம். தகுதி, தகுதி யின்மை போன்ற தகவல்கள் முழுமையாக உத்தர மேரூர் கல்வெட்டில் பளிச்சிடுகிறதாம். அவர்கள் வாயாலோ, கையாலோ ‘தகுதி’ என்ற ஒரு சொல்லைக் கையாண்டால், அதன் அடியில் ஒரு சூழ்ச்சிப் பொறி சூதாக இருக்கிறது என்று பொருள்.
உத்தரமேரூர் கல்வெட்டு கூறும் அந்தத் தகுதிதான் என்ன?

குடவோலை முறையில் கிராம சபைக்குத் தேர்ந் தெடுக்கப்படுவோரின அந்தத் தகுதி தான் என்ன?
“கிராமசபை உறுப்பினராக ஒருவன் 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். 70 வயதுக்குள் இருக்க வேண்டும். கால்வேலிக்குக் குறையாத நிலம் இருக்க வேண்டும். வேத மந்திரங்களையும், உப நிஷத்துக் களையும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது ஒரு வேதமும் ஒரு வேத பாஷ்யமும் தெரிந்திருக்க வேண்டும்” (ஆர்.சத்தியநாதய்யர் ‘இந்திய வரலாறு’).
இதைத்தான் ‘தினமணி’ எழுத்தாளர் இப்படி எழுதுகிறார்.
“தகுதி உடையவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி நம் முன்னோரின் தெளிந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது” என்று உச்சிக் குளிர எழுதி மகிழ்கிறார்.
சமஸ்கிருதம் படித்திருந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று தகுதிக்கு அளவுகோல் வைத்திருந்தவர்கள் அல்லவா?

சோழர் காலம் முதல் இன்று வரை சமூக நீதி – இடஒதுக்கீடு என்று பேசும் பொழுதெல்லாம், ‘தகுதி போச்சே – திறமைப் போச்சே!’ என்று கூப்பாடு போடுவது எந்த அடிப்படையில் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உத்தரமேரூர் கல்வெட்டு ஜனநாயகத்தைப் பற்றி சிலாகிக்கிறதாம்.
“நமது தேசத்தின் ஜனநாயக சிந்தனை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உத்தரமேரூர் கல்வெட்டி லிருந்தும் முன் நகர்ந்து பார்த்தோமானால், அது ரிக் வேதததில் கொண்டு போய் நம்மை நிறுத்துகிறது. ரிக்வேதம் உலகின் முதல் நூல், பாரதத்தின் அறிவு நுட்பம். அங்கிருந்தே ஜனநாயக சிந்தனை பரவுகிறது” என்று எழுதுகிறார். சும்மா ஆடுமா இவர்களின் குடுமி? எவ்வளவுத் தளுக்காக எழுதினாலும் பச்சை செடியில் மறைந்திருக்கும் பாம்பு போல ஆரியம் தன் சுய உருவத்தைக் காட்டவே செய்யும் என்பதற்கு இது மேலும் ஓர் எடுத்துக் காட்டே!

“பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்ற நூல் பக்கம் 22 என்ன கூறுகிறது? இதை எழுதியவர் பிரபல வரலாற்றாளர் டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ. என்பவர்தான். என்ன எழுதுகிறார்?
“திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய விஷயம் ரிக் வேதத்திலே அநேக சுலோ கங்களாக இருக்கின்றன” என்று எழுதியிருக்கிறார்.

டாக்டர் ராதா குமுத முகர்ஜி எம்.ஏ. பிஎச்.டி. என்பவரால் எழுதப்பட்ட “இந்து நாகரிகம்” (பக். 69) என்ன விளம்புகிறது?
ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் (சூத்திரர்) என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியருக்கும் ஆரியரல்லா தாருக்கும் இருந்து கொண்டிருக்கும் அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்” என்கிறார் பிரபல வரலாற்றாளர் ராதா குமுத முகர்ஜி.

இந்திரனிடம் ஆரியர்கள் எத்தகைய வேண்டு கோளை வைத்தனர்?
எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்றிரண்டு:
“கருஞ் சிவப்புக் குதிரைகள் உள்ளவனே! எவ்வளவு எட்டத்தில் இருந்தாலும், அது உனக்கு ஒரு நீண்ட தூரமில்லை. எனவே, இந்திரனே! உன்னுடைய குதிரை களிலே விரைவாக வா.
உனக்காக வேள்வி தொடங்கப்படுகிறது. தீ மூட்டப் படுகிறது. சோமரசம் பிழிவதற்குக் கற்கள் தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன.

காளையே! இந்திரனே! அழகான மொக வாயை உடையவனே! வீரனே! தலையிலே கவசம் அணிந் துள்ளவனே! வெற்றியாளனே! வேள்வியின் தலை வனே! புயல் போன்ற செயல் உடையவனே! சோமக் குடியனே!
தாசர்கள் உன்னைக் கோபப்படுத்தியபோது, நீ அவர்களை எதிர்த்து நடத்திய வீரச் செயல்கள் இப் போது எங்கே சென்றது?
இந்திரனே! நீ ஒருவனே தனியனாக நின்று விருத் திரனைக் கொன்று, தேவர் களை (ஆரியர் களை) நோக்கி அஞ்சாதீர்கள் என அழுத்தமாய்க் கூறினால், எல்லையற்ற இந்த இரு உலகமும், நீ, பற்றுங்கால் அவை உனக்கு ஓர் கைப்பிடியே.
– (ரிக், 2695-98)

இந்திரனே! (அரக்கர் குலத்தை-தாச இனத்தை) பழமையாகவே தொன்று தொட்டு இங்கே வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும். முதலில் உள்ள வர்களை கிழித்தெறியவும், நடுவில் உள்ளவர்களை நசுக்கிக் கொல்லவும்.
எவ்வளவு நாட்கள்தான், நீ, மனத்திட்பம் இல்லா தவன் போல், இருப்பாய்? வேள்வியை வெறுக்கின்ற, தெய்வத்தை வணங்காத தாசர்களை, உனது எரியும் ஈட்டிகளைச் செலுத்திக் கொல்லவும்.
– (ரிக், 2710)

கோட்டைகளைத் தூளாக்கியவன். செல்வத்தின் மன்னன். எதிரிகளைச் சிதற அடித்தவன். இந்திரன், தனது மின்னலால், தாசர்களை வெற்றி கொண்டான்.
– (ரிக், 2768)

இந்திரன் விருத்திரனைக் கொன்றான். காடுகளிலே மறைந்திருந்த தாசர்களைக் கொன்றான். இரவிலே ஓட்டிச் சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பசுக் களைக் கண்டுபிடித்தான்.
– (ரிக், 2769)

இந்திரன், தனது மிகுந்த பலத்தால், வேள்வியை வெறுக்கும் தாசர்களையும், தெய்வத்தை நிந்திக்கும் தாசர்களையும் கொன்றான்.
– (ரிக், 2771)”

இத்தோடு முடிந்துவிட்டாலும் விட்டுத் தள்ளலாம். ‘தினமணி’ கட்டுரையாளர் அறிவின் பொக்கிஷம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறாரே – அந்த ரிக் வேதத்தின் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
“தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன் மந்த்ரம் ப்ராஹ்மணா தீனம்
ப்ராஹ்மனா மம தைவதம்”
இதன் பொருள் என்ன?

“உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது, தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரங்கள் பிராம்மணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராம்மணர் களே நமது தெய்வம்”.
நமது தேசத்தின் ஜனநாயக சிந்தனை ரிக் வேதத்தில் கொண்டு போய் நிறுத்துகிறதாம் என்று ‘தினமணி’கள் எழுதுவதன் நோக்கம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!
ரிக் வேதத்தில் கூறப்பட்டு இருப்பது ஒரு புறம் இருந்து தொலையட்டும். நமது காலத்தில் மட்டும் என்ன வாழ்கிறது?
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தின் ஏற்பாட்டில் ‘அருந் தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு, காஞ்சி சங்கராச்£ரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியது என்ன?

“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொல்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும், அந்தணர் தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன் தான் முதலில். (‘நக்கீரன்’, 15.11.2002) என்று ரிக் வேதத்தில் உள்ள அதே கருத்தைத்தானே சங்கராச்சாரியார் பேசு கிறார்.
(அந்தணர் என்று பார்ப்பனர்களைச் சொல்வது கடைந்தெடுத்த மோசடி).

இந்த 2024ஆம் ஆண்டிலும் ரிக்வேதம் என்ற பெயரால் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிக்கும் ‘தினமணி’கள் இருக்கின்றன.
ஆரியர்களின் தேவனான இந்திரன் குடிகாரன் என்று அதே வேதம் தானே கூறுகிறது. ஆதாரத்தோடு எடுத்துக் கூறியுள்ளோமே!
அசுரன், தஸ்யூக்கள், தாசர்கள், குரங்குகள் என்று வேதங்களிலும், இராமாயணம் என்ற இதிகாசத்திலும் கூறப்பட்டுள்ளன.
தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இரா மாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று விவேகானந்தர் கூறிடவில்லையா? (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்” “இராமாயணம்” என்ற தலைப்பில் பக்கம் 587-589).
வேதங்களைப் பற்றி நீட்டி முழங்கும் ‘தினமணி’ கட்டுரை – அந்த வேதங்களைப் படிக்க, கேட்க சூத்திரர் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுண்டா?
இதுகுறித்து விவேகானந்தர் பேசுகிறாரே!

“சூத்திரன் வேதம் ஓதுவதைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்று, கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில் வைத்து விட்டானென்றால் அவனது நாக்கை வெட்டு, என்பது போன்ற கடுமையான வாசகங்கள் உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும் மட்டமான காட்டுமிராண்டித்தனம். சந்தேகமே இல்லை. இத்தகைய காரியங்களைச் செய்த பேய்கள் முன் காலங்களில் இருந்திருக்கின்றனர்” என்கிறாரே விவேகானந்தர் (திருச்சி மாவட்ட ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் 1938இல் வெளியிட்ட The Man Making Message of Vivekananda for the use of College Students – பக். 150, 151, 152, 155, 156).

விவேகானந்தர் கூறும் அந்தக் காட்டுமிராண்டி கள்தான் தகுதி உடைய மக்கள் என்கிறது ‘தினமணி’.
“இன்றைய அரசியல் போராட்டம் என்பதே பார் ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டது தான்” என்கிறார் தந்தை பெரியார் (‘விடுதலை’, 22.5.1967).
இதையே தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யாரும் வழி மொழிகிறார்.
“தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை” என்றாரே! (18.9.1953 அன்று திரு வொற்றியூரில் ஆச்சாரியார் பேசியது).

இதை எல்லாம் எடுத்துக்காட்டினால் ‘தினமணி’க்கு கோபம் வரக் கூடாது. ஏனெனில் “வேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்ருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகிறான்” (மனுதர்மம், அத்தியாயம் 2, சுலோகம் 11).
‘தினமணி’க்குப் புரியும்படிச் சொன்னால் நாத்தி கனுக்கு இந்து மதத்தில் இடம் உண்டு என்று சமாதானம் சொல்லிக் கொள்ளுமோ ‘தினமணி’.
2024இலும் பார்ப்பனர்கள் எப்படி இருக்கின்றனர் என்பதற்கு இந்தத் ‘தினமணி’ கட்டுரை ஒன்று போதாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக