வெள்ளி, 26 ஜூலை, 2019

கடவுளுக்கு மேலே பார்ப்பனர்கள்!

காஞ்சியில் அத்திவரதர் பற்றி அள்ளி விடுகிறார்கள். அதே காஞ்சியிலே ஸ்தலப் புராண அடிப்படையில் இதோ:

காஞ்சியிலுள்ள பஞ்ச தீர்த்தம் என்னும் குளம்பற்றிய ஸ்தலப் புராணக் கதையில் உள்ளது.

பூர்வம் பிருகு மகரிஷி (பார்ப்பனர்) சத்வப் பிரதாபன் என்ற தேவன் சாபம் நீங்க ஓர் தீர்த்தத்தை அறிய வைகுண்டம் சென்றார்.

அப்போது விஷ்ணு, பாம்பின்மேல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

பிருகு வந்ததை அறியாது தூங்கினார். இதைக் கண்டு அந்தப் பிருகு தன்னை விஷ்ணு வரவேற்று மரியாதை செய்யாமல், அவமதித்து விட்டதாக ஆத்திரமடைந்தார். விஷ்ணுவின் வச்சஸ்தலத்தில் (மார்பில்) தன் காலால் உதைத்தார்.

(விஷ்ணுவின் மார்பில் லட்சுமி இருப்பதாக புராணக் கதை - எனவே, பார்ப்பனன் உதைத்த உதை லட்சுமிமேலும் பட்டு இருக்கும்).

இதைக் கண்டு கோபமடைந்த மகாவிஷ்ணுவின் மனைவி சிறீதேவி (லட்சுமி), அந்த பிருகுவைப் பார்த்து, நீர் பிரம்ம தேஜோ பலங்களை இழந்து விடுவீர்' என்று சபித்தார். (அதாவது பார்ப்பனத் தன்மையிழந்த சூத்திரனாக வேண்டும்)

பிருகு ரிஷி (பார்ப்பனர்) காலால் உதைத்ததால் தூக்கம் கலைந்து விஷ்ணு, கண் விழித்து எழுந்தார்.

பிருகுவின் பாதங் களைத் தன் கைகளால் பிடித்து, தண்ணீர் ஊற்றிக் கழுவி, அநேக உபசாரங்களைச் செய்தார்.''

உதைத்தவன் ஒரு பார்ப்பனன் என்ற ஒரே காரணத்தால், விஷ்ணு கடவுளே, உதைத்த காலுக்கு முத்தமிடுவதைக் கவனிக்கவேண்டும்.

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சங்கராச்சாரியார் கடவுளுக்கு மேலே பிராமணன் என்று கூறினாரே (நக்கீரன், 15.11.2002) தெரிந்துகொள்வீர் பார்ப்பனர்களை!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 20.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக