கடவுள் மறுப்புக்கும், நாத்திகத்திற்கும் வழி இருப்பதால், நான் இந்து மதத்தைக் கொண்டாடுகிறேன்'' என்று தலைப்பிட்டு, தமிழ் இந்து' நாளிதழில் ஒரு செய்தி (23.6.2018) தாங்கள் புதுச்சேரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஒரு கருத்தரங்கத்தில் பேசி யுள்ளதாக வந்துள்ளது.
இது சரியாக இருக்குமானால், சில விளக்கங்களை தங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது கருஞ்சட்டை சகோதரனின் கடமையாகும்!
நீங்கள் ஒரு கோணத்தில் கூறினாலும், அதை இன்றைய, நாளைய இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். சக்திகள் - எந்த சக்திகள் ஆண்டாள்' தமிழாற்றுப் படைக்காகத் தங்களை வறுத்தெடுத்தார்களோ, அவர்களே அதை மட்டுமே வைத்து இந்து மதத்தை வைரமுத்துவே கொண்டாடுகிறார்' என்று பெருமிதப்படுத்தி திசை திருப்பிட எல்லாவித வாய்ப்புகளும் உண்டு என்பதால், இப்படி நினைக்கும் அல்லது வாதிடும் பலருக்கும் பதிலாக அமையும் என்று கருதி இவ்விளக்கத்தை - மடலை எழுதுகிறேன்.
முதலாவது,
இந்து மதம் கடவுள் மறுப்பை, நாத்திகத்தை அனு மதிப்பதற்குக் காரணம் அதற்கெனத் தனிக் கொள்கையோடு உருவான மதமே அல்ல - அந்த பார்ப்பன, ஆரிய, சனாதன, வேத மதம்.
வேதங்களே அதற்குப் பிரதானம். அவர்களின் அகராதி யில் நாத்திகன் என்பவன் கடவுள் மறுப்பாளன் அல்ல; வேதத்தை ஏற்க மறுப்பவனே! (ஆதாரம்: காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திரரின் தெய்வத்தின் குரல்')
இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்லு கிறோமே, இதற்கு உண்மையில் ஹிந்துப் பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து' மதம் என்கிற வார்த்தையே கிடையாது!''
(ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திரரின் தெய்வத்தின் குரல்', முதல் பகுதி: பக்கம் 122).
இரண்டாவது,
வேதங்களில் மும்மூர்த்திகள் கிடையாது. அதனால் இந்து மதத்தில் மதச் சண்டை - சைவம் - வைணவம், சிவன் - விஷ்ணு, பிறகு ஆக்கும் கடவுள் பிரம்மாவின் சண்டைகளும், விஷ்ணு மட்டுமே அவதாரம் எடுத்தார் என்று கூறுவதும், சிவனோ, பிரம்மாவோ அந்த கீழே இறங்கிவரும்' அவதாரங்களாகவில்லை என்பதும், எவ்வப்போது மக்களிடம் செல்வாக்கு எந்தக் கொள்கை - திட்டங்களுக்குப் பெருகியதோ, அதனை தன்னுள் இழுத்து, தன்னுடையதைப்போல, வெளியே உருமாற்றத் தோடு காட்டும் கலையே இந்து மதத்தின் மாறி மாறி வந்த கொள்கைகள். எடுத்துக்காட்டு பவுத்தத்தின் யாகக் கொள்கை எதிர்ப்பினால், அது புலால் உண்ணாமையை பிறகு ஏற்ற ஒன்று. முன்னாளில் யாகம், அவிர்ப்பசுக்கள், சாந்தோக்கிய உபநிஷதம் முதல் பலவற்றிலும் மாட்டுக்கறி முதலிய பல உண்ணும் பழக்கம் உண்டு. ஆதாரம் உபநிஷத் மட்டுமல்ல; மனுதர்மத்திலும் உண்டு.
இதன் கொள்கை, லட்சியம் என்பது வரையறுத்துக் கூற முடியாதபடியால், மைக்கேல் vs வெங்கடேசுவரன் என்ற வழக்கில் தீர்ப்பு எழுதிய சென்னை உயர்நீதி மன்றத்தின் அந்நாள் தலைமை நீதிபதி டாக்டர் ஜஸ்டீஸ் பி.வி.இராஜமன்னார்,
‘‘When I speak of Hinduism, I am actually conscious of the vague connotation of that word'' Michael vs Venkateswaran case: MLJ 239/1952-1)
நீதியரசர் இராசமன்னார் கருத்து
தம்முடைய நிலைக்குப் பக்கத் துணையாக மாண்புமிகு இராசமன்னார் அவர்கள் இந்தியப் பண்பாட்டு மரபு' என்னும் நூலிலிருந்து கீழ்வருவதைச் சான்று காட்டினார்.
மதம் என்ற சொல்லை இப்போது நாம் புரிந்துகொள்ளும் பொருளின்படி ஹிந்துவியல் என்பது ஒரு மதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று அல்லது ஹிந்துக்கள் என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒருபோதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது.''
"Hinduism is not a religion in the sense in which we now understand the word. The word is not Indian in origin; nor was it ever used by the Hindus as the same name of their religions" (மைக்கேல் ஸ் வெங்கடேசுவரன் வழக்கில் தீர்ப்பு)(The Cultural Heritage of India, Haridass Battacharia: ILR 1953 (Madras 106)
But the word has come to stay and convenience requires that the word should be retained to describe a typical mode of life inclusive of religion and philosophy in the strict sense of those terms. It has been rightly said that:''
இதுபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உண்டு.
மூன்றாவது,
கடவுள் இல்லை என்பது பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். கல் கடவுளை அதன் மனைவியையும் அர்ச்சகர் கழுவி குளிப்பாட்டும்போது ஆண் கடவுளுக்குக் கோபமே வராததே அவர் அதைக் கடவுள் என்று நம்ப வில்லை என்பதற்கு ஆதாரம்.
அண்மையில் திருட்டுப் போய், மீட்கப்பட்டு வரும் கடவுள், கடவுளச்சிகள் சிலைகளும், அதன் நிலையுமே ஓர் ஆதாரம் ஆகும்.
நான்காவது,
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்''
என்ற சமஸ்கிருத சுலோகப்படி,
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது
(கடவுளை விட) எனவே, பிராமணனே பூஜிக்கத்தக்கவன்.
இச்சுலோகம்மூலம் கடவுள் மேலானவன் அல்ல; பார்ப்பனரே மேலானவன் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவாள் பேசும் பாஷை தேவ பாஷை' அவாள் பூதேவர்கள்' எனவே, இதுதான் இந்து மதம் - கடவுள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம், முக்கியமானதே அல்ல.
இதற்காக இந்து மதத்தைக் கொண்ட உங்களையும், என்னையும், நம்மை சூத்திரன், பஞ்சமன், சண்டாளன், நீச்சன், தஸ்யூ, அடிமை, தாசி புத்திரன்கள் என்று இன்றும் சட்டத்தில் (இந்து லா படி) கூறும் பிறவி இழிநிலை அவ மானத்தைத் தரும் வர்ணாசிரமம்தானே ஜாதி முறைதானே - இந்து மதத்தின் முக்கிய அடித்தளம்.
அதன்படி அத்துணை பெண்களும், கீழான ஜாதி களுக்கும் கீழான ஜாதி என்ற இழிநிலை அடிமைகள்தானே!
இது வேறு எந்த மதத்தில் உண்டு?
விதவைகள் மற்ற மதங்களில் உண்டு.
திணிக்கப்பட்ட விதவைத்தன்மை - நமது தாய்களை அவமானச் சின்னங்களாக்கி, எதிரேகூட வரக்கூடாது என்று (இருந்த நிலை) ஆக்கியுள்ளது வேறு எங்கே உள்ளது?
உயிருடன் அவர்களை எரித்து சதி மாதா'' கோவில் கட்டும் கொடுமை வேறு எந்த மதத்தில் உண்டு?
அருள்கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்!
கடவுள் கருத்து சுதந்திரத்தைவிட, இந்த மனித அவமானம் - நம் தாய்மார்களை தேவடியாள்களாக'' (மனுதர்மம் அத்தியாம்-8 சுலோகம்-415) எழுதி வைத்துள்ள துடைக்க முடியாத களங்கம் வேறு உண்டா?
சற்றே எண்ணிப் பாருங்கள்.
உலகில் எந்த மதம் கீழ்ஜாதிக்காரர்களுக்கு, சூத்திரர் களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று மறுத்தது? கல்விக் கண்ணைப் பிடுங்கிய கோர மதம் மனுதர்ம இந்து மதம்தானே! இல்லையா!
நாயை, பன்றியை தொடுதல், மலத்தைத் தொட்டால் அந்த இடத்தைக் கழுவிக் கொள்ளலாம் - ஆனால், தாழ்த்தப்பட்ட சகோதரரான மனிதனைத் தொடாதே என்று கூறும் மதம் அதே இந்து மதம் அல்லவா?
ஒரு கருத்துக்காகப் பாராட்டினால், இத்தனைக் கோளாறுகளுக்காக அதனை எத்தனை முறை வெறுக்கவேண்டும்? யோசியுங்கள்!
உங்களிடம் குற்றம் காண அல்ல இப்படிக் கூறுவது - இந்தக் கடிதம். உங்கள் கூற்றை, இன எதிரிகள், பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் தவறாகப் பயன் படுத்திக் கரையேற முயற்சிப்பர்.
எனவே, இனிமேலாவது இப்படி வாய் தவறியும் பாராட்டி விடாதீர்கள்!
கடவுள் மறுப்பு, நாத்திகத்திற்காக ஒரு மதத்தைப் பாராட்ட நீங்கள் விரும்பினால், புத்த மதத்தைவிட சீரிய பகுத்தறிவு நெறி மனிதநேயம் வேறு உண்டா?
புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறி (நான் இந்துவாக சாகமாட்டேன் எனக் கூறி) பவுத்த நெறியில் சேர்ந்தார்?
எனவே, புத்தநெறியைப் புகழுங்கள்!
அது பகுத்தறிவு சுதந்திரத்திற்கு எல்லையற்று வழிவகை செய்த மார்க்கம் அல்லவா!
பல கோடி தாழ்த்தப்பட்ட, சூத்திர சகோதர, சகோதரி களும் இந்து மதத்தால் திண்டாடும்போது, நீங்கள் அதைக் கொண்டாடலாமா?
தங்களின் பாசமுள்ள
சகோதரன்
"கருஞ்சட்டை
- விடுதலை நாளேடு, 25.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக