புதன், 20 ஜூன், 2018

வெள்ளையரா - பார்ப்பனக் கொள்ளையரா?

மின்சாரம்


நாட்டில் பெண்கள் மதிக்கப்படாததற்குக் கடந்த கால அந்நியர் ஆட்சியே காரணம். பெண்களை சமூகம் தற்போது காணும் போக்கு வெட்கக் கேடானது. நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம்!

-இவ்வாறு கூறியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர்.  குடியரசுத் துணைத் தலைவர் மாண்பமை  வெங்கையா நாயுடு அவர்கள் ஆவார்கள்.

இதில் இரண்டு பிரச்சினைகள் துள்ளி விளையாடுகின்றன.

ஒன்று - பெண்கள் மதிக்கப்படாததற்கு காரணம் அந்நியர் ஆட்சியே.

இரண்டாவது - நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம் என்பதாகும்.

மிகப்பெரிய பதவி ஆசனத்தில் இப்படி சொல்லியிருக்கும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் காரணமாகவே அவர் இப்படி பேசி இருக்கிறார்.

வெள்ளைக்காரர்கள் செய்ததெல்லாம் என்ன?

கணவன் இறந்தவுடன் அவன் உடலோடு மனைவியை எரித்த சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தது தான் அவன் செய்த பாவச் செயலா?

வெள்ளைக்கார கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது. அது கூடாது - அடாத செயல் என்று துணை குடியரசுத் தலைவர் கூறவும் போகிறாரா?

இதில் என்ன கொடுமை தெரியுமா? வில்லியம் பெண்டிங் இந்த மனிதநேய பெருஞ் செயலைச் செய்த போது மாண்பமை வெங் கய்யா நாயுடு அவர்களால் பெருமையோடு குறிப்பிடப்படும் அந்த முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

பார்ப்பனக் குழு ஒன்று இந்திய இராணு வத்தில் கமாண்டர் சீஃப் சர் சார்லஸ் நேப்பியரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கை - திரு. வெங்கையா நாயுடு அவர்கள் பெருமைப்படத்தக்கதாக இல்லை.

தேசிய பழக்க வழக்கங்களில் தலையிடு வதில்லை என்று பிரிட்டீஷ் அரசு (விக்டோரியா மகாராணியின் அறிக்கை) உறுதியளித்துள்ள நிலையில், அதற்கு மாறாக சதியை ஒழிப்பது சரியல்ல, என்பதுதான் அந்தப் பார்ப்பனக்குழு வைத்த கோரிக்கை.

அதற்கு சர் சார்லஸ் அளித்த பதில் நாகரீகமான முறையில் ஆயிரம் முறைக் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்த தற்குச் சமமானதாகும். என்னுடைய தேசத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது. பெண்களை உயிருடன் எரிக்கும் ஆண்களை தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக்கம்.

நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான்  நடக்கிறோம் என்று நளினமாகத் தெரிவித்தார்.

ஆதாரம்: தி வீக்- அக்டோபர் 11-17 (1987)

வெள்ளைக்காரர்கள் செய்த இன்னொரு பொல்லாத காரியம் என்ன தெரியுமா? அதுதான் குழந்தைத் திருமணங்களை ஒழித்தது.

வெள்ளைக்காரன் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் கொடியதா? அல்லது துணைக் குடியரசுத் தலைவர் கூறும் நமது பெருமைக்குரிய முன்னோர்கள் கூச்சல் போட்டது பெருமைக்குரியதா?

அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ் கேதைரின் மேயோ என்பவர் இந்தியாவிற்கு வந்து சுற்றிப் பார்த்து மதர் இந்தியா என்ற நூலை எழுதினார்.

எதையும் அவர் கற்பனையாக எழுதிட வில்லை; நேரில் கண்டதைத்தான் எழுதினார். மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் சென்று அவர் பார்த்த அந்த கோரக்காட்சியை எடுத்துரைக்கிறார். படிக்கும் போதே இதயத்தி லிருந்து இரத்தம் உடைத்துக் கிளம்புகிறது.

இனி சென்னை ராஜதானியை எடுத்துக் கொள்வோம்.  வட இந்தியாவிலுள்ள பல பாகங்களை விட சென்னை ராஜதானியில் நடக்கும் சம்பவம் மிக்க பரிதாபகரமானது. இங்கு பெண்களைப் புருஷர்கள் மிகவும் கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றனர். ஒரு தனிப்பட்ட மாகாணத்தைப் பற்றி நாம் பேசுவானேன்? இந்தியாவின் எப்பாகத்திற்குச் சென்றாலும் பெண்களின் விஷயம் இது போலேவே தானிருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு பிரபல ஆங்கிலேய ஸ்திரீ வைத்தி யரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர் என்னிடம் கூறியதாவது: இந்தியப் பெண்களில் உடல் வலிமையுள்ளவர்களைப் பார்ப்ப தென்பது, மிகவும் துர்லபம். அதிகமாக சிற்றின்பத்திலீடு படுவதும், புருஷர்கள்  பெண்கள் விஷயத்தில் கொஞ்சமும் இரக்கமின்றி நடந்து கொள்வதுமே இதற்குக் காரணம். புருஷர்களில் பெரும்பாலோருக்கு மேகரோக மிருக்கின்றது.  ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவைகளுக்கு அதிக மாகவே புருஷர்கள் பெண்களுடன் புணர்ச்சி செய்கிறார்கள்.

சென்ற 33 வருடங்களுக்கு முன்பு, பெண்களுக்கு  விவாகம் செய்யும்  வயதை உயர்த்த வேண்டுமென்று இந்திய சட்ட சபையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்ட பொழுது, இந்தியாவிலிருக்கும் என்போன்ற பல ஆங்கில ஸ்திரீ வைத்தியர்கள் சேர்ந்து பெண்கள் இந்நாட்டில் படும் துயரத்தை வைசிராய்க்கு ஒரு மகஜர் மூலமாக தெரியப்படுத்தினோம். அம்மகஜரில் குறிப் பிட்ட சில விஷயங்களை இங்கு எடுத்துக் கூறுவது பொருந்தும். சில ஆஸ்பத்திரிகளில் அடியில் குறிப்பிட்ட விவரப்படி பெண்கள், வியாதியினால் துன்பப்பட்டதாகக் கணக் கிடப்பட்டிருக்கிறது.

9 வயது: கல்யாணமான மறுநாள் இடதுகால் எலும்பு பிசகி விட்டது, கருப்பப்பை கவிழ்ந்து விட்டது. உள்ளே புண்.

10 வயது: நிற்கக் கூட சக்தியில்லை. பெண் குறியில் புண்ணுண்டாகி, ரத்தம் பெருகி ஒழுகுகின்றது.

9 வயது: ஸ்திரீ அவயத்தில் அதிக ரணம். ரண சிகிச்சை செய்வதுகூட முடியாமலாய் விட்டது. இவளைத் தவிர இவளுடைய புருஷனுக்கு இரண்டு மனைவிகள் - அவர்கள் உயிருடனிருக்கின்றார்கள். இப்பெண் ஆங்கிலக் கல்வி கற்றவள்.

7 வயது: சிற்றின்ப விஷயத்தில் புருஷ னுடைய கொடுமை பொறுக்க முடியாமல் உயிர் துறந்தாள்.

10 வயது: ஆஸ்பத்திரிக்கு வரும் பொழுது நடக்கக் கூட சக்தியில்லை. கல்யாணம் ஆனதிலிருந்து  அவளால் எழுந்திருந்து நிற்கவும் சக்தியில்லாது போய்விட்டது.

இம்மாதிரி பல உதாரணங்கள் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது 1891ஆம் வருடத்தில் மற்றொரு முறை அம்மசோதா இந்திய சட்டசபை யாலோசனைக்கு வந்த பொழுது, மீண்டும் ஆங்கில ஸ்திரீ வைத்தி யர்கள் ஒரு மகஜரைத் தயாரித்து வைசிராய்க்கு அனுப்பினர். 1891ஆம்  வருடத்திலிருந் ததற்கும் 1922ஆம் வருடத்தில் நடந்திருப்ப தற்கும்  அதிக  வித்தியாசமில்லை. 1891ஆம் வருடத்திலிருந்ததை விட 1922ஆம் வருடத் தில் அதிகமான பால்ய விவாகங்கள்  நடந்திருக்கின்றன  வென்பதை எவரும் மறுக்க முடியாது மேயோவின் கற்று இது. வெள்ளைக்காரன் வராமல் இருந்தி ருந்தால் இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும்?

ஒரு கணம் சிந்திக்கட்டும் துணைக் குடியரசுத் தலைவர்.

நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம்  என்கிறாரே  - என்ன நமது பாரம்பரியம். கீதையைத் தேசிய நூலாக  அறிவிக்க வேண்டும் என்கிறார்களே - அந்தக் கீதை பெண்களைப் பற்றி என்ன கூறுகிறது?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் (கீதை, அத்தியாயம் 9, சுலோகம் 32) என்கிறதே கீதை - இதுதான் நமது பெருமை மிக்கப் பாரம்பரியமா?

(இந்து மதத்தில் பெண்களின் நிலை பெட்டிச் செய்தி. தனியே காண்க)

வெகு தூரக் காலத்திற்குச் செல்வானேன்? மாண்பமை  வெங்கையா நாயுடு  அவர்களின் ஆர்.எஸ்.எஸ்.  குருநாதர்  திருவாளர் மோகன்பாகவத்துக்கு பெண்களைப் பற்றிய மதிப்பீடு என்ன? மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனுக்கு இன்பம் தரவேண்டும். இது பெண்மையின் கடமை. இந்தக் கடமையி லிருந்து மனைவி விலகி விட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது; விலக்கிவிட  வேண்டும் என்று இந்தூர்  பொதுக்கூட்டத்தில் (1-7-2014) ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன்பாகவத் பேசினாரா இல்லையா?

பெரும்பதவியில் இருக்கும் வெங்கையா நாயுடு அவர்கள் சிந்திக்கட்டும்!

-  விடுதலை ஞாயிறு மலர், 5.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக