புதன், 20 ஜூன், 2018

ஸ்மிருதி ஆசிரியர்கள்

பெண்ணை ருது காலத்திற்கு முன்பு தக்க வரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தையும், மனைவியை ருது காலத்தில் புணராத கணவனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.


மனு - அத்தியாயம் 9

குலம், நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபம் உடையவனாயும் இருக்கிற வனுக்குத் தனது பெண் 8 வயதுக்கு உட்பட்டு இருந்தாலும் விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்


மனு - அத்தியாயம் 9

ஒரு புருஷன் 18 வயதில் கிரமப்படி 7 வயதுள்ள பெண்ணை விவாகம் செய்து கொள்ள வேண்டும்


- தேவலர்

30 வயதுள்ள புருஷன் 10வயதுள்ள ஸ்தீரியை விவாகம் செய்ய வேண்டும்                                   - பிரகஸ்பதி


25 வயதுள்ள துவிஜன் (இரு பிறப்பாளன்) 8 வயதுள்ள கன்னிகையை விவாகம் செய்ய வேண்டும். 30 வயதுக்குட் பட்டவன் 9 வயது ரோகிணியை விவாகம் செய்ய வேண்டும். 10 வயதுக்குப் பிறகு அவள் காந்தாரி ஆகின்றாள். தீர்க்காயுசை வேண்டுகின்றவன் அப்பேர்ப்பட்ட பெண்ணை அவள் பிரவிடை ஆவதற்கு (பூப்பு எய்துவதற்கு) முன்னாள் விவாகம் செய்யக்கடவன்


- ஆஸ்வலாயனர்

8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் சுவர்க்க லோகத்தையும், 9வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் பிரம்ம லோகத்தையும் அடைகின்றான். அதற்கு மேற்பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகின்றான்.


- பராசரர்

மற்றும் ஒரு தர்ம சாஸ்திரம் தன் மகளுக்கு முதல் மாத விலக்கு ஏற்படுவதற்கு முன் மணம் முடித்து வைக்காத தந்தை கருச்சிதைவு செய்த பாவத்தை அடைகின்றான் என்று கூறுகின்றது.


நாற்பத்தெட்டியாண்டு பிரம்மச்சரியங்காத்தாற்குப் பன்னீராட்டை பிராயத்தாளை அணிகலன் அணிவித்துக் கொடுப்பது. கொடாவிடின் ஓரிரு துக்காட்சி ஒருவனைச் சாராது கழிந்த விடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது; அதனை அறநிலை என்பது என்று களவியல் உரைகாரர் கூறுகின்றார்.


இராமகிருஷ்ண பரமஹம்சர்


இராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா மணியம்மையார் ஆவார். அந்த அம்மையாருக்கு 5 வயது இருக்கும்போதே, கி.பி.1858இல் இராமகிருஷ்ணருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றார்.


காந்தியார்  - கஸ்தூரிபாய் மணம்


அதிகம் போவானேன்! காந்தியாருக்கும் கஸ்தூரி பாய்க்கும் இவர்களுக்கு 7 வயதாக இருக்கும்போதே திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் 13ஆம் வயதில் மணம் நடந்தேறி இருக்கிறது.


காந்தியார் அவர்களே பிற்காலத்தில் தமது சரித்திரத்தை எழுதும் போது அதில் 13ஆவது வயதில் எனக்குத் திருமணம் ஆயிற்று என்பதை எழுதும்போதே எனது உள்ளம் மிகவும் துன்பப்படுகின்றது. இன்று நான் என் கண் முன்னால் பன்னிரண்டு, பதின்மூன்று வயதுக் குழந்தைகளைப் பார்க்கின்றேன். என் திருமணத்தைப் பற்றிய ஞாபகம் வரும் போது என்மீதே எனக்கு இரக்கம் தோன்றுகின்றது. என்னைப் போன்ற கெட்ட நிலைக்கு ஆளாகாமல் அவர்கள் இதுவரை இருக்கின்றார்களே என்பதற்காக அவர் விருப்பம் உண்டா கின்றது. 13 வயதில் நடந்த திருமணத்தைச் சரி என்று ஸ்தாபிக்க நீதி பொருந்திய எந்தவிதத் தர்க்கமும் என் மண்டையில் நுழைய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


பால்மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் திருமணம்


இக்குழந்தை மணமானது பிற்காலத்தில் எல்லா வகுப்பாரிடமும் பரவி எவ்வளவு மோசமான நிலைக்கு வந்து விட்டதென்றால் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் கூடத் திருமணம் செய்து வைக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விட்டு விட்டது.


1921ஆம் ஆண்டில் நமது நாட்டு ஜனத் தொகைக் கணக் கெடுப்பின் படி, கீழ்க்காணும் புள்ளி விவரங்கள்  தெரியவரு கின்றன. ஒரு வயதுக்குக் குறைந்த வயது முதல்  5 வயது வரை உள்ள பெண்கள் 20,369 பேர்களுக்கும், 5 முதல் 10 வயது வரையில் உள்ள பெண்கள் 1,23,472 பேர்களுக்கும், 10 வயது முதல் 15 வயது வரையில் உள்ள பெண்கள் 11,76.063 பேர் களுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


(வரலாற்றில் குழந்தை - 14.8.71, திருமணம் புலவர் கோ.இமயவரம்பன்-  உண்மை - 14.8.1971 )

ஆஜ்மீர் - மெர்வாராத் தொகுதியில் இருந்து டில்லிச் சட்டசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ராய் சாகிப், ஹரி பிலாஸ் சாரதா (Rai Sahib, Hari bilas sarada) என்னும் அறிஞர் 1-2-1927இல் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயதுச் சீர்திருத்த மசோதா என்பதாக ஒரு திட்டம் இந்தியச் சட்டச்சபையின் ஆலோசனைக்குத் கொண்டு வந்து பிரேரேபித்தார்.


வைதீகப் பார்ப்பனர்களும் மத வெறியர்களும் கடுமை யாக எதிர்க்கலானார்கள். 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம், சம்மத வயதுக்கமிட்டி (The Age Consent Committee) சிம்லாவில் கூடியது. பச்சை வருணாசிரமவாதிகளான எம்.கே.ஆச்சாரியார், திரு.டி.வி. கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் எல்லாம் சிம்லாவில் இருந்த அரசாங்கத்தின்   உள்நாட்டு மெம்பரைச் (Home Member) சந்தித்துக் குழந்தை மணச்சட்டம் கொண்டு வருவதைத் தடைசெய்ய வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டனர்.


சங்கராச்சாரியின் தந்தி


அப்போது இருந்த சங்கராச்சாரியர் 12 வயதுக்குப் பிறகு பெண்களுக்குத் திருமணம் செய்தால் மதமே கெட்டுப் போகும் என்று வைசிராய்க்குத் தந்தி கொடுக்கச் செய்தார்


-  விடுதலை ஞாயிறு மலர், 5.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக