புதன், 4 ஜூலை, 2018

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கடிதமும் நமது விளக்கமும்

புதுச்சேரியில் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் இந்து மதம் குறித்து கூறியதற்கு 'விடுதலை'யில் ஒரு திறந்த மடலை எழுதியிருந்தோம் (25.6.2018). அது தொடர்பாக கவிப்பேரரசு அவர்கள் நமக்கொரு மடல் எழுதியுள்ளார் (29.6.2018).

அந்தக் கடிதம் வருமாறு:

இந்துமதம் என்பது ஒன்றன்று

கவிஞர் வைரமுத்து விளக்கம்

'விடுதலை'யில் கருஞ்சட்டை எழுதிய திறந்த மடலை நான் பெரிதும் மதிக்கிறேன்.

பகுத்தறிவுச் சிந்தனைகள்மீதும், திராவிடச் சித்தாந்தங்கள் மீதும் மற்றும் என் மீதும் 'விடுதலை' இதழ் கொண்டிருக்கும் அன்பான அக்கறை என்றே அதை நான் புரிந்து கொள்கிறேன். அதைப் போலவே புதுச்சேரியில் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் நான் பேசியதும் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

ஒருவரின் மேடைப் பேச்சைப் பத்திரிகைகள் பெரும் பாலும் தங்களுக்கு வசப்பட்ட மொழியில், தாங்கள் புரிந்து கொண்ட கருத்தில், குறைந்த சொல் எண்ணிக் கையில் மட்டுமே வெளியிடுகின்றன.

'முரசொலி'யில் கலைஞரின் பேச்சும், 'விடுதலை'யில் ஆசிரியர் வீரமணி அவர்களின் பேச்சும், அதிகாரத்தில் உள்ளவர்களின் அச்சடிக்கப்பட்ட உரைகளும் மட்டுமே சொல்லுக்குச் சொல் வெளி வந்திருக்கின்றன; வெளி வருகின்றன. என்னைப் போன்றவர்களின் சொற்பொழிவு சொல்லிய சொல்லில் பெரும்பாலும் முழுமையாய் வெளி வருவதில்லை. அதனால் பல சொற்பொழிவுகள் பிறழ உணர்ந்து கொள்ளப்படுகின்றன.

பௌத்த மதத்திற்கு மாறிய அண்ணல் அம்பேத்கர் பெரியாரையும் அம்மதத்திற்கே அழைத்தார் என்றும், பெரியார் அதை மறுத்தார் என்றும் வாசித்திருக்கிறேன். பெரியாரின் மறுப்பைச் சொல்ல வந்த போது தான் இந்து மதத்தில் கடவுள் மறுப்புக்கும் வழி இருக்கிறது. அப்படி வழி விட்டதை நான் மதிக்கிறேன் என்ற பொருளில் உரையாற்றினேன்.

வேத மதங்களின் கருத்துக்கள் ஆதி காலத்திலேயே மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன.அப்படி மறுத்தவர்களை உலகாயதர்கள் என்றும், சார்வாகர்கள் என்றும் வான்மீகி ராமாயணம் பேசுகிறது. மணிமேகலையில் அவர்கள் பூதவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

உருவ வழிபாட்டை எதிர்த்த சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் இந்து மதத்தின் கீழ்தான் அமைகிறார்கள். இந்துமதம் என்பது  ஒன்றல்ல. அதன் பன்முகத் தன்மையில் நாத்திகமும் உண்டு. அப்படி அது வழி விட்டதை மட்டும் தான் குறிப்பிட்டுப் பேசினேன். அரங்கத்தில் நான் பேசியது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதற்கு அவையின் ஆரவாரமே சாட்சி. அந்தப் பேச்சின் காணொலி கிட்டும்; காணலாம்.

இப்படி ஒரு கருத்து விளக்கம் காண்பதற்கு மேடை அமைத்துத் தந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கும், நெஞ்சில் பட்டதை நேர்மையாகச் சொன்ன கருஞ்சட்டைக்கும், அதை முதல் பக்கத்தில் வெளியிட்ட 'விடுதலை'க்கும் நான் நன்றி சொல்லத் தான் வேண்டும்."

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் ஒரு முக்கிய பகுதி தந்தை பெரியார் அவர்களின் கருத்து பற்றியதாக இருப்பதால் இதற்கொரு பதிலும், விளக்கமும் கொடுக்க வேண்டியது நமது கடமையாகி விட்டது.

விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் நமது கொள்கை எதிரிகள் அதனை வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுத்ததாகி விடும் அல்லவா?

"பௌத்த மதத்திற்கு மாறிய அண்ணல் அம்பேத்கர் பெரியாரையும் அம்மதத்திற்கே அழைத்தார் என்றும், பெரியார் அதை மறுத்தார் என்றும் வாசித்திருக்கிறேன். பெரியாரின் மறுப்பைச் சொல்ல வந்த போது தான் இந்து மதத்தில் கடவுள் மறுப்புக்கும் வழி இருக்கிறது. அப்படி வழி விட்டதை நான் மதிக்கிறேன் என்ற பொருளில் உரையாற்றினேன்" என்று கவிப் பேரரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்தில் தந்தை பெரியார் சேர மறுத்ததற்குக் காரணம் கடவுள் மறுப்புக்காக மட்டுமல்ல. அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் தந்தை பெரியார் தெரிவித்த கருத்து என்ன?

பர்மா - இரங்கோனில் நடைபெற்ற உலக புத்த அறநெறி மாநாட்டில் (5.12.1954) தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் பங்கு கொண்டனர்.

புத்த மார்க்கத்தில் சேர்வது பற்றி அவர்கள் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். தன்னோடு பெரி யாரையும் புத்த மார்க்கத்தில் சேருமாறு அம்பேத்கர் அழைப்பு விடுத்தார்.

அதற்குத் தந்தை பெரியார் சொன்ன பதில்தான் முக்கியமானது.

"நான் இப்போது ஜாதி ஒழிப்புப் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்துக் கடவுள்கள்  எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும் இந்து மதத்தில் உள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, இப்பொழுது பிரச்சாரம் செய்வதுபோல், அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் 'நீ அதைச் சொல்லக் கூடாது' என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் 'இன்னொரு மதக்காரனாக' இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. எனவே நான் வெளியிலிருந்து கொண்டு புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்" என்று டில்லி பகார்கஞ்சில் நடைபெற்ற கூட்டத்தில் (15.2.1959) தந்தை பெரியார் பேசினார். ('குடிஅரசு' 22.2.1959).

கோடானு கோடி மக்கள் ஒடுக்கப்பட்டுக் கிடக் கிறார்கள். அவர்கள் உரிமைக்கு இங்கு இருந்து கொண்டு தான் பாடுபட முடியும் - பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கருத்தையும் பல இடங்களில் தந்தை பெரியார் கூறியுள்ளார்.

இன்னொரு முக்கிய கருத்தும் உண்டு. இந்து மதத்தில் கடவுள் மறுப்பு என்பது நாத்திகமல்ல. இது குறித்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தெளிவுபடுத்தியிருப்பதைத் தங்கள் கவனத் துக்குக் கொண்டு வருகிறோம்.

"நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத் துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந் திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல!" ('தெய்வத்தின் குரல்' இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)

இந்து மதத்தில் முக்கிய நூலாகக் கூறப்படும் மனுதர்மமும் இதையே தான் கூறுகின்றது.

"வேதம் (ஸ்ருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ் விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்" (மனுதர்மம் அத்தியாயம் 1 - சுலோகம் 11).

இந்த நிலையில் இந்து மதத்தில் கடவுள் மறுப்புக்கும் வழியிருக்கிறது என்பதற்காக இந்து மதத்தைக் கொண் டாடுகிறேன் என்று பகுத்தறிவாளரான கவிப் பேரரசு சொல்லும்போது ஒரு நெருடல் முரண் இருக்கிற காரணத்தாலும், இதனை நமது கொள்கை எதிரிகள் பயன்படுத்திவிடக் கூடாது, என்ற நிலையிலும், தந்தை பெரியார் கொள்கையைத் திரிபுவாதத்திற்கு இடங் கொடுத்து விடக் கூடாது என்ற அக்கறையுடன் இந்த மடல் எழுதப்படுவதை கவிப்பேரரசு புரிந்து கொள்வார் என்றே நம்புகிறோம்.

இது போன்ற பகிர்வுகள் வெளிப்படைத் தன்மையில் இருப்பது - பயனளிக்கக் கூடியது என்பதாலும்தான் இந்த வெளிப்படையான மடலாகும்.

மற்றபடி கவிப்பேரரசுவிடம் உள்ள இன உணர்வு, மொழி உணர்வு சார்ந்த நட்புறவு என்றும்போல் ஊனமின்றித் தொடரவே செய்யும்.

தங்களின் பாசமுள்ள சகோதரன்

"கருஞ்சட்டை"

-  விடுதலை நாளேடு, 30.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக