செவ்வாய், 19 ஜனவரி, 2021

சிலைகளை வழிபடுவோர் மூடர்கள்! - உத்தர கீதை!


அப்படியானால் சோவும், குருமூர்த்தியும்?

 மின்சாரம்

“பார்ப்பனருக்குத் தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று  இருக்கிறதா?  இல்லை. காரணம் என்ன? உழைக்கும் வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனராய் இருப்பினும்; கடவுள் பேரால் பாடு படாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்?

பிறவியின் பெயரால், ஜாதியின் பெயரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா?” (குடிஅரசு 28.5.1949 என்ற அர்த்தமுள்ள யதார்த்தமான வினாவைத் தொடுத்தார் தந்தை பெரியார்.

***

“பார்ப்பனர்களுக்குள்ளாகவே தங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு, அரசாங்கத்தை எதிர்க்கும் தேசியம் எனும் பேரால் ஒரு பிரிவும், சர்க்காரை ஆதரிக்கும் உத்தியோகம் பார்ப்பது என்னும் பேரால் ஒரு பிரிவும், மதங்களைக் காப்பாற்றும்  வைதிகம் என்னும் பேரால் ஒரு பிரிவுமாகப் பிரித்து, மூன்று துறைகளையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு அவைகளுக்குத் தாங்களே கர்த்தர்களாய் இருந்து கொண்டு, மற்ற மக்களை எந்தத் துறையிலும் முன்னேறாதபடி தொல்லை விளைவித்து வருகிறார்கள்.

- தந்தை பெரியார்

(‘குடிஅரசு’ - 1 4.7.1935)

பார்ப்பனர்களை இந்த அளவுகோலால் எடை போட்டால்தான்  அவர்களின் உண்மை உருவம் பளிச் சென்று துல்லியமாகத் தெரியும்.

சோவும், அவரின் மறைவிற்குப் பிறகு திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தியும் ‘துக்ளக்‘கில் வாரந்தோறும் கக்கும் நஞ்சும் எத்தகையது என்பதையும் தந்தை பெரியார் கூறும் மூன்று அளவுகோல்களால் எளிதாகவே அறிந்து கொள்ள முடியும்.

(1) கேள்வி: நாத்திகவாதி, பகுத்தறிவுவாதி என்ன வித்தியாசம்?

பதில்: உண்மையான நாத்திகவாதி அனைத்துக் கடவுள்களையும் மறுப்பார். நேர்மையான பகுத்தறிவு வாதி அனைத்து நம்பிக்கைகளையும் வெறுப்பார். திராவிட நாத்திக பகுத்தறிவுவாதி ஹிந்து கடவுள்களை மட்டும் வெறுத்து, ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் பழிப்பார்.

(‘துக்ளக்‘ 20.1.2021 பக்கம் 10)

ஒவ்வொரு வாரமும் ‘துக்ளக்‘ இதழிலும் ‘அவர் தந்த அனுபவங்கள்’ எனும் தலைப்பில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்  சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் படத்தையும் போட்டு பல பக்கங்களில் கட்டுரைகளைத் தீட்டுகிறாரே எஸ். குருமூர்த்தி அந்த மகா பெரியவாள் நாத்திகம் பற்றி என்ன சொல்லுகிறார்?

“நாஸ்திகம் என்றால்  ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்“

“அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்“

“வைதிக வழக்கையை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே  ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது - ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல” (‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் தொகுதி பக்கம், 407 -408).

நொடிக்கு ஒரு தடவை மகா பெரியவாள் என்றும், அவர் தான் அரசியலுக்கு, பதவிக்கு நான் செல்லுவதைத் தடுத்தவர் என்றும் கூறிக் கொள்ளும் குருமூர்த்திகளுக்கு  - நாஸ்திகர் பற்றி அந்தப் பெரியவாள் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியாமல் ‘தத்துப் பித்து’ என்று உளறலாமா?

இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. கடவுள் பற்றிக் கூடக் கவலையில்லை.  வேதங்களை எதிர்க்கக் கூடாது - அதுதான் அவாளின் கவலை.

அந்த வேதங்கள் தானே பிராமணனைப் பிர்மா தன் நெற்றியில் இருந்து படைத்தான் - சூத்திரர்களைத் தம் பாதங்களிலிருந்து படைத்தான் என்று எழுதி வைத்துள்ளது.

“தேவாதீனம் ஜெகத் சர்வம்

மந்த்ராதீனம் துதேவதா

தன்மந்த்ரம் பிரமணாதீனம்

பிராமணா மமதேவதா”

“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுபட்டவர்கள். மந்திரம் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமது கடவுள் அவர்களை வழிபட வேண்டும் என்று கூறுவது வேதம் தானே! (ரிக் வேதம் 62ஆம் பிரிவு - 10ஆம் சுலோகம்)

கடவுளை எது வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போங்கள் - வேதத்தின்மீது மட்டும் கல்லெறியாதீர்கள் - இதுதான் பார்ப்பனர்களின் கவலையும் அக்கறையும்! ‘துக்ளக்‘கில் குருமூர்த்தி அய்யர்வாள் குறிப்பிடும் இன்னொரு விடயத்துக்கும் வருவோம்.  மற்ற மதக் கடவுள்களை வெறுக்கமாட்டார்கள், ஹிந்துக் கடவுள் களைத் தான் பழிப்பார்கள் என்று மித்திர பேதம் செய்து பார்க்கிறார்.

இதுவும் எந்த வகையிலும் உண்மையல்ல. தந்தை பெரியார் சிலைப் பீடங்களில் கல்வெட்டுகளில் பொறிக் கப்படும்.

கடவுள் இல்லை

கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

என்ற வாசகங்களில் ஹிந்து மதக் கடவுள் மட்டும்தான் என்று கூறி இருக்கிறோமா?

மற்ற மதக்காரர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாத நிலையில் ஹிந்து மதக் குருமூர்த்திகள் மட்டும் ஏன் பூணூல் அறுந்து விழக் குதிக்கிறார்கள்.

ஹிந்து மதக் கடவுளைக் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் எப்பொழுது ஏற்பட்டது?

பிர்மா என்ற ஹிந்து மதப் படைப்புக் கடவுள்தான் (ஆண்) பிராமணனைத் தன் முகத்திலிருந்து படைத்தான்; சூத்திரனைத் தன் பாதங்களில் இருந்து படைத்தான்; பிராமணனுக்காகவே இந்தஉலகைப் பிர்மா படைத்தார்; சூத்திரன் என்றால் வேசி மகன்; பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியஞ் செய்கிறவன் (மனுதர்மம் - அத்தியாயம் 8 - சுலோகம் 415) என்று ஹிந்து மதம் சொல்லும் நிலையில் அந்த ஹிந்து மதத்தையும், அந்த ஹிந்துக் கடவுளையும், அதன் வேதங்களையும் விமர்சிக்காமல் இருக்க நாங்கள் என்ன உஞ்சி விருத்திப் பார்ப்பனர்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா?

இதுதான் பிரச்சினை. தந்தை பெரியாரும் சரி, அவர்கண்ட இயக்கமும் சரி, அவ்வியக்கத் தொண்டர்கள் கூறும் கருத்து களும் சரி, அவற்றை மறைத்து விட்டு, தங்களிடம் ஊடக பலம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்  ‘பாரீர், பாரீர்!’ இந்தப் பகுத் தறிவாளர்கள், நாத்திகவாதிகள், மற்ற மதங்களை விமர்சிப்ப தில்லை - ஹிந்து மதத்தையும், அதன் கடவுளையும்தான் குறை சொல்லுகிறார்கள் என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள் பழி சுமத்தி பக்திப் போதை ஏறிக் கிடைக்கும் மக்களைத் திசை திருப்புகிறார்கள்.

தந்தை பெரியார் பிறந்த மண் பார்ப்பனர்களின் மாய்மாலங்களைக் கண்டு ஏமாந்து போய் விடாது - அந்த அளவு இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்கது என்ன தெரியுமா? ஹிந்து மதத்தில் நாஸ்திகத்துக்கு இடம் உண்டு என்பதுதான்!

நாஸ்திகத்துக்கு இடம் உண்டு என்று ஒப்புக் கொண்ட பிறகு நாத்திகத்தின் கூர்மையைக் கண்டு குலை நடுங்கவானேன்? குடுமிகள் கூத்தாடுவது ஏன்? ஏன்?

*****

2) கேள்வி: தலை சிறந்த ஆன்மிகவாதியான சோ ஞான மார்க்கத்தில் ஈடுபாடு காட்டிய அளவுக்கு ஆலய வழிபாடு போன்ற பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு காட்டவில்லை. கர்ம யோகியாகத் திகழ்ந்தார். ஆலய வழிபாடு போன்றவற்றில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

பதில்: சோ-வை பல முறை நான் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சந்தித்திருக்கிறேன். பல ஆண்டுகள் தவறாமல் அவர் கோயிலுக்குப் போயிருக்கிறார். அவருக்குப் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு இல்லை என்பது தவறு. எனக்கும் ஆலய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

- ‘துக்ளக்‘ 20.1.2021 பக்கம் 10

ரொம்ப சரி - ஆலய வழிபாடு, உருவ வழிபாடு என்று சிண்டைத் தட்டிக் கொண்டு சிருங்கார ரசத்தோடு எழுத முன் வருகிறார்களே!

இந்த ஆலய வழிபாடு, உருவ வழிபாடு என்பதுபற்றி இவர்களின் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தின் நிலைப்பாடுதான் என்ன?

பாரதத்தில் ஒரு பாகமாகிய உத்தர கீதை என்ன சொல்லுகிறது? துவிஜதர்களுக்குத் (இருபிறப்பாளனாகிய பார்ப்பனருக்கு)  தெய்வம் அக்னியில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலைகளில்!

குருமூர்த்தி ‘துக்ளக்‘கில் எழுதுகிறார், நானும், சோவும் கோயில் வழிபாடுகளில், அந்தக் கோயில்களில் உள்ள தெய்வங்கள் என்று கூறப்படும் சிலைகளை வழிபடுவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். அப்படியானால் அவர்களின் ஹிந்துசாத்திரப்படி சிலைவழிபாடு செய்கிறவர். மூடர்களாக ஆகி விட்டார்களா இல்லையா?

வியாழன், 7 ஜனவரி, 2021

ஜாதியோ, ஜாதி! (பாக்கள் முதல் பறவைகள் வரை)

ஒற்றைப் பத்தி

ஜாதியோ, ஜாதி!

தமிழ் இலக்கியத்தில் பிற்காலத்தில் வருண வேறுபாடு கூறப்பட்டது. தமிழ் இலக்கணத்தில், எழுத்து, பாக்கள் ஆகியவற்றுக்கும்கூட வருண வேறுபாடு கூறப்பட்டது.

பார்ப்பனரை வெண்பாவாலும், சத்திரியரை (அரசரை) ஆசிரியப் பாவாலும், வைசியரை (வணிகரை) கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாடவேண்டும்; பாக்களைக் கலந்து பாடும் கலம்பகத்திலும் வருண பேதம்! தேவருக்கு 100, பார்ப்பனருக்கு 95, சத்திரியருக்கு 90, அமைச்சருக்கு 70, வைசியருக்கு 50, மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமாம்.

பாடல் இலக்கணத்தில்கூட வருண வகுப்பாடு என்கிற அளவுக்கு ஆரியம் புகுந்து விளையாடிய கொடூரத்தை என்னவென்று சொல்ல!

பாம்புகளில், பிராமண, அரச, வைசிய ஜாதிகள் எவை என்று சிந்தாமணி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பேச்சு வழக்கிலும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வருண வேறுபாடு வழங்குவதைக் காணலாம். தலை வெளுத்து, உடல் சிவந்த கழுகைப் ‘‘பிராமணக் கழுகு'' என்று கூறினர்.

கருநிறமுடைய கழுகைப் ‘பறைக் கழுகு' என்று அழைத்தனர். வெண்மை கலந்த ஒரு வகை மைனாவை பார்ப்பார மைனா என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் ‘‘பார்ப்பாரச் சிலுவா'' (பார்ப்பனக் கிளுவை) என்று ஒரு வகைக் காட்டு வாத்து அழைக்கப்படுகின்றது. ஜாதி அடிப்படையில் வழங்கும் இவ்வழக்கு ஆங்கில மொழியிலும் வழங்கி வருகிறது. ‘பறை நாய்' என்ற பெயரை ஒருவகை நாயினத்துக்கு விலங்கு நூலார் வழங்குவதைக் காணலாம்.

‘‘பிரமா மாடு'' (பிராமண மாடு) என்ற பெயர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று பரவிய இந்திய மாட்டினத்துக்குப் பெயராக வழங்குகின்றது.

வால்மீகி ஒரு செய்யுளில் ‘பிராமணி' என்ற பெயரில் அரணையைக் குறிப்பிடுகின்றார்.

இன்றைக்கும் பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது, ஆவணி அவிட்டத்தில் புதுப்பிப்பது அவர்கள் துவிஜாதியினர் (இரு பிறப்பாளர்) என்று கூறி, பார்ப்பனரல்லாதாரை சூத்திரர் - வேசி மக்கள் என்று இழிவுப்படுத்துவதுதானே!

ஜாதியின் ஆணிவேர் அறுக்கப்பட்டால்தான் ஆரியம் ஒழியும்!

 - மயிலாடன்

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

ஆனால் , அவாள் ஆத்தில் ?

கேள்வி : ஓர் ஆண் அரசியல்வாதிக்கும் , ஒரு பெண் அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் ? 

பதில் : பெண் அரசியல்வாதி , ' வாங்கடா பார்க்கலாம் ' என்று பேசலாம் . ஆண் அரசியல்வாதி ' வாங்கடி பார்க்கலாம் ' என்று பேச முடியாது . - ' துக்ளக் ' , 16.12.2020 , பக்கம் 30 . 

ஆனால் , பெற்ற தாயையும் , பெற்ற மகளையும் மட்டும் ' வாடி , போடி ' என்று அவாள் ஆத்தில் பேசலாம் . ( பெண்கள் என்றாலே துக்ளக் குருமூர்த்தி கும்பலுக்கு அப்படியொரு குரூரம் - ஒவ்வாமை நோய் ஆனால் , மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இதில் விதிவிலக்கு ) என்ன கொடுமை ? மனைவிக்கு போன் கால் வந்து யாருடன் எத்தனை மணிநேரம் அரட்டை அடித்தாலும் கணவன்மார்கள் யாரும் யார் என்னவெனக் கேட்பதில்லை . கணவனுக்குப் போன் கால் வந்து 60 செகண்ட் பேசினால் , அடுக்களையில் அப்படியே பாத்திரத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்து யார் , என்ன எனக் கேட்பது ஏன் ? என்ன கொடுமை சார் இது ? - ' குமுதம் ' , 16.12.2020 இதில் கூறப்பட்டுள்ளது - ஒட்டுமொத்தமும் அப்படித்தான் என்பது போல
காட்டப்படுவது சரியா ? பெண் நீண்ட நேரம் போன்கால் பேசினால் கணவன்மார்கள் கேட்கவே மாட்டார்களா ? ஆணோ , பெண்ணோ நீண்ட நேரம் போனில் பேசினாலும் சரி , மற்ற வகையில் பேசினாலும் சரி , அது பிரச்சினையாக்கப்படுவது பொதுவான நிலைப்பாமே இந்த நிலையில் , பெண்களைக் குற்றவாளியாக்குவது ஒருவகை வக்கிரப் புத்தியே 50 . ஆண்கள் வேலைக்குப் போய்விட்டு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் யாரும் கேட்பதில்லையே பெண் அலுவலக வேலை நிமித்தம் கொஞ்சம் 
தாமதித்து வந்தால் , எத்தனை எத்தனை நேரடி கேள்விகள் - குறுக்குக் கேள்விகள் . கணவன் மட்டுமல்ல , வீட்டில் இருக்கும் குஞ்சுகள் , கூளான்கள் கூட கேட்பதில்லையா ? இதைப்பற்றி எல்லாம் எழுதமாட்டார்களா ? புத்தி குறைந்தவர்களுக்கு ... கேள்வி : இறைவழிபாடு , சிலை வழிபாடு - முக்கிய வேறுபாடு என்ன ? பதில் : ஆன்மிகத்தில் முதிர்ந்தவர்களுக்கு உருவமில்லாத இறைவழிபாடு என் போன்ற ஆன்மிக சாதாரணங்களுக்கு சிலை வழிபாடு - ' துக்ளக் ' , 25.11.2020 பாரதத்தில் ஒரு பகுதி என்று கூறப்படும் உத்தர கீதை ' எனும் வேதாந்த நூல் இவ்வாறு கூறுகிறது . துவிஜதர்களுக்கு ( பார்ப்பனர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர்களுக்குத் தெய்வம் அக்னியில் ; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில் புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில் இதில் ' துக்ளக் குருமூர்த்தி கடைசி வகையைச் சேர்ந்தவர் என்பது அவரது பதிலில் இருந்தே தெரிகிறது .
 - ஊர்சுற்றி
விடுதலை,15.12.20

வெள்ளி, 25 டிசம்பர், 2020

உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள்.


. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்‘நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா...’என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். ‘அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்’ என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

“மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது” என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

-ராமானுஜ தாத்தாச்சாரியார்
இந்து_மதம்_எங்கே_போகிறது? பகுதி – 12ல் ஒரு பகுதி

வியாழன், 24 டிசம்பர், 2020

வேதப்படி பெண்கள் படிக்கக்கூடாது



“ஸ்திரீகளுக்கு ஒரு காலத்திலும் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து அதிலும் பையன்களுடன் சேர்ந்து,வாசிப்பதென்பது கூடாது.விவாஹமாகும் வரையில் மாதா-பிதாக்களே வீட்டில் வைத்து பெண்களுக்கு வித்தியாப்பியாஸத்தைச்(கல்வி) செய்து வைக்க வேண்டுமென்பதே முக்கிய பக்ஷம். 
பணம் சம்பாதிக்கும் படியான வெளி-விருத்திகளில் ஸ்தரீகளை விடுவது அதர்மமேயாகும்.ராஜாங்க காரியங்களிலும் தேசீயப் பொதுக் காரியங்களிலும் ஸ்திரீகளின் சம்பந்தமிருக்கலாகாது.”

“வெளியில் சுதந்திரம் வேண்டுமென்று இந்த தர்ம-நாட்டில் நாளதுவரையில் ஒரு தர்ம பத்னீயும் உத்தேசித்திருப்பதில்லை.”

-ஶ்ரீ ராமாநந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள் இயற்றிய ‘தர்ம விமர்சனம்’

குறிப்பு: ஶ்ரீ ராமாந-ந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகளின் பூர்வாசிரமப் பெயர் அட்வகேட்.
 ராமச்சந்திர ஐயர் ஆகும்.
ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யதீர்த்த ஸ்வாமிகளால் துரியாசிரமம் பெற்று ஶ்ரீ ஞானானந்த பாரதீ என்று பட்டம் வாங்கியவர்.முன்னாள் சென்னை மாகாண வர்ணாசிரம மகாநாட்டு கமிட்டி தலைவர் இவர்.

-தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 2.12.20

அடிமை_சூத்திரனும்_வைதிக_சடங்குகளும் (கோத்திர புரட்டு)


சூத்திரனுக்கும் அவர்ணர்களுக்கும் ஹிந்து வைதிக சனாதன சடங்குகளுக்கும் சம்பந்தமே இல்லை!

இந்து வேத வைதீக சனாதன தர்மத்தில் மூன்று வர்ணத்தார்களுக்கு மட்டுமே தனி அந்தஸ்து உண்டு.
சூத்திரர்களும் அவர்ணர்களும் (பஞ்சமர்,சண்டாளர்கள்,பதிதர்கள்,
ஆதி குடிகள்) இந்து வைதீக சனாதன தர்மத்தை சொந்தங் கொண்டாடுவதும் அதில் தங்களுக்கு உரிய இடமும் பங்கும் உண்டெனத் தேடுவது அறியாமை ஆகும். ஏன் சூத்திரர் மற்றும் அவர்ணர்களுக்கு வைதிக சனாதனத்தில்  இடமில்லை என்பதை விளக்குவதற்கே இந்தப் பதிவு. 

சிரார்த்தம், திதி செய்யும் போது புரோகிதர் தற்காலிக பூணூல் இட்டு, தர்ப்பை புல்லினால் பவித்திரம் கூர்ச்சம் முதலியவற்றை அணிவித்து மந்திரங்களை உச்சரிப்பார்.உபநயனம் செய்த இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பது சாஸ்திரப் பிரமாணம்.மற்றவர்களுக்குக் கூடாது, இது திருமணங்களுக்கும் மற்ற கர்ம அனுஷ்டானங்களுக்கும் எல்லா வைதிக சடங்குகளுக்கும் பொருந்தும். காரணம் இந்தச் சடங்குகளின் போது புரோகிதரோ, வாத்தியாரோ வேத மந்திரங்களைக் கூறியே சடங்குகளை நடத்தியாக வேண்டும்.
இருபிறப்பாளர்கள் அல்லாத, அதாவது துவிஜர்கள் அல்லாத சூத்திரர், அவர்ணர்களுக்கு அருகில் வேத மந்திரங்களை ஓதுதல் கூடாது.ஆனால் புரோகிதர்கள் இன்றைய காலகட்டத்தில் இருபிறப்பாளர்கள் அல்லாதவர்களுக்கும் வைதிக சடங்குகளை பணத்திற்காகவும் தானத்திற்காகவும் செய்து வைக்கிறார்கள்.
சூத்திரர் மற்றும் வர்ணத்தில் சேராதவர்களும் இந்த வைதிக சடங்குகளை புரோகிதரை வைத்துச் செய்வதை கவுரவமாகவும் பெருமையாகவும் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்து வைக்கும் சடங்குகளில் அந்தப் புரோகிதரானவர் சூத்திரனுக்கு தற்காலிகமாக பூணூல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆன பவித்ரம் அல்லது கூர்ச்சம் அணிவிப்பார். சடங்கு முடிந்ததும் இவை இரண்டையும் கழற்றி அவரே கொண்டு செல்வார். 

ஏன் புரோகிதர்கள் நமக்கு  தற்காலிகமாக
பூணூல்  அணிவிக்கிறார், விரலில் கூர்ச்சம் அணிவிக்கிறார் என நாம் கேள்வி எழுப்புவதில்லை.
போகட்டும, அடுத்து இடையிடையே சிரார்த்தம், திதி செய்பவரது கோத்திரத்தை மந்திரங்களுடன் சேர்த்து உச்சரிப்பார். கோத்திரம் என்பது குடும்பப் பெயர் போன்றதாகும், வேத கால ரிஷிகளின் வழி வந்தவர்கள் என அவர்களது பெயர்களை கோத்திரங்களாகவும், ப்ரவரம் எனவும் தனித்தனி அடையாளங்களை இட்டு அழைப்பர். இந்த கோத்ரம் மற்றும் ப்ரவரம் முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கோத்திரமும் ப்ரவரமும் உண்டு.

பிராமணர்களின் கோத்ரம் : அகஸ்திய, வாஸிஷ்ட, சாண்டில்ய,அத்ரி,கண்வ,கௌசிக,கௌர,ஜைமினி,தந்வந்திரி,பராசர,பாரத்வாஜ,புலஸ்தி,மார்க்கண்டேய,மாரீச,மௌன,ரேணு,வத்ஸ,ஸோமராஜக,ஹிரண்ய, கபில, ஜாபாலி,பாணிநி,வால்மீகி என ஐநூறுக்கும் மேற்பட்ட கோத்ரங்கள் உண்டு.

ஷத்ரியர்களின் கோத்ரம்: மதங்க, மௌத்கல்ய, மாண்டவ்ய, ஸாலிக,காசியப,விசுவாமித்ர, சரபங்க, ஹரித,உபதன்யு, பகீரத,ஜமதக்னி,சயவன,கண்வ என ஷத்ரியர்களாக தங்களைப் பாவிக்கும் சௌராட்டிரர்களுக்கு மட்டும் 64 கோத்ரங்களுக்கு மேல் உண்டு.
திவரிய(ரஜபுத்ர), கோயல், ராவல் டோப்பு இப்படி நீண்டு கொண்டு போகும்.
தமிழ்நாட்டில் ஜம்பு மகரிஷி கோத்ரம் என ஒரு பிரிவினர் தங்களை ஷத்ரியர்களாக அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்த ஜம்பு மகரிஷி பற்றி வேறெங்கும் குறிப்புகள் தகவல்கள் இல்லை. நால்வர்ணப்படி ஷத்ரியர்கள் இரு பிறப்பாளர்களாக இருத்தல் வேண்டும், தவிர உரிய வயதில் உபநயன சடங்கும் செய்து வேதங்களில் தேறியவர்களாகவும் இருத்தல் வேண்டும். இந்த உண்மை அறியாமல் பெயருக்கு தங்களை ஷத்ரியர்கள் எனப் பெயரிட்டுக் கொள்பவர்கள் இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டனர்.

வைசியர்களின் கோத்ரம்: குத்ஸாஸ, கோபஹாஸ,தல்பியாஸ,நரதாஸ,பாலவாஸ,மானவாஸ,முனி ராஜஸ,வடுகாஸ,வருணாஸ,வியாஸ,சௌம்யாஸ என நூற்றுக்கும் மேற்பட்ட கோத்ரப் 
பெயர்கள் இணையத்தில் உண்டு.தவிர இவர்களும் இறு பிறப்பாளர்கள் என்பதால் மேலுள்ள பிராமண கோத்ரப் பெயர்களில் பலவும்  இவர்களுக்குப் பொருந்தும்.

சூத்ரர்களுக்கு கோத்ரப் பெயர்கள் எதுவும் கிடையாது. இன்றைய தேதியில் புரோகிதம் செய்பவர்கள் சிராத்த மந்திரம் ஓதும்போது கோத்ரம் சொல்ல வேண்டும் என்பதற்காக பொதுவான “சிவ கோத்ரம்”அல்லது “விஷ்ணு கோத்ரம்” எனச் சொல்லி சிரார்த்த மற்றும் திதி சடங்கை முடிக்கிறார்கள். அல்லது சூத்திரர்களது குல தெய்வப் பெயரைக் கோத்ரமாக பாவித்து மந்திரம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.இவை எதுவுமே இல்லையென்றாலும் கௌசிக கோத்ரம் என பொதுவான ஒன்றை குறிப்பிட்டு சடங்குகளை முடிக்கின்றனர்.
இதிலிருந்து தெளிய வேண்டியது சில முக்கிய விடயங்கள் உண்டு, 

சூத்ரர்களுக்கே   கோத்ரம் இல்லையெனில் அவர்ணர்களான பஞ்சமர் சண்டாளர்களுக்கு கோத்ரம் ஏது?!
சுற்றிச் சுற்றி எல்லா இந்து சனாதன நூல்களும் இறு பிறப்பாளர்களான முதல் மூன்று வர்ணத்தாரின் புகழ் மற்றும் நலன்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றன! 
இதை ஒரு சில சாஸ்திர புராண நூல்களைப் படித்தாலே உண்மை என உணரலாம்.
மொத்தத்தில் சூத்ர பஞ்சம சண்டாளர்களுக்கு எந்த ஒரு வைதீக (திருமணம், சிரார்த்தம், திதி உட்பட) சடங்கையும் செய்வதற்கு பிரமாணம் ஏதும் இல்லை. பொருளுக்காக இன்றும் இந்த வாணிபம் நன்றாகவே நடப்பது நிதர்சணம்!

தமிழ் நிலப்பகுதியில் ஷத்ரியர்களோ வைசியர்களோ இல்லை. தமிழ் மண்ணில் சிலர் தங்களை ஷத்ரியர்களாகவும் வைசியர்களாகவும் எண்ணி ஏமாந்து போகின்றனர். அவர்கள் ஷத்ரியர்கள் எனில் காயத்ரி மந்திர தீட்ஷை பெற்று உபநயன சடங்கு உரிய வயதில் செய்து பூணூல் அணிந்திருக்க வேண்டும். அவரவர் கோத்ரம் தெரிந்திருக்க வேண்டும். வேதம் பற்றிய தெளிவும் அறிவும் வேண்டும். இவற்றில் ஒன்றுமே இல்லாமல் பெயரை மட்டும் வரட்டு கௌரவத்திற்காக போட்டுக் கொள்கின்றனர்.
இந்த அடிப்படையில் தமிழ் மண்ணில் பிராமணர்களும் சூத்ரர்களும் பஞ்சம சண்டாளர்களும் அதி குடிமக்களும் உள்ளனர் என்பது தெளிவு.

இந்து வேத சனாதன நூல்கள் அனைத்திலும் இழிவாக சித்தரிக்கப் பட்டுள்ள சூத்ர, பஞ்சம சண்டாளர்களுக்கு அந்த தர்மத்தில்  அல்லது சமயத்தில் துளியும் இடமில்லை. பின் ஏன் அதைப் பிடிவாதமாகப் பற்றியிருக்க வேண்டும்?! சாதி இந்துக்களின் இருப்பிடம் தவிர இந்துக் கோயில்கள் ஏதும் பஞ்சமர்களின் சண்டாளர்களின் இருப்பிடங்களில் இல்லை என்பதே இதற்கு போதுமான சான்று!
உணர்வுள்ளவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்!ஈரமுள்ளவர்கள் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்வார்கள்! சமத்துவர்கள் மனித நேயமற்ற இழி செயலை எதிர்த்து புரட்சி செய்வார்கள்! 
மனித நேய பண்பாளர்கள் புதிய சிந்தனையில் மக்களை வழி நடத்துவார்கள்! 

உதாரணத்திற்காக சிரார்த்த சடங்கின் ஒரு வகையினை உங்களுக்காக இதோ:-

ஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல்.
பித்ருக்களே !மிகவும் நல்லவர்களான நீங்கள்,எங்களுக்கு சந்ததியையும், செல்வத்தையும்  நீண்ட ஆயுளையும் ஆசிர்வதித்து,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் (தர்ப்பையைத் திரித்துச் செய்வது) இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் .

ஆசனம் - இருக்கை.
தரப்பையே !நீ  என்னால் சேகரிக்கப் பட்டாய்.
உன்னைப் பித்ருக்க்ளுக்காகப் பரப்புகிறேன்.
நீ அவர்களுக்குப் பஞ்சு போல் மித மிருதுவான ஆசனமாக இரு.
அருள் சுரக்கும்  பித்ரு,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு
எழுந்தருளட்டும்.
(இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆசனம்,
அவர்களை எல்லா வித உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன்)

தர்ப்பணம்.
சோம யாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே,நடுத்தரத்தினரும் கடைப்ப்பட்டவரும் கூட உயர்ந்த கதியை அடையட்டும்.
நம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற் கர்மாவை உணர்ந்து ,நமது பிராணனை ரக்க்ஷித்து,நாம் அழைக்கும்போது வந்து, நம்மைக் காத்தருளவேண்டும்.
இன்ன கோத்திரனரும் இன்ன பெயருள்ளவரும், வாசு ரூபியான எங்கள் தந்தையை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .
அங்கீரசர்,அதர்வணர்,பிருஹுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள்.

சோம யாகம் செய்தவர்கள்.
பூஜித்தர்க்குரிய அவர்களுடய எந்த சிறந்த வழியில் சென்றதோ,அதையே நாமும் பின் பற்றி ,மங்களகரமான நல்ல மனது உடையவர்கள் ஆவோம் .

இன்ன கோத்திரத்தினரும் …தர்ப்பணம் செய்கின்றேன்.
அக்னிச்வாத்தர்கள் என்பவர்களும் ,சோம யாகம் செய்தவர்களுமான நமது பித்ருக்கள் தேவ மார்க்கமாக இந்து எழுந்தருளட்டும் .
இங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோஷமடயட்டும் .
நம்மைக் காப்பாற்றட்டும் .
இன்ன ……… .
பிதா மகர்
ஜலங்களே ,எல்லாவற்றிலும் உள்ள சாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருகிறீர்கள் .
ஆகையால் அம்ரிதமாகவும், நெய்யாகவும், பாலாகவும்,மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ,அதுவாய் நின்று நீங்கள்) எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக.

இன்ன கோத்திர '.... எனது பிதா மகரை நமஸ்கரித்து ..தர்ப்பணம் செய்கிறேன்
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்த மகர்களுக்கும்,ப்ரபிதா மகர்களுக்கும் ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன்.

இன்ன ……
எந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்றார்களோ, எவர்கள் இங்கு இல்லையோ, இவர்களை நாங்கள் அறிவோமோ,இவர்களை அறிய
மாட்டோமோ,அவர்களை எல்லாம் அக்னி பகவானே, நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதல்லல் அறிவீர்.அவர்களுக்குரிய
இதை அவைகளிடம் சேர்த்து அருள்வீர்.
அதனால் அவர்கள் சந்தோஷமடயட்டும்.

இன்ன ……ப்ரபிதா மகர்.
காற்று இனிமையாக வீசட்டும்.
நதிகள் இனிமையைப் பெருக்கிக் கொண்டு ஓடட்டும்.
செடி கொடிகள் இனிமை அளிப்பவையாக இருக்கட்டும்.
இன்ன …….ப்ரபிதா மகரை நமஸ்கரிக்கின்றேன்.
இரவும் காலையும் இனிமையாக இருக்கட்டும்.
பூமியின் புழுதியும் இன்பந் தருவதாய் இருக்கட்டும்.
நமது தந்தை போனற ஆகாயம் இன்பமளிக்கட்டும்.

இன்ன……
வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாக இருக்கட்டும்.
சூரியன் இன்பந் தரட்டும்..
பசுக்கள் மத்ரமான பாலைத் தரட்டும்.

இன்ன …தாயார்.
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபிணியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து
அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.( மூன்று முறை )

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ருத்ர ரூபிணியும் ஆகிய எனது மாதா மகியை
நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். (மூன்று முறை)

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதா மகியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.(மூன்று முறை)
தாய் வழித் தாத்தா,கொள்ளுத் தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டி வகை.

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபியும் ஆகிய எங்கள் மாதா மகருக்கு தர்ப்பணம்
செய்கின்றேன்..( மூன்று தடவை )

ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகருக்கு தர்ப்பணம்.( மூன்று தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகருக்குத் தர்ப்பணம் ..( மூன்று தடவை )
வசு ரூபியாகிய எண்கள் மாதா மகிக்கு தர்ப்பணம் ( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகிக்குத் தர்ப்பணம்.( மூன்று தடவை ).
அன்னரசமாகவும் அம்ருதமாகவும் ,நெய்யாகவும்,பாலாகவும், தேனாகவும் பானகம் ஆகவும் பரிணமித்து, எது வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள் எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக!
பித்ருக்களே,
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள். .
பூணூல் வலம்.
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா யோகிகளுக்கும் நமஸ்காரம்.
ஸ்வதா என்னும் பெயர் கொண்டு விளங்கும் பர தேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
( மூன்று முறை )
அபிவாதனம்,நமஸ்காரம் .
பூணல் இடம்.
பித்ருக்களே !
மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்திது அளித்துக்கொண்டு கம்பிரமாக சிறந்த ஆகாய மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள்.
இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன்.
பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு உபவீதியாக,ஆசமனம் செய்து, பவித்ரத்தை போட்டுக் கொண்டு பூணூலை இடமாக்கவும்.
எவர்களுக்கு தாயோ தந்தையோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.
கூர்ச்சததைப் பிரித்து நுனி வழியாக தர்ப்பணம் செய்யவும் .
பவித்ரம் பிரிக்கவும்.
பூணூல் வலம்.
ஆசமனம்.
பின்பு பிரம்ம யக்யம் செய்க.

பவித்ரம்,ஆசமனம்,யக்யம்: தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். 'பவித்ரம்' என்றால் தூய்மை! இயல்பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம் (பவித்ரம் வை தர்பா:).ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணி யாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்மசாஸ்திரம் (விப்யதெ நஸபாபேன பத்ம பத்ர மிவாம்பஸா).
ஆசமனம்: கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை வலது உள்ளங்கையினால் பருகுதல்.

வைதிகச் சடங்குகளை வைதிகர்கள் அல்லாதவர்கள் ஒதுக்கினாலே வைதிக சனாதனத்திலிருந்து விடுதலை நிச்சயம். 

ஆதார நூல்கள் மற்றும் இணைய முகவரி: கோத்திரங்களும் பிரவரங்களும்
- ஸனாதன தர்ம ப்ரசாரப் பதிப்பு 1979
சநாதந தர்மம், மொழி பெயர்ப்பு : ப.நாராயண ஐயர், ஆநந்தா பதிப்பு 1906
தர்மஸூத்ரம், வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை, கும்பகோணம் வெளியீடு, 1951
தர்மசாஸ்த்ர ஸங்க்ரஹம், ஶ்ரீ S.V.ராதாக்ருஷ்ண சாஸ்த்ரிகள், மூன்றாம் பதிப்பு 2002
Arya Vysya Gothras : www.vysyamala.com
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 5.12.20

சூத்திரனுக்கு மொட்டை

#மொட்டை



உபவீதம்(பூணூல்),உத்தரீயம்(மேலாடை) ஸ்திரீ சூத்திரர்கள் நீக்குக.வேத மந்திரம், சிகை(தலை முடி),யஞ்ஞோபவீதம்(பூணூல்), சூத்திரன் தரித்தால் ராஜாவிற்கும் ராஜ்யத்திற்கும் நாசமுண்டாகும். 

-அகோரசிவாசாரியார் இயற்றிய சைவஷோடசப் பிரகாசிகை எனும் நூலில்!

சூத்திரனின் தலையில் முடி இருத்தல் கூடாது. ஸ்திரீகள் மேலாடை அணிதல் கூடாது.இப்படிப்பட்ட சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகள்தான் மன்னர் காலங்களில் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை சைவஷோடசப் பிரகாசிகை போன்ற நூல்கள் அறிவிக்கின்றன.

வைதிக சனாதன நூல்கள் பெண்களையும் சூத்திரனையும் இழிவுபடுத்துகின்றன என்பதற்கு மேலுள்ள நூலும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

குறிப்பு: மேலுள்ள சைவஷோடசப் பிரகாசிகை, ‘காரண ஆகமம்’ எனும் சைவ ஆகம நூலை மேற்கோள்காட்டிக் கூறுகிறது.

-தினகரன் செல்லையா முகநூல் பக்கம்,19.12.20