வெள்ளி, 29 நவம்பர், 2024

ஆரியர்களின் தீயும், திராவிடர்களின் தீபமும்! சுமன் கவி

 

விடுதலை நாளேடு

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

என்று வெவ்வேறு மதத்தவர்களின் வழிபாட்டு முறைகளை தனது கவிதையில் சொல்கிறார் பாரதியார்.

தான் ஒரு பார்ப்பனராக இருந்த போதும், பல இடங்களில் தன் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் ஸநாதனக் கருத்துகளைச் சொல்லிய போதும், சில இடங்களில் தன்னையும் அறியாமல் பார்ப்பனர்கள் குறித்து உண்மைகளை சொல்லிவிடுவார் பாரதியார்.

அப்படி சொல்லப்பட்ட ஓர் முக்கியமான உண்மைதான் மேற்குறிப்பிட்டது. இதில் தீயினைக் கும்பிடும் ஹிந்துக்கள் என்று குறிப்பிடாமல் பார்ப்பார் என்றே குறிப்பிடுகிறர். இது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

பிற மதத்தவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக மட்டும், நம்மை ஹிந்துக்கள் என்று ஒன்றுதிரட்டும் ஸநாதனவாதிகளுக்கு எதிராக, பார்ப்பனர்கள் வேறு, வெகுசன மக்கள் வேறு என்று சாட்சியம் கூறுகிறார் பாரதியார்.
ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் வெகுமக்கள், ஸநாதனம் பார்ப்பனர்களுக்கு முற்றிலும் விரோதமான கடைப்பிடிப்புகளை, சடங்குகளைக் கொண்டவர்கள் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று தீ வழிபாடு.

ஆரியப் பார்ப்பனர்கள் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்துவரும் ஆரியரல்லாத மக்களின் வழிபாட்டு முறைகள் விக்கிரகங்களை வழிபடுவது, நடுகற்களை வணங்குவது, முன்னோர் வணக்கம் என பல்வேறுபட்டதாக இருந்தது.
ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர், போலன் கணவாய் வழியே ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கே நுழைந்த ஆரியக் கூட்டம் தீயை வழிபடும் பழக்கமுடையவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்து வந்த மத்திய ஆசியப் பகுதிகள் மிகவும் குளிர் நிறைந்தவை. நிலத்தைக் கையகப்படுத்தி விவசாயம் செய்வதற்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த இயற்கைச் சூழலும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை.

ஓர் இடத்தில் நிலையாக தங்கி வாழ்ந்த மக்கள்தான், குறிப்பட்ட இடத்தில் சிலைகளையோ, நடுகற்களையோ அமைத்து வழிபட முடியும். நகர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிக் கூட்டத்தார் விக்கிரகங்களையோ, கோயில்களையோ அமைத்து வழிபடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஆரியர்கள் வாழ்ந்த சூழல் தீயை அருமையானதாகவும், மிகவும் போற்றத் தக்க ஒன்றாகவும் கருதிடக் காரணமாக அமைந்தது. இதைக் குறிப்பிடும் பேராசிரியர்

சுப.வீரபாண்டியன் “நெருப்பு குளிர் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. அதனால்தான் ஆங்கிலேயர்கள் ஒருவரை வரவேற்க ‘warm welcome’ என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். அதையே நாம் “குளிர்ந்த முகத்தோடு வரவேற்பு….” என்று கூறுகிறோம். ஏனெனில் வெப்பப் பகுதியில் வாழும் நமக்கு குளிர்ச்சி முக்கியமானது. இங்கு நாம் “ஒருவருக்கு சூடான வரவேற்பு கொடுக்கப்பட்டது” என்று சொன்னால். அது அவரை அடித்துப் புடைப்பதைக் குறிக்கிறது” என்கிறார் சுப.வீ.

புலம்பெயர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் கூடாரங்களை அமைப்பது, நெருப்பு மூட்டி கூட்டமாக இருந்து குளிர் காய்வது என்றிருந்தவர்கள் அந்த நெருப்பையே கடவுளை அடைவதற்கான வாசலாகக் கருதி வழிபட்டிருக்கின்றனர். அதில் பலியிடப்படும் விலங்குகள், பறவைகள் என அனைத்தும் சொர்க்கத்தை அடையுமென்று நம்பியிருக்கின்றனர். பசுக்கள், குதிரைகள் என தாங்கள் வளர்த்த எல்லா பிராணிகளையும் யாகத்தில் இட்டு அவற்றின் மாமிசத்தை ’அவிசு’ என்கிற பெயரில் உண்ணும் வழக்கம் கொண்டிருந்தனர். அவற்றில் ‘புருஷ மேத யக்ஞம்’ என்கிற பெயரில் நடத்தப்பட்ட வேள்வியில் மனிதர்களையே பலியிட்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.

புத்தம், சமணம் போன்ற சிரமண மதங்களின் எழுச்சிக்குப் பின் மாமிச உணவுகளை விட்டொழித்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம், தங்களது வேள்வி கலாச்சாரத்தை மட்டும் விட்டுவிடவில்லை. அதனால்தான் இன்றும் வேள்வியில், துணிகள், உணவுப் பொருட்கள், நெய் என எல்லாவற்றையும் கொட்டி வீணடிக்கிற வேலையைச் செய்கின்றனர்.

வேத வேள்விகளை பார்பனர்கள் போற்றிய அதே நேரத்தில், வேள்விகளை பெரிதென்று எண்ணாத, சிலைவழிபாடு கொண்ட திராவிடர்களின் தெய்வங்களை அவர்கள் திருடத் தொடங்கினர். தங்களது அதிகாரத்தை சடங்குகளோடு பிணைத்திருந்த பார்ப்பனக் கூட்டம் பல தெய்வ வழிபாடு கொண்ட வெகுமக்களின் வழிபாட்டு முறையோடு தங்களது யாக வேள்விகளை இணைத்துக் கொண்டனர்.

எல்லாநேரங்களிலும், எல்லா இடங்களிலும் வேள்விகளை நடத்த இயலாது என்பதனால் அதன் சிறு வடிவமான தீயை விக்கிரகங்களின் முன் காண்பிக்கிற வேலையைச் செய்தனர். இதுதான் ஆரியர்களின் வழிபாட்டு முறையும், ஆரியரல்லாத பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையும் சந்திக்கும் இடமாகும். கோவில்களில் வழிபடும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பாலோர் அதை தீபமாகவே காண்கின்றனர்: அதாவது ‘Light’ வெளிச்சமாக. ஆனால் இது ஆரிய தீ வழிபாட்டின் சிறு அடையாளமாகும்.
தீயை வழிபடுவதற்கும் ஒளியை வழிபடுவதற்கும் மாபெரும் வேறுபாடு உண்டு.

“அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்றார் வள்ளலார். அவர் இறைவன் ஒளி வடிவானவன் என்றார். அந்த ஒளியே எல்லா ஜீவன்களிலும் இருக்கிறது என்றார். இது ஒரு தத்துவார்த்த நிலை. ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் நெருப்பில் போட்டுப் பொசுக்கி அவை இறைவனைச் சென்று சேர்கின்றன என்று கருதும் ஆரிய கோட்பாட்டிற்கு சற்றும் தொடர்பற்றது இந்த ஒளி தத்துவம்.

ஒளியை இறையாக வழிபட்ட வள்ளலார், மறுபுறம் மனிதர்கள் இறந்த பின் எரிக்கின்ற வழக்கத்தைச் சாடுகிறார்.

“பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப்
பகர்கின்றேன் நீர்  சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்..!”

என்கிறார்.
தீயோடு தமது சடங்கு சம்பிரதாயங்களை பிணைத்து வைத்திருக்கும் ஆரியர்கள் அதே தீயில் இறந்த உடல்களையும் இட்டு அவர்கள் சொர்கத்திற்குச் செல்வதாகக் கருதினர். ஆனால் மறுபிறப்பு உண்டு என்று நம்பிய மக்களும், புதைப்பதற்கு நிலமும், மீண்டும் வந்து அதை வழிபடுவதற்கான வாய்ப்புகள் கொண்ட மக்களும் புதைப்பதையே தங்கள் மரபாக கொண்டிருக்கின்றனர்.
இன்றும் கூட பார்ப்பனரல்லாத பலரும் இறந்தவர்களை எரிக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதை பல வரிகளில் தொடர்ந்து இடித்துரைக்கிறார் வள்ளலார். சித்தர்கள் மரபில் புதைத்து அதில் ‘சமாதி’ எழுப்புவதே வழக்கமாக உள்ளது. ஜாதிய அடுக்கில் பிற்பாதியில் உள்ள பல சமூகங்கள் இன்றும் புதைப்பதையே மரபாக கொண்டிருக்கின்றனர்.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஒளி’யை வழிபடுவது வேறு, ‘தீ’யை ‘புனித’மென்று கருதுவது வேறு.
ஆரியர்களின் வேள்வி – யாகங்களை ஏற்றுக் கொண்ட பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்கிற மன்னன் இருந்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவதைக் காண்கிறோம். அதே வேளையில்,

“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.”

என்ற திருவள்ளுவர், “வேள்விகளை சிறப்பென்கிறீர்களே, அதைவிட ஓர் உயிரைக் கொலைசெய்யாமல் இருப்பதே சிறப்பு என்கிறார். அக்காலத்தில் வேள்விகளில் உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன என்பது இதில் மறைபொருளாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான வேள்வி எதிர்ப்பும், தீயின் ‘புனித’த்தை மறுப்பதும் ஆரியரல்லாத திராவிட மக்களிடையே மரபாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்த வேற்றுமையைத் தான் பாரதியாரும் முதலில் சொன்ன வரிகளில் குறிப்பிடுகின்றார்.
ஆனால் பல்வேறு கவிதைகளில் வேதத்தையும், வேள்விகளையும் வியந்தோதிப் பாடியவர் அவர். அதுதான் அவரின் ஆரிய உணர்வு.
இந்தப் பாகுபாட்டை அறியாமல், ‘ஹிந்து’ என்கிற சூழ்ச்சி வலைக்குள் நம்மில் பலரே வீழ்ந்துகிடப்பதுதான் வேதனை.


வியாழன், 28 நவம்பர், 2024

சிருங்கேரி சங்கராச்சாரியார் பராக்! பராக்!-கவிஞர் கலி.பூங்குன்றன்

விடுதலை நாளேடு
ஞாயிறு மலர்

 கடந்த ஒரு மாதமாக சிருங்கேரி சங்கராச்சாரியார் சிறீவிதுசேகர பாரதீ சுவாமிகள் என்று அழைக்கப்படுபவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உபந்நியாசம் செய்து அலைகிறார்.

ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள் நான்கு. வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

32 வயதே வாழ்ந்த ஆதிசங்கரர், போக்குவரத்து வசதியற்ற அந்தக் காலத்தில் இடைவெளி அதிக தூரம் உள்ள இந்த இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவி இருக்க முடியாது.

ஞாயிறு மலர்

அவர்களின் சீடர்கள்தாம் நிறுவியிருக்க முடியும் என்று அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுகிறார்.
ஹிந்து மதத்தில் இவர் ஒரு ‘அத்தாரிட்டி’ என்று கூறப்படுபவர். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் உற்ற நண்பர் – அவரின் தூதுவராகவும் கூடச் செயல்பட்டவர்.

நான்கு மடங்கள் என்பதுதான் முதலில் நிறுவப்பட்டது. அய்ந்தாவது மடமான இப்பொழுதுள்ள காஞ்சி மடம் பிற்காலத்தில்தான் நிறுவப்பட்டது. அதுகூட முதலில் கும்பகோணத்தில்தான் நிறுவப்பட்டது.

பிறகுதான் காஞ்சிபுரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது என்பதை விலாவாரியாக விளக்குகிறார் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

தொடக்கத்திலிருந்தே சிருங்கேரி மடத்துக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் ஏடாகூடாப் பொருத்தம்தான்.
இப்பொழுதுகூட காஞ்சிபுரம் சென்ற சிருங்கேரி சங்கராச்சாரியார், காஞ்சியில் சிருங்கேரி மடத்துக்கென்று உள்ள மடத்துக்குச் சென்றாரே தவிர, ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட காஞ்சி சங்கர மடத்துக்குச் (விஜயேந்திர சரஸ்வதி) சென்றார் இல்லை.
சிருங்கேரி மடத்துக்குள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது ஒரு சுவையான வரலாறு.
இதுபற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுவது கவனிக்கத்தக்கது.

“தமிழ் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும், மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் எனப் பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாகப் போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ, மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.
“நீங்கள் தமிழ் நாட்டில் பூர்விக பிராமணர்கள் தானே?”
“ஆமாம். அதற் கென்ன?”

ஞாயிறு மலர்

“நீங்கள் ஸ்ரீமடத்தின் எல்லைக்கு அப்பாற் பட்டவர்கள். அதனால் உங்களுக்கு இங்கே ஃப்ராப்தம் இல்லை” என்றனர் சிருங்கேரி மடத்துக்காரர்கள்.

“தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக்குட்பட்டதுதானே… நாங்களும் தென் தேசத்துக்காரர்கள்தானே…”
“பூகோள எல்லை கிடக்கட்டும்… உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்த்ர சம்பிர தாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள். இம்மடத்தின் வைதிக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதியில்லை.”
கர்நாடக மண்ணில் ‘தமிழர்கள்’ முதன்முதலாக அனுமதி மறுக்கப்பட்டது இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.”
(அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?”
என்ற நூல் பக்கம் 75)

இந்தச் சூழலில்தான் தங்களுக்கென்று கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஒரு மடத்தை உண்டாக்கினார்கள். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து அந்தக் கும்பகோண மடம் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டது.

ஆதிசங்கரரைப் பின்பற்றுவதாகச் சொல்லப்பட்டாலும் இவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது பூச்சியம்தான்.
இராமேசுவரத்தில் 14.2.2001 அன்று இராமநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரும், சிருங்கேரி சங்கராச்சாரியாரும் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாக் குழுவினர் சங்கராச்சாரியார்களுக்கு சிறப்பு செய்தபோது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது.

மதுரை ஆதீனம் தலையிட்டு, விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி, இரு மடங்களின் மடாதிபதிகளுக்குள் சமரசம் செய்து வைத்தார். (‘தினபூமி’ 15.2.2001)

இவர்கள் எல்லாம் முற்றும் துறந்த முனிபுங்கவர்களாம்.

மும்மலங்களையும் அறுத்தவர்களாம்! அதாவது ஆணவம், கன்மம் (தீவினை), மாயை (பொய்த்தோற்றம்). இவைகளைக் கடந்ததாகக் கூறப்படுபவர்களின் யோக்கிய தாம்சம் எப்படி இருக்கிறது? ஊருக்குத்தான் உபதேசம்!
இப்பொழுது தமிழ்நாட்டில் வலம் வரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரின் மூத்த குருநாதர் தந்தை பெரியாருக்கு ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதியதுண்டு. (‘குடிஅரசு’ 2.3.1930)

தந்தை பெரியாரையும், அவர்தம் தொண்டுகளையும் புகழ்ந்து எழுதி, தமது மடத்துக்குத் துணைவியாருடன் (தர்மபத்தினி) வர வேண்டும் என்று வேண்டுகோள் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்துக்கு தந்தை பெரியார் பதில் எழுதினார்.

“தங்களின் ஸ்ரீமுகத்தில் ஸநாதன தருமத்தைக் கெடுக்காமல், கரும கண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து, சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வகையில் என்கிற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதம் இல்லாமல் சில ‘சுவ தந்தரங்கள் அளிக்கப்படும்’ என்கிற வாசகங்கள் காணப் படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாக இருக் கின்றது” என்று மிகுந்த மரியாதை யோடு தந்தை பெரியார் பதில் எழுதினார்.

இதே சிருங்கேரி சங்கராச்சாரியார் தாழ்த்தப் பட்ட மக்கள் பற்றி என்ன அபிப்ராயம் கொண் டுள்ளார்?
The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style cannot remove from it its inlaid filth that has originated from the deep rooted contamination of the filthy inhereditary.
The provision for keeping the impure at a distance is strictly speaking a rule of segregation.
(‘The Hindu Ideal’ – Page – 230)

“உலகத்தில் உயர்ந்த வகை சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டாலும் பஞ்சமர்கள் என்று கூறப்படுவோர் (தாழ்த்தப்பட்டவர்) களுக்குப் பிறப்பின் அடிப்படையில் உள்ள – ஆழமாக வேரூன்றியுள்ள மிகவும் அசூயையான துப்புரவுக் கேடான தூய்மையற்ற தன்மைதான் – அவர்களைக் கிட்டே வராதே – தூர நில் என்று சொல்லுவதற்குக் காரணம்” என்கிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்.

(காஞ்சிபுரம் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மட்டும் என்ன வாழுது? “தீண்டாமை சேமகரமானது” என்று தி(தெ)ருவாய் மலர்ந்தவர்தானே! நூல்: (ஸ்ரீஜெகத்குருவின் உபதேசங்கள்)

அவர் வழிவந்த சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதீதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஸநாதனத்துக்கு ஏதேதோ விளக்கங்களை உபந்நியாசமாக அள்ளி விடுகிறார்.

“ஸநாதனத்தைக் காப்பாற்ற வேண்டும், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைத் தெரிந்துகொள்ள, வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். ஏனெனில், மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிந்து கொள்ள, அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள ஸநாதன தர்மத்தில்தான் உள்ளது.”

“மனிதன் சுக துக்கங்களை அனுபவிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதன் பலன்களை அனுபவிக்க, மனிதன் பல பிறவிகளை எடுத்தாக வேண்டும்.”

“எனவே, சாஸ்திரங்கள் காட்டும் வழியில் பயணித்து, இப்பிறவியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
(‘தினமலர்’ – 2.11.2024)

சுற்றிச் சுற்றி எங்கே வருகிறார் பார்த்தீர்களா?

அவரது குருநாதரை போகிற இடங்களில் எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்.

அவர் குருநாதர் எத்தகையவர் என்பதைத்தான் பார்த்தோமே! (‘The Hindu Ideal’). பஞ்சமர்களை எட்டி நில், கிட்டே வராதே என்பதற்குக் காரணம் அவர்களின் பிறவிதான் – பரம்பரைப் பரம்பரையாக வந்த தூய்மையற்ற தன்மைதான் என்ற சொன்னவரின் சீடர்தான் இப்பொழுது தமிழ்நாட்டில் உலா வருகிறார்.

பகவான் படைப்பில் அனைவரும் சமம் – பேதம் இல்லை – உயர்வு தாழ்வு இல்லை – ஜாதி கூடாது – தீண்டாமை பாவம் என்ற வகையில் ஒரே ஒரு சொல்லையாவது சிருங்கேரியாரின் சுற்றுப் பயணத்தில் உபந்நியாசம் செய்ததுண்டா?
என்னதான் அ(ம)ருள் உபதேசம் செய்தாலும், தந்தை பெரியார் மண்ணில் அந்தப் பருப்பு வேகாது – வந்தோமா – கடைகட்டி சென்றோமா –

என்று நடை கட்டுவதுதான் உத்தமம்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!

வெள்ளி, 8 நவம்பர், 2024

கீதை உபந்நியாசமாம்! (2)

பதிலடிப் பக்கம்: 

விடுதலை நாளேடு

 கவிஞர் கலி.பூங்குன்றன்

சென்னையில் இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்தர வகுப்பு நடத்தப்படுகிறது என்ற தகவலையடுத்து…
25.10.2024 அன்றைய ‘விடுதலை’யில் “கீதை உபந்நியாசமாம்” என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுதப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பழம்பெரும் சுயமரியாதை இயக்க எழுத்தாளர் பி.வி.ஆர். ‘விடுதலை’யில் 19.8.1956இல் எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது.

கிருஷ்ணன் அவதாரங்கள்
வெறும் கற்பனைக் கட்டுக் கதைகள்
லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேராசிரியர் ஜே.பி.எஸ்.ஹால்டேன் உலகத் தோற்றம்பற்றி வெளியிட்டுள்ள கருத்தில் நீந்துவன, ஊர்வன, விலங்குகளிலிருந்து மனிதர்கள் தோற்றமாயினர் என்றும், இந்துமத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரங்கள் இந்த உலக உயிரினத் தோற்ற வளர்ச்சி வரலாற்றையே குறிப்பிடுகிறதென்றும் பேராசிரியர் சாஹ்னி தெரிவித்த கருத்து உலகத் தோற்றம் பற்றி, இப்போது ஆராய்ச்சியாளர் கருத்துக்கு ஆதரவாகவுள்ளது என்றும், நீந்துவனவான மீனினத்திலிருந்து, ஆமை முதலிய ஊர்வனவும், ஆமையிலிருந்து பன்றி முதலிய விலங்குகளும், இந்த விலங்குகளிலிருந்து குள்ள மனிதர்களும், இந்த குள்ள மனிதர்களிலிருந்து பெரிய உருவமும் ஆற்றலுமிக்க சிம்மம் போன்ற மனிதர்களும் தோன்றினர் என்பதே இவரது விளக்கக் கருத்து என்றும், இந்த உலகத் தோற்ற உண்மையை அக்கால இந்திய மக்கள் தெளிவுற உணர்ந்து இருந்தனரென்று தான் என்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த அவதாரக் கதைகளின் வரிசைக் கோர்வையை கவனிக்குமிடத்து அடிநாள் இந்தியர் வெளியிட்டிருந்த கருத்துக்களைக் கொண்டு, பழக்கத்தின் மீது இக்கருத்துக் கொண்டு இப்படி பிற்காலத்தில் கதைகள் புனைந்துள்ளனர் என்றே எண்ணச் செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவதாரங்கள் வெறும் புரட்டு என்பதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உள்ளன.

தழுவல்
மச்சாவதாரம் என்பது பண்டைக்கால ரோமர் புராணக் கதைகளில் உள்ள ஜானஸ் என்ற இருமுக தேவனின் கதையின் தழுவல் என்று பிரிட்டன் தத்துவக்கழக உறுப்பினரான திருமதி எலிசபெத் ஏ ரீட் என்பவர் தாம் எழுதிய இந்து இலக்கியங்கள் அல்லது இந்தியாவின் பண்டைக்கால நூல்கள் என்பதில் விளக்கியுள்ளார். இந்த ஜானஸ்தேவனும் இவனது மனைவியும் தங்கை காமசேனியும் உடலின் மேல் பகுதி மனித உருவமாகவும் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மீன் உருவமுமாகக் கொண்டவர்கள்.
மற்றும் பாபிலோனிய புராணம். தேவன் ஒன்ஸ் என்பவனும் சிரிய நாட்டுக் கடவுளிச்சியான அதகாரிஸ் என்பவளும் மேல் உடல் பகுதி மனித உருவமும் கீழ் உடல் மீனுருவமும் கொண்டவர்கள்.
கிறிஸ்தவ சகாப்தம் மத்திய காலத்தில்தான் இந்த வேத பார்ப்பன இந்துமத புராணங்கள் எழுதப்பட்டு கிருஷ்ணன் ராமன் முதலியவர்கள் விஷ்ணு அவதாரங்கள் ஆக்கப்பட்டதாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது மற்றும் கிருஷ்ணன் நரி தந்திரங்கள் கொண்டவன் என்னும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாகரிக வெறிக்கதைகள்
சிவன், கிருஷ்ணன் பற்றிய கதைகள் எல்லாம் பிற்காலத் தொகுப்புகள் என்றும் அநாகரீக வெறியாட்டுக் கற்பனைகள் என்றும் மாக்ஸ்முல்லரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்துக் கடவுள்கள் தங்களுடைய அன்றாட உணவுக்கும் மனிதர்களை எதிர்பார்த்துக் கிடக்கின்றன என்று நையாண்டியும் செய்துள்ளார். இவர் இவ்வகை இந்த இந்து கடவுள்கள் என்பதெல்லாம் பொய் வெறும் கற்பனை சித்திரங்களும் மனிதர் செய்த சிலைகளுமேயாகும் என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்; மகாபாரதக் கதைகள் பைத்தியக்காரனின் கனவுகள் போன்றவை என்பதும் இந்த ஆராய்ச்சி மேதையான எலிசபெத்தின் தீர்ப்பு.
ஆந்திரப் பெரியார் வேமன்னா ராமாயணம் கொலைக்கதை பாரதம் குடும்ப பாசக்கதை என்கிறார்.

கிறிஸ்தவரிடம் சென்ற 3 பார்ப்பனர்
மேனாட்டு இலக்கிய சரித்திர ஆராய்ச்சிப் புலவர்களான வெப்பர், லேசன் என்பவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி நூல்களில் மற்றொரு கருத்தும் காணப்படுகிறது.
அதாவது கிறுஸ்தவ சகாப்தத்தின் துவக்க காலத்தில் மூன்று வட இந்தியப் பார்ப்பனர்கள் கிறிஸ்தவர்கள் வாழும் இடத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்தனர் என்றும், இம்மூவரும் தங்கள் ஊருக்குத் திரும்பியதும் தங்களுடைய பார்ப்பன வேத மதத்தில் மாற்றங்கள் செய்து கிருஷ்ண வாசுதேவ வணக்கத்தையும் நுழைத்தனர் என்கின்றனர் இவர்கள். மற்றும் மகாபாரதக் கதையில் சில 5 முக்கிய பகுதிகள் கிறிஸ்து பிறந்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது பல மேனாட்டு ஆசிரியர்களின் கருத்து.
திரு. காசிநாத திரும்பக்தெலாங் எம்.ஏ. என்ற இந்திய ஆசிரியரும் மகாபாரதக் கதையில், பிற்காலத்தில் இடைச்செருகல் நடந்திருப்பதை ஆமோதிக்கிறார். மகா பாரதத்தில் 37ஆவது அத்தியாயம் பதஞ்சலி என்ற சமஸ்கிருத பண்டிதன் காலத்தில் எழுதப்பட்டதென்கிறார்.
துரியோதனன் கதை முஸ்லிம் மத ஏடான குரானிலிருந்து எடுக்கப்பட்டது என்று டால்பாஸ் வீலர் என்பவர் கூறுகிறார்.
இதன்படி மகாபாரதம் கி.பி.7ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகிறது. இவற்றைக் கருதுமிடத்து இது அவதார வரலாறும் அல்ல, உண்மை சரித்திர வரலாறுமல்ல வெறும் கற்பனைக்கட்டுக் கதை என்றாகிறது.

பகவத்கீதை
பகவத்கீதையின் ஆசிரியர் யார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. இது ஒரு வைஷ்ணவப் பார்ப்பனனால் எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதும், பார்ப்பனர்களை உசத்திகாட்டவும், அவர்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் எழுதப்பட்டதென்பதும், பகவத் கீதையில் காணப்படும் கருத்துக்களே சான்று கூறுகின்றன.
மற்றும் மகாபாரத மூலக்கதை தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த கீதைப்பகுதி நுழைக்கப்பட்டுள்ள தென்பது, பாக்களின் நடைமாற்றமும், இரு நூல்களிலுமுள்ள கருத்துக்கள் பழமையும் புதுமையுமாக இருப்பதும் உறுதிப்படுத்தும். மேனாட்டுப் புலவர் டாக்டர் பர்ன் என்பவரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரிச்சார்டு சுர்லின்ஸ் என்பவர், கிரேட் பிரிட்டன் தத்துவக் கழகத்தில் ஆற்றிய ஆராச்சியுரையில், கி.பி. 3ஆம் நூற்றாண்டில்தான் பகவத் கீதை எழுதப்பட்டதென்று விளக்கியுள்ளார். சர்.மானியர் வில் லியமஸ் என்பவரும் இது பிற்காலத் தொகுப்புதான் என்கிறார்.

பல கிருஷ்ணர்கள்
கிருஷ்ணன் மனைவிகளை இந்திரன் கொன்றதாகவும், இதற்காக ஆரிய வேதப் பார்ப்பனர்கள் இந்திரனைப் போற்றும் ரிக் வேதத்தில் உள்ளதாகவும் மேனாட்டு ஆசிரியர் வில்சன், ஆங்கில மொழி பெயர்ப்பு. ரிக் வேதத்தில் முதல் தொகுப்பு 260ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் இந்திரன் 50,000 கிருஷ்ணன்களைக் கொன்றதாகவும், இந்திரன் ஆரிய வேதியர்களின் காவலன் என்றும், இந்திரன் தன் எதிரிகளைத் தீயிட்டுப்பொசுக்கிக் கோரக்கொலை செய்பவனென்றும், இந்த ரிக் வேதப் பாக்களில் காணப்படுவதாக இவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
அதாவது கிருஷ்ணன் என்ற அசுரன் 10,000 வீரர்களுடன் வந்ததாகவும் இந்திரனுடன் அம்சுமதி ஆற்றங்கரையில் சண்டை நடந்ததாகவும் வில்சன் எழுதிய ரிக் வேத மொழிபெயர்ப்பு தொகுதி 5 பக்கம் 191இல் காணப்படுகிறது.
அங்கிர நாட்டு முனிவன் கிருஷ்ணன் என்றும் ரிக் வேதத்திலுள்ளது என்றும் துரோபதைக்கும் கிருஷ்ணா – கிருஷ்ணவேணி என்ற பெயருள்ளது..
ஆரிய வேதங்களைத் தொகுத்தவரும் மகாபாரத – ராமாயணங்களைத் தீட்டியவருமான வேத வியாசருக்கும் கிரு்ஷ்ண தேவபாயனா என்றும் பெயர். இவரது காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
மற்றும் சண்டியோக உபநிஷத்திலும் ஒரு கிருஷ்ணன் கதாநாயகனாக்கப்பட்டுள்ளது. அருக்சுனனுக்கும் கிருஷ்ணன் என்றும் பெயருண்டு. ஆந்திரர் ஆட்சியில் ஹவிதேஹனா என்று மன்னனுக்கும் கிருஷ்னன் என்ற மகனிருந்ததாகவும் இவனைக் கதாநாயகனாகக் கொண்டும் ஒரு கதையுள்ளதாகவும் தெரிகிறது. அசுரர்கள் கருப்பு நிறமுள்ளவர். எனவே, அவர்களையும், கிருஷ்ணன் என்றே சில ஆரிய புராணங்களில் குறிப்பிட்டிருப்பதாகவும் வில்சன் சுட்டிக்காட்டுகிறார். எனவே அவதார கிருஷ்ணன் என்பவன் யார் என்பதே நிர்ணயிக்க முடியாதபடி ஆயிரக்கணக்கான கிருஷ்ணன்களும் கிருஷ்ணன் கதைகளுமுள்ளன.
கிருஷ்ணன் முதுமையுற்ற பின்னர் ஒரு வேடன் எய்த அம்பு இவனது காலில் பாய்ந்ததால் இவன் இறந்ததாக விஷ்ணு புராணத்திலுள்ளது. இது கிரேக்க வீரன் அச்சீலிஸ் (ட்ரோஜன் போர்) இறந்த வரலாற்றை ஒத்துள்ளதாகவும் இவர் எடுத்துக்காட்டுகிறார்.

கிருஷ்ணனையும் அவனது குடும்பத்தாரையும், பாண்டவருடன் தொடர்புபடுத்த பிற்கால ஆரிய மொழிப் பண்டிதர்கள் மகாபாரத பாகவதக் கதைகள் அடிக்கடி மாற்றி எழுதியுள்ளனர் என்பது மேனாட்டு ஆசிரியர் கே.டால்பாபஸ் வீலர் கருத்துத் தெரிவித்துள்ளார். பாரதக் கதை நகரமான அஸ்தினாபுரத்துக்கும் (டில்லி) கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் குஜராத் வட்டாரத்திலுள்ள துவாரகைக்கும், 700 மைல் தொலைவு .அப்படியிருக்க, விரைவான வண்டி வாகன வசதியற்ற அந்த அநாகரிகக் காலத்தில், கிருஷ்ணனும், பாண்டவரும் எவ்விதம் நெருங்கி தொடர்பு கொண்டிருந்திருக்க முடியும்? கிருஷ்ணனின் வரலாறு எனப்படும் புராணக் கதையான பாகவதம் 12ஆம் நூற்றாண்டின் வாமதேவா என்பவரால் தொகுக்கப்பட்டது என்று மற்றொரு வரலாறும் காணப்படுகிறது.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோசாயினனிகள் எழுதிய பிரம்ம வைவர்தா என்றதிலும், அய்ந்தாம் நூற்றாண்டில் எழுதிய பத்ம புராணத்திலும் இந்த கிருஷ்ணனுடைய வரலாறுகள் வெவ்வேறாக உள்ளன.
கிருஷ்ணன் தேவகியின் 8ஆவது குழந்தை என்றும், இதற்கு முன் ஆறு குழந்தைகள் தேவகிக்கும் இரண்யகசிபுவுக்கும் பிறந்தவர்கள் என்றும் விஷ்ணு புராணத்தில் (பக்கம் 498) உள்ளது.

கிருஷ்ண வணக்கம் ஆரிய வேதத்திலுமில்லை என்றும், வில்சன் கூறுகிறார். கிருஷ்ணன், குழந்தைப் பருவத்தில் திருடனாக இருந்ததாகவும், ஒழுங்கீனமான சண்டைக்காரனென்றும் காமத் திருவிளையாடல்காரனென்றும் புராணங்களில் விவரித்திருப்பது இந்திய மக்களுக்கே மானக்கேட்டை விளைவிப்பதாகும் என்று திருமதி எலிசெபத் ரீட் சுட்டிக் காட்டுகிறார்.
16,000 மனைவிகளைக் கொண்டவன் என்பது, மக்களுக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்காது என்றும், கிருஷ்ணனைப் பற்றியவற்றை எல்லாம் வெளிப்படையாக விவரிக்கவும் அசங்கியமாகவும் அவருவருப்பாகவும் இருப்பதாகவும், இந்த பகவத் கீதை வரலாற்றிலும் கிருஷ்ணன் போக்கு நேர்மையாக இல்லை என்றும் இவர் விளக்குகிறார்.
(பி.வி.ஆர்.)

எப்படி இருக்கிறது – வியாசர் விருந்து எழுதிய ராஜாஜியே பாகவதம் பற்றியும் கிருஷ்ண லீலைகள் குறித்தும் அசூயை அடைகிறார் என்றால், கிருஷ்ணனின் தராதரத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
இந்தக் கிருஷ்ணனால் அருளப்பட்டதாகக் கூறப்படும் கீதையும். சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒரு கடவுள் – தன்னால் எழுதப்பட்ட கீதையில் குறிப்பிடுவது எல்லாம் நாகரிகமானதா?
இந்தக் கீதை பற்றிய உபந்நியாசம் தான் ஞாயிறுதோறும் சென்னை மயிலாப்பூரில் நடத்தப்படுகிறதாம்!
அய்யய்ய.. வாயால் சிரிக்க முடியவில்லையே!

திங்கள், 4 நவம்பர், 2024

சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத பதம் "சனாதனம்"!

மீள் பதிவு.
Balakrishnan R பதிவு

"சனாதனம்" என்ற சொல்லாட்சி! 
-----------------------------------------------------------
சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள்  வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத பதம் "சனாதனம்"!

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பிய இலக்கணம்.
(தொல்.சொல். 157)

எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும்.

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.'  ( தொல். எச்ச.‌‌1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் எச்சவியலில் பேசுகிறார்.

வடசொற்களை தமிழில் பயன்படுத்தும் முறை பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

"வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே." ( தொல். எச்ச.‌5)

அண்மையில் "சனாதனம்" என்ற "சொல்";  அதன் பொருள் மற்றும் அச்சொற்பொருள் சார்ந்த கருத்தியல் மற்றும் கோட்பாடுகள் பற்றிப் பொதுவெளியில் பரவலாக, பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.‌ 

எனவே இச்சொல் தமிழ் இலக்கியப் பரப்பில் எப்போது / எங்கு / யாரால் பயன்படுத்தப்பட்டது என்ற தேடல் தேவைப்படுகிறது. இதில் நம்முடைய நோக்கம் இச்சொற்பயன்பாடு தமிழில் இருக்கிறதா?  இருந்தால் எத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் பதிவு செய்வதே ஆகும்.‌ 

இதற்காக தமிழ் இலக்கியப் பரப்பை பழந்தமிழ் இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யலாம்.

இந்தத் தேடலில் நமக்கு உற்ற துணையாக பயன்படுவது கணிதப் பேராசிரியர் ப.‌பாண்டியராஜா மிகமுயன்று தொகுத்து இணையத்தில் அனைவரது பயன்பாட்டிற்குமாக வெளியிட்டுள்ள தொடரடைவுகள் என்பதை நன்றியுடன் பதிவு செய்வது நமது கடமையாகும்.

"சகரக் கிளவியும் அதனோரற்றே 
அஐஔ எனும் மூன்றலங் கடையே" என்று இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தில் "சனாதனம்" என்ற சொல் இருக்கிறதா என்று தேடுவதே நியாயம் இல்லை தான்.‌ இருந்தாலும் " இல்லை" என்று பதிவிடும் முன்பு முறைப்படி தேடிப்பார்த்தேன். "இல்லை".

சங்க இலக்கியம் எந்தவொரு தனிச் சமயத்தையும் தனியொரு கடவுளையும் முன்னிறுத்தவில்லை.‌ எனினும் திணை சார்ந்த கடவுள்கள்; ஆண் - பெண் தெய்வங்கள்; நம்பிக்கை மரபுகளுக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுவதால் சனாதனம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகிறதா என்று தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது . அவ்வாறு தேடிப்பார்த்ததில் கிடைத்த விடை "இல்லை" என்பது தான். (பரிபாடல் திருமுருகாற்றுப்படை யிலும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) சங்க இலக்கியங்களில் சகடம், சதுக்கம், சரணத்தர், சலதாரி, சனம், சங்கம், சக்கரம், சங்கு, சபை, சந்தனம், சமயத்தார் போன்ற சொற்கள் உள்ளன. ஆனால் சனாதனம் என்ற‌ சொல் இல்லவே இல்லை.

அடுத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அடிப்படையில் நீதி நூல்கள். சனாதனம் என்பது ஒரு " தர்மம்" என்பதை கருத்தில் கொண்டு பதினெண்கீழ்க்கு நூல்களின் தொடரடைவுகளைத் தேடினேன்.இதில் திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி போன்ற நூல்கள் அடங்கும்.   சனாதனம் என்ற சொல்லாடல் இந்நூல்கள் எவற்றிலும் இடம்பெறவில்லை.  திருக்குறள் என்ற உலகப்பொதுமுறை  "இதன் சாரம்; அதன் சாரம்" என்று வதந்திகளைப் பரப்புவோர் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும். 

"இரட்டைக் காப்பியங்கள்" ஏன்று போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் பல்வேறு சமயக்கோட்பாடுகள் உள்ளன.‌ ஆனால் சனாதனம் என்ற‌ சொல் இடம் பெறவே இல்லை. 

மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்களின்  சமயக்கோட்பாடுகள் பற்றிக் கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்த சமயம். மணிமேகலை சந்தித்த அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி,வைசேடிகவாதி,
பூதவாதி என்ற‌ இந்த சமயக்கணக்கர்களில் யார் சனாதனவாதி என்பது தெரியவில்லை.‌‌ ஏனெனில் சனாதனம் என்ற‌‌ சொல்லாடலே‌ மணிமேகலையில் இல்லை. சைவம், வைணவம், வேதம் ஆகியவை தனித்தனி கோட்பாடுகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஐம்பெரும் காப்பியங்களில் அடங்கிய ஏனைய காப்பியங்களான‌ சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லை . இந்த நூல்கள் சமண பௌத்த கருத்தியல்கள் சார்ந்தன.‌சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி ஆகிய இலக்கியங்கள் ஒருவகையில் வடபுலத் தொடர்பு உள்ளவையே ஆகும்!

"மூவா முதலா உலகம் " என்ற‌ கடவுள் வாழ்த்தோடு தொடங்கி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்; நன்றி மறவாமை போன்ற அறக்கருத்துகளையும் வலியுறுத்தும் சீவக சிந்தாமணியிலும் சனாதனம் இல்லை! வளையாபதி குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல்  இல்லை! 

கம்பராமாயணம் தேவாரம் திருவாசகம் நாலியிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களில் இருக்கக்கூடுமோ  என்ற வினாவுடன் பாண்டியராஜாவின் தொடரடைவை துழாவினேன். வியப்பாகத்தான் இருக்கிறது இவை எவற்றிலுமே சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.

கம்பராமாயணத்தில் சலம், சனம், சழக்கு, சவரி, சழக்கியர் எல்லாம் இருக்கிறது. ஆனால் சனாதனமோ சனாதனியோ இல்லவே இல்லை.
 மூவர் தேவாரத்திலும் அதே கதை தான்.‌சனாதனம் என்ற‌ சொல் இல்லவே இல்லை.‌ சைவக் குரவர்களாகிய நாயன்மார்கள் பற்றிய சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் சதுக்கம், சதுர், சதயம், சந்தனம், சந்திரன், சபை, சமயம், சரணம் என்று வடமொழி சார்ந்த சகர முதலான‌ ஏராளமான சொற்கள் உள்ளன; ஆனால் சனாதனம் இல்லை.

இந்தியத் துணைக் கண்டத்தின் மிகமுக்கியமான வைணவ இலக்கியத். தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சமணம், சமயம், சரணம், சன்மம் என்பது போன்ற பல சொற்கள் இருந்தாலும் சனாதனம் இல்லை. 
ஐஞ்சிறுங்காப்பியங்களிலும் சனாதனம் இல்லை.பெருங்கதையிலும் இல்லை. வில்லிபாரதத்தில் சன்பதம் இருக்கிறது ஆனால் சனாதனம் இல்லை.

சன்மார்க்கம், சற்குரு, சமரசம் போன்ற‌ சொல்லாட்சிகள் இடம்பெறும் திருவருட்பாவிலும் சனாதனம் இல்லை. தாயுமானவர் பாடல்களிலும் இல்லை. கலிங்கத்துப் பரணியில் "சலுக்குமுலுக்கு" என்ற சொல்லாட்சி கூட இருக்கிறது; ஆனால் சனாதனம் இல்லை.

நளவெண்பா, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, அபிராமி அந்தாதி, மதுரைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் எவற்றிலும் சனாதனம் இல்லை. 

சதுர்வேதம், சந்திரமவுலி, சர்க்கார், சக்கரம், சக்தி, சங்கரன், சங்கராசார்யன் என்ற  சொல்லாட்சிகள் பயன்படுத்தப்படும்  மகாகவி பாரதியாரின் கவிதைகளில் சநாதன, சநாதனமும் ஆகிய பதங்களை பயன்படுத்துகிறார்.

தோத்திரப் பாடல்கள் ஒன்றில் 
"சத்யா சநாதநா ராமா சரணம் சரணம் சரணம் உதாரா" என்று ராமனை சநாதநா என்று விளிக்கிறார் பாரதியார்.

" சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் மதம்" என்று சுயசரிதையிலும் குறிப்பிடுகிறார் இக்கவிதையில் சநாதனமும் ஹிந்து மதமும் ஆகிய இரண்டும் ஒன்றே என்று பாரதியார் கருதுவதை அறிந்து கொள்கிறோம்.

இவ்வாறாக சங்க இலக்கியங்களில் தொடங்கி ஐம்பெருங் காப்பியங்கள் பக்தி இலக்கியங்கள் மற்றும் சிற்றிலக்கியப் பரப்பில் சனாதனம் என்ற சொல்லாட்சி இடம் பெறவில்லை. 

இவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி பிற்கால சிற்றிலக்கியங்கள்  வரை தமிழ் இலக்கியப்பரப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சந்தித்திராத சொல்  சனாதனம். 

மேலும் கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலி யில் தேடிப் பார்த்தேன்.  அதிலும் சனாதன/ சநாதன/ ஸனாதன போன்ற சொற்பயன்பாடு எதனையும் காண இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்கால தமிழ் உரைநடைகளில், புதினங்களில், ஏனைய புனைவு இலக்கியங்களில், திறனாய்வுகளில் சனாதனம் என்ற சொல் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது; சனாதனம் சார்ந்த கருத்தியலுக்கு எதிரான கருத்தியல்கள் எவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தனது 
"பாதையில் பதிந்த அடிகள்"
பாகம் 1 (அத்தியாயம் 1-16) நூலின் 
முன்னுரையில்  சனாதனம் பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்தை பதிவிட்டு முடிக்கிறேன்.

"ஒரு தேசிய வரலாற்றில் எந்த ஒரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும் கூட மிகையில்லை. ஏனெனில் அதன் சாதக, பாதகமான பாதிப்புக்களை முழுமையாகத் தாங்குபவர்களும் அவர்களே தாம். ஆனால் ஒரு தேசிய வரலாற்றையோ, சமுதாய வரலாற்றையோ கணிப்பவர்களும், பதிவு செய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை."

"பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் சனாதன சமயக்
கொடுமைகளுக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி ஒடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை மீறுவதற்கே போராளியாக மாறவேண்டி இருக்கிறது."

சனாதனம் என்ற‌ கருத்தியலின் உள்ளடக்கம் அதன் சமூகப் பொருளாதார அரசியல் பரிமாணங்கள் பற்றி தனியே பேசலாம்.
- பாலகிருஷ்ணன் அவர்களின் பதிவை தமிழ் இனியன் அவர்கள் மீள் பதிவு செய்துள்ளார் (முகநூல்).
5.10.24