செவ்வாய், 24 நவம்பர், 2020

வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும், உபநிடதங்களும் வைதீகர்களான பிராமணர்,சத்ரியர், வைசியர்களுக்கானவை மட்டுமே!

 வேதங்களும்,இதிகாசங்களும், புராணங்களும், உபநிடதங்களும், ஸ்மிருதிகளும்,சாஸ்திரங்களும்,தர்ம நூல்களும் பாமர எளிய சூத்திர பஞ்சம மக்களுக்கானதல்ல.பெண்களுக்கும் உரியவை அல்ல.இவை அனைத்தும் வைதீகர்களான பிராமணர்,சத்ரியர், வைசியர்களுக்கானவை மட்டுமே.இவை அனைத்தும் அவர்களுக்காக அவர்களின் நலன் சார்ந்து அவர்களின் புகழைப் பரப்பும் வண்ணமும் எழுதப்பட்டவை.வைதீகர்கள் அல்லாதவர்கள் இவற்றில் பெற்றுக் கொள்ளவோ இணைத்துக் கொள்ளவோ ஒன்றுமேயில்லை.இவை அனைத்தும் வைதீகர்கள் அல்லாத மக்களை அடிமைகளாகவும் எதிரிகளாகவும் இழி பிறவிகளாகவும் சித்தரிக்கின்றன.

வைதீகர் அல்லாத சூத்திரர்,பஞ்சமர்கள், மற்றும் பெண்கள் வேத புராணங்களை கையில் எடுத்து அதை உயர்வாக கருதி தம்மை வைதீகர்களுக்கு அடிமையாகவே பாவித்து,ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் சுகம் கண்ட வைதீகர்கள் உண்மை அறிந்தும் போகும் வரை போகட்டுமே, வலிய கிடைக்கும் அதிகாரம் பதவி மரியாதை பொருள் வசதி இவற்றை ஏன் விட வேண்டும் என எண்ணுகின்றனர்.தாங்களாக முன்வந்து உண்மையை உலகுக்கு எடுத்துரைப்பாரில்லை.படிப்பு வாசனை இல்லாத சூத்திரர்களும் சண்டாளர்களும் தங்களுக்கென்று புராண இதிகாசங்களை வைதீகர்களைப் போல எதுவும் எழுதி வைக்கவும் இல்லை,சங்க இலக்கியங்களைத் தவிர.ஒரு சில பக்தி இலக்கியங்கள் ஓரிரண்டு இருந்தாலும் அவை வைதீகர்களின் புகழ்பாடும் அடிமைகளால் எழுதப்பெற்றவையே!
குறிப்பாக தமிழகத்தில் வைதீகர்கள் என பிராமணர்களை மட்டுமே கூற முடியும்.வைதீகர்களான பிராமண சத்ரிய வைசியர்கள் இருபிறப்பாளர்கள் ஆவர். இதற்கு அடையாளமாக உபநயன சடங்கு செய்து பூணூல் அணிந்து கொள்வர்.இவர்களில் பிராமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதுவதற்கும் மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் கற்றுக் கொடுக்கவும் முடியும். சத்ரியரும் வைசியரும் வேதங்களை கேட்க முடியும் ஆனால் மற்றவர்களுக்கு கற்றுத்தர இயலாது. முக்கியமாக வேதங்களைத் தெரிந்து,அறிந்து வைத்திருப்பர். சாஸ்திரப்படி,இவர்களுக்கு வேதங்களைப் படிக்கும் அதிகாரம் உண்டு.இதுதான் வட இந்தியாவில் உள்ள நடைமுறை.
இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் வேதங்களை அறிந்தவர்கள் இருபிறப்பாளர்களான பிராமணர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.தமிழகத்தில் ஆண்ட பரம்பரை என்றும் வாணிப வைசியர்கள் எனக் கூறும் யாரும் இருபிறப்பாளர்கள் இல்லை.
வைதீக அடிமைத்தனத்தினால் ஒரு சிலர் பூணூல் அணிவதை சமீப காலமாக வழக்கில் கொண்டுள்ளார்கள்.தமிழகத்தில் தங்களை சத்ரியர்கள் வைசியர்கள் என அடையாளப்படுத்துவோருக்கு நான்கு வேதங்களைப் பற்றியோ உபநயனம் பற்றியோ வைதீக முறைகள் சாஸ்திரம் ஏதும் தெரியாது.
கர்மாநுஸ்டானங்களோ, சம்ஸ்காரங்களோ என்னவென்றே தெரியாது.கோத்ரம், ப்ரவரம்,சாகை ஏதும் கிடையாது.
அதனால் வேத முறைப்படி பிராமணர்களைத் தவிர வைதீகர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை.
வைதீகர்களின் கூற்றுப்படி, தமிழ் நிலப்பரப்பு என்பது சூத்திரர்களாலும் பஞ்சம சண்டாளர்களாலும் மட்டுமே நிறைந்துள்ளது எனலாம்.இந்தக் கருத்தினை பல முறை பதிவு செய்துள்ளேன்.
சூத்திரர்கள் ஏன் வேத மந்திரங்களை காதாலும் கேட்கக் கூடாது என்பதனை வேதங்களின் சூத்ர வடிவில் உள்ள,வியாஸர் எழுதிய “ப்ரஹ்ம சூத்திரம்” எனும் நூல் விளக்குகிறது. இந்த நூல் வேத வைதீக சனாதனத்தின் மூல நூலாகவும் இந்திய தத்துவங்களின் அறிச் சுவடாகவும் விளங்குகிறது. ஶ்ரீ இராமானுஜர் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு எழுதிய உரை நூல், “ஶ்ரீ பாஷ்யம்”என்று வழங்கப்படுகிறது. இந்த நூலில் சூத்திரர்கள் ஏன் வேதம் பயிலக் கூடாது, கேட்கக் கூடாது என்பது பற்றி விவரிக்கும் பகுதியான முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஒன்பதாம் அதிகரணம்–அபஸூத்ராதி கரணம் பகுதியில் உள்ள சில சுலோகங்களை கீழே தருகிறேன்.
இனி சுலோகத்தைப் பார்ப்போம்:
1-3-34 :க்ஷத்ரியத்வகதே:ச
ஜானஸ்ருதி ஒரு க்ஷத்ரியன் என்று அறியப்படுவதால் சூத்திரர்களுக்கு உபாஸனை அதிகாரம் இல்லை(ராமாநுஜர்)
1-3-35: உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத்
சைத்ர ரதன் என்பவனுக்கு க்ஷத்ரியன் என்பதற்கான அடையாளங்கள் உள்ளதால், சூத்திரம் 1-3-33ல் கூறப்பட்டவன் (ஜானஸ்ருதி) க்ஷத்ரியனே
1-3-36: ஸம்ஸ்காரபராமர்ஸாத் ததபாவாபிலாபாத் ச
ப்ரஹ்ம வித்யை உபாஸனை கூறும் வரிகளில், பஞ்ச ஸம்ஸ்காரம் (உபநயனம்) குறித்து கூறப்பட்டதாலும், உபநயனம் போன்றவை சூத்திரர்களுக்கு பொருந்தாத காரணத்தினாலும் - சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
1-3-37: த தபாவநிர்த்தாரணே ச ப்ரவ்ருத்தே:
சூத்திரன் அல்லன் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே ப்ரஹ்ம வித்யை உபதேஸிக்கப்படுவதால், சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
1-3-38: ஸ்ரவணாத்யயநார்த்த ப்ரதிஷேதாத்
சூத்திர ர்கள் வேதத்தைக் கேட்பதும், அதன் பொருளை ஆராய்வதும், அதன் பலனைப் பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறுவதால் சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
1-3-39: ஸ்ம்ருதே: ச
ஸ்ம்ருதிகளின்( புராணம், தர்ம சாஸ்திர நூல்கள்)மூலமும் சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை என்று உணரலாம்
ஸ்ம்ருதி வரிகளில் - வேதம் ஓதுவதை சூத்திரன் கேட்டால் அவன் காதை அறுக்க வேண்டும் என்றும், அவன் வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும்,வேதத்தை
மனப்பாடம் செய்தால் அவனது உடலை அறுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆகவே, சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
சூத்திரர்களின் நாக்கை அறுக்கும் அளவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ருதி என்றெழைக்கப்படும் நான்கு வேதங்களில் உயர்ந்த விசயங்கள் சொல்லப் பட்டுள்ளனவா? என்றால் அதுதான் இல்லை.இவை அனைத்தும் யாகம்,வேள்வி, யக்ஞம்,ஆடு,மாடு,குதிரை,அக்னி,வருணன்,
வாயு,சோமன்,சூரியன்,இந்திரன், சுரா பானம்,சோம பானம், தஸ்யூ, தாஸர்கள் என இவற்றுக்குள்ளேயே சுற்றி வருவதை வாசிக்கிறவர்கள் உணர்வார்கள். இந்த இத்துப் போன சங்கதிகளுக்காகவா காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார்கள் என்கிற கேள்வி இந்த நூல்களைப் படிக்கும் அனைவருக்கும் எழும்.
“ப்ரஹ்ம சூத்திரத்திற்கு” விளக்க உரை எழுதியவர்கள் பலர். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஶ்ரீஆதிசங்கரர், ஶ்ரீ இராமாநுஜர்,ஶ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார்,
மத்வர்,சிவானந்தர் என அடுக்கிக் கொண்டே போகலாம்.அடுத்து வரும் பதிவுகளில் மேலுள்ள சூத்திரங்களுக்கு மற்ற ஆச்சாரியார்கள் எழுதிய விளக்க உரைகளைக் காண்போம்.
இனிமேலும் வேதம்,உபநிடதம்,பகவத்கீதை,ஆகமம்,பிராமணம்,புராணம்,இதிகாசம்,ஸ்ம்ருதி,ஸம்ஹிதை,வேதாந்தம்,ஆரண்யஹம்,உப வேதம்,தர்ம சாஸ்திரம்,தர்ஷனா,கர்ம காண்டம்,ஞான காண்டம்,உபாஸன காண்டம் என ஏமாற்றாமல் இருந்தால் நாடு உருப்படும்!
- தினகரன் செல்லாசு, ஆறாம் அறிவு, முகநூல் பதிவு, 19.11.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக