வெள்ளி, 22 மார்ச், 2019

வேதங்களின் வண்டவாளம்

கவிஞர் இரா.கண்ணிமை


ஆடு, மாடு, முதலான மிருகங்களையும் கோழி. கொக்கு, முதலிய பறவைகளையும், மச் சங்களையும் (மீன்கள்) சாப்பிடலாம் என்பதாகும்.

பிராமணர்கள் (பார்ப்பனர்) இதற்கு மாறாய் பல சொந்த சடங்குமுறை விதிகளையும், பழக்க வழக்கங்களையும் பக்தி வழிபாட்டில் கொண்டு வந்து கலந்துவிட்டார்கள். தாங்கள் அந்த வேதங்களை படித்துஅதன்படி நடப்பதுமில்லை. மற்ற மூன்று சாதியினரும் அதைத் தொட்டுப் படித்தால் பாவம் ஏற்படும் என்று மறைத்து புதைத்துவிட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வாறு பிர்மா, வசிஷ்டர், சாதிபர், பராசர், வேதவியாசரின் பிறப்பு இழிகுல பெண்களான சக்கிலிச்சி, பறைச்சி, செம்படத்திகளைச் சேர்ந்த காரணத்தால் உண்டானது கொண்டு, இவர்கள் வேதத்தை கற்பிக்கத் தகாதவர்கள் என்று வேமை யர் கூறிய தெலுங்கு வாக்கியம் பார்க்கலாம்.

தெலுங்கு சுலோகம்

தல்லி யூர்வசிலஞ்ஜ, தனயாலிமாதிக

தானு பிரா முண்டன  தகுனா சக்தி

வசிஷ்ட மாட்டலந்த வசு மாத்தியருகா

விஸ்வதா பிராம வினேரவேமா

இவருக்கு துணை ஞான சாஸ்திரியார் சொன்ன விருத்தம், 3 முதல் 7 பாடல் - வே.நா.சாஸ்திரியார்

ஒப்பில்லாத பிர்மருக் கூர்வசி

யென்ற கூத்தி வயிற்றிற் பிறந்த

ஒப்பில்லாத வசிஷ்ட ருடைய

சாதிபேதக மான தில்லையோ

 

அதட்டியதட்டி வேதங்க ளோதி

யாகம சாஸ்திரம் படிக்கின்றீர்களே

வசிஷ்டருக்கு சண்டாளி வயிற்றினில் வந்தவர் சாத்தியர் என்றறறியீர்களோ

 

சங்கை யறவே புலச்சியோடு

சாத்திபர்கூடி சேர்ந்த தினாலே

புங்கனூரின் மரபில் முனைத்துப்

போதகஞ் சொன்னவர் பராசரல்லவோ

 

உச்சமாகிய பராசர் தானென்று

மச்சகந்தி யென்றமீன் வாணிச்சியை

மிச்சமாக வைத்திருந் தல்லவோ

வேத வியாசரும் பிறந்தகாரணம்.

 

வசிஷ்டர், சாத்திபர், பராசருடனே

வளமைவேத வியாசரி னால்வருங்

குதட்டிக்கு தட்டி வேதங்களோதியே

குலத்தின் வேதியர்க் குயர்த்தியாயினர்.

இப்படி வேதத்தை கொண்டு வந்த வேதாந்த போதகத் தலைவர்களே, தங்கள் பிறப்பு வழிகளில் உயர்வு தாழ்வு என்ற வகையின்றி வழிநடத்திருக்கையில் அதனடியில் வாழையடி வாழையைப் போல் வருவோர் இடையில் நுழைந்து இழிகுலம் உயர் குலமென ஆழ்ந்து அமிழ்த்தி ஓம்பிப் பேசுவது ஓட்டைப் படகில் ஏறி கோட்டையைப் பிடிக்கப் போகும் குருடருக்கு சமம் என்பதில் சந்தேகமா?

இதுவரையில் வேதம் நான்கும் உலகத்திற்கு எப்படி யார்? யார்? மூலமாய் கொண்டு வந்து போதிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இனி பின்வரும் பிரிவுகளில் நான்கு வேதங்களிலுள்ள சடங்கு முறைகளை காணலாம்.

1. இருக்கு வேதச் சுருக்கம்

இருக்கு, என்பதற்கு பெருமை, ஸ்துதி என்று பொருளாம். இதில்  தேவர்கள் ஸ்துதியும், மற்றவர்கள் ஸ்துதியும் உண்டு. இருக்கு வேதத்தில் வசிஷ்டர், திருடப்போனபோது, நாய் குரைத்ததால் நாய் வாயைக் கட்டி அடக்கு மந்திரங்களும் அடங்கியிருக்கிறது. இருக்கு வேதத்தில் அய்த்ரேய பிராஹ்மணம், என்ற நூலில் காணும் யாக சம்பந்தமான விபரங்கள் வருமாறு:-

நான்கு அக்கினிகள்

1. கார் ஹபத்தியம்; 2. ஆகவனியம்; 3. தட்க்ஷிணாக்கினி; 4. சமித்திராக்கினி - என்ற நான்கு அக்கினிகளுமாம்.

யாகப் புரோகிதர்களின் பிரிவு

அத்வாயு, பிரதிப்ரஸ்தாதா, அக்நீத்ர, உன் னேதா, ஹோதா, மைத்ராவருண, ப்ராஹ்மணாச சம்ஸு, நேஷ்டா, போதா, அஷ்டாவாக, உக்காதா, ப்ரஸ்தோதா, ப்ரதி  ஹர்த்தா, சுப்ரஹ்மண்ணிய, க்ராவஷ் தோதா, ப்ரஹ்மா, ஸதஸ்ய, சமிதா, ஸோமக்ரயீ, ஆக புரோகிதர்கள் பத்தொன்பது பெயர் ஆவார்.

யாகத்திற்குரிய பாத்திரங்கள்

இத்மா; பர்ஹி; த்ருணி; ஸ்ருசா; சமஸ்; க்ராவண; ஸ்வகு; உபவரத்ரோண கலச; வாய்வ்யகலச; கரஹ; இடாசூறு; ஸவதீதி; புரேடாச புதப்ருதா என்ப வர்கள் ஆவர்.

யாக சாலையின் பிரிவுகள்

யஜ்குசாலை; மஹாவேதி; அந்தர்வேதி பஹிர்; வேதி; சமித்ரா சாலா; சாத்வால; ஸஞ்சாத; பராக்வம்ச; ஸத; மார்காலியா; அக்நீத்ரியாகார; பத்நீசாலா; த்வார்; ப்ரதிக்வர; யூப; ஹவிர்தான ; ஸாவாமுகி; தர்ம என்பவைகளாம்.

யாகானுஷ்டானங்களின் பெயர்

திக்ஷ்ணியா இஷ்டி; ப்ராயணிய இஷ்டி; ஆதித்தப இஷ்டி; தர்ம; அக்நிஷோமியா; பசு; ஸீத்யா; ப்ராதஸ; வன; மத்யான்னஸவன; த்ரூதீயஸவன; சோமபான; ஆச்வீனபசு, அய்நா ராக்ன பசு; அவப்ருத; வருளோஷ்டி, வபாயாக; பசு உபாகரண; பசுவாலம்பனம்

அய்த்ரேய ப்ராஹ்மணம் இரண்டாம் நூலில் உள்ளதைப் பார்க்கவும்.

யாகாதி கர்மங்களை காட்டும் சுலோகங்கள்

சுலோகம்:

யஞ்ஞேனவை தேவா; ஊர்த்தனவம் ஸ்வர்க்கம்; லோகமாயம் ஸ்தே பிபயுரஸ்மின்; நோத்குஷ்ட்வா மனுஷ்யாக ரிஷ்வஸ் சானுப் (அய்த்ரேயப் ராஹ்; மணம் த்விதீய பஞ்சிகா பிரதமே கண்டம் பார்க்கவும்)

பொருள்: தேவர்கள் யாகம் செய்து சொர்க் கத்தையடைந்தார்கள். ஆகவே மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர்கள் என்பதாகும்.

யாகத்திற்குரிய உயிர்களை தூண்களில் பிணைத்துக்கட்டி மந்திரம் சொன்ன பிறகு தலைமைப் புரோகிதனான (பார்ப்பனன்) அத்வாயுவின் கட்டளையைப் பெற்ற பின், யாகப் பசுவை சமித்ரா சாலா என்றும், பசுவைக் கொலை புரியும் இடத்திற்குக் கொண்டு போய் பசுவை கொல்லும் சமிதா என்னும் புரோகிதன் (பார்ப் பான்) முஷ்ட்டி என்னும் குறுந்தடியால் பசுவின் கழுத்தில் அடித்துக்கொலை செய்வான். அதன் பிறகு சுரா, இடா, ஸீனு, ஸவதீதி என்னும் மரப் பலகையில் பசுவைக் கிடத்தி, தோலை உரித்து, சதையை அரிந்து எடுத்து நெருப்பிலிட்டு மீதி மாமிசத்தை புரோகிதர்கள் (பார்ப்பனர்கள்) அனைவரும் பங்குபோட்டு எடுத்துக்கொள்வார் கள். யாகப் பசுவை மந்திரம் சொல்லிக் கொன்றபின் அதை அறுத்தெடுக்கும்முறை மந்திரம் பின் வருமாறு:-

மந்திரம்

அந்தரே வோஷ் மாணம் வாரயத் வாநிதி

பசுஷ் வேதத் பராணான், ததாதி ஸ்யேனமஸ்

யவக்ஷ்; ககுருணு தாத்மிர் தயா பாஹீசலா

தோஷணீகஸ்யலேவரம், ஸாச்சித்ரே ஸ்ரோணீக

வஷோரூஸ் ரேகர்ணாஷ்டி வந்தா ஷட்விம் சதி ரஷ்ய

வங்காயஸ்தா அனுஷ்டயோச்ய வயதாத்; காத்ரம்

காத்மஸ் யானூனம் (அய்த்ரேய பஞ்சிக 3 - காண்டம் 6 பார்க்கவும்)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பிறகு காலிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலி ருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டு அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமை வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்து எடுக்க வேண்டும். இவ்வாறே அந்தந்த அவையவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் இவ்வாறு அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்.

பக்தியைக் கடைப்பிடிப்போர் முக்திய டைய இவ்வாறு பலவித யாகங்களைச் செய்து முடித்தேயல்லாது, வேறு வழியில் முக்தி சேர முடியாதென்பதை இருக்கு வேதம் விளக்குகிறது.

புலால்     தின்போரை புலையர், தீண்டா தார், என்னும் பொய்க் குருக்களான கள்ளப் பார்ப்பனர்கள், பசுக்களைக் கொன்றுயாகம் செய்து, மந்திரம் சொல்லி அனைவரும் பங்கிட்டு இறைச்சியை புசிக்கும் போது - தீட்டு எவ்வாறு மறைந்ததென்பதை கேட்பார் இல்லையே!

மச்சய புராணத்தில், சொல்லியுள்ளபடி யாகத்தில் பொதுவாய் பசுவை மட்டும் அல்ல; ஆடு, மாடு, குதிரை, பாம்பு, மனிதன் ஆகிய அனைத்தையும் கொன்று யாகம் செய்வதே முறையாய் காணப்படுகிறது.

2 யசுர் வேதச்சுருக்கம்

யசுர் என்பதற்கு வணங்குதல் என்று பொருளாம். யசுர் என்றால் - யாகாதி செயல் களை உணர்த்தும் நூல் என்பது பொருள். யசுர் வேதத்தைப் படித்தவன்தான் அத்வர்யு என்னும் யாக புரோகித (பார்ப்பனர்) பதவிக்கு ஏற்றவனாம். இப்பதவியை ஏற்றவனே புரோகிதர்க்கெல்லாம் தலைமைப் புரோகி தனாம் (பார்ப்பனன்).

முன்னர் விளக்கியபடி - யசுர் வேதம், இரு பிரிவாய், கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் எனப்பெயர் கொண்டது. கிருஷ்ண யசுர் வேதத்தின், பிராஹ்மணம், தைத்திரியம், சுக்கில யசுர் வேதத்தின் பிராஹ்மணம்  வாகஸ் நேயம்.

கிருஷ்ண யசுர் வேதத்தில் விளக்கியுள்ள யாகக் கொலைகளுக்கு கணக்கேயில்லை. சில யாகங்களில் நாய், தித்திரி என்னும் பறவை வெள்ளைக் கொக்கு, கருங்குவளை முதலான பிராணிகளையும் கொன்று யாக பலி செலுத்த வேண்டும். பிராஹ்ம் தேவனுக்கு பிராஹ்மண ரையும் (பார்ப்பனர்) யாகம் செய்ய வேண்டும். (தைத்திரீயம் 3ஆம் காண்டம் 4ஆம் அத்தி யாயம் 1-ஆம் அனுபவத்தைப் பார்க்கலாம்)

வேதத்தில் - நாமேதம் (நரபலியாகும்) செய்யும் போது பல வகுப்பினரிலும் - பல தொழில்காரர் 20 பேரை தூண்களில் பிணைத்துக் கட்டி புரூஷஸீத்தம் என்னும் மந்திரத்தை உச்சரித்து தெளித்து யாகம் முடிக்க சொல்லப்பட்டுள்ளது.

1. கிருஷ்ண யசுர் வேத விளக்கம்

கிருஷ்ண யசுர் வேத தைத்திரீய ஆரண் யம் என்னும் நூல், பத்து அதிகாரங்களை யுடையது. இதன் 6ஆம் அத்தியாயம் பித்ருமேதம் என்பதை விளக்கிக் காட்டுகிறது. பிராமணர் (பார்ப்பனர்) க்ஷத்திரியர், வைசியர், இறந்தால் இவர்களைத் தகனிக்கும் விதிமுறை பிராமணர்களும் (பார்ப்பனர்) இதில் அடங்கி யிருக்கிறது.

கிருஷ்ண யசுர் வேதத்தில் காணப்படும் யாகங்களில் சிலவற்றைக் கீழே காண்க: 1. ஸௌத்ராமணி - மதுவருந்தும் யாகம்

2. சுராக்ரஹா மந்திரம் - லாகிரியருந்தும் யாகம்

3. அய்த்ரபா - இந்திரனுக்கு காட்டுபலி யாகம்

4. கோஸவம் - பசு, காளை யாகம்

5. அத்யுர்யாம - ஒருவித (கொலை) யாகத்தின் பெயர்

6. வாயுவிய ஸ்வேதபசு - வாயு தேவனுக்கு வெண்பசு யாகம்

7. காம்யபசு - எண்ணம் ஈடேற யாகம்

8. வத்ஸோபகரணம் - இளங்கன்று யாகம்

9. பௌர்ணமாஸேஷ்டி - பௌர்ணமி தின யாகம்

10. நக்ஷ்த்ரேஷ்டி - நக்ஷ்த்ர தேவதை யாகம்

11. புருஷயஜ்ரு - நரயாகம்

12. வைஷ்ண பசு - விஷ்ணுவுக்கு ஆட்டு பலி

13. அய்த்ராக்க பசு - இந்திரன், அக்கினிக்கு ஆட்டுபலி

14. ஸவித்ரபசு - சூரியனுக்கு ஆட்டு பலி

15. அஸ்வமேதம் - குதிரை பலி யாகம்

16. ரோஹிதாதிபஸ்வாலம் பணம் - செந்நிற ஆட்டு பலி

17. அஷ்டதச பசுவிதானம் - பதினென் பசுயாகம்

18. சாதுர்மாஸ பசு - மழைக் காலத்தில் ஆட்டு பலி

19. ஏகாத சீன பசு விதானம் - பதினொரு பசு யாகம்

20. க்ராமாரண்ய பசுப்ரசம்ஸா - நாட்டு, காட்டு பசு பலி

21. உபகரண மந்தரம் - யாகப்பசு சுத்திகரிப்பு மந்திரம்

22. கவ்விய பசுவிதானம் - பசு யாகம்

23. ஸத்ரம் - தொடர்ந்து செய்யும் யாகம்

24. ரிஷிபாலம் பனவிதானம் - எருது யாக விதி

25. அஸ்வாலம் பன மந்திரம் - குதிரை பலி மந்திரம்

26. அஸ்வஸம் ஜிஞபனம் - குதிரை பலி விதி

27. அஸ்வ, மனுஸ்ய அஜகோ - குதிரை, மனிதன், ஆடு, மாடு கொல்ல விதி

28. ஆதித்ய தேவதர்க பசு - சூரியனுக்கு பசு யாகம்

29. ஸொபி பசு - ஸோம தேவதை யாகம்

30. பருஹஸ்பதிவை பிரகாஸ்பதி - தேவதை பலி

கிருஷ்ண யசுர் வேத யாகங்களில் இங்கு காட்டிய யாகங்கள் அன்றி பலவித யாகங்கள் உண்டு. முக்தியடைய இவையெல்லாம் செய்து முடித்தே பக்தியை முழுமையாக்க வேண்டுமென்பது வேதத்தின் கருத்தாம்.

(தொடரும்)

-  விடுதலை ஞாயிறு மலர், 9.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக