செவ்வாய், 22 ஜனவரி, 2019

ஹிந்து மதம் மனித உரிமைகளை மதிக்கிறதா? மிதிக்கிறதா?

'சோவி'ன் 'துக்ளக்' கட்டுரைக்கு மறுப்பு!


மஞ்சை வசந்தன்


மற்ற மதங்களின் தெய்வங்களையெல்லாம் தொழ லாமா? நம்பலாமா, கூடாதா? என்ற கேள்விக்கு 'சோ' தந்த பதிலை, 16-1-2019 துக்ளக் இதழில் 24ஆம் பக்கத்தில் 'ஹிந்து மதத்தின் தனியுரிமை!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

"மற்ற மதங்கள் எல்லாம், நீ இன்னாரைத் தொழுதால், நீ உருப்படலாம்! நீ வேறு ஏதாவது தெய்வத்தை நம்பினால் நீ குளோஸ்! என்று சொல்கின்றன. இந்தத் தெய்வத்தைத்தான் நம்ப வேண்டும். நான் சொல்கிற தெய்வத்தை நம்பு என்கின்றன. ஆனால், ஹிந்து தர்மமோ, பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்...

யேசபி அன்யதேவதாபக்தா யஜந்தே ச்ரத்த யாந்விதா:

தேசபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம்  -  ப.கீ.9.23

சிரத்தையோடு, ஒருவன் வேறு கடவுள்களை, தெய்வங்களை அதற்கு வேண்டிய முறையோடு வேண்டினான் என்றால், அந்த வேண்டுதலும் பக்தியும் என்னிடம்தான் வந்து சேரும். அவன் சரியான விதி முறைப்படி செய்யவில்லை என்றாலும், என்னிடம்தான் வரும். நான் அவனுக்கு அனுக்கிரகம் பண்ணுவேன். இதன் பிறகுநீங்கள் என்ன செய்ய முடியும்?நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் சிரத் தையாகக் கடவுளைக் கும்பிட்டால் அது என்னிடம்தான் வந்து சேரும் என்று சொல்லி விடுகிறார்.' என்று கூறியுள்ளார்.

சோவின் இந்தப் பதில் சுத்த மோசடியாகும்! பகவத் கீதையை தன் வசதிக்கேற்ப திரித்து ஏமாற்றுகிறார். பகவத் கீதையை யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் அப்படி எழுதியிருக்கிறார். ஹிந்து மதத்து அறிஞர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்களைவிட பெரியார் தொண்டர்கள் அதிகம் இந்து மத நூல்களை படித்து ஆய்வு செய்தவர்கள் என்பது சோவுக்கு மறந்திருக்கலாம்.

சோ எடுத்துக்காட்டியுள்ள இந்த ஸ்லோகத்திற்கான சரியான பொருள் அவர் கூறியுள்ளதுபோல் அல்ல.

பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ள அறிஞர்கள் இவர் கூறுவதுபோல் கூறவில்லை. எடுத்துக்காட்டாக,

"ஸ்ரீமத் பகவத் கீதை" - சுவாமி சித்பவானந்தர் உரையில்,

சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதை களை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என் னையே வணங்குகிறார்கள் என்று கூறுகிறார்.

"பகவத் கீதை - பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா உரையில்,

தேவர்களுக்கு எவற்றையெல்லாம் யாகங்களாக ஒரு மனிதன் படைக்கிறானோ அவையும் உண்மையில் எனக்கானவையே. ஆனால், அவை அறிவின்றி அவை அப்படி படைக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.

ஆக, பகவத் கீதையில் சோ எடுத்துக்காட்டிய ஸ்லோகத்தில் உள்ள மற்ற தேவதைகள் என்பதை பிற மதக் கடவுள்கள் என்கிறார். மற்ற உரையாசிரியர்கள் இதர கடவுளர்கள் என்றே கூறுகின்றனர். இராமானுஜர் பிற தேவதைகள் என்பதற்கு பிரம்மா, சிவன், விநாயகர் போன்றவர்கள் என்றே விளக்கம் அளிக்கிறார். அது மட்டுமல்ல, பகவத் கீதை காலத்தில் கிருத்தவ, இஸ்லா மிய மதங்கள் போன்ற பிற மதங்கள் உருவாக்கப் படவேயில்லை. அப்படியிருக்க பிற மதங்கள் என்று சோ பொருள் கொண்டது மோசடியானது.

அதாவது சிவனை வணங்கும் சைவர்களுக்கும் விஷ்ணுவை வணங்கும் வைணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்தபோது, சைவத்திற்கு எதிராக வைணவத்தை உயர்த்திப் பிடித்துப் பரப்பு வதற்காக எழுதப்பட்டு மகாபாரதத்தில் இடைச் செருக லாய் நுழைக்கப்பட்டதே பகவத் கீதை.

அதனால் சைவக் கடவுள்களைவிட தானே உயர்ந்த கடவுள் என்றும், பிற கடவுளர்களை வணங்கினாலும், அது தன்னை வணங்கியதாக என்னையே வந்து சேரும் என்று கண்ணன் கூறுகிறார்.

உண்மை இப்படியிருக்க, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் நீங்கள் எந்த மதத்துக் கடவுளை வணங்கினாலும் அது என்னிடமே வந்து சேரும் என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லியுள்ளார் என்பது மோசடியானது. அது மட்டுமல்ல, சிவன், பிரம்மா, விநாயகர் போன்ற கடவுள்களை வணங்குகிறவர்கள் சிற்றறிவுடையவர்கள் என்கிறது பகவத் கீதை.

அர்ஜுனா! பிரம்மலோகம் வரையிலுள்ள எல்லா லோகங்களும் அழிவுள்ளவை. குந்தி மகனே! என்னை அடைந்துவிட்டாலோ, மறுபிறவி கிடையாது என்று அத்தியாயம் 8, சுலோகம் 16இல் கிருஷ்ணன் கூறுகிறார்.

பிரம்மலோகம் வரையில் உள்ள லோகங்களெல்லாம் அழிவுள்ளவையாகையால் அவைகளுக்குச் செல்ப வர்கள் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும். ஆனால், வைகுந்தம் அடைபவர்கள் மறுபிறவி எடுத்துத் துன்பப் பட மாட்டார்கள் என்று இந்த சுலோகத்திற்கு விளக்கம் அளிக்க வந்த ராமானுஜர் கூறுகிறார்.

பிரம்மலோகம் வரையிலுள்ள எல்லா லோகங்களும் அழியக் கூடியவை என்று கிருஷ்ணன் கூறுகின்ற கருத்துப்படி நோக்கின் சிவலோகம், பிரம்மலோகம், வைகுந்தம் போன்ற பல லோகங்கள் இருப்பதாயும், சிவன், பிரம்மா போன்ற பல கடவுள்கள் இருப்பதாயும் கிருஷ்ணனே ஒப்புக்கொண்டுவிட்டதாக அர்த்தம் ஆகிறது. உலகை நடத்தும் கடவுள் ஒன்றே என்று மதத் தலைவர்கள் கூறுகின்ற கருத்துக்கு இது முரணாக இல்லையா?

உலகிற்குப் பொதுவான அக்கடவுள் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து வந்து கீதையை உபதேசம் செய் திருந்தால், அது பல கடவுள் இருப்பதாக உபதேசம் செய்திருக்குமா?

இது மட்டுமல்ல, சிவலோகம், பிரம்மலோகம் போன் றவை அழியக் கூடியவை என்றும், விஷ்ணு வாழும் வைகுந்தம் மட்டும் அழிவில்லாதது என்றும், அக்கடவுள் காழ்ப்பு உணர்வோடு கூறியிருக்குமா?

சைவத்தைத் தாழ்த்தி வைணவத்தை உயர்த்தித் கூற, உலுத்தர்கள் செய்த இடைச் செருகலே இக்கீதை என்பது இதிலிருந்து உறுதி செய்யலாம்.

மேலும், பகவத் கீதையில் முன்னுக்குப் பின் முர ணாக பல கருத்துகள் ஒரே உளறலாக இருப்பதையும் பகவத் கீதையை நன்கு ஆராய்வோர் அறியலாம்.

எடுத்துக்காட்டாக,

மேலே கூறிய சுலோகத்தில் பிற கடவுள்களை வணங்கினாலும், அது தன்னையே வணங்கியதாகத் தன்னையே வந்து சேரும் என்று 9ஆவது அத்தியாயம் 23ஆவது ஸ்லோகத்தில் கூறிய கண்ணன், 26ஆவது ஸ்லோகத்தில்,

தேவர்களை தொழுபவர்கள் தேவர்களை அடை கிறார்கள், பிதுர்களைப் போற்றுகிறவர்கள் பிதுர்களை அடைகிறார்கள். பூதங்களை வணங்குபவர்கள் பூதங் களைப் போய்ச் சேருகிறார்கள். என்னைப் போற்றுகிற வர்கள் என்னை வந்தடைகிறார்கள் என்கிறார்.

அதாவது யார் எத்தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் என்னையே (கிருஷ்ணனையே) வணங்கிய தாக அர்த்தம் என்று முதலில் கூறிவிட்டு, அதன்பின், யார் எதை எதை வணங்குகிறார்களோ  அதையே சென்றடைகிறார்கள் என்று கூறிகிறார்.

இப்படிப்பட்ட உளறல் குப்பைதான் புனித நூலாம். அதைத் தேசிய நூலாக வேறு ஆக்க வேண்டுமாம்.

மனித உரிமைகளை பகவத் கீதையும் இந்து மதமும் மதிக்கிறதா?

மனித உரிமைகளுக்கும், மனித நேயத்திற்கும், சமத் துவத்திற்கும் நேர்எதிரான கொள்கைகளைக் கொண்ட மதம் இந்து மதம். ஆனால், சோ, இந்து மதம் மனித உரிமையை மதிக்கும் மதம் என்கிறார்.

ஜாதிப் பிரிவுகள் மனித உரிமைக்கும், மனித சமத்துவத்திற்கும் எதிரானது. அந்த ஜாதிகள் அழியக் கூடாது; அது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்கிறது பகவத் கீதை. மேலும் ஜாதியடிப்படையில் குலத்தொழிலையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்கிறது பகவத் கீதை.

அயலாருக்கு (அடுத்த ஜாதிக்காரனுக்கு) விதிக் கப்பட்ட கடமையைத்தான் மேற்கொண்டு அதை நல்ல முறையில் குறையில்லாமல் செய்வதைக் காட்டிலும், தனக்காக விதிக்கப்பட் கடமையைக் குறையாகச் செய்தாலும் நல்லதே! என்கிறான் கிருஷ்ணன்.

(பகவத் கீதை 18ஆவது அத்தியாயம், 47ஆவது சுலோகம்)

அதாவது, வண்ணான் மகன் வண்ணான் தொழி லையே செய்ய வேண்டும். அடிமை வேலை செய்பவன் மகன் அடிமை வேலையே செய்ய வேண்டும். அடிமை வேலை செய்பவன் மகன் நாட்டை நல்ல முறையில் ஆளுகின்ற திறமை பெற்றிருந்தாலும், வாய்ப்பு இருந் தாலும் அவன் நாடாளச் செல்லக்கூடாது. அடிமை வேலையை அரைகுறையாகத்தான் செய்ய முடியும் என்றாலும் அடிமை வேலையையே அவன் செய்ய வேண்டும் என்கிறது.

"பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள்" ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்.

"புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும் பக்தர் களான ராஜரிஷிகளும்" உயர்ந்த பிறவிகள்.

பகவத் கீதை: 9ஆவது அத்தியாயம், சுலோகம் 32, 33இல் கிருஷ்ணனே இவ்வாறு கூறுகிறார்.

ஒருவனது நடத்தையை வைத்து உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்ற பாகுபடுத்திக் கூறினால் அதில் நியாயம் உண்டு. அதை விடுத்து, ஒருவன் பிறக்கின்ற ஜாதியின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபாடு செய்வது அயோக்கியத்தனம் அல்லவா?

பாவம்! பெண்கள் எந்த ஜாதியில் பிறந்தாலும் அவர்கள் தாழ்ந்த பிறவிகளாம்! பெண்களுக்குக் கீதை அளித்துள்ள அந்தஸ்தைப் பார்த்தீர்களா?

இந்து மதத்திற்கு அடிப்படையாகக் கருதப்படுவது வேதங்களும் மனுஸ்மிருதிகளும். அவை மனித உரிமை களுக்கும் மனித சமத்துவத்திற்கும் நேர்எதிரானவை.

ஸுமித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை

ஸந்து யோஸ் மான்த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம

(யஜுர் வேதம்)

பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகிற யஜுர் வேதப் பாடல் பகுதியே இது. இதன் பொருள் என்ன தெரியுமா?

தண்ணீர், தானிய வகைகள், பிராண வாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மை பயப் பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர் களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவு வாதிகளுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே!

ஆரியர்களின் நலன் கருதி எழுதப்பட்டவையே வேதங்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா? வேதங்கள் மட்டுமல்ல வேதங்களுக்கு விளக்கம் தரவந்த ஸ்மிருதிகளின் போதனைகளை ஆராய்ந்தாலும் ஒரே அபத்தம்தான்.

பிராஹ்மணோ ஜாயமானோ ஹிபருதிஸ்யாம் அபியாஜதே

ஈஸ்வர; ஸர்வ பூதானாம் ப்ரஹ்ம கோசஸ்யகுப்தயே

ஸர்வஸ்வம் ப்ராஹ்மணஸ்யேதம், யத்கிஞ் சீஜ்ஜகதீகதம்

ஸ்ரைஷ்டைனா பிஜனெனெதம் ஸர்வம் வைப்பிராஹ் மணோர் ஹதி

ஸவமேவ ப்ராஹ்மணோ புங்க்தேஸ்வம் ததால்ச: ஆன்ருமிம்ஸ்யாத்

பிராஹ்மண ஸ்யயுஞ்ஸதே ஹிதரே ஜனா

என்று மனு ஸ்மிருதி கூறுகிறது.

அதாவது, சகல பிராணிகளுக்கும் தலைவனாயும் வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும், பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ளவனாவான். பிராமணன் பிச்சையெடுத்து உண்பானாயினும், பிறர் உண்பதும் கொடுப்பதும் அவன் பொருளே ஆகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

தாதவ்வம் ப்ரத்யஹம் பாத்ரே நிமித்தேஷுவிசேஷத்

யாசிதேனா பிதாதவ்யம், ஸ்ரத்தா பூதத்து சக்தித்

என்று யக்ஞவல்கியர் கூறுகிறார்.

அதாவது, பிராமணனுக்குத் தினமும் நாணயமும் கொடுக்க வேண்டும். கையில் ஒன்றுமில்லாவிடில் பிச்சையேற்றோ வேறு எந்த வகையிலோ கொடுத்தே தீரவேண்டும் என்பதே யக்ஞவல்கியர் கூறுவதற்கு அர்த்தம்.

இதே கருத்தை, அஹாஹர்தம் யாதுத பரத்ராதி என்ற வேத வாக்கியம் கூறுகிறது. அதாவது பிராமண னுக்கு பசு தானம் வழங்கியவன், அப்பசுவிற்கு எத்தனை மயிர்கள் இருக்கின்றவோ அவ்வளவு காலம் சுகத்தை அனுபவிப்பான் என்பது இதற்குப் பொருள்.

அதாநருணாமதனம வரருத்வாயோ ததாதீக தர்த்தீனே;

ஸ்வைபோஷண ஜாத்பாபாத் முக்தோ பவதி தத் க்ஷணம்

என்றும் யக்ஞவல்கியர் கூறுகிறார்.

அதாவது பிறருக்குக் கொடுக்காத லோபியின் பொருளைக் கொள்ளையிட்டுப் பிராமணனுக்குக் கொடுக் கிறவன் அக்கணமே திருட்டினாலுண்டான பாபத்தி னின்றும் விடுபடுகிறான் எனப்தே அவர் கூறுவதற்கு அர்த்தம்.

கோமத ஸ்மிருதியில்,

தேனே சோத்தரஸ்ததர்த் தோஹ்ஸ்ய நிசய என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, சூத்திரன் ஏதாவது ஒருவகையில் பொருளீட்டினால் அது பிராமணனுக்கு உரியது என்பது இதன் பொருள்.

மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்ட ப்ராஹ்மணானாம் விதீயதே

இதரேஷாம்து வர்ணானமதண்ட; ப்ராணாந்தி; கோபவேத

என்று மனு கூறுகிறார்.

கொலைத் தொழில் புரிந்த பிற ஜாதிக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும். ஆனால், பிராமணன் கொலைக் குற்றம் செய்தால், அவனது தலை மயிரை மொட்டை யடித்து விடுதலே அதற்குரிய தண்டனையாகும் என் பதே மனு கூறுவதற்கு அர்த்தம். இப்படிப்பட்ட மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் நீதி நூலாகும்! இப்படிப் பட்ட இந்து மதந்தான் மனித உரிமைகளை மதிக்கும் மதமா?

சூதரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீதமேவா;

தஸ்யாயைவ ஹீஸ்ருஷ்டோ ஸௌப்ராஹ மணஸ்ய ஸ்வம்புவா

என்றும் மனு கூறுகிறார்.

அதாவது, கூலி கொடுத்தாகிலும், அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி   (மனு - 125, அத் - 10)

ஆரியர் அல்லாத முரட்டு மனிதர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள்  (மனு - 58, அத் - 10)

பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவ னையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும்.  (மனு 148, அத் - 5)

கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும். (தொழவேண்டும்)" (மனு 5: 154)

கொலைத் தொழில்புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போடவேண்டும். பிராமணன் கொலை செய் தால் அவன் தலையின் மயிரை அகற்றினால் அதுவே தண்டனையாகும்." "பிராமணன் சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று பொருள்கூட உரிமையில்லை." (மனு எட்டாவது அத்தியாயம், சுலோகம் 417)

"கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமாலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென் றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட் டிருக்கிறான்."

(மனு எட்டாவது அத்தியாயம், சுலோகம் 413)

இப்படிப்பட்ட கொள்கைகளைக் கொண்ட இந்து மதம்தான் மனிதநேய மதமா? மனித உரிமைகளை மதிக்கும் மதமா? ஆரிய பார்ப்பனர்கள் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. தமிழர்களே எச்சரிக்கை! குறிப்பாக துக்ளக் படிக்கும் தமிழர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!

-  விடுதலை நாளேடு, 22.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக