செவ்வாய், 23 மே, 2023

“சனாதன தர்மம் என்றால் என்ன?

 

சனாதன தர்மம் என்றால் என்ன?

சனாதன மதம் என்றால் நித்தியமான மதம் அல்லது புராதன விதி என்று பொருள்படும். இது வெகு காலங் களுக்கு முன்பு, மானிடர்களுக்கு அளிக்கப்பட்ட புண்ணிய புஸ்தகங்களான வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. இந்த மதத்திற்கு ஆரிய மதம் என்ற பெயரும் இடப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆரிய மகா ஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது.(பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், எல்லா ஜாதி பெண்கள்) ஆரிய என்ற பதத்திற்கு மேன்மை பொருந்திய என்று அர்த்தம். இவ்வுலகில் வசித்த பூர்வ ஜாதியார்களைக் காட்டிலும் ஒழுக்கம், ரூபம் இவற்றுள் மிகச் சிறந்த ஜாதியாருக்கு ஆரியம் என்று பெயரிடப்பட்டது. இவ்வாரிய மகா ஜாதியாரின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்று கூறப்படுகிற இந்நாட்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். (அவர்களை வந்தேறி கள் என்று சொல்கிறோமே அந்த வாக்குமூலம் தெளி வாக இதில் பதிவாகியிருக்கிறது) அவ்விதம் அவர்கள் முதலில் குடியேறின நாட்டிற்கு ஆரிய வர்த்தம் என்ற பெயரும் உண்டு.

- 1907 இல் காசி பல்கலைக்கழகத்தின் சார்பில் பி.ஏ.பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டு, நாராயண அய்யர் தமிழில் மொழி பெயர்த்தது. அதில் உள்ள ஒரு பகுதி. 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 

சங்கரன்கோவில் பொதுக்கூட்டம், 25.02.2023.

  

18

“சனாதன தர்மம் என்றால் ஆரிய மதத்தை குறிக்கும் சொல். இந்து மதம் என்பது பலரும் கொள்ளும் கருத்துகளை உடையது.

திருக்குறளில் இப்படி ஒரு கோட்பாடு எதுவும் இல்லை. அறம் என்ற கோட்பாடு ஒன்று தான் குறளில் வலியுறுத்தப்படுகிறது.

பலர் அறம் என்ற சொல்லையும், தர்மம் என்ற வட சொல்லையும் இணைக்கலாம். இது சரியானதில்லை. நாம் அப்படி பழகிப்போய்விட்டோம். வடமொழியில் தர்மம் என்றால் கடமை என்று பொருள்,. சத்திரிய தர்மம் என்றால் சத்திரியர் கடமை என்று பொருள். 

சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

அறவழி என்றால் நல்ல வழி என்று பொருள். அற வழிக்கும் சனாதன வழிக்கும் நேரடி சம்பந்தம்இல்லை. 

இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

சனாதன தர்மம் வகுக்கப்படுகிற ஒரு நூல் பகவத் கீதை. இந்த நூலை மிகச் சிறந்த நூல் என்பார்கள். உங்களில் இதைப்  படித்துப் பார்த்தவர்கள்  ஓரிருவர்தான் இருப்பீர்கள்.

பகவத்கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஒவ்வொரு பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது. அதாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனைப் பார்த்து அரசாங்கம், சண்டை, கடமைகளை செய், அதற்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பார்த்து மாடுகள் வளர்த்திடு அதற்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான், நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளாக இரு என்றான். இந்த பிரிவினையை செய்த தன்னாலேயும் இதை மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை - வேலையைச் செய்யக் கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்தப் பாவங்கள் அடுத்த பிறவியில்  தொடரும் என அச்சுறுத்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குங்கள் என்றான். தன்னை வழிபாடு செய்தால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.

- இதுதான் சனாதன மதம். இது நமது மதம் அல்ல. பகவத் கீதையில் ஜாதி தர்மம் என்ற வார்த்தை உள்ளது. அதாவது அவரவர் ஜாதிக்கு ஏற்றவாறு கடமைகளை செய்ய வேண்டும் என்று பொருள்.

வேதம் மற்ற எல்லா சனாதன நூற்களின் சாராம்சம் பகவத் கீதை என்று ஆரிய நூற்களைப்  படித்தவர்கள் சொல்கிறார்கள்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் சனாதனம் என்றால் என்ன என்று!”

- இவை எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆய்வல்ல. சமூக வலைதளத்தில் விக்கிப்பீடியா என்பது போல கோரா (QUORA) என்று உண்டு!

இதில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைதான் இது!

எழுதியவர் இரமேஷ் கிருஷ்ணன் என்ற ஆய்வாளர் - எழுத்தாளர்!

தமிழ்நாடு ஆளுநர் திரு. இரவி அவர்கள் இந்த சனாதனத்தைத்தான் தூக்கிப் பிடிக்கிறார்.

தொலைக்காட்சியில் அரட்டை அடிக்கும் அய்யன்மார்களும்  விட்டுக் கொடுக்காமல் ஆளுநரைத் தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஒன்றை நாம் கவனிக்கத்தவறக் கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லாப் பார்ப்பனர்களும் நூலிழை பிறழாமல் ஒரே சுருதியில் பேசுகிறார்களே, அது எப்படி? 

கன்னியாகுமரியில் உள்ள ஒரு பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் காஷ்மீரில் இருக்கும் பார்ப்பானுக்கு நெரிகட்டும் என்பது இதுதான்.

அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், அதனை மிதித்து - அதன் மேல் நின்று தான் பிராமணன் என்றும், நம்மைப் பார்த்து சூத்திரன் என்றும் கூறும் துணிவு எப்படி வந்தது? சனாதனத்தைக் காக்க வேண்டும் என்று சொல்லுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கக் கூடிய ஒருவர் ஆளுநராக இருக்கலாமா? நீடிக்கலாமா?

திருச்சியில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் இந்த வினாவைத் தான் எழுப்பினார்.

இது தந்தைபெரியார் பிறந்த சுயமரியாதை மண். இங்குப் பூணூல் வாலை ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது! நடக்காது!!

- மின்சாரம்


வேற்றுமையின் வித்தே சனாதனம்!

“வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந் தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியவர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ் நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத் துத்தான் பொய்களை விதைத்தும் பரப்பி யும் வருகின்றனர். எனவே, நாம் சனாதனம் என்பதே வேற்றுமையின் வித்துதான் என்பது குறித்து விளக்க வேண்டியுள்ளோம்.

இதுபற்றி அறிந்து கொள்ளும் முன்னர் நாம் ஆரியப் புரட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய நூல்கள் யாவையுமே மனிதர்களிடையே வேறுபாட்டை விதைத்து வலியுறுத்துவனவாகவும் ஆரி யரை மட்டும் உயர்த்துவனவாகவும், பெண் களையும் பிறரையும் இழிவு படுத்துவன வாகவும் உள்ளன. அதே நேரம், இதற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கருதிய சிலரால் மிகுதியாகத் தமிழ்மொழியில் இருந்தும் பாலி மொழி முதலிய பிற மொழி களில் இருந்தும் நல்ல கருத்துகள் பல இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்டுள் ளன. ஆரியத்தை உயர்த்த எண்ணும் பொழுது இந்த இடைச்செருகல்களை ஆரியக் கருத்துகள்போல் கூறிப் பேசுவர். அவற்றில் இருந்து தமிழ்  முதலிய பிற மொழி இலக்கியங்கள் கடன் வாங்கியுள்ளன என்றும் பேசுவர். இதனை அறிஞர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமற்கிருத இலக்கியங்கள் பேரளவி னவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்க ளையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல் லது அவற்றின் அப்பட்டமான தழுவல் களை எழுதிவைத்துக் கொண்டு மூலங் களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர் - பேராசிரியை சுகுமாரி

வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன.   - வெண்டி தோனிகர் (Wendy Doniger)

வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது -  சில்வியன் இலவி (Sylvian Levi)

சமற்கிருத இலக்கியங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததா கவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால் தான் காலக் குழப் பம் ஏற்பட்டுள்ளது - ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! - தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

இவை சனாதன நூல்கள் பற்றிய சில கருத்துகளாகும்.

“இந்து மதம் அல்லது வேத மதம் என்றும் அழைக்கப்படும் சனாதன தர்மம் 1960853110 வருட வரலாற்றைக் கொண்டுள் ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் (மற்றும் நவீன பாகித்தான் பகுதி) இந்து மதத்தின் பல தடயங்களைக் கொண்டுள் ளது” என்று இல்லாத தொன்மையைக் கூறுவதுபோல் இழிவான கருத்துகளை மறைத்து இல்லாத சிறப்பையும் கூறுவது சமற்கிருதர்களின் பொய்யான வாதமாகும்.

எனவே, சனாதனவாதிகள் அறிந்தே சொல்லும் பொய்களையும் அதனை உண் மையென நம்பிப் போற்றி எழுதப்படும் தவறான தகவல்களையும் நம்பிச் சனா தனத்தைப் பாராட்டவும் வேண்டா; ஏற்க வும் வேண்டா.

தருமம் என்பது, அறியாதார்க்கு அவரின் பசி, வறுமை முதலான துயரத்தைப் போக்கத் தருவது. அறம் என்பது மனத்தில் மாசில்லாமல் இருப்பது. எனவே, நல் லொழுக்கங்களின்படி வாழ்வது.  சமற் கிருதத்தில் குறிப்பிடும் தருமம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். சனா தனத் தருமம் என்றால் சனாதன விதிமுறை கள் எனப்பொருள்; தமிழுடன் குழப்பிக் கொண்டு சனாதன அறம் என எண்ணக் கூடாது. ‘தருமம்’ என்றால் சிலர் கடமை என்றும் பொருள் கொள்வர். அங்ஙன மாயின்  சனாதனத் தருமம் என்றால் சனா தனக் கடமை  - ஜாதிகளுக்குரிய கடமைகள் - என்னும் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனாதனத் தருமம் என்றால் அவரவர் ஜாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்று வேதங்களில் விதிக்கப் பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். எனவே, ஜாதி வேற்றுமையை வகுத்துக்கொண்டு அதற்கேற்பக் கடமை களைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் வேற்றுமையில் ஒற்றுமையை உரைப்பதாகும்?

நால்வருணத்தை வலியுறுத்தி அவற் றிற்கான தனித்தனி விதிமுறைகளையும் கடமைகளையும் வலியுறுத்தும், இல்லாத ஜாதிகளைப் புகுத்தி அச்ஜாதிகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தைத்தான் உயர் அறம் எனப் பொய்யாகப் பரப்பி வருகின்றனர்.

சிலர், சங்க இலக்கியம் வலியுறுத்தும் அறக்கோட்பாடுகளும் சனாதன தருமம் கூறும் அறமும் ஒன்று;  திருக்குறளின் அறக்கருத்துகள் சனாதன தருமத்தை எதி ரொலிக்கின்றன என்றெல்லாம்  பொய்மூட் டையை அவிழ்த்து விடுகிறார்கள். சனாத னம் என்பது அறமே அல்ல. அவ்வாறிருக்க அதை அறம் என்பதும் அதைத் தமிழ் அறத்துடன் ஒப்பிட்டு இணையாகக் கூறு வதும் எங்ஙனம் ஏற்புடைத்து?

“கடமையைச் செய்! பயனை எதிர் பாராதே!” என்ற உயர்ந்த(!) உண்மையைக் கீதை உரைப்பதாக உலகெங்கும் பரப்பி வருகிறார்களே. அந்தப் பொய் ஒன்றே ஆரியத்தின் புரட்டை உணர வைக்கப் போதுமானது. கீதை கூறுவது, அவரவர் ஜாதிக்கேற்ற கடமையைச் செய்ய வேண் டும்.  ஒவ்வொரு ஜாதிக்கடமைகளுக்கும் தக்கப் பயனுண்டு. கீழ்ச்ஜாதிக்காரன் மேல்ஜாதிக்கடமைக்குரிய பயன் சிறப்பை அறிந்து அக்கடமையைச் செய்ய எண்ணக் கூடாது. அவன் ஜாதிக்குரிய கடமை தரும் பயனைத்தான் ஏற்க வேண்டும். இல்லை யேல் வரும் பிறவியில் துன்பம் விளையும் எனச் ஜாதிக்கேற்ற கடமைகளை அச்சுறுத்தி வலியுறுத்துகிறது.

சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள் என்றும் இந்துவியத்தைக் கூறுதற்கு இந்துக்களால் பயன்படுத்தப்படும் சொல் என்றும் கூறுகின்றனர்.

வேதங்களிலும் உடநிடதங்களிலும் மனுசுமிருதியிலும் கீதையிலும் சனாதனம் குறித்துக் கூறப்படுகின்றன.

நீண்ட தொலைவு பயணம் மேற் கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பது அருத்த சாத்திரம் கூறும் சனாதனம். 

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

(குறுந்தொகை : 49) என்று “எத்தனைப் பிறவிகள் ஆனாலும், நாமே கணவன் மனைவி” என்பது தமிழ் கூறும் இல்லற அறம். இரண்டும் ஒன்றாகுமா?

அருத்தசாத்திரத்தைப் பொறுத்தவரை சனாதனமாகிய குலத் தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது அது. அரச தருமம் நால்வகைப்பட்ட வரு ணாசிரமத் தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது.

இந்தச் சனாதனமும் நடுவுநிலைமை யையும் பிறன்மனை விழையாமையையும் வலியுறுத்தும் தமிழறமும் ஒன்றாகுமா?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.   (திருக்குறள் - 118)

என, யார், எவர் என்ற வேறுபாடின்றி, செல்வர்-ஏழை என்னும் செல்வப்பாகுபாடு, உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றெல்லாம் இல்லாத ஜாதிப்பாகுபாடு உயர்பதவியர் - கீழ்ப் பதவியர் என்ற பதவிவேறுபாடு என்று எப்பாகுபாடும் பார்க்காமல் சமமாக நோக்க வேண்டும் என்னும் தமிழறத்துடன் சனா தனத்தை ஒப்பிடத்தான் முடியுமா?

வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது (அருத்தசாத்தரம்) சனாதனம். பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்குறள்) என்கிறது தமிழறம். இரண்டும் எப்படி இணையாகும்?

நெஞ்சு பொறுக்காத வஞ்சகச் செயல் களைச் செய்ய வழி கூறுவதே (அருத்த சாத்திரம்) சனாதனம்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க் கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை. (திருக் 

குறள் 317)

என மனத்தளவிலும் வஞ்சகத்தை எண்ணக்கூடாது என்பது தமிழறம். இரண்டையும் ஒப்பிடத்தான் முடியுமா?

பெண்கள் இழிவானவர்கள்(மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை முதலியன) என்பது சனாதனம்.

“பெண்ணின் பெருந்தக்க யாவுள?” (திருக்குறள் 54) என்று பெண்மையைப் போற்றுவது தமிழறம். இரண்டையும் ஒப் பிடுவது முறையாகுமா?

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்”(மனு 2.214) எனப் பெண் களைக் காமப்பித்தர்களாகக் காட்டுவது சனாதனம். “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப் படுவனவற்றைக் கேட்பீராக” (மனு9.19) எனப் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்க ளாகக் கூறுவதும் சனாதனம்தான்.

“நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்கு உரியவாகும் என்ப” (தொல் காப்பியம், 1099) என்றும்

“செறிவும்  நிறைவும்  செம்மையும்  செப்பும்

அறிவும்   அருமையும்  பெண் பாலான”     (தொல்காப்பியம்,1155)

என்றும் பெண்ணைச் சிறப்பிப்பது தமிழறம். இரண்டும் எங்ஙனம் ஒன்றாகும்?

இவ்வாறு நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மக்களிடையே மாறுபாட்டையும் வேறு பாட்டையும் விதைத்து அல்லொழுக்கத் தைப் பரப்பும் சனாதனம் எவ்வாறு நம் மண்ணிற்கு ஏற்ற பண்பாடாகத் திகழ முடியும்? நம் மண்ணிற்கு என்றில்லை, உலகில் உள்ள யாவர்க்குமே மக்களில் ஒரு பகுதியினரைக் கடவுள் நிலையில் உயர்த்தி யும்  பிற பகுதியினரையும் பெண்களையும் இழிபிறப்பாகக் கூறும் சனாதனம் என்றுமே ஏற்றதாக அமையாது.

எனவே, தருமம் என்ற சொல்லில் மயங்கி சனாதனத்தைப் போற்றித் திரிய வேண்டா!தமிழறத்திலிருந்து தடம் புரள வேண்டா!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பி னும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

- இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி: அகரமுதல


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக