செவ்வாய், 23 மார்ச், 2021
ஒழுக்கக் கேடான திருமண மந்திரங்கள்
வெள்ளி, 12 மார்ச், 2021
மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்
மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்
மனுதர்ம சாஸ்திரம் என்கிற நூல் பார்ப்பனர் உயர்வுக்காகவும் மற்றவர் அதாவது திராவிடர் தாழ்வுக்காகவும் ஒரு சில பார்ப்பனர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகும். பொதுவாக எந்தவொரு நூலும் மக்களுக்கு நல்லொழுக்கம் போதிப்பதற்காக எழுதப்பட்டதைக் காணலாம். உதாரணமாக திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களாகும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துகள் எல்லா நாட்டினர், எல்லா மதத்தினருக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகும்.
ஆனால், மனுதர்ம சாஸ்திரம் பார்ப்பனர் உயர்வுக்காக மட்டும் எழுதப்பட்டது என்பதை அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு சுலோகத்தின் மூலமும் அறியலாம். பொதுவாக எல்லா நாட்டினரும் எல்லா மதத்தினரும் நல்லொழுக்கம், பொய் சொல்லாமை, களவு/திருட்டு செய்யாமை/ போன்ற சமூக தீய செயல் செய்யாமையை வற்புறுத்துவர். (ஆனால் நடைமுறை வேறு).
திருட்டு என்பது பிறர் பொருளை உடையவருக்குத் தெரியாமல் எடுப்பதாகும். ஆனால், கொள்ளை என்பது பிறர் பொருளை உடையவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலாத்காரமாக கவருவதாகும். மனுதர்ம சாஸ்திரத்தில் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக பிற வர்ணத்தாரிடம் திருட்டு, கொள்ளை போன்றவை செய்யலாம் என்று பார்ப்பனர்களுக்கு மட்டும் உரிமை (Licence) வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சில:
மனுதர்ம சாஸ்திரம்: 11 ஆவது அத்தியாயம் சுலோகம் 12 அதிக பசு முதலியவற்றால் செல்வமுடையவனாயும் யாகம் செய்யாதவனாயும் சோமபானம் பண்ணாதவனாயும் இருக்கிற வைசியன் வீட்டிலிருந்து கேட்டுக் கொடாவிடில் வலிமை செய்தாவது, களவு செய்தாவது அந்த யாகத்திற்கு வேண்டிய திரவியத்தை யாகம் செய்வோன் கொண்டு வரலாம். (இதில் யாகம் செய்யாதவன் என்றால் சுயமரியாதைக்காரன். சோமபானம் பண்ணாதவன் என்றால் மது அருந்தாதவன். அதாவது எவ்விதத் தீயொழுக்கம் இல்லாத வைசியன் வீட்டில் பார்ப்பனன் கொள்ளை அடிக்கலாம் என்பதாகும்.)
சுலோகம் 13: அவ்வித வைசியனில்லாவிடில் யாகத்திற்கு இரண்டு மூன்று அல்லது அதிக அங்கங்குறைந்தாலும் செல்வமுள்ள சூத்திரன் வீட்டிலிருந்து யதேஷ்டமாக யோசனையின்றி கேளாமலும் வலிமையினால் கொண்டு வரலாம். ஏனென்றால், அவனுக்கு ஒரு யாகத்திலும் சம்பந்தமில்லை அல்லவா. (அதாவது யாகத்திற்கும் சூத்திரனுக்கும் /திராவிடனுக்கும் சம்பந்தமில்லை என்று ஒப்புக் கொண்டபோதும் பார்ப்பனன் யாகம் செய்வதற்காக உடல் ஊனமுற்றவனாக சூத்திரன் இருந்தாலும் அவனைக் கேட்காமல் அவன் வீட்டில் கொள்ளை அடிக்கலாம்.)
சுலோகம் 15: மேற்சொல்லிய யாகத்திற்காக வேண்டிய பொருளைக் கேட்டும் கொடாவிடில் வலிமை செய்தாவது களவு செய்தாவது அவன் வீட்டிலிருந்து கொண்டு வரலாம். இப்படிச் செய்தால் தருமம் வளரும்.
சுலோகம் 16: தான தருமம் செய்யாதவனிடத்தினின்றும் ஒரு தினத்திற்கு போதுமான பொருளைக் களவு செய்தாவது கொண்டு வரலாம்.
சுலோகம் 17: யாகம் செய்யாதவன் தானியம், களம், கழனி, வீடு இவற்றுள் எவ்விடத்தில் அகப்படுகிறதோ, அவ்விடத்தினின்றும் எடுத்துக் கொள்ளலாம். உடையவன் ஏன் திருடினாய் என்று கேட்டால் தான் செய்யும் யாகாதி தருமகாரியத்தை அவனுக்குச் சொல்ல வேண்டும்.
சுலோகம் 18: சத்திரியனுக்கு இவ்வித ஆபத்து நேரிட்டாலும் அவன் ஒருபோதும் பிராமணன் பொருளை அபகரிக்கக்கூடாது. (ஆக சத்திரியன் யாகம் செய்ய பிராமணன் தவிர்த்து மற்ற வர்ணத்தாரிடம் கொள்ளையடிக்கலாம்).
சுலோகம் 19: தான் யாகம் செய்யாமலிருந்தாலும் அவன் யாக முதலிய தருமஞ் செய்யாத அசத்தனிடத்திலிருந்த பொருளை வாங்கியாவது அபகரித்தாவது யாகம் செய்கிற சத்புருஷாளுக்கு பொருள்காரனையும் யாகம் செய்கிறவனையும் கரையேற்றி வைக்கிறான். (அதாவது பார்ப்பன புரோகிதன் பயன் அடைகிறான்.)
யாகம் என்பது பார்ப்பனரின் சுயநலத்திற்காகவும் உயர்வுக்காகவும் மட்டும் நடத்தப்படுகிறது என்பது தெரிந்தோ தெரியாமலோ அடுத்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சுலோகம் 21: தரும சிந்தையுள்ள அரசன் இவ்விதமாக திருடி வந்து யாக காரியஞ் செய்கிற பிராமணனைத் தண்டிக்கக்கூடாது. அரசன் மூடத்தன்மையால் பிராமணன் பசியினால் துன்பத்தை அடைகிறான்.
சுலோகம் 22: ஆதலால் அரசன் அந்தப் பிராமணன் குடும்பத்தையும் தரும நடையையும் அவன் ஓதின வேதத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்து தன் அரண்மனையிலிருந்து அவனுக்குப் போதுமான ஜீவனவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
இதிலிருந்து அறியப்படுவது 1) யாகம் என்பது புரட்டு. அது மக்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதல்ல.
2) யாகம் என்பது பார்ப்பனரின் சுயநலத்திற்காகச் செய்யப்படுவதாகும்.
3) யாகத்தின் பேரால் பார்ப்பனர் பிறவர்ணத்தார் பொருள்களையும் சொத்துகளையும் திருடவோ கொள்ளையடிக்கவோ செய்யலாம்.
4) அரசன் (தற்பொழுது ஆட்சியாளர்) பார்ப்பனர் யாகத்தின் பேரால் செய்யும் திருட்டு, கொள்ளை போன்றவற்றைக் கண்டு கொள்ளக்கூடாது பார்ப்பானைத் தண்டிக்கக்கூடாது.
5) அரசன் (ஆட்சியாளர்) மூடத்தனத்தினால் பார்ப்பனர் பசியினால் துன்பத்தையடைகிறான். எனவே, பார்ப்பனன் பசியைப் போக்க அவன் யாகம் செய்கிறான்.
சமீப காலங்களில் அவ்வப்பொழுது பார்ப்பனர் மழை வேண்டியும், உலக ஷேமத்திற்காகவும் அதாவது உலக நன்மைக்காகவும் யாகம் செய்வதாகவும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதன் உண்மை நம்மவர்களுக்கு இப்பொழுது புரியும் என்று நம்புகிறேன்.
- ஆர்.டி. மூர்த்தி, புத்தூர்
சனி, 6 மார்ச், 2021
சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?
சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?
சொர்க்கலோகத்தில்... சோலை, விருந்து!
இவை எதையுமே கவனிக்காமல் புல் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தினரின் தோள்பட்டையில் ஒரு மஞ்சள் நிறத் துண்டுத் துணி தொங்கிற்று. அதில் நீல வர்ணத்தில் குடியேறியவர் என்று குறிக்கப்பட்டிருந்தது. முகங்களைப் பார்க்கும்போது பூலோகவாசிகளே என்பது நன்றாகத் தெரிந்தது. ஆமாம்.... பூலோகவாசிகள்தான்! கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர்... இன்னும் எல்லோரும் இருந்தனர். அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை. ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள். அது அவர்கள் சொர்க்க லோகத்துக்கு வந்த விதத்தைப் பற்றி!
என்னுடைய இரண்டு கண்களையும் குத்திக் கொண்ட பிறகுதான் கடவுள் கருணை கிடைத்தது - கண்ணப்ப நாயனார்
என் குழந்தையைத் துண்டு போட்டுக் கறி சமைத்து, அதன் தலையை நானும் என் மனைவியுமே இடித்து துவையல் அரைத்து அன்னமிட்டேன். அதற்குப் பிறகுதான் சிவபெருமான் சித்தமிரங்கி என்னை ஆட்கொண்டார்
- சிறுத்தொண்டர்
அக்கினியிலே முழுகி தீட்டையெல்லாம் பொசுக்கிக் கொன்றுவிட்டு பொன்மேனியோடு வா என்று தீக்ஷிதர் கனவிலே தீனதயாபரன் சொல்லிவிட்டார். அந்தத் தியாகத்தை நான் செய்த பிறகுதான் தில்லையப்பனின் திருப்பாத தரிசனம் கிடைத்தது.
- நந்தனார்
உடலில் உள்ள சதைகளையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, ரத்தத்தை வடித்துவிட்டு, எலும்பு உருவமாக _ பேய் மாதிரி தலைகீழாக நடந்து வரச் சொன்னார் பீடுடைய பெருமான்! அந்தக் கஷ்டத்திற்கு ஆளான பிறகுதான் கைலாசபதி கடாக்ஷம் பாலித்தார்
- காரைக்கால் அம்மையார்
ஆலயங்களில் புல் செதுக்கினேன்; அந்தணராம் திருஞான சம்பந்தரின் பல்லக்குத் தூக்கினேன். அதையெல்லாம் செய்த பிறகுதான் அமரர் உலகம் வர அனுமதி கிடைத்தது, எனக்கு ! - அப்பர்
மனிதனுக்கு மானம் பெரிது; அந்த மானத்தை அடகுவைத்து, என் மனைவியை பரமசிவனோடு பள்ளியறைக்கு அனுப்பி வைத்தேன், அந்தத் தியாகத்தின் பரிசாகத்தான் இந்தப் பரமண்டல வாசத்தைப் பரமன் எனக்கு அளித்தார்
- இயற்பகை நாயனார்
என் முழங்கையைச் சந்தனக் கட்டைக்குப் பதிலாக தேய்த்து பகவத் பூசை பண்ணினேன். அதன் பலன்தான் எனக்குச் சொர்க்கலோகம்
- மூர்த்திநாயனார்
அப்பப்பா! இந்த லோகத்திற்கு வர எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறேன் தெரியுமா? சிவனைத் தூஷித்தவர்களையெல்லாம் மழுவால் வதைத்துக் கொன்று போட்டேன். அந்தப் பிணங்களையெல்லாம் பிறை சூடும் பித்தரிடம் காட்டிய பிறகுதான் இந்தப் பேறு கிட்டியது! - எறிபத்த நாயனார்
சிவனுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக.... பக்தியின் காரணமாக என் தாய், தந்தை, என் ஆசை மனைவி மற்றும்... நெல்லைத் தின்ற தாயின் பாலைக் குடித்திருக்கும் என்பதற்காக... என் அன்புக் குழந்தை ஆகியோரைக் கொடுவாளால் வீசிக் கொலைபுரிந்தேன். அதன் பிறகுதான் என் குற்றத்தை மன்னித்து கொன்றையணி செஞ்சடையார் காட்சியளித்தார்
- கோட்புலி நாயனார்
இப்படிப் பக்தர்கள் தங்கள் தியாகங்களைக் கூறிப் பெருமிதங்கொண்டனர். பெருமூச்சு விட்டனர்.
அப்போது ஒரு திடீர்க் குரல் கேட்டு பேச வாயெடுத்த கண்ணப்பர் நிறுத்திவிட்டார். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு வாலிபம் மறைந்த மங்கையின் தோளில் கைபோட்டபடி, ஒரு பூணூல்கார அய்யர் நின்றார். எல்லா பக்த சிரோன்மணிகளும் அவர் வாயைப் பார்த்தபடி இருந்தனர். அந்த அய்யர் பேசினார்; நீங்கள் எல்லாம் மோட்ச லோகம் வர பெரிய பெரிய தியாகம் செய்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறீர்களே, அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.
சொர்க்கலோகம் வர, சொல்ல முடியாத தொல்லைகள் அனுபவித்ததாகச் சொல்கிறீர்களே. இதோ பாருங்கள், நான் எந்தவிதமான சிரமமும் இன்றி சிவலோகம் வந்திருக்கிறேன். (பக்தர்கள் ஆச்சரியத்தால் திகைத்து விட்டார்கள்)
ஆச்சரியப்படாதீர்கள் அன்பர்களே! இதோ என் மேல் சாய்ந்து கொண்டிருப்பது என் தாய்.
(கோட்புலி நாயனார் குறுக்கிட்டு) உமது தாயாரா?
ஆமாம் என் தாய்! என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், அழகுத் தொட்டிலில் இட்டு ஆராரோ பாடிய தாய். இந்தத் தாயாரை நான் என் தாரமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல; பூலோகத்திலேயே இந்த அன்னை என் ஆசை நாயகியாக இருந்தாள். இவள் என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள். நான் இவளுக்குக் கட்டிலில் இன்பமூட்டினேன். மாதாவை மனைவி யாக்குவது மகாபாபமல்லவா என்பீர்கள். இதைவிட மகாபாபமாக எங்களை மஞ்சத்தில் கண்டுவிட்ட என் தகப்பனாரை உடனே கொன்று போட்டேன். உனக்கா சொர்க்கவாசல் திறந்தது என்று கேட்கிறீர்களா? ஆமாம்; எனக்குத்தான் சொர்க்கம் சுலபத்தில் வழிவிட்டது. அரகரமகாதேவா என்றேன். அம்மையை அணைத்தபடி அப்பன் ரிடபவாகன ரூபராய் அருள் மழை பொழிந்தான். ஆனந்தமாக சொர்க்க பூமிக்கு வந்துவிட்டேன்.
நாயன்மார்கள் ஸ்தம்பித்து விட்டார்கள். காரைக்கால் அம்மை, இது உண்மையா? என்றார்.
சந்தேகம் வேறா? அய்யமிருந்தால் திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தைப் பாருங்கள் என்றார் அய்யர்.
பாபியாகிய உமக்கு மாத்திரம் இவ்வளவு சுலபத்தில் சொர்க்கலோக வாழ்வு கிடைக்கக் காரணம் என்ன? என்று கேட்டார் சிறுத்தொண்டர்.
இதுதான் காரணம் என்று தன் பூணூலை உருவிக் காட்டினார் அய்யர்.
(கலைஞரின் குட்டிக்கதைகள் என்னும் நூலிலிருந்து)
புதன், 3 மார்ச், 2021
மனுதர்மத்தில் மாமிசம்
மனுதர்மத்தில் மாமிசம்
மனுதர்ம சாத்திரம் மூன்றாவது அத்தியாயம் சுலோகம் 266 - இல் இறந்தவர்களுக்கு எந்தவிதமான திதி/தெவசம் செய்தால் இறந்தவர் எவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது பின்வருமாறு:
சுலோகம்
266 பிதுர்களுக்கு எவ்விதமாய் சிரார்த்தஞ் செய்தால் நெடுநாள் வரையிலும், எவ்விதமாகச் செய்தால் முடிவில்லாத காலம் வரையிலும், திருப்தியுண்டாகுமோ அது முழுமையுஞ் சொல்லுகிறேன்.
267. திலம் - செந்நெல்லரிசி, உளுந்து, ஜலம், கிழங்கு, பழம் இவைகளினால் சிரார்த்தம் செய்தால் மனிதர்களின் பிதுர்கள் ஒரு மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.
268. பாடீநசம் முதலிய மச்ச மாமிசத்தால் செய்தால் இரண்டு மாதம் வரையிலும், அரிணமென்கிற மான் மாமிசத்தால் செய்தால் மூன்று மாதம் வரையிலும் செம்மறியாட்டு மாமிசத்தால் செய்தால் நான்கு மாதம் வரையிலும் பட்சிகளின் மாமிசத்தால் செய்தால் அய்ந்து மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.
269. வெள்ளாட்டின் மாமிசத்தால் செய்தால் ஆறுமாதம் வரையிலும், புள்ளிமான் மாமிசத்தால் செய்தால் ஏழுமாதம் வரையிலும், கறுப்பு மான் மாமிசத்தால் செய்தால் எட்டு மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.
270. முள்ளம்பன்றி காட்டெருமைக்கடா இவைகளின் மாமிசத்தால் செய்தால் பத்து மாதம் வரையிலும், முயல், ஆமை இவைகளின் மாமிசத்தால் செய்தால் பதினொரு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.
271. வார்த்தீசனமென்னும் கிழவெள்ளாட்டுக்கிடாவின் மாமிசத்தால் செய்தால் பன்னிரெண்டு வருடம் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.
272. அந்தந்தக் காலத்திலுண்டான கறியமுது முள்ளுள்ள வாளை மச்சமும் கட்க மிருகமும் சிவந்த ஆடு இவைகளின் மாமிசங்களாலும் காட்டில் முளைத்திருக்கும் செந்நெல்லின் அரிசியினாலும் செய்தால் அளவற்ற நாள் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.
மேற்படி சுலோகங்கள் மூலமாகத் தெரியவருவது என்னவென்றால், மனுதர்ம சாத்திரமும், இதர வேதங்களும் காட்டுமிராண்டி காலத்தில் சில காட்டு மிராண்டிகளால் அன்றைய ஆரியர்களின் பழக்கவழக்கங்களைக் கொண்டு அன்றைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது என்று தெளிவாகிறது. பார்ப்பனர்கள் தென்னாட்டிற்கு_ தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது இங்குள்ள தமிழர்களின் சைவ உணவு வகைகளைத் தெரிந்து கொண்டு பிதுர்களுக்கு_இறந்து போன முன்னோர்களுக்கு சிரார்த்தம்/திதி/தெவசம் போன்றவை செய்யலாயினர். மனுவினால் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மனுதர்ம சாத்திரத்தில் கண்டுள்ள மேற்படி சுலோகங்கள்படி பார்ப்பனர்கள் நடப்பதில்லை. மனுதர்ம சாத்திரம் பின் எப்பொழுதாவது திருத்தப்பட்டதாகவும், சொல்லப்படவில்லை.
இதிலிருந்து தெரிவது:-
1) பார்ப்பனர்கள் கூறுவது போல மனுதர்ம சாத்திரத்தை முக்காலும் உணர்ந்த ஞானியோ, கடவுளோ உண்டாக்கவில்லை என்பது தெளிவாகிறது.
2) அது எக்காலத்திற்கும் உகந்ததல்ல.
3) அது பார்ப்பனர்களாலேயே கடைப்பிடிக்க முடியாதது.
4. அய்யா பெரியார் சொன்னது போல், அது மனிதன் அறிவு வளர்ச்சி இல்லாமல் காட்டுமிராண்டியாய் இருந்த காலத்தில் ஒரு சில பார்ப்பனக் காட்டுமிராண்டிகளால் பார்ப்பனர் நன்மைக்கும் மேன்மைக்கும் ஏற்படுத்தப்பட்டதாகும்.
- ஆர்.டி.மூர்த்தி
திருச்சி-17
சபரிமலை அய்யப்பன் யார்?
சபரிமலை அய்யப்பன் யார்?
சபரிமலையில் இருப்பது அய்யானார்தான் என்ற அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியாரின் ஆதாரப்பூர்வக் கருத்தை, சென்ற இதழில் படித்திருப்பீர்கள். அய்யப்பனை சாஸ்தா என்று பக்தர்கள் அழைத்துவருகின்றனர். அந்த சாஸ்தா யார் என்பது பற்றியும், அது எப்படி அய்யனார் என்று மருவியது என்பது குறித்தும் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறும் செய்திகள் இந்த இதழில்...
சாத்தனார் \ அய்யனார்
சாத்தன், அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தா என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது அமரகோசம் நாமலிங்கானுசாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, சாஸ்தா என்னும் சொல்லின் திரிபாகிய சாத்தன் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிய வருகின்றது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் சாத்தனார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் சிலப்பதிகாரக் கதைத் தலைவனுடைய தந்தை மாசாத்துவன் என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷூவாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், பெருந்தலைச் சாத்தனார், மோசி சாத்தனார், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர்மா சாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலான சங்க காலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த சாத்தன் என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.
கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோயில்களுக்குச் சாஸ்தாவு குடி என்றும், சாஸ்தாவேஸ்வரம் என்றும், சாஸ்தாவு கள என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவையாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் சாத்தன் காவுகள் என்று பெயர். (காவு=கா=தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்). பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ஆராமம் (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு அய்யப்பன் என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கி வருகின்றது.
காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. சாஸ்தா, அல்லது சாத்தன்என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் அய்யன், அல்லது அய்யனார் என்பது. அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
பிற்காலத்தில், சாத்தனார், அய்யனார், அரிஹரபுத்திரர் என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.
சாத்தன், அல்லது சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு எனவரும் அடியில், பாசண்டச் சாத்தன் என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு: பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்ற வனாதலின், மகாசாத்திர னென்பது அவனுக்குப் பெயராயிற்று. இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, சூடாமணி நிகண்டும்,
அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் என்று கூறுகின்றது. அருங்கலை நாயகன் என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர் என்று எழுதியிருப்பது (படம் அ) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் சாஸ்தா, அல்லது மகா சாஸ்தா என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். லலிதாவிஸ்தார என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் சாஸ்தா என்னும் பெயர் உள்ளதுதான். (படம் ஆ காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் காமாட்சிலீலாப் பிரபாவம் என்னும் காமாக்ஷி விலாசத்தில், காமக்கோட்டப் பிரபாவத்தில், தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது.* சாஸ்தா என்பவரும் புத்தர் என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.
சாஸ்தா என்னும் புத்தருடைய கோயில்களை அய்யனார் கோயில்கள் என்றும், சாதவாகனன் கோயில்கள் என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் தருமராஜா கோயில்கள் என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. தருமன், அல்லது தருமராசன் என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் தருமன் என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் தர்மராஜன் என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் போதி என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் தருமராஜா, அல்லது தருமதாகூர் என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.
இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தத் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. தருமராஜா என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, தாராதேவி என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமரா-ஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப் பட்டதுபோலும்.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் வரதராசர் கோயில், திருவரங்கர் கோயில், வேங்கடேசர் கோயில் முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் கபாலீஸ்வரர் கோயில், தியாகராசர் கோயில், சொக்கலிங்கர் கோயில் முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் தருமராசா கோயில், சாத்தனார் கோயில், முனீஸ்வரர் கோயில் என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
(மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் நூலிலிருந்து).