புதன், 20 ஜூன், 2018

வெள்ளையரா - பார்ப்பனக் கொள்ளையரா?

மின்சாரம்


நாட்டில் பெண்கள் மதிக்கப்படாததற்குக் கடந்த கால அந்நியர் ஆட்சியே காரணம். பெண்களை சமூகம் தற்போது காணும் போக்கு வெட்கக் கேடானது. நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம்!

-இவ்வாறு கூறியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர்.  குடியரசுத் துணைத் தலைவர் மாண்பமை  வெங்கையா நாயுடு அவர்கள் ஆவார்கள்.

இதில் இரண்டு பிரச்சினைகள் துள்ளி விளையாடுகின்றன.

ஒன்று - பெண்கள் மதிக்கப்படாததற்கு காரணம் அந்நியர் ஆட்சியே.

இரண்டாவது - நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம் என்பதாகும்.

மிகப்பெரிய பதவி ஆசனத்தில் இப்படி சொல்லியிருக்கும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் காரணமாகவே அவர் இப்படி பேசி இருக்கிறார்.

வெள்ளைக்காரர்கள் செய்ததெல்லாம் என்ன?

கணவன் இறந்தவுடன் அவன் உடலோடு மனைவியை எரித்த சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தது தான் அவன் செய்த பாவச் செயலா?

வெள்ளைக்கார கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது. அது கூடாது - அடாத செயல் என்று துணை குடியரசுத் தலைவர் கூறவும் போகிறாரா?

இதில் என்ன கொடுமை தெரியுமா? வில்லியம் பெண்டிங் இந்த மனிதநேய பெருஞ் செயலைச் செய்த போது மாண்பமை வெங் கய்யா நாயுடு அவர்களால் பெருமையோடு குறிப்பிடப்படும் அந்த முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

பார்ப்பனக் குழு ஒன்று இந்திய இராணு வத்தில் கமாண்டர் சீஃப் சர் சார்லஸ் நேப்பியரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கை - திரு. வெங்கையா நாயுடு அவர்கள் பெருமைப்படத்தக்கதாக இல்லை.

தேசிய பழக்க வழக்கங்களில் தலையிடு வதில்லை என்று பிரிட்டீஷ் அரசு (விக்டோரியா மகாராணியின் அறிக்கை) உறுதியளித்துள்ள நிலையில், அதற்கு மாறாக சதியை ஒழிப்பது சரியல்ல, என்பதுதான் அந்தப் பார்ப்பனக்குழு வைத்த கோரிக்கை.

அதற்கு சர் சார்லஸ் அளித்த பதில் நாகரீகமான முறையில் ஆயிரம் முறைக் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்த தற்குச் சமமானதாகும். என்னுடைய தேசத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது. பெண்களை உயிருடன் எரிக்கும் ஆண்களை தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக்கம்.

நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான்  நடக்கிறோம் என்று நளினமாகத் தெரிவித்தார்.

ஆதாரம்: தி வீக்- அக்டோபர் 11-17 (1987)

வெள்ளைக்காரர்கள் செய்த இன்னொரு பொல்லாத காரியம் என்ன தெரியுமா? அதுதான் குழந்தைத் திருமணங்களை ஒழித்தது.

வெள்ளைக்காரன் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் கொடியதா? அல்லது துணைக் குடியரசுத் தலைவர் கூறும் நமது பெருமைக்குரிய முன்னோர்கள் கூச்சல் போட்டது பெருமைக்குரியதா?

அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ் கேதைரின் மேயோ என்பவர் இந்தியாவிற்கு வந்து சுற்றிப் பார்த்து மதர் இந்தியா என்ற நூலை எழுதினார்.

எதையும் அவர் கற்பனையாக எழுதிட வில்லை; நேரில் கண்டதைத்தான் எழுதினார். மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் சென்று அவர் பார்த்த அந்த கோரக்காட்சியை எடுத்துரைக்கிறார். படிக்கும் போதே இதயத்தி லிருந்து இரத்தம் உடைத்துக் கிளம்புகிறது.

இனி சென்னை ராஜதானியை எடுத்துக் கொள்வோம்.  வட இந்தியாவிலுள்ள பல பாகங்களை விட சென்னை ராஜதானியில் நடக்கும் சம்பவம் மிக்க பரிதாபகரமானது. இங்கு பெண்களைப் புருஷர்கள் மிகவும் கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றனர். ஒரு தனிப்பட்ட மாகாணத்தைப் பற்றி நாம் பேசுவானேன்? இந்தியாவின் எப்பாகத்திற்குச் சென்றாலும் பெண்களின் விஷயம் இது போலேவே தானிருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு பிரபல ஆங்கிலேய ஸ்திரீ வைத்தி யரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர் என்னிடம் கூறியதாவது: இந்தியப் பெண்களில் உடல் வலிமையுள்ளவர்களைப் பார்ப்ப தென்பது, மிகவும் துர்லபம். அதிகமாக சிற்றின்பத்திலீடு படுவதும், புருஷர்கள்  பெண்கள் விஷயத்தில் கொஞ்சமும் இரக்கமின்றி நடந்து கொள்வதுமே இதற்குக் காரணம். புருஷர்களில் பெரும்பாலோருக்கு மேகரோக மிருக்கின்றது.  ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவைகளுக்கு அதிக மாகவே புருஷர்கள் பெண்களுடன் புணர்ச்சி செய்கிறார்கள்.

சென்ற 33 வருடங்களுக்கு முன்பு, பெண்களுக்கு  விவாகம் செய்யும்  வயதை உயர்த்த வேண்டுமென்று இந்திய சட்ட சபையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்ட பொழுது, இந்தியாவிலிருக்கும் என்போன்ற பல ஆங்கில ஸ்திரீ வைத்தியர்கள் சேர்ந்து பெண்கள் இந்நாட்டில் படும் துயரத்தை வைசிராய்க்கு ஒரு மகஜர் மூலமாக தெரியப்படுத்தினோம். அம்மகஜரில் குறிப் பிட்ட சில விஷயங்களை இங்கு எடுத்துக் கூறுவது பொருந்தும். சில ஆஸ்பத்திரிகளில் அடியில் குறிப்பிட்ட விவரப்படி பெண்கள், வியாதியினால் துன்பப்பட்டதாகக் கணக் கிடப்பட்டிருக்கிறது.

9 வயது: கல்யாணமான மறுநாள் இடதுகால் எலும்பு பிசகி விட்டது, கருப்பப்பை கவிழ்ந்து விட்டது. உள்ளே புண்.

10 வயது: நிற்கக் கூட சக்தியில்லை. பெண் குறியில் புண்ணுண்டாகி, ரத்தம் பெருகி ஒழுகுகின்றது.

9 வயது: ஸ்திரீ அவயத்தில் அதிக ரணம். ரண சிகிச்சை செய்வதுகூட முடியாமலாய் விட்டது. இவளைத் தவிர இவளுடைய புருஷனுக்கு இரண்டு மனைவிகள் - அவர்கள் உயிருடனிருக்கின்றார்கள். இப்பெண் ஆங்கிலக் கல்வி கற்றவள்.

7 வயது: சிற்றின்ப விஷயத்தில் புருஷ னுடைய கொடுமை பொறுக்க முடியாமல் உயிர் துறந்தாள்.

10 வயது: ஆஸ்பத்திரிக்கு வரும் பொழுது நடக்கக் கூட சக்தியில்லை. கல்யாணம் ஆனதிலிருந்து  அவளால் எழுந்திருந்து நிற்கவும் சக்தியில்லாது போய்விட்டது.

இம்மாதிரி பல உதாரணங்கள் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது 1891ஆம் வருடத்தில் மற்றொரு முறை அம்மசோதா இந்திய சட்டசபை யாலோசனைக்கு வந்த பொழுது, மீண்டும் ஆங்கில ஸ்திரீ வைத்தி யர்கள் ஒரு மகஜரைத் தயாரித்து வைசிராய்க்கு அனுப்பினர். 1891ஆம்  வருடத்திலிருந் ததற்கும் 1922ஆம் வருடத்தில் நடந்திருப்ப தற்கும்  அதிக  வித்தியாசமில்லை. 1891ஆம் வருடத்திலிருந்ததை விட 1922ஆம் வருடத் தில் அதிகமான பால்ய விவாகங்கள்  நடந்திருக்கின்றன  வென்பதை எவரும் மறுக்க முடியாது மேயோவின் கற்று இது. வெள்ளைக்காரன் வராமல் இருந்தி ருந்தால் இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும்?

ஒரு கணம் சிந்திக்கட்டும் துணைக் குடியரசுத் தலைவர்.

நமது பாரம்பரியப்படி பெண்களை மதிப்போம்  என்கிறாரே  - என்ன நமது பாரம்பரியம். கீதையைத் தேசிய நூலாக  அறிவிக்க வேண்டும் என்கிறார்களே - அந்தக் கீதை பெண்களைப் பற்றி என்ன கூறுகிறது?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் (கீதை, அத்தியாயம் 9, சுலோகம் 32) என்கிறதே கீதை - இதுதான் நமது பெருமை மிக்கப் பாரம்பரியமா?

(இந்து மதத்தில் பெண்களின் நிலை பெட்டிச் செய்தி. தனியே காண்க)

வெகு தூரக் காலத்திற்குச் செல்வானேன்? மாண்பமை  வெங்கையா நாயுடு  அவர்களின் ஆர்.எஸ்.எஸ்.  குருநாதர்  திருவாளர் மோகன்பாகவத்துக்கு பெண்களைப் பற்றிய மதிப்பீடு என்ன? மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனுக்கு இன்பம் தரவேண்டும். இது பெண்மையின் கடமை. இந்தக் கடமையி லிருந்து மனைவி விலகி விட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது; விலக்கிவிட  வேண்டும் என்று இந்தூர்  பொதுக்கூட்டத்தில் (1-7-2014) ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன்பாகவத் பேசினாரா இல்லையா?

பெரும்பதவியில் இருக்கும் வெங்கையா நாயுடு அவர்கள் சிந்திக்கட்டும்!

-  விடுதலை ஞாயிறு மலர், 5.5.18

ஸ்மிருதி ஆசிரியர்கள்

பெண்ணை ருது காலத்திற்கு முன்பு தக்க வரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தையும், மனைவியை ருது காலத்தில் புணராத கணவனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.


மனு - அத்தியாயம் 9

குலம், நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபம் உடையவனாயும் இருக்கிற வனுக்குத் தனது பெண் 8 வயதுக்கு உட்பட்டு இருந்தாலும் விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்


மனு - அத்தியாயம் 9

ஒரு புருஷன் 18 வயதில் கிரமப்படி 7 வயதுள்ள பெண்ணை விவாகம் செய்து கொள்ள வேண்டும்


- தேவலர்

30 வயதுள்ள புருஷன் 10வயதுள்ள ஸ்தீரியை விவாகம் செய்ய வேண்டும்                                   - பிரகஸ்பதி


25 வயதுள்ள துவிஜன் (இரு பிறப்பாளன்) 8 வயதுள்ள கன்னிகையை விவாகம் செய்ய வேண்டும். 30 வயதுக்குட் பட்டவன் 9 வயது ரோகிணியை விவாகம் செய்ய வேண்டும். 10 வயதுக்குப் பிறகு அவள் காந்தாரி ஆகின்றாள். தீர்க்காயுசை வேண்டுகின்றவன் அப்பேர்ப்பட்ட பெண்ணை அவள் பிரவிடை ஆவதற்கு (பூப்பு எய்துவதற்கு) முன்னாள் விவாகம் செய்யக்கடவன்


- ஆஸ்வலாயனர்

8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் சுவர்க்க லோகத்தையும், 9வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் பிரம்ம லோகத்தையும் அடைகின்றான். அதற்கு மேற்பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகின்றான்.


- பராசரர்

மற்றும் ஒரு தர்ம சாஸ்திரம் தன் மகளுக்கு முதல் மாத விலக்கு ஏற்படுவதற்கு முன் மணம் முடித்து வைக்காத தந்தை கருச்சிதைவு செய்த பாவத்தை அடைகின்றான் என்று கூறுகின்றது.


நாற்பத்தெட்டியாண்டு பிரம்மச்சரியங்காத்தாற்குப் பன்னீராட்டை பிராயத்தாளை அணிகலன் அணிவித்துக் கொடுப்பது. கொடாவிடின் ஓரிரு துக்காட்சி ஒருவனைச் சாராது கழிந்த விடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது; அதனை அறநிலை என்பது என்று களவியல் உரைகாரர் கூறுகின்றார்.


இராமகிருஷ்ண பரமஹம்சர்


இராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா மணியம்மையார் ஆவார். அந்த அம்மையாருக்கு 5 வயது இருக்கும்போதே, கி.பி.1858இல் இராமகிருஷ்ணருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றார்.


காந்தியார்  - கஸ்தூரிபாய் மணம்


அதிகம் போவானேன்! காந்தியாருக்கும் கஸ்தூரி பாய்க்கும் இவர்களுக்கு 7 வயதாக இருக்கும்போதே திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் 13ஆம் வயதில் மணம் நடந்தேறி இருக்கிறது.


காந்தியார் அவர்களே பிற்காலத்தில் தமது சரித்திரத்தை எழுதும் போது அதில் 13ஆவது வயதில் எனக்குத் திருமணம் ஆயிற்று என்பதை எழுதும்போதே எனது உள்ளம் மிகவும் துன்பப்படுகின்றது. இன்று நான் என் கண் முன்னால் பன்னிரண்டு, பதின்மூன்று வயதுக் குழந்தைகளைப் பார்க்கின்றேன். என் திருமணத்தைப் பற்றிய ஞாபகம் வரும் போது என்மீதே எனக்கு இரக்கம் தோன்றுகின்றது. என்னைப் போன்ற கெட்ட நிலைக்கு ஆளாகாமல் அவர்கள் இதுவரை இருக்கின்றார்களே என்பதற்காக அவர் விருப்பம் உண்டா கின்றது. 13 வயதில் நடந்த திருமணத்தைச் சரி என்று ஸ்தாபிக்க நீதி பொருந்திய எந்தவிதத் தர்க்கமும் என் மண்டையில் நுழைய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


பால்மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் திருமணம்


இக்குழந்தை மணமானது பிற்காலத்தில் எல்லா வகுப்பாரிடமும் பரவி எவ்வளவு மோசமான நிலைக்கு வந்து விட்டதென்றால் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் கூடத் திருமணம் செய்து வைக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விட்டு விட்டது.


1921ஆம் ஆண்டில் நமது நாட்டு ஜனத் தொகைக் கணக் கெடுப்பின் படி, கீழ்க்காணும் புள்ளி விவரங்கள்  தெரியவரு கின்றன. ஒரு வயதுக்குக் குறைந்த வயது முதல்  5 வயது வரை உள்ள பெண்கள் 20,369 பேர்களுக்கும், 5 முதல் 10 வயது வரையில் உள்ள பெண்கள் 1,23,472 பேர்களுக்கும், 10 வயது முதல் 15 வயது வரையில் உள்ள பெண்கள் 11,76.063 பேர் களுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


(வரலாற்றில் குழந்தை - 14.8.71, திருமணம் புலவர் கோ.இமயவரம்பன்-  உண்மை - 14.8.1971 )

ஆஜ்மீர் - மெர்வாராத் தொகுதியில் இருந்து டில்லிச் சட்டசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ராய் சாகிப், ஹரி பிலாஸ் சாரதா (Rai Sahib, Hari bilas sarada) என்னும் அறிஞர் 1-2-1927இல் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயதுச் சீர்திருத்த மசோதா என்பதாக ஒரு திட்டம் இந்தியச் சட்டச்சபையின் ஆலோசனைக்குத் கொண்டு வந்து பிரேரேபித்தார்.


வைதீகப் பார்ப்பனர்களும் மத வெறியர்களும் கடுமை யாக எதிர்க்கலானார்கள். 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம், சம்மத வயதுக்கமிட்டி (The Age Consent Committee) சிம்லாவில் கூடியது. பச்சை வருணாசிரமவாதிகளான எம்.கே.ஆச்சாரியார், திரு.டி.வி. கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் எல்லாம் சிம்லாவில் இருந்த அரசாங்கத்தின்   உள்நாட்டு மெம்பரைச் (Home Member) சந்தித்துக் குழந்தை மணச்சட்டம் கொண்டு வருவதைத் தடைசெய்ய வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டனர்.


சங்கராச்சாரியின் தந்தி


அப்போது இருந்த சங்கராச்சாரியர் 12 வயதுக்குப் பிறகு பெண்களுக்குத் திருமணம் செய்தால் மதமே கெட்டுப் போகும் என்று வைசிராய்க்குத் தந்தி கொடுக்கச் செய்தார்


-  விடுதலை ஞாயிறு மலர், 5.5.18

இந்து மதத்தில் பெண்கள் நிலை

பெண்களின் அந்தஸ்து பற்றி


1.  நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது, ஒரு வேலைக்காரனாகவாவது, ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2. மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடைய வர்களோ அவர்களைச் சேரும்.

3. போதாயனர் கூறுவது: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும். - (சுந்தர காண்டம் 5)

5.  மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக்காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக்காரர்களாகவோ இருக்கும் படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்ச மென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப் பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடை யவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாத வனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். க்ஷி, 154)

7. மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக் கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள்- எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.

(அத்தியாயம் மிஙீ, 22)

8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

-  விடுதலை ஞாயிறு மலர், 5.5.18