மின்சாரம்
"விடுதலை" கேள்விகளுக்கு விடை எங்கே? எங்கே??
(1) கலாச்சார சீரழிவு, ஒழுக்கக் கேடு இவற்றின் ஒட்டு மொத்த குத்தகைக் காடாகக் காட்சியளிக்கும் இந்துக் கடவுள்களின் ஒழுக்கக் கேட்டை பட்டியல் போட்டுக் காட்டியதே 'விடுதலை' அதற்குத் 'துக்ளக்' விடையளிக்காதது ஏன்? விடை இல்லையென்றால் 'துக்ளக்' கூட்டம் ஏற்றுக்கொண்டதாகக் கருதலாமா?
(2) இந்து மதம் குறித்து விவேகானந்தர் கூறிய கருத்தை எடுத்துக் காட்டியிருந்தோமே அந்தப் பக்கம் ஏன் செல்லவில்லை?
(3) கோயில் கருவறைகளுக்குள் பார்ப்பன அர்ச்சகர்கள், குருக்கள் அடித்த சல்லாபங்களை எடுத்துக் காட்டினோமே ஏன் அவற்றை எதிர் கொள்ளவில்லை?
(4) பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை பா.ஜ.க.வினராலேயே நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களை அடுக்கினோமே - அதற்கெல்லாம் திராவிட இயக்கம்தான் காரணமா என்று கேட்டோமே மவுனம் ஏன்?
(5) இந்து மத சாமியார்களின் இலட்சணங்களைத் தோலுரித்துக் காட்டியதே "விடுதலை" - ஏன் விவாதிக்கவில்லை 'துக்ளக்'?
(6) காம சூத்திரம் எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதில் எங்கே?
(7) சிற்றின்பம் என்பதுதான் இந்து மதத்தின் ஆணி வேராக உள்ளது என்ற கார்ல் மார்க்சின் எடுத்துக்காட்டுக்கு என்ன பதில்?
(8) 'எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்த லீலைகளைத்தான் நானும் செய்தேன்' என்று நீதிமன்றத்திலேயே ஆசாராம் சாமியார் சொன்னது - அந்த சாமியாரை மன அமைதிக்காக அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததையெல்லாம் படத்தோடு எடுத்துப் போட்டுக் காட்டினோமே - கண் மூடிக் கொண்டது ஏன் 'துக்ளக்'?
(9) பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்று திருமுருக கிருபானந்த வாரியார் - ஏன் 'துக்ளக்' இதழும் (கார்ட்டூனோடு) கூறியதை எடுத்துக்காட்டினோமே ஏன் பதில் இல்லை? குருமூர்த்தி அய்யர்வாளே ஓடாமல் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
('துக்ளக்'கில் வெளிவந்த பதில் கட்டுரையில் விடுதலையில் எழுதியிருந்த
இக்கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லையே ஏன்? ஏன்??)
"கூறுகெட்ட குருமூர்த்திகளே கேட்பீர்!" என்று 'விடுதலை'யில் எழுதப்பட்ட மின்சாரத்தின் மூன்று கட்டுரைகளுக்குப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு இந்த வார 'துக்ளக்'கில் (16.5.2018 பக்கம் 22,23) "சேற்றைவாரி இறைப்பது 'துக்ளக்'கா? 'விடுதலை'யா? என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களில் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது - வரவேற்கிறோம்.
ஆனால் 'விடுதலை' எழுப்பிய வினாக்களுக்குத்தான் விடையில்லை.
"பெரியாரின் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (மிஸீtமீறீறீமீநீtuணீறீ றிக்ஷீஷீஜீமீக்ஷீtஹ்) பெரியாரு டையது அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் வாழ்ந்த சாருவாக முனி, குறிப்பாக ஆன்மிக மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சமஸ்கிருதத்தில் என்ன கூறினாரோ அதைத்தான் பெரியார் இங்கு தமிழில் கூறினார் என்ற கருத்தை 'விடுதலை' மறுக்கவில்லை" என்கிறது 'துக்ளக்'.
இப்பொழுது பிரச்சினை கடவுள் மறுப்பு குறித்து, வேத எதிர்ப்புகள் குறித்து யார் சொல்லியிருந்தாலும் அதனை 'துக்ளக்' ஏற்றுக் கொள்கிறதா என்பதுதான் முதல் கேள்வி.
தந்தை பெரியார் கூறும் இந்தக் கருத்துகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாத கையறு நிலையில், பார்ப்பனீயத்துக்கே உரித்தான திசை திருப்பும் திரிநூல் புத்தியோடு இந்தக் கருத்தையெல்லாம் பெரியாராக சொல்லவில்லை; இன்னொருவர் சொன்னதைத்தான் பெரியார் சொல்லுகிறார் என்று சொல்லுவது தான் 'துக்ளக்'கின் குற்றச்சாட்டா?
அப்படிப் பார்க்கப் போனால் வேத எதிர்ப்பு என்பது புத்தர் காலத்தில் அவரால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட ஒன்றுதான். புத்தர் எதிர்த்தார் என்பதற்காக பெரியாரும் எதிர்க்கக் கூடாதா? அப்படி எதிர்த்தால் பெரியார் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை; புத்தர் சொன்னதைத்தான் பெரியாரும் சொன்னார் என்று சொல்லப் போகிறதா துக்ளக்?
புத்தர் சொன்னாலும் சரி, சாருவாகனர் கூறினாலும் சரி, பெரியார் சொன்னாலும் சரி - அவர்கள் எல்லோருமே வேதங்களை வேர் வரை சென்று பந்தாடியிருக்கிறார்களே - அதற்கு என்ன பதில் பார்ப்பனர்களே என்பதுதான் நம் கேள்வி.
சாருவாகன் சொன்னால் ஏற்போம், பெரியார் சொன் னால் ஏற்க மாட்டோம் என்ற இரட்டை அளவு கோலை வைத்துள்ளனரா?
சரி, 'துக்ளக்' வழிக்கே வருவோம். சாருவாக முனி கூறியதைத்தான் பெரியாரும் கூறியிருக்கிறார் - சொந்த சரக்கல்ல பெரியாருடையது என்று காட்டி ஓர் அற்ப சந்தோஷம் அடையும் 'துக்ளக்'கைக் கேட்கிறோம்.
அப்படியானால் பெரியார் கருத்துகளை வரவேற்க வேண்டியதுதானே! எதற்காகக் கோணல் கழி வெட்ட வேண்டும்? பெரியாரால்தான் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று எழுத வேண்டும்? பெரியார் கருத்து எப்போது போற்றப்படத் துவங்கியதோ அப்போதே கலாச்சார சீரழிவு துவங்கிவிட்டது என்று எழுதுவானேன்?
அப்படி எழுதப் போய்தானே 'விடுதலை'க்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
'துக்ளக்'குக்கு ஏனிந்த தடுமாற்றம்?
'துக்ளக்' ஹிந்துத்துவா ஆதரவாளர்களையும் எதிர்த்து எழுதியதுண்டாம். அதன் காரணமாக அவர்களின் கடுமை யான விமர்சனத்துக்கு 'துக்ளக்' ஆளானதும் உண்டாம். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது? 'துக்ளக்' ஒன்றும் பிஜேபி - சங்பரிவார்களுக்கு ஆதரவான இதழ் இல்லை என்பதற்காகத்தானே இப்படி எழுதுகிறது!
'பா.ஜ.க.வைப் பிடித்த சனி' என்ற தலைப்பில் 'துக்ளக்'கில் வெளிவந்த கட்டுரைக்கு பா.ஜ.க. ஆதர வாளர்கள் கடுமையாகக் கண்டித்து முகநூலில் கருத்துகளை வெளியிட் டுள்ளதை அதற்கு ஆதாரமாகக் காட்டு கிறது 'துக்ளக்'.
உண்மைதான், 'துக்ளக்' கண்டித்து எழுதியது உண்மைதான். ஆனால் அந்தக் கண்டிப்பு எத்தன்மையது என்பதுதான் முக்கியமாகும்.
பிஜேபியின் எச். ராஜாவும், எஸ்.வி. சேகரும் வெளியிட்டு வரும் கருத்து களுக்கு கட்சிகளைக் கடந்து பொதுத் தளத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், அதனால் பிஜேபிக்குக் கெட்ட பெயர், சேதாரம் வரும்; ஆகையால், பிஜேபிக்குப் பாதகம் வந்து விடக் கூடாது என்னும் அதீத அக்கறையில் எழுதப்பட்ட கட்டுரை தானே தவிர பிஜேபிக்கு எதிரான ஒன்றல்ல.
தன் குழந்தைக்கு மாந்தம் வந்துவிடக் கூடாது என்று பரிதவிக்கும் தாயின் உணர்வு கொண்டது என்பதுதானே - அந்தக் கட்டுரை?
'துக்ளக்' - இது போன்ற இடங்களில் எல்லாம் இந்த இனஉணர்வோடு தான் எழுதியது என்பதிலிருந்தே பிஜேபியின்மீது அதற்கு இருக்கும் பந்த பாசத்தைப் புரிந்து கொள்ளலாம். அதுபோல மற்ற கட்சிகளுக்கு எழுதுமா?
'துக்ளக்'குக்கு ஒரு முக்கியமான கேள்வி உண்டு
இந்தியாவில் தோன்றிய சமூக சீர்திருத்தக்காரர்கள் எல்லோரும் புத்தர் முதல், ஜோதி பாபுலே, நாராயணகுரு, வேமண்ணா, அண்ணல் அம்பேத்கர், சித்தர்கள், தந்தை பெரியார் அனைவருமே பார்ப்பனர் எதிர்ப்பாளர்களாக - பார்ப்பனீயத்தை சல்லி சல்லியாகப் பதம் பார்க்கிறார்களே ஏன் - ஏன்?
ஏன் அக்கிரகார பாரதிகூட தண்டச் சோறுண்ணும் பார்ப்பனர் என்று தோலுரிக்கிறாரே ஏன் - ஏன்?
மூடங் கெடாதோர் சிகைநூல்
முதற் கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன்றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம்பர நூற் சிகையறுத்தல் நன்றே
என்று திருமந்திரத்தில்... (பாடல் எண் 241)
பார்ப்பானின் உச்சிக்குடுமியையும், பூணூலையும் அறுக்க வேண்டும் என்று திருமூலர் கூடத்தான் சொல்லி யிருக்கிறார்.
குருமூர்த்தி அய்யர்களுக்கு குன்றிமணி அளவுக்கு மூளையிருந்தால் பார்ப்பனர்களைப் பெரியார் மட்டும் சாடவில்லை - வேதங்களைப் பெரியார் மட்டும் மட்டை இரண்டு கீற்றாகக் கிழிக்கவில்லை சாருவாகனனும் கிழித்தார் என்று எடுத்துக்காட்டுவாரா?
புத்தரின் ஆரிய வேத வேள்வி மறுப்பின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பனீயம் புத்தரையும் மகா விஷ்ணுவின் அவதாரம் என்று சொன்னது போலவே சாரு வாகனனின் வேத மறுப்பு - இறை மறுப்புக் கொள்கையை இந்து மதத்தின் ஒரு அம்சம் என்றும் ஆக்கிக் கொண்டனர். ஆதி சங்கரர் சாருவாகனின் கருத்தை வேத மதத்தின் உட்பொருள் என்று மாற்றியவர் ஆயிற்றே!
வேத மறுப்புத் தத்துவத்தைக் கூறிய வரையே வேத மதத்தின் உட்பொருள் என்று கூறும் இவர்களின் அறிவு நாண யத்தை - இந்த வெட்கம் கெட்ட நிலையை எப்படி மதிப்பிடுவது! எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் வெட்கத்தைப் பெருக்கி அவர்களின் கழுத்தில் மாலையாக சூட்ட லாம்!
அதே நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சாருவாகனனின் கூற்றுகளை உள்ளடக்கி சாருவாக மதம் என்று கலைக் களஞ்சியமும் சரி, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவும் சரி, அபிதான சிந்தாமணி யும் சரி ஒரே மாதிரியாக சொல்லுகிறதே - அந்த மாதிரி எந்த ஒரு மதத்தையும் தந்தை பெரியார் உருவாக்கவில்லை. மதம் என்பதை முற்றிலும் மறுக்கும் முழுப் பகுத்தறிவு நிலைதான் தந்தை பெரியாருடையது.
"'துக்ளக்' (13.9.2017) இதழில் 'சாமியார்களின் பின்னால் அலையும் மூடர்கள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையைப் படித்தபோது, 1944க்கு முந்தைய பெரியார் ஈ.வெ.ரா.வின் 'குடிஅரசு' இதழைப் படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.
1944க்கு முன் பெரியார் ஈ.வெ.ரா. தம் மீது முத்துசாமி வல்லத்தரசு, ஜீவானந்தம் உள்ளிட்டோர் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளை அப்படியே வெளியிட்டு, 'குடிஅரசு' இதழில் எழுதிய விளக்கங்களை நான் படித்திருக்கிறேன். அது போலவே 'முரசொலி' இதழில் ஸ்டாலின் வெளிப் படுத்திய குற்றச்சாட்டை 'துக்ளக்' இதழில் வெளியிட்டு குருமூர்த்தி விளக்கத்தைப் படித்தபோது, அதுவும் என் ஞாபகத்திற்கு வந்தது. (1944க்கு முந்தைய 'குடிஅரசு' திசையில் 'துக்ளக்')".
இவ்வாறு 'துக்ளக்' எழுத்தாளர் எழுதியிருக்கிறார். அப்பாடி இப்பொழுதாவது பெரியாரைப் பற்றிப் பாராட்ட 'துக்ளக்'குக்கு மனம் வந்ததற்காக ஒரு பாராட்டு.
இந்த இடத்தில் மறக்காமல் குறிப்பிட வேண்டிய ஒன்று இருக்கிறது. 'சாமியார் பின்னால் அலையும் மூடர்கள்' என்னும் 'துக்ளக்' கட்டுரையில் (மறைந்த) காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பற்றிக் குறிப்பிடாதது ஏன்? பெண்கள் விஷயத்தில் அவர் எவ்வளவு மோசம் என்று கொலையுண்ட சங்கரராமனின் (அவர் சாதாரண மானவரல்லர் - சங்கர மடத்திலேயே இருந்தவர்தான் - காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளரும்கூட) கடிதங்கள் ஒரு பெரிய பட்டியலையே வெளிப்படுத்துகிறதே!
அதை விட்டுத் தள்ளுங்கள் - பிரபல எழுத்தாளரும், அக்கரகாரப் பெண்மணியுமாகிய அனுராதா ரமணன் என்ன கூறினார்? சங்கர மடத்தின் சார்பில் பத்திரிக்கை நடத்த வேண்டும் என்பதுபற்றி ஆலோசிப்பதற்காக அழைத்து, தன் கையைப் பிடித்து இழுத்தவர்தான் ஜெயேந்திரர் என்று கண்ணீரும் கம்பலையுமாக தொலைக் காட்சிகளில் கதறினாரே! இதில் என்ன கொடுமை என்றால், அந்த அனுராதா ரமணன் மீதே பொய்யான தகவல் கூறித் திசை திருப்பியவர் தான் இந்தக் குருமூர்த்தி அய்யர் ('துக்ளக்' 29.12.2014 பக்கம் 34).
குருமூர்த்தியின் பொய்யுரையை நார் நாராக கிழித்துப் பேட்டி கொடுத்தார் அந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் (குமுதம் 10.1.2005 பக்கம் 61-63).
ஈ.வெ.ரா. அவர்களைப் போலவே, "சாருவாக முனி அப்படிக் கூறியதற்காக யாரும் அவரைத் தூற்றவில்லை" என்று 'துக்ளக்' கட்டுரையில் வெளிவந்துள்ள கருத்தானது, யாருடைய கருத்துக்காகவும் அவரைத் தூற்றாமல் அறிவுப் பூர்வமாகவே விமர்சிக்க வேண்டும் என்பதை உணர்த் துவது ஆகாதா என்று, தன் தோளைத் தட்டிக் கொள்கிறது 'துக்ளக்'.
இந்தக் கட்டுரையாளர் 'துக்ளக்' இதழைத் தொடர்ந்து படிக்காதவர்போல் தோன்றுகிறது.
கடந்த 2.5.2018 நாளிட்ட 'துக்ளக்'கைப் படித்துப் பார்க்கட்டும்.
"கலாச்சார சீரழிவை சமுதாய சீர்திருத்த அரசியல் இயக்கமாக பெரியாரும், அவருடைய சீடர்களும் ஆக்கினார்களாம்."
எவ்வளவுப் பெரிய அபாண்டம் - பெரியார் ஜாதி யையும், தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டதும், மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததும், பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்ததும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து சமர்க்களம் கண்டதும், ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தி தனிச் சொத்து என்று பரப்புரை செய்ததெல்லாம் கலாச்சார சீரழிவுகளா?
சீரழிவு என்பதற்கு இவர்கள் தனியாக அகராதி தயாரித்து வைத்துள்ளார்களா?
எத்தனை முறை சிறைச்சாலைகளைச் சந்தித்தார். நாட்டு நலனுக்காக!
தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தத்தை அய்.நா.வே வியந்து பாராட்டி விருது வழங்கிய வரலாறெல்லாம் இந்த வன்கணாளர்களுக்குத் தெரியாதா?
ஒழுக்கச் சீரழிவின் ஒட்டு மொத்த உருவமாக இருப்பது இந்துமதம்தான் என்பதற்கு இந்து மதக் கடவுள்களின் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கி இந்துக் கடவுள்களின் ஆபாசக் கிடங்குத்தனமானவற்றைப் பட்டியலிட்டது "விடுதலை" (27.4.2018).
இந்துக் கடவுள்களின் விபச்சாரத்தனத்தை, கற்பழிப்புப் படலத்தை எடுத்துச் சொல்லுவது தான் கலாச்சார சீரழிவு என்று 'துக்ளக்' கருதுகிறதோ!
இந்து மதத்தில் கடவுள்களும், கடவுளச்சிகளும், அதன் பரிவார்களும் நடந்து கொண்ட ஆபாசங்களை, ஒழுக்கக் கேடுகளை எடுத்து ஒரு நீண்ட பட்டியலையே வெளி யிட்டது "விடுதலை". அதற்கு மறுப்போ, பதிலோ சொல்ல முடியாத நிலையில் 'துக்ளக்' கட்டுரையாளர் மிக மிக சாமர்த்தியமாக என்ன எழுதுகிறார்?
"'விடுதலை' கட்டுரையில் புராணங்களில் உள்ள 'ஆபாசங்கள்' தொடர்பான தகவல்கள் வெளி வந்துள்ளன. அவை தொடர்பான எனது பதிவுகளுக்கு, இதுவரை அறிவுப் பூர்வமாக 'விடுதலை'யிலிருந்து மறுப்பு ஏதும் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன்" என்று பூடகமாக எழுதுகிறதே துக்ளக். எப்பொழுது எழுதினார் - எந்தத் தேதி 'துக்ளக்'கில் வெளி வந்தது என்று குறிப்பிட வேண்டாமா?
எடுத்துக்காட்டுகளோ, தேதிகளோ ஆதாரங்களோ குறிப்பிட்டு எழுதுவது என்பது 'துக்ளக்'கின் அகராதியில் கிடையாது - இதையும் அந்தப் பட்டியலில் வைக்க வேண்டியதுதான்.
பார்வதியும், சிவனும் நூறு தேவ வருட காலம் புணர்ந் தனர் என்பதற்கெல்லாம் 'துக்ளக்' எழுத்தாளர் அறிவுப் பூர்வமான விளக்கத்தை வைத்துள்ளாராம். அப்படி விளக் கினால் அது இதைவிட ஆபாசமாகத் தானிருக்க முடியும்.
கடைசியில் 'துக்ளக்' கட்டுரை தந்தை பெரியாரிடம் சரண் அடைந்து விட்டதே!
"பொதுத் தொண்டருக்கான இலக்கணம், பொது மக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும், பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்காத ஆனால் காரியம் சாதிக்கும் போராட்டம் ஆகிய இரண்டிலும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அமைப்புகள் எல்லாம் ஈ.வெ.ரா. செயல்பூர்வமாக முன்னிறுத்திய வழியில் பயணித்தால் மட்டுமே தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி சாத்தியமாகும்" என்ற குறிப்புரையோடு முடித்திருக்கிறார் துக்ளக் கட்டுரையாளர்.
தொடக்கத்திலும், இடையிலும் எதை எதையோ எழுதிவிட்டு, கடைசிக் கடைசியாக பொதுத் தொண்ட ருக்கான இலக்கணம் மக்களுக்கு, பொதுச் சொத்துக்கு, பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்காத ஆனால் காரியம் சாதிக்கும் போராட்டம் இரண்டிலும் பெரியாரைப் பின்பற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவா வகையறாக்களுக்கு அறிவுறுத்தியுள்ள 'துக்ளக்' கட்டுரையாளரைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார்மீது குற்றப் பத்திரிக்கை படிக்க ஆரம் பித்து கடைசியில் தந்தை பெரியாரிடமே சரணடைந்து விட்டதே துக்ளக்!
இனி மேலாவது இந்த ஒப்பற்ற, உன்னத வழிகாட்டும் தலைவரைக் கொச்சைப்படுத்தி எழுத மாட்டார்கள் என்று நம்புவோமாக!
- விடுதலை நாளேடு, 12.5.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக