திங்கள், 5 பிப்ரவரி, 2018

பிறப்பின் ரகசியம் - ஒரு அசிங்கம்...!


இரா.கண்ணிமை

இந்து சமயப் புராணங்களில் மனிதப்பிறப்பு - மற்றுமுள்ள உயிர்களின் உற்பத்தி வரலாற்றை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தி சொல்லியிருக்கிறது. “பராபரமாகிய பரமேசுவரன் தராதலம் படைக்கத் தாம் நினைத்தருளிப் பராபரத்தில் பரந்தோன்றி, பரத்தில் சிவன் தோன்றி, சிவனில் சக்தி தோன்றி, சக்தியில் நாதந்தோன்றி, நாதத்தில் விந்து தோன்றி, விந்துவில் சதா சிவன் தோன்றி, சதாசிவத்தில் மாயேசுவரன் தோன்றி, மாயேசுவரனில் ருத்திரன் தோன்றி, ருத்திரனில் விஷ்ணு தோன்றி, விஷ்ணுவில் பிரம்மா தோன்றி, பிரம்மாவில் ஆகாயம் தோன்றி, ஆகா யத்தில் வாயு தோன்றி, வாயுவில் அக்கினி தோன்றி அப்பு தோன்றி, அப்புவில் பிருதுவி தோன்றி, பிருதுவியில் அன்னந்தோன்றி, அன்னத்தில் நாய், மிருகம், பட்சி தாவரங்கள் அனைத்தும் தோன்றிற்று”.

கடவுள் உலகத்தை உண்டாக்க நினைத்து, கடவுளால் உலகம் உண்டாக்கப்பட்டு அதில் சிவன் உண்டாக்கப்பட்டு - சிவனிலிருந்து சக்தி என்பவள் உண்டாக்கப்பட்டாள் என்பதாம்.

‘சக்தியில் நாதந்தோன்றி, நாதத்தில் விந்து தோன்றி, விந்துவில் சதாசிவன் தோன்றி, சதாசிவனில் மாயேசுவரன் தோன்றி, மாயேசுவரனில் ருத்திரன் தோன்றி, ருத்திரனில் விஷ்ணு தோன்றி, விஷ்ணுவில் பிரம்மா தோன்றி’ - என்பதற்கு பொருள் என்னவென்றால் (சிவன் - சக்தி) கணவனும் மனைவியும் கூடியதே நாதமாம். அந்த நாதமென்கின்ற வித்தாகிய விந்து விழுந்து கர்பமுண்டாகி அந்த விந்து விழுந்த கர்பத்திலிருந்து சதாசிவன் பிறந்தான். சதாசிவனுக்கு மாயேசுவரன் பிறந்தான். சதாசிவனுக்கு மாயேசுவரனும் - அவனுக்கு விஷ்ணுவும், விஷ்ணுவுக்கு பிரம்மாவும் பிறந்தான் என்பதாம்.

இதை எடுத்துக் கொண்டால் - புராணத்தின்படி அய்ந்து தலைமுறைகளை மாத்திரம் காட்டியிருக்கிறது. பராபரத்தில் (தெய்வத்தால்) பரந்தோன்றி (வானமும் பூமியும் உண்டாகி) பரத்தில் சிவன் தோன்றி, சிவனில் சக்தி தோன்றி என்பதில் - சிவனை ஆதியில் உண்டான மனிதனாய் எண்ணாது - தேவனாகவும், சக்தியை ஆதி மனுசியாய் எண்ணாது - தேவியாகவும் சொல்லப் பட்டுள்ளது. இவ்வித மாறுபாடான கதையைப் பார்த்தால் - இது முற்றிலும் கற்பனையான சிதைவெனக் கூறலாம். அதுவல்லாது - மற்ற பிறப்புகளும் கூட பொய்யெனப் பிதற்றப் பட்டதாய் தெரிகிறது.

மற்றொரு கதையில் காசிபப் பிரம்மாவின் பதின்மூன்று மனைவிகளில் முதல் மனைவியான அதிதி, முப்பத்து முக்கோடி தேவர்களையும், விஷ்ணுவையும் பெற்ற தாகவும், மூன்றாவது மனைவி மதி மனிதர்களைப் பெற்றதாகவும், அப்படியே பதின்மூன்று மனைவிகளும் - அனைத்து உயிர்களையும் தங்கள் யோனி வழியாய்ப் பெற்றதாகவும் காணப்படுகிறது. (இராமாயண வசனம் - ஆரண்ய காண்டம் - சடாயுவைக் காணுதல் 114ஆம் பக்கம்)

பிரம்மாவின் முகத்தினின்று பிராம ணனும், தோளிலிருந்து சத்திரியனும், தொடை யிலிருந்து வைசியனும், பாதங்களிலிருந்து சூத்திரனும் பிறந்ததாய் யசுர்வேதம் அத்தியாயம் 31-11 இலும் அதர்வனவேதம் அத்தியாயம் 19-66இலும் எழுதப்பட்டுள்ளது. இவையன்றி ரிக்வேதத்தில் மனிதப் பிறப்பை பலவகையாய் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று:

சுலோகம்

“வேதா நானுபயம் ஜனாப்ரவோ பன்னியா...

........................................................ அமிர்த் பந்தவ.

(ரிக் மண்டலம் 10, சூதகம் 72இல் காண்க)

பொருள்:

பிரம்மஸ்பதியாகிய தச்சன், தேவதை களைச் செய்தான். தேவதைகளுடைய முன்யுகத்தில் இம்மையினின்றும், உண்மை தோன்றின. அவ்வுண்மையினின்றும், திசை களும், பிறகு உத்தானபதமும் தோன்றின. அதனின்று பூமி உண்டாயிற்று. தக்சன் என்பவன் தோன்றினான். அவனிடத்தி லிருந்து அதிதி, தோன்றினாள் - அதிதியி னின்றும் இறவாத்தேவர்கள் வந்தனர் என்பதாம்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது - இயற்கையின் கூற்றுக்கு மாறாய் - நம்பத்தகாத பெருங்குழப்பத்தையும் உண் டாக்கும் - இந்துமதப் பொய்ப் புராணத்தின் புளுகு தெற்றன விளங்குகிறது.

ஒரு நாள் சிவன், தன் பெருவிரலின் நகத்தால் சக்தியின் தொடையில் கீற, சக்தி வலி பொறுக்க முடியாமல் ‘ஓ’ என  கத்தினாளாம். அதற்கு சிவன் ‘அ’ என்று கூற - பிறகு சக்தி ‘உ’ என்றாளாம். இவ்வாறு இம்மூன்றெழுத்துப் பிறந்ததாம். (ஓ-அ-உ) இந்த ஓ! என்ற எழுத்திற்கு, ஓம்பு நாதமென்றும், அண்டமென்றும், உடல்மேல் தோலென்றும் விநாயகனென்றும், மூல மென்றும், ஊமை எழுத்து - சக்தி எழுத் தென்றும், விந்தெழுத்தென்றும் பொருளாம். ‘அ’ என்னும் எழுத்து சிவனைக் குறிக்கும். ‘உ’ எழுத்து சக்தியைக் குறிக்கும். பிறகு ஒரு பொருளில் ‘(அ)’ இலக்கம் எட்டும் ‘(உ)’ இலக்கம் இரண்டும் ஆகும். ஆக எட்டும் இரண்டும் பத்தாகும். இதுவே திருமந்திரமாம்.

வெண்பா

ஓவெழுத்தே வித்தாய் உகாரமதில் வேரோடி

ஆ,வெழுத்திலே முளைத்து - அஞ்சுகப்பாய்

பூத்ததே வானம் புவனம் பதினாலுகங்

காய்த்ததே பஞ்சாட்சரம்.

ஓ - எழுத்தான சக்தியே வித்தாகி ‘உ’ எழுத்தான சிவனில் கலந்துகூடி ‘ஆ’ எழுத்தான சக்தியில் பஞ்சகர்த்தாக்கள் என்னும் அய்வரும் உண்டாகி இந்த அய்வராலும் மனு மக்கள் பெருகினார்கள் என்பதாம்.

தெளிவான நடையின்றி - விளங்கிக் கொள்ள முடியாத வகையில் - மானுடப் பிறப்பைப் பற்றியும் உயிர்கள் - உலகம் உண்டானது பற்றியும் இந்துப் புராண - மனுதர்ம சாத்திரங்கள் எழுதி வைத்துள் ளதை நம்பி - நம்மக்கள் - மோசம் போனார் கள். ஆதாம், ஏவாள் கதையெல்லாம் - இதற்கு எம்மட்டு?

உயிர்த் தோற்றம் - உலகம் தோன்றிய வரலாற்றையெல்லாம் படித்த பிறகுமா - அறிவு ஜீவிகள் அசிங்கமான - பிறப்பின் பித்தலாட்டப் பொய்யுரைகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

- விடுதலை ஞாயிறு மலர்,20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக