சனி, 24 பிப்ரவரி, 2018

வடமொழி ஆரியரின் வஞ்சகப் பார்வை

பண்டைய ஈரானியர்களும் (பாரசீகர்) பண்டைய இந்திய ஆரியர்களும் ஒரு காலத்தில் ஒன்றாக வாழ்ந்து 'இந்தோ ஈரானியச் சமுதாயமாக உருவானார்கள் என்பதை மொழியியல் ஒப்புமையும் பிற அறிவியல் தடயங்களும் காட்டுகின்றன. பண்டைய ஈரானியர்களின் வேதமாகிய ‘அவெஸ்தாவும்’, பண்டைய இந்திய ஆரியர்களின் வேதமாகிய ‘இருக்கும்’, (ரிக் வேதம்) ஒன்றுக்கொன்று நெருங்கியவை களாக இருப்பதும், அவ்விரு சாராரின் மத நம்பிக்கைகளிலும் பழக்க வழக்கங்களிலும் மிகுந்த ஒப்புமை  காணப்படுவதும் இக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன. இவ்விரண்டு இனத்தவரின் மூதாதையர் சேர்ந்து வாழ்ந்த நிலப்பரப்பு ‘நடு ஆசியா' என்று அறிஞர் சிலரும், ‘தெற்கு உருசியா’வில் உள்ள புல்வெளி நிலம் என்று வேறு பிற அறிஞரும் கூறுவர்.

இவ்விடங்களில் இருந்து புறப்பட்ட இவ்விரு சாரரில் ஈரானியர்கள் மட்டும் ஈரானில் தங்கினர். அவருடன் புறப்பட்டு வந்த இந்திய ஆரியர் ஈரான் வழியாக வந்து அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவுக்குள் குடியேறினர். வேறு சில ஆரியக் குழுவினர்' ஆப்கானித்தான் வழியாக வந்து இந்தியாவுக்குள் குடியேறினர். இக்காலம் கி.மு. 2000 ஆண்டாக இருக்கலாம் என்று அறிஞர் அனைவரும் கருதுகின்றனர். இவ்வாறு தங்கள் கால்கடைகளுக்கு வேண்டிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பண்டைய ஆரியர்கள் அப்போது சிந்து வெளியில் வளமாக வாழ்ந்து கொண் டிருந்த பழங்குடி மக்களுடனும் திராவிட மக்களுடனும் இடைவிடாது போரிட்டு அவர்களை வென்றனர். அம்மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டும் காட்டிக் கொடுப்பவர்களுக்குத் தரவேண்டி யதைத் தந்து, சேர்த்துக்கொண்டும் அம் மக்களுக்குள்ளே கலகமூட்டிப் பிளவு படுத்தியும், தம் வெற்றியை எளிதாக்கிக் கொண்டனர். பிறகு அவர்களுடன் கலந்துற வாடியும் அடிமைப்படுத்தியும், அவர்களின் அளவற்ற செல்வங்களைக் கொள்ளை யடித்தும், அவர்களின் கோட்டைக் கொத் தளங்களை இடித்துத் தரைமட்டமாக்கியும் அவர்களின் நகரங்களைத் தீயிட்டு எரித்தும், அவர்களின் அணைக் கட்டுகளை இடித்தும், பாழ்படுத்திய ஆரிய வெறியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை ஆரியவர்த்தம் என்னும் வட இந்தியா முழுவதிலும் விரிவுபடுத்தினர்.

‘ஆரிய’ என்னும் சொல், அரி என்னும் சொல்லுடன் தொடர்புடையது. வேத காலத்தில் அந்தச் சொல்லுக்கு வெளி நாட்டான், ‘வேற்றான்’ என்று பொருள் கூறப் பட்டது. வேற்றாருடன் இணைந்தவன், அவர்களுக்கு இணக்கமானவன் என்றும் பொருள் கூறப்பட்டது. பிற்காலத்தில்தான் ‘நற்குடியில் பிறந்தவன்’ என்று அச்சொல் லுக்குப் பொருள் காணப்பட்டது என்றும் ‘கி.மா.போன்காரத்லேவின்’ என்னும் உருசிய நாட்டு அறிஞர் தம்நூலில் கூறியுள்ளார். இந்தியாவில் நுழைந்த ஆரியர் அப்பொழுது அவர்கள் பேசிவந்த அரைகுறைத் தாய் மொழியுடன், இந்தியப் பழங்குடி மக்கள் பேசிவந்த ‘பிராகிருதம்’ என்னும் மொழியைக் கலந்து தங்களின் ‘வேதகால’ மொழியை உருவாக்கினர். அம்மொழியில் தான் அவர்கள், தங்கள் போர்க்கால நிகழ்ச்சிகளையும் மத சம்பந்தமான செய்திகளையும் பல்லாயிரக் கணக்கான பாடல்களாகப் பாடிவைத்தனர். அப்பாடல்களை மிகுதியாகப் பாடியவர்கள்.

1.பரத்வாசர் 2. காசியபர் 3. கோதமர் 4. அத்திரி 5. விசுவாமித்திரர் 6. சமதக்கினி 7. வசிட்டர்

என்னும் ஏழு முனிவர்களே. இவர்களைச் ‘சப்தரிஷிகள்’ என்று வழங்குவர். பிறகு அப்பாடல்களை நால்வேதங்களாகத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இத்தொகுப்பு முயற்சியை மேற்கொண்டவர் பிற்காலத்தில் ‘பாரதம்’ பாடிய ‘வியாச முனிவர்’ என்று கூறுவர். இப்பாடல்கள் ‘சம்கிதை’ என்றும் வழங்கப்படும். அப்பாடல்களுள்

1028 பாடல்கள் அடங்கிய ‘இருக்கு வேதம்’ 10 மண்டலங்களாகத் தொகுக்கப் பட்டது.

1975 பாடல்கள் அடங்கிய ‘எசுர் வேதம்’ 40 அத்தியாயங்களாக வகுக்கப்பட்டது.

1875 பாடல்கள் இசையமைப்பைக் கொண்ட ‘சாம வேதம்’ எனப்பட்டது.

5987 பாடல்கள் அடங்கிய ‘அதர்வண வேதம்’ 20 காண்டங்களைக் கொண்டது.

இத்தொகுப்பு வேலை ஏறக்குறைய கி.மு. 1200 ஆண்டு அளவில் முடிந்திருக்கலாம் என்றே ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இவர்களின் வேதப் பாடல்களில் பழங்குடி மக்களையும் திராவிட மக்களையும் தானவர்கள், தஸ்யூக்கள், தாசர்கள், அசுரர்கள், அரக்கர்கள் முதலிய பெயர்களால் இழித்தும் பழித்தும் எழுதப்பட்டுள்ளன.

நாளடைவில் பழங்குடி மக்களின் பிராகிருத மொழியைக் கொண்டு தங்களின் வேத மொழியை  உருவாக்கிய ஆரியர்கள் அப்பொழுது வடஇந்தியாவில் வழங்கிவந்த பழந்தமிழின் திரிபான திராவிட மொழிச்சொற் களையும் இலக்கண அமைப்பையும் பயன் படுத்தித் தங்களின் இலக்கிய மொழியாகிய ‘சமற்கிருதத்தை உருவாக்கினர். ‘பிராகிருதம்’ என்றால் பழையது அல்லது முன்பு இருந்தது என்று பொருள்படும். ‘சமற்கிருதம்’ என்றால் புதிதாகச் செய்யப்பட்டது அல்லது கலந்து செய்யப்பட்டது என்று பொருள்படும். சமற்கிருதத்தைச் செம்மைப்படுத்தியபின் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘பாணினி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தமக்கு முன் வழங்கிய சமற்கிருத இலக்கணங்கள் சிலவற்றைப் பயன்படுத்தி ‘அட்டாத்யாயி’ என்னும் பெயர் கொண்ட பேரிலக்கணத்தை இயற்றினார். எனினும் இது எழுத்து சொல் இலக்கணங்களை மட்டுமே கொண்டது. இதனைப் ‘பாணினியம்’ என்றும் வழங்குவர். இதற்குப்பின் ‘காத்தியாயனர்’ என்பார் இந் நூலுக்கு விளக்கவுரை எழுதி வளப்படுத் தினார் என்பர்.

இந்த இலக்கணம் சுமார் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றிச் சமற்கிருதத்தைச் செம்மைப்படுத்திய பிறகுதான், புகழ்பெற்ற இராமாயணக் காவியத்தை வான்மீகி முனிவரும் பாரதக்காவியத்தை வியாச முனிவரும் எழுதினர் என்பர். இதற்குப் பிறகு தான் சமற்கிருத மொழியில் புராணங்களும் காவியங்களும் இலக்கணங் களும் பெருகத் தொடங்கின. எனினும் இம்மொழி எக் காலத்தும் இலக்கிய மொழியாக இருந்து வந்துள்ளதன்றி மக்கள் பேசும் மொழியாக இருந்ததில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ்வாறு வந்த ஆரியர்கள் தங்கள் வாழ்வையும் மொழியையும் வளப் படுத்திக் கொண்டபின் வட நாட்டிலிருந்து தென் தமிழ் நாட்டுக்குத் தங்கள் பண்பாட்டு மேலாதிக்கத்தைப் பரப்பிட விரும்பி அகத்தியர் நாரதர் முதலிய முனிவர்களின் தலைமையில் ஆரியப் பூசாரிகளையும் பாணர்களையும் முனிவர்களையும் ஆசிரியர் களையும் சாரி சாரியாக அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள் ‘மன்னர் எவ்வழியோ, அவ்வழியே குடிமக்களும்’ என்னும் வழக்கை அறிந்து முதலில் மன்னர்களையே அணு கினர்.

அவர்கள் தங்களின் வெள்ளைத் தோலையும் வெடிப்பொலி மொழியையும் காட்டித் தாங்களே நிலத்தேவர் என்றும் தாங்கள் பேசும் மொழியே தெய்வமொழி என்றும் பசப்பினர். ஆரியரின் வேள்வி முறையை அரசர்களும் மக்களும் பின்பற்ற வேண்டும் என்றும், அப்பொழுது தான் அவர்கள் இறந்தபின் சொர்க்கம் என்னும் அழியாத சுகவாழ்வு கிடைக்கும் என்றும் இறைவனே தங்களை மேலான பிறவியில் படைத்தான் என்றும், இறைவன் வாழும் கோயில்களில் வடமொழி அர்ச்சனையும் வடமொழிப் பூசாரியின் வழிபாட்டையும் நடத்தினால் தான் வையத்தில் பருவ மழை தவறாது பெய்து வளம் பெருகும் என்றும், இறைவனே பல்வேறு வருணத்தார்களையும், சாதியார்களையும் படைத்தான் என்றும், முற்பிறவியில் அவரவர்கள் செய்த வினை களுக்கேற்றவாறே இப்பிறவியில் அவர்கள் பல்வேறு சாதியார்களாகப் பிறப்பெடுத்தனர் என்றும், வேதங்களும் சாத்திரங்களும் இறைவன் அருளியவை என்றும், அவற்றைப் பரப்பவே தாங்கள் வந்ததாகவும் அதனால் மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனருக்குப் பணிந்து ஏவல் செய்து வாழ வேண்டும் என்றும் கூறிப் பொய்க்கதை களையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டு அவற்றை நம்பும்படி நயம்படக் கூறியும் நரக - மோட்சத்தைக் காட்டிப் பயமுறக்கூறியும் தங்களின் நச்சுக் கருத்துக்களை விதைத்தனர்.

அவற்றை நம்பிய மூவேந்தரும், ஆரியப் பார்ப்பனர் கூறியபடி பலவகை வேள்விகள் செய்யத் தலைப்பட்டனர். பார்ப்பனர்களுக்கு விளைவு மிக்க மருத நில ஊர்களைக் கொடுத்து அவர்கள் வளமாகத் தங்கி வாழ்வதற்குரிய அகரங்களை (அக்ரகாரம்) அமைத்துக் கொடுத்தனர். தமிழ்ப் பூசாரிகள் விலக்கப்பட்டுக் கோயில்களில் வடமொழிப் பூசாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அரசர்களுக்குக் குருக்களாகவும் அமர்ந்து ஆட்டிப் படைத்தனர். அதுவரை அப் பதவிகளில் இருந்த தமிழ் வள்ளுவக் குருமார்கள் விலக்கப்பட்டனர். வேத பாடசாலைகள் பெருகின. அங்குப் பயிலும் பார்ப்பன மாணவர்களுக்கு விடுதி வசதிகள் செய்யப்பட்டன. நாடுதோறும் பார்ப்பனர்கள் உண்பதற்கே ஊட்டுப்புரைகள் என்னும் சத்திரங்கள் அமைக்கப்பட்டன.

தமிழ் மக்களுள் செல்வர்களும் அரசர் களைப் பின்பற்றி ஆரியப் பூசாரிகளுக்கு அடிபணிந்து அவர் களுக்குத் தானங்களும் தட்சினைகளும் தருவதில் பெருமைப் பட்டுக்கொண்டனர். திருமணச் சடங்கு, கோயில் வழிபாடு, பள்ளிக்கல்வி முதலிய இடங்களிலும் சமற்கிருதம் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. பொது மக்கள் மத்தியில் இராமாயண பாரதக் கதைகள் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கின. சமற்கிருதம் வேதமொழியென்றும் தமிழும் அது போன்ற பிற மொழிகளும் சமற்கிருதத்தில் இருந்தே தோன்றினவென்றும் தமிழ்ச்சொற்கள் எல்லாம் ஆரியச் சொற்களே என்றும், தமிழ் எழுத்துக்களும் ஆரிய எழுத்துக்களே என்றும் பொய்வழக்கு புனைந்தனர்.

காலந்தோறும் புதுப்புது தாசர்களால் அப்பொய்கள் மெருகுபடுத்தப்பட்டன. இறுதியில் நீசமொழி, பிசாசு மொழி என்றும் இயற்கைத் தமிழ் மொழியை வெறிபிடித்த ஆரியத் துறவிகளே எரிச்சலுடன் வெறுத்துப் பேசினர். சுமார் கி.மு. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தொடங்கிய இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு கி.பி. நாலாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்தது என்று துணியலாம். அதன்பிறகு தமிழ்நாட்டு மன்னர்களே வடக்கிலிருந்து அவர்களை வரவழைத்தனர்.

இச்சமயத்தில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் பாடிய பாடல் ஒன்றும் நினை வுக்குள் நிழலாடுகிறது. 
தமிழினைப் போல் உயர்ந்த மொழி

தரணியெங்கும் கண்டதில்லை 
தமிழனைப்போல் மொழிக்கொலையில்

தலைசிறந்தார் எவருளரே?

என்பதே அப்பாடல்

இதற்குத் தானே தான் சரியான சான்று என்று காட்டுவது போல ‘சாமிநாத தேசிகர்’ என்பவர் கிளம்பினார். ‘இலக்கணக் கொத்து' என்று அவர் எழுதிய புதிய இலக்கண நூலில் இப்படிக் கூறினார்.

“தமிழுக்கே உரிய எழுத்துக்கள் 5 மட்டுமே, (ற, ன, ழ, எ, ஒ) மற்ற எழுத்தெல்லாம் வடமொழிக்கே உரியவை. (வடமொழியில் இந்த 5 எழுத்துக்களும் அறவே இல்லை) இப்படி ஒரு மொழி (தமிழ்) உள்ளது என்று கூறுவதற்கே வெட்கமாயுள்ளது என்று வெட்கப்படாமலே அவர் எழுதியுள்ளார். இதுபோல் அவர் வழியில் பிள்ளைத் தனம் கொண்ட பெரியவர்கள் சிலரும் கொள்ளி வைப்பது போல் கூசாமல் தமிழ்மொழியைக் குறைத்துக் கூறி வந்துள்ளனர். காலம் மாறும் பொழுது கருத்துக்களும் மாறவேசெய்யும் அறிவியல் வெளிச்சம் பரவும் போது, மொழியியல் ஆராய்ச்சி மோதும் போது இந்த வீண் பழிகள் விலகி மறைந்து உண்மைநிலை என்னும் ஒளி பெருகுவது உறுதியன்றோ?

- கவிஞர் மீனவன்
(புலவர் இர.கு.நாராயணசாமி)

நூல்: பண்டைய தமிழரும் 
பரதவர் வாழ்வும் (பக்கம் 7-13)

- விடுதலை ஞா.ம., 13.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக