செவ்வாய், 17 நவம்பர், 2020

பார்ப்பானே கடவுளாம்!

பார்ப்பான் தான் கடவுள்; பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
‘’பூமியில் பிராமணனாக பிறந்துள்ளேன்(கிருஷ்ணன்).
(ஆஸ்வமேதிக பர்வம், பக்கம்-285)

தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிரம்மாணா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும்.
இதை சொல்லித்தான் இராமன் சம்பூகனை {தலையை)வெட்டிக் கொன்றான்(இராமாயணப்படி).
- செ.ர.பார்த்தசாரதி
17.11.13, முகநூல் பதிவு

வெள்ளி, 30 அக்டோபர், 2020

மனு ஸ்மிருதியும் தர்ம சாஸ்திர நூல்களும்

மநு ஸ்மிருதி என்பது தர்ம சாஸ்திர நூல்களில் ஒன்று.தர்ம சாஸ்திர நூல்கள் 20 க்கும் மேல் உள்ளன.இந்த நூல்களைப் பற்றி எனது முக நூலில் சிறு சிறு பதிவுகளாக அவ்வப்போது  எழுதியிருக்கிறேன்.தர்ம சாஸ்திர நூல்களில் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக மநு ஸ்மிருதி எனும் மநு தர்ம சாஸ்திர நூல் விளங்குகிறது.

நான் அறிந்த வகையில் தமிழில் ‘மநு தரும சாஸ்த்திரம்’(1865 ஆம் ஆண்டு பதிப்பு)எனும் நூலே அச்சு வடிவில் கிடைத்த முதல் நூலாக எண்ணுகிறேன்.1865 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட மநு தரும சாஸ்த்திரம் நூலினை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்,திருவைந்திரபுரம்-கோமாண்டூர் இளையவில்லி இராமாநுஜசாரியர் எனும் வடமொழியில் புலமை வாய்ந்த பண்டிதர் ஆவார். இதே நூலின் 1907 ஆம் ஆண்டு பதிப்பும் இணையத்தில் கிடைக்கிறது.இதே நூலின் பதிப்பு 1919 லும் வெளியிடப் பட்டது. 
இதன் பிறகே திராவிடக் கழகத்தார் 1919 ஆம் ஆண்டு இதே நூலை மறு பதிப்பாக வெளியிட்டார்கள். இந்த நூல் திராவிடக் கழகத்தாரால் தெருக்களில் எரிக்கப்பட்டது. இந்த நூலை திராவிடர் கழகத்தவரே திரித்து எழுதிக் கொண்டார்கள் எனும் பொய்ப் பிரச்சாரமும் தொடர்ந்து வருகிறது.அது உண்மையல்ல என்பதை உணர்த்துவதற்காகவே 1865 ஆம் ஆண்டு பதிப்பித்த நூலை(pdf copy)கேட்கிறவர்களுக்கு அனுப்பி வருகிறேன்.

இது தவிர காஞ்சி மடத்தின் கும்பகோணம் பதிப்பாக தமிழில் ஆபஸ்தம்பர், போதாயணர்,கௌதமர் பெயர்களில் வெளிவந்த தர்ம சாஸ்திர நூல்கள் உள்ளன. இதோடு காஞ்சி மடத்தின் கும்பகோணம் பதிப்பாக ஸ்ம்ருதி முக்தாபலம் எனும் நூலும் (எல்லா தர்ம சாஸ்திர நூல்களின் சாரம்) ஆறு பாகங்களாக வெளிவந்துள்ளது.
இவை தவிர தனித்தனி தர்ம சாஸ்திர நூல்கள் தமிழில் இல்லை.இவற்றை தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு கடந்த ஆண்டு முதல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இந்தப் பணியில் விரும்பம் உள்ளவர்கள் என்னை உள்பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

மநு தர்ம சாஸ்திர நூலைப் போன்று மற்ற தர்ம சாஸ்திர நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு பரவலாக்கப் பட்டால், இந்து வைதீகத்தில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். 

பின் வருவன தர்ம சாஸ்திர நூல்களில் குறிபிடத்தக்கவை;

மநு தர்ம சாஸ்திரம் (தமிழில் உண்டு)
ஆபஸ்தம்ப ஸ்மிருதி(தமிழில் உண்டு)
கௌதம தர்ம ஸூத்ரம்(தமிழில் உண்டு)
விஷ்ணு ஸ்மிருதி
நாரத தர்ம சாஸ்திரம்
வியாச ஸ்மிருதி
ஆங்கிரச ஸ்மிருதி
போதாயண தர்ம சாஸ்திரம்(தமிழில் உண்டு)
யாக்யவல்கிய ஸ்மிருதி
அத்ரி ஸ்மிருமி
பராஸர ஸ்மிருதி
அஸ்திர ஸ்மிருதி
ஹரித ஸ்மிருதி
யம ஸ்மிருதி
காத்யாயனர் ஸ்மிருதி
கர்கர் ஸ்மிருதி
கார்க்யர் ஸ்மிருதி
தேவர ஸ்மிருதி
ப்ரஹஸ்பதி ஸ்மிருதி
சாத்தியான ஸ்மிருதி
தஷ ஸ்மிருதி
சங்க ஸ்மிருதி
உசான ஸம்ஹிதா

இதில் பராஸர ஸ்மிருதி என்பதே கலி யுகத்திற்கான நீதி நூல் என வைதீக நூல்கள் வலியுறுத்துகின்றன.ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வரை மேலுள்ள தர்ம சாஸ்திர நூல்களை ஆதாரமாகக் கொண்டே சிவில் கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப் பட்டு நீதி வழங்கப்பட்டு வந்தன.இதில் யாக்யவல்கிய ஸ்மிருதி யை அடிப்படையாகக் கொண்ட மிட்டாக்‌ஷரா (Mitakshara) எனும் நீதி நூல் நடைமுறையில் பல சுதேசி மன்னர்களால் பின்பற்றப் பட்டு வந்தது. 
மேலுள்ள எந்த ஒரு தர்ம சாஸ்திர நூலும் ஒன்றுக்கு ஒன்று தரத்தில் தண்டனைகளில்,மனித நேயமற்ற செயல்களில், பெண்களை இழிவு படுத்துவதில் சமத்துவமின்மையில் குறைந்த தல்ல.இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டே ‘மநு தர்ம சாஸ்திரம்’.

காலம் கடந்தாவது மக்கள் மத்தியில் மநு தர்ம சாஸ்திரம் நூல் பேசு பொருளாக மாறியுள்ளது. இது மிகவும் சந்தோசமான விசயம். இந்த ஒரு நூல் மட்டுமல்ல,வேத வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே வர்ணாசிரமம்,பெண்களைத் தரம் தாழ்த்தி இழி பிறவிகளாக பாவிப்பது, சமத்துவமில்லாத விசயங்களை போதிப்பது, அறிவியல் விசயங்கள் அல்லாது பிற்போக்கான மூட நம்பிக்கைகளை வளர்ப்பவை என்பதை போகப் போக உணர்ந்து கொள்ள இது நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என்பதிலும் மகிழ்வே.

இந்த ஒரு நூலை எரிப்பதோடு மக்கள் போராட்டம் நின்று விடக் கூடாது, மநு தர்ம சாஸ்திரம் போலவே ஆயிரக் கணக்கான நூல்கள் வேத வைதீக சனாதன தர்மத்தில் உள்ளன.மனித குலத்திற்கே எதிரான அனைத்து வேத வைதீக சனாதன நூல்களும் எரிக்கப்பட வேண்டும்.வைதீக சனாதனமற்ற சமத்துவத்தையும்,மனித நேயத்தையும்  அடுத்த தலைமுறையினராவது உணர்வதற்கு வாய்ப்பினை அளிப்போம்! 

வாட்ஸ் அப்பில் பகிர்ந்த தோழர் புகழேந்தி அவர்களுக்கு நன்றி! 
கட்டுரையாளர் தோழர் Dhinakaran Chelliah அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!!

வியாழன், 24 செப்டம்பர், 2020

புத்த மார்க்கத்தை மிரட்டும் அக்னி புராணம்

ஒற்றைப்பத்தி-அண்டப் புளுகு!
September 13, 2020 • Viduthalai • மற்றவை

THE AGNI PURANA says that Vishnu incarnated himself as Gautama Buddha, the son of Suddhodana, and preached Buddhism to Asuras who thus rejected the Vedas and were sent to hell... Jayadeva.... states in the GITA GOVINDA that Vishnu incarnated himself as Buddha to show compassion to animals and to put an end to the performance of bloody sacrifices... - Swira Jaiswal while reviewing the book 'Encountering Sivaism - The Deity, the Miliew, the Entourage' in THE HINDU - Sunday Magazine: 6.9.1998.
இதன் தமிழாக்கம் வருமாறு:
சுத்தோதனரின் மகன் கவுதம புத்தராக மகாவிஷ்ணு அவதரித்து, அசுரர்களுக்குப் பவுத்தத்தை உபதேசித்தார்; அதனால் அவர்கள் வேதங்களைப் புறக்கணித்து, நரகத்துக்கு அனுப்பப் பெற்றனர் என அக்னி புராணம் சொல்கிறது. விலங்குகளுக்கு இரங்க வேண்டுமெனக் காட்டவும், உயிர்ப் பலிகளை நிறுத்தவும் விஷ்ணு புத்தாவதாரம் எடுத்ததாக, ஜெயதேவர் தமது கீத கோவிந்தா' எனும் (சமஸ்கிருத) நூலில் கூறுகிறார்.... 06.09.1998 ஆம் நாளிட்ட இந்து' ஞாயிறு மலரில், சிவனியத்துடன் சந்திப்பு - தெய்வம், சூழல், ஊழியர்கள்' எனப் பொருள்படும் Encountering Swaism - The Deity, the Milien, the Entourage  எனும் நூலுக்கு - சுவீர ஜெய்ஸ்வால் எழுதிய திறனுரையிலிருந்து.''

புத்தரையே எத்தகைய மிரட்டல் வாதத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் பார்த்தீர்களா? அவர்களின் இத்தகு பித்தாலாட்டத்துக்குப் பெயர்தான் ஆன்மிகம்.


எதிர்த்து அழிக்க முடியாததை அழிப்பதற்கு ஆரியம் - பார்ப்பனியம் - இப்படி ஊடுருவல், மோசடி செய்தல், கற்பனைப்படுத்துதல் என்னும் பித்தலாட்டங்களில் ஈடுபடும் என்பதற்கு அவாளின் அக்னிப் புராணமே சாட்சி!


புத்தரின் பஞ்சசீலம் முக்கியமாக பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கூறுவதை எண்ணிப் பாருங்கள் - பார்ப்பனர்களின் பாஷாணம்'' எத்தகையது என்பது விளங்கும்! 


- மயிலாடன்

புதன், 12 ஆகஸ்ட், 2020

கல்யாண மந்திரம் - மயிலாடன் விளக்கம்

#ஒற்றைப்பத்தி - கல்யாண மந்திரம்

கல்யாண நிகழ்ச்சியில் பார்ப்பனப் புரோகிதர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லுகிறார்கள்.

“ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித

உத்தர த்ருதீயோ அக்நிஷ்டபதி

துரியஸ்தே மனுஷ்ய ஜா”

‘‘ஸோமன் முதலில் இந்த மணமகளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.''

(ஆதாரம்: விவாஹ மந்த் ரார்த்த போதினி தொகுத்தவர்: வித்யா விசாரத் ந்யாயரத்ந, நியாயபூஷ்ண கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் - வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி)லிட்).

ஆதாரத்தோடு இதை நாம் எடுத்துச் சொன்னால், அடேயப்பா, இந்தப் பார்ப் பனர்களுக்கு மூக்கு வெடித்து மண்டை யில் சொருகுகிறது. தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு திருமணத்தில் இதை எடுத்துச் சொன்னார் என்பதற்காக இன்றுவரை எகிறிக் குதித்துத் தாண்டவ மாடுகின்றனர்.

‘‘வினோதரச மஞ்சரி'' எனும் வீரா சாமி செட்டியார் எனும் பெரும்புலவரால் எழுதப்பட்ட நூலில் ‘‘மகாபண்டிதனை சிறுபிள்ளை வென்றது'' என்ற ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

கோலாகலம் என்னும் பெயருடைய வடமொழிப் பண்டிதனைப் பாண்டிய மன்னன் பிருதியாக மரித்து வந்தான், கோலாகலம் சகல சாத்திரங்களையும் கற்ற நிபுணன். தனக்கு நிகராகக் கற்றவர் யாருமில்லை என்னும் செருக்குக் கொண் டவன்.  ‘கற்றது கைம்மண்ணளவு கல் லா தது உலகளவு' என்னும், முது மொழியை அறியாதவன். ‘‘பெருக்கத்து வேண்டும் பணிவு'' என்பது அவனிடத்தில் சிறிதும் இல்லை ‘வல்லவர்க்கு வல்லவர் வையத் தில் உண்டு' - என்பது பழ மொழியன்றோ? பண்டிதர்களை வாதுக்கழைப்பான் அவர் களை வாதில் வென்று அவமானப்படுத் துவான். ‘மேருமலைக்கும் வந்தன்று தாழ்வு' என்றாற்போல் அவன் செருக்கு அழிவதற்கும் ஒரு காலம் வந்தது.

யமுனாசாரியார் அல்லது ஆள வந்தார் என்னும் பெயருடைய, வைணவ மதத்தைச் சார்ந்த இளம்பிள்ளை கோலா கலனோடு வாதிட்டு அவன் செருக்கை அழித்தொழித்தார் என இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.

மூன்று வினாக்கள் கோலாகலனைக் கேட்டதாகவும் அவற்றிற்கு அவன் மறுப் புக் கூற முடியாது விழித்தான் எனவும் கூறப்படுகிறது.

மூன்று வினாக்களுக்கும் உங்களால் மறுப்புக் கூற முடியுமா எனக் கோலாகலன் வினவியதாகவும், அதுவும் தம்மால் முடி யும் என ஆளவந்தார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்றாவது வினாவிற்கு ஆளவந் தார் கூறும் மறுப்பு கொடுமையிலும் கொடுமை யானது. பாண்டியனின் மனைவி பதிவிரதை என முதலில் கூறி விட்டுப் பின்னர் அவள் பதிவிரதை அல்லள் என மறுப்புக் கூறு கிறார். அம் மறுப்பாவது,

‘‘கரு உற்பத்தியால் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபன விர்த்தியால் அக்கினிக்கும் முன்பு கவா தந்திரியப்பட்டுப் பின்பு மணம் செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற கார ணத்தால், நான்கு பதிகளை உடையவள் ஆவாள்.

எந்தப் பெண்ணும் திருமணம் நடக் கும் போது நாலாந்தரமாக ஒருவனுக்கு வாழ்க்கைத் துணை (மனைவி) ஆகிறாள் - என மேற்சொன்ன மந்திரம் கூறுகிறது, இதைவிட என்ன அக்கிரமம் வேண்டும்.

இக்காலத்தில் தமிழர்கள் இல்லத்தில் புரோகிதனைக் கொண்டு திருமணம் செய் யும்போது மேற்சொன்ன மந்திரத்தையே வடமொழியில் கூறுகிறான். தமிழில் இம் மந்திரத்தைச் சொல்வானானால் அவனை நாம் வாளா விடுவோமா? புரோகிதனை வைத்துத் திருமணம் செய்வது எவ்வளவு கேவலமானது என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக.

இந்தப் பொருந்தா மந்திரத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச் சினார்கினியரும் உடன்பட்டு எழுதுகிறார். அவ்வுரையாவது:

கரணத்தின் அமைந்து முடிந்த காலை'

(கற்பியல் 5)

என்னும் அடிக்கு, ‘‘ஆதிக் காரணமும் அய்யர் யாத்த காரணமும் என்னும் இரு வகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய், மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன் றோர்க்கு (மதி கந்தருவர் அங்கி) அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து'' - எனப் பொருந்தா உரை எழுதி மேலும் விளக்கம் கூறுகிறார்.

அஃதாவது,

‘‘அது. முதல்நாள் தண்கதிர்ச் செல் வற்கும், இடைநாள் கந்தருவருக்கும், பின் னாள் அங்கியங் கடவுளுக்கும் அளித்து நான்காம் நாள், அங்கியங் கடவுள் எனக்கு நின்னையளிப்ப, யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளக்கம் கூறுதல்" என வேத நெறியை எடுத்துக் கூறுகிறார்.

இக்கருத்துகள் தமிழர்களுக்குத் தேவையா? அய்ந்து நூல்களுக்கு அரிய உரை எழுதிய நச்சினார்க்கினியருக்கு இப்படிப்பட்ட ஆபாசக் கருத்துகளைத் தமிழ் இலக்கணத்தில் நுழைக்க எப்படி எண்ணம் வந்தது?''

இதைச் சொல்லுவது திராவிடர் கழ கத்தார் அல்லர்.  நாம் மேற்குறிப்பிட்ட பெரும் புலவர்  திருமண மந்திரம்பற்றி சொன்னார். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னார் என்பதற்காக வானரம்போல் தாவிக் குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களாம்?

திருப்பி அடிக்க வேண்டுமே தவிர - ஒதுங்கக் கூடாது. சமாதானம் செய்தால் எதிரி ஜெயித்து விடுவான் என்பது தந்தை பெரியார்தம் வாக்கு!

- #மயிலாடன்
-விடுதலை, 9.8.20

சனி, 23 மே, 2020

பெண்களை இழிவாக பேசிய சங்கராச்சாரி

ஆதி சங்கரரின் புகழ் மிக்கதாக மிகைப்படுத்தப்பட்ட “பஜ கோவிந்தம்” பாடலின் மூன்றாவது சுலோகம் இது!

“நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
 எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம்”

வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,
வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.

“Seeing the seductive female form, do not fall prey to frenzied delusion.That (female form) is (but) a modification of flesh and fat.Think well thus in your mind again and again.”

இதன் பொருள் பெண்கள் மோசமானவர்கள் அவர்களை நம்பக்கூடாது என்பதுதான்.இப்படி
பெண்களைப் பற்றி மோசமாக எழுதியவரைத்தான் இந்து வைதீகப் பெண்மணிகள் அவதார புருஷராக பூசித்து வருகிறார்கள்.

பௌத்தம் கூறிய சூன்யவாதத்தை மயாவாதம் எனக் காப்பியடித்து எழுதப்பட்டதுதான் சங்கரரின் அத்வைதம்.
- dinakaran chellish, முகநூல் பதிவுகள், 23.5.20

திங்கள், 18 மே, 2020

உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு

ஆசிரியர் விடையளிக்கிறார்: ‘உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு
May 16, 2020 • Viduthalai • மற்றவை

கேள்வி 1: ‘உஞ்ச விருத்திக்கும்‘ பிச்சை எடுப்ப தற்கும் என்ன வேறுபாடு?

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

பதில் : உஞ்சி விருத்திக்கும் பிச்சை எடுப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றிய விரிவான விளக்க விடை இதோ: அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய ‘ஹிந்து மதம் எங்கே போகிறது?‘ என்ற நூலில் (57ஆம் பக்கத்தில்)

“.... சங்கரர், சந்நியாசிகள் எப்படி வாழ வேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு, தன்னைப் பின்பற்றும் அதாவது சந்நி யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்தி ருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருட்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்பதோடு - மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாசி பண்பாடு.

சந்யாசி அக்னியைக் கூட தேவைக்காக நெருங்ச்கக் கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்க வேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்ற சங்கரர் ‘சந்யாச ஸ்மிருதி’ வகுத்த விதியைக் கடுமையாகப் பின்பற்றினார்.

கடிகாரச் சுற்றுப்படி: 
உ.வெ.சாமிநாதையர், ஆதிசங்கரர், அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், மதுரைத் தமிழ்ப் பேரகராதி

‘சந்யாச ஸ்மிருதி’யா அது என்ன சொல்கிறது?

ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி, எப்படி வாழ வேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் ‘சந்யாச ஸ்மிருதி’

“பததீ அஸோவ் ஸ்வயம்

பிக்‌ஷ ஹீ யஸ்ய ஏதது

த்வயம் பவேது”

சந்நியாசியானவன் பணத்தைக் கையால் தொட்டால்கூட அது மிகப் பெரிய பாவம்.

- சந்யாச ஸ்மிருதி.

‘உஞ்ச விருத்தி’ என்பதற்கு மதுரைத் தமிழ்ப் பேரகராதி (உ.வே.சுவாமிநாதய்யர் தொகுத்து 1937இல் வெளியானது. இ.மு.கோபாலகிருஷ்ண கோன் வெளியீடு) சொல்லும் பொருள் என்ன?

‘உரலருகிலும் வயலிலும் ஒவ்வொரு தானியமாய் பொறுக்குதல்’ என்று பொருள் கூறுகிறார்.

எவர் வீடு வீடாகச் சென்று உணவு கேட்கிறாரோ,

அவர் சந்நியாச ஸ்மிருதிப்படி - பிச்சை யெடுக்கிறார் என்பதே சரியானது.

எவர் உரல் அருகிலும் வயலிலும் தானியம், அதுவும் ஒவ்வொரு தானியமாக பொறுக்குபவரோ, அவரே - உஞ்சி விருத்தியார்.

பொதுவாக சந்நியாசிகள் மட்டுமல்ல, பிராமணர்கள் என்பவர் உண்மையில் பிராமண - வர்ணாசிரமப்படி ஒழுக வேண்டுமானால் அவர்கள் மநுதர்மப்படி பிச்சை யெடுத்தே வாழவேண்டும். இதை மனுதர்மம் மட்டுமல்ல, காஞ்சி சந்திரசேகரந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படும் ‘மூத்த பெரியவாள்’ ‘மகா பெரியவாள்’ தெய்வத்தின் குரலில் தனது உரையிலும் கூறியுள்ளார்!

ஏன் கும்பகோணத்தில் ஒரு தெருவுக்கே ‘பிச்சை பிராமணர் தெரு’ என்றே பெயர் இன்னும் இருக்கிறதே!

எனவே சந்நியாசிகளுக்கும் பிச்சைதான் உரியதர்மம் - உஞ்ச விருத்தி அல்ல; பிற்கால நடைமுறையில் பார்ப்பனர்கள் பெறுவதற்கு ‘பிச்சை’ என்ற பெயரை மாற்றி உஞ்ச விருத்தியாக்கி விட்டார்களே என்பது நமக்குத் தெரியாத ஒன்றா?

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

பசு புனிதமா? (வேதவிளக்கம்)



யஜூர் வேதத்திற்கு இரு கிளைகள்(சாகை) உண்டு.இந்தக் கிளைகளில் ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யம் என மூன்று பிரிவுகள் உண்டு. உதாரணத்திற்கு,ரிக்வேத ஸம்ஹிதையை மட்டும் நூலாக வெளியிட்டு, அதற்கு "ரிக் வேதம்" என்று பெயர் கொடுத்து விடுகிறார்கள். ஏனென்றால் ஸம்ஹிதைதான் ஒரு சாகைக்கு ஆதாரமாக, உயிர் நாடியாக இருப்பது.ஸம்ஹிதை என்றால் ஒழுங்குபடுத்திச் சேர்த்த மந்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிறது மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
யஜூர் வேதத்தின் இரு சாகைகளுக்கு கிருஷ்ண யஜூர்வேதம் என்றும் (கருப்பு), சுக்ல யஜூர் வேதம் என்றும் பெயர்(வெளுப்பு). ‘யஜ்' என்றால் வழிபடுவது - இதிலிருந்தே யஜுர், யக்ஞம் வந்திருக்கின்றன. யஜுர்  அல்லது யஜுஸ் என்றாலே யக்ஞம் சம்பந்தமான வழிபாட்டுக் காரிய முறைகளை விவரிப்பது என்று பொருள்.இதில் கிருஷ்ண சாகையைச் சார்ந்ததுதான் தைத்திரீய ஸம்ஹிதை.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதம் என்பர். ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேக யக்ஞங்களைப் பற்றியும், பலவிதமான யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.

“இன்றைக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கிறார்கள். உபாகர்மா (ஆவணி அவிட்டம்) என்று கவர்மென்டில் லீவ் விடுவதானால்கூட ரிக்வேதிகளுக்கோ, ஸாம வேதிகளுக்கோ என்றைக்கு உபாகர்மமோ அன்றைக்கு விடுவதில்லை; யஜுர் உபாகர்மாவுக்குத்தான் லீவ் விடுகிறார்கள். யஜுர்வேதிகள் மெஜாரிட்டியாக இருப்பதாலேயே இப்படியிருக்கிறது” எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவா.

எந்த சித்தாந்தமானாலும் அதற்கு ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கவேண்டுமென்பது வடகத்து மரபு.
ஸூத்ரம் என்பது சித்தாந்தத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது. பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.
ஆதி சங்கரர் பிரம்ம சூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதினார்.இவை பத்து உபநிடத பாஷ்யங்களாக தொகுக்கப் பட்டது.
ஆதி சங்கரரின் சீடர்களுள் ஸுரேச்வரர் என்றொருவர் உண்டு, இவர் சங்கரரின் பத்து பாஷ்யங்களில் இரண்டிற்கு மட்டும்  வார்த்திகம் எழுதினார். அந்த இரண்டு, தைத்ரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீயம் கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்தது; பிருஹதாரண்யகம் சுக்ல யஜுஸைச் சேரந்தது.ஆனால் இரண்டுமே யஜுர் வேதம்தான்.

இவ்வளவு விளக்கம் தேவைதானா?,விசயத்திற்கு வருவோமே!
இந்த கிருஷ்ண யஜுர் வேதம் - தைத்திரீய ஸம்ஹிதை முதற்காண்டம் - மூன்றாம் பிரபாடகம் 1 ஆவது அநுவாகம் முதல் 11ஆவது அநுவாகம் வரை முழுக்க முழுக்க பசுவை சோம யாகத்தில் பலியிடும் முறையினை தெளிவாக விளக்குகிறது.(குறிப்பாக 8 முதல் 10 வரை உள்ள சில பகுதிகளை இணைத்துள்ளேன்).
பசுவை கயிற்றால் கட்டுதல்,தண்ணீர் குடிப்பித்தல்,நீர் தெளித்தல்,வலது பின்னங்காலில் நெய் தடவுதல்,கண்ணில்-செவியில்-இதயத்தில்-தொப்புளில்-கால்களில்-வயிற்றில் நீர் விடல்,வபை எனும் ஈரல் சவ்வை பிளந்தெடுத்தல்,வபையில் நெய் தடவுதல்,மாமிச ரசத்தை ஒமம் செய்தல், பசுவின் அங்கங்களை வேக வைத்தல், குடல் பதினொரு துண்டுகளாக்கி ஓமம் செய்தல் என அதற்கான மந்திரங்களுடன் விளக்கப் பட்டுள்ளது. தினமும் ஆடு வெட்டும் பாய்க்கு கூடத் தெரிந்திருக்காது இந்த வரிசைக் கிரமங்கள். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்கள் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன, இப்போது வாங்கும் கார் மற்றும் எந்திர உபகரணங்களுக்கு கொடுப்பார்களே user manual, அது போன்றவை இந்த மந்திரங்கள்.

ஒரு பிராமணன் என்பவன் ரிஷிகளுக்கு பிரம்மச்சர்யம் எனும் வேதப்பியசத்தாலும், தேவர்களுக்கு யாகத்தாலும், பித்ருக்களுக்கு ப்ரஜையாலும் கடமைப்பட்டவனாகிறான்.எவன் ஒருவன் புத்ரனைப் பெற்றானோ, யாகத்தைச் செய்தானோ, பிரம்ச்சாரியாக குருகுலத்தில் வாசம் செய்தானோ அவனே இக்கடன்களிலிருந்து விடுபட்டவனாகிறான்
எனக் குறிப்பிடுகிறது தைத்திரீய ஸம்ஹிதை.பசு என்பது தேவர்களுக்கு பிரியமானது, ஆகவேதான் அது யாகங்களில் பலியிடப்படுகிறது. வாஜபேய யாகத்திற்கு 23 பசுக்கள் மற்றும் அசுவமேதா யாகத்திற்கு 100 பசுக்கள் மட்டுமே பலியிடப் படுகின்றன எனும் தகவலை காஞ்சி மகாப் பெரியவா தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 355 ல் குறிப்பிடுகிறார்(இணைப்பில் இந்தப் பக்கம் உண்டு). 

100 பசுக்களைப் பலியிட்டு அசுவமேத யாகம் செய்பவன்  சர்வ பாவங்களையும் போக்கிக் கொள்கிறானாம். 400 விதமான யாகங்களை புரோகிதர்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் காஞ்சி மகாப் பெரியவர் விளக்குகிறார்.இதை கருத்தில் கொண்டால், எவ்வளவு பசுக்கள் கொல்லப்பட்டிருக்கும் என்பதற்கு அளவே இல்லை.பசுவை பலியிட்டதற்கான ஆதாரமாக யஜுர் வேத தைத்திரீய ஸம்ஹிதையில் உள்ள ஒரு சில பக்கங்களை மட்டும் இணைத்துள்ளேன். டி.என்.ஜா அவர்கள் எழுதிய “பசுவின் புனிதம்” நூலில் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

தைத்திரீய ஸம்ஹிதை ஆர்.ராமச்சந்திர சாஸ்திரி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு 1920 ல் வெளிவந்த நூல் ஆகும். இந்த நூலில் பலியிடப்படுவது பசு என்பது தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னொரு தைத்திரீய ஸம்ஹிதை நூல் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளால் மொழிபெயர்க்கப் பட்டு 1939 ல் வெளிவந்த நூல்.இந்த நூலில் பசு என்பது கடா என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இரண்டு நூல்களின் சில பக்கங்களை இணைத்துள்ளேன். ஒரு விசயம் எப்படி மடைமாற்றம் செய்யப் படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் யாகத்தில் பசு என்பது பலியிடப்படும் எந்த மிருகமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவர்.
எந்தெந்த மிருகங்கள் உண்பதற்கு உகந்தவை எந்தெந்த மிருகங்கள் பறவைகள் மீன் வகைகள் கூடாதவை என்பன ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் நூலில் உள்ளன.

இனிமேலும் நாங்கள் யாகங்களில் பசுவை பலியிட்டதில்லை, பசுவை உண்டதில்லை, மாமிசம் தீட்டு என்பதை யாராவது சொன்னால் அது எவ்வளவு பெரிய பொய்யாக இருக்கும் என்பதை, இந்தப் பதிவைப் படித்த பிறகாவது அவரவர் மனசாட்சியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

- தினகரன் சில்லீஸ் முகநூல் பதிவு, 23.4.20