செவ்வாய், 4 டிசம்பர், 2018

மனுநீதியின் லட்சணம்

"பிர்மா இந்த சாத்திரத்தை எனக்கு (மனுவுக்கு) ஓது வித்தார். நான் மரிசி, பிருகு இவர்களுக்கு ஓதுவித்தேன்"

- மனுஸ்மிருதி-அத்-1: சுலோகம்: 58

- பிராமணர் இந்த மனுஸ்மிருதியைப் படிக்கலாம். மற்றவருணத்தார்க்கு ஓதுவிக்கக் கூடாது.

- மனு.அத் : 1, சு: 103

- வேதம், சுருதி, மனுசாத்திரம் -ஸ்மிருதி இவை களைத் தர்க்க புத்தியால் மறுப்பவன் நாத்திகன் - அத்: 2, சு: 11

- பிர்மாவின் உயர்ந்த இடமாகிய முகத்தில் பிறந்த பிராமணன் முதல் வருணத்தான் ஆகையால் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தார்களுடைய பொருள்களையும், தானம் வாங்கக் கூடிய பிரபுவாயிருக்கின்றான். ஆதலால் அவன் பிறரிடம் தானம் வாங்கினாலும் தன்பொருளையே உண்டவனாவான்.

- அத்: 1, சு: 100-101

குறிப்பு: பிச்சை ஏற்பவனைப் பிரபு என்று கூறுவதை இந்நூலில்தான் காணலாம்

- பலகாரம், பாயாசம், கிழங்குகள், சுவையுள்ள இறைச்சி, நல்ல நீர் இவையாவும் பிராமணர்களுக்குரியவை.

- அத்: 3, சு: 227

- வாசனைப் பொருள்கள், தருப்பை, பூ, பொன், பால், தயிர், அவல், அரிசி, மீன், மாமிசம் இவை வலுவில் வந்தால் பிராமணன் நீக்கக்கூடாது.

- அத்: 4, சு: 250

- சோறு, பால், சோமபானம் (மது) இறைச்சி இவைகள் யாகத்திற்குரிய அவிசுகள்.

- அத்: 3, சு: 257

- யாகம் செய்து மாமிசம் புசித்தல் தேவ காரியம். தனக்கெனக் கொன்று தின்னல் இராட்சத காரியம்.

- அத்: 5, சு: 31

- உயிர்க்கு ஆபத்து நேருங்கால் நாள்தோறும் பிராணிகளை ஏராளமாகக் கொன்று தின்றாலும் பிராமணன் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரையத்திற்கு வாங்கினாலும், தாமே கொன்று கொண் டாலும், பிறர் கொடுத்தாலும் அதைத் தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் நிவேதித்துப் புசிக்கும் பிராமணன் துரஷிக்கப்படமாட்டான்.

- அத்: 5, சு: 30-32

- பசுக்கள், மிருகங்கள், பறவைகள் இவைகளை யாகத்திலும் சிரார்த்த தினத்திலும் கொன்றால் அவை பின்பு உயர்ந்த கதியை அடைகின்றன - ஆதலால் யாகம், சிரார்த்தம் இவைகளில் உயிர்க்கொலை செய்யலாம், அக்கொலை பாவமாகாது.

- அத்: 5, சு: 40-41

- யாகத்திற்காகவே பசுக்கள், மிருகங்கள், பறவைகள் பிர்மமனால் படைக்கப்பட்டுள்ளன. அந்த யாகத்தால் உலகமெலாம் நன்மையடைகிறது. ஆகையால் யாகத்தில் செய்யும் உயிர்க்கொலை கொலையாக மாட்டா.

- அத்: 5, சு: 39

- இங்ஙனம் யாகத்திற் கொல்லப்பட்ட கொலையைக் கொலையென்று நினைக்கலாகாது; வேதத்தினாலேயே தருமம் விளங்குவதால் வேதம் கொலை செய்யக் கூறினாலும் அது புண்ணியமாகவே இருக்கும்.

- அத்: 5, சு: 44

- எள்ளு, அரிசி, உளுந்து, கிழங்கு, பழம் இவைகளால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் ஒருமாதம் வரையில் திருப்தி அடைவார்கள்.

- அத்: 3, சு: 267

- முள்ளுள்ள வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் அளவற்ற காலம் திருப்தியடைவார்கள்.

- அத்: 3, சு: 271

- சிரார்த்தத்தில் விதிப்படி அழைக்கப்பட்ட பிரா மணன் இதில் கூறப்பட்ட மாமிசங்களைப் புசிக்கா விட்டால் அவன்21 பிறப்பு பசுவாகப் பிறப்பான்.

- அத்: 5, சு: 35

- அக்கினி எப்படி மேலான தெய்வமாகின்றதோ அப்படியே பிராமணன் ஞானியாயினும், மூடனாயினும் அவனே மேலான தெய்வம். - அத்: 9, சு: 317

பிணத்தை எரிக்கும் தீ, யாகத்திற்கும் பயன்படுதல் போல தீமையான காரியங்களைச் செய்யும் பிராமணர் களும் பூஜிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உயர்குலத்தார் அல்லவா?

- அத்: 9, சு: 318

- சூத்திரன் இம்மையினும் மறுமையினும் பிராமணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன், மனம் வாக்குக் காயங்களால் பிராமணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். பிராமணரில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், அவனுமில்லாத விடத்தில் வைசி யனுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.

- அத்: 9, சு: 334-335

- பிராமணன் கூலி கொடுத்தோ - கொடாமலோ சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் பிர்ம னால் படைக்கப்பட்டிருக்கிறான்.

- அத்: 8, சு: 413

- மற்ற மூன்று வருணத்தார்க்கும் தொண்டு செய்யும்படி சூத்திரனுக்கு அரசன் உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்யாவிடில் உலகம் அழிந்துவிடுமாகையால் சூத்திரனைத் தண்டித்துப் பணிவிடை செய்விக்க வேண்டும்.

- அத்: 8, சு: 410

- சூத்திரன் தேடிய பொருள்களைப் பிராமணன் தடையின்றிக் கைப்பற்றிக் கொள்ளலாம், ஏனெனில் அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருள்களுக்கும் உரியவனாக மாட்டான்.

- அத்: 8, சு: 417

- பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனுடைய அங்கங்களை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருள்களைப் பிராமணன் தான் விரும்பியபடி கொள்ளையிடலாம்.

- அத்: 9, சு: 248

- பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய் தாலும் பிராமணனாக மாட்டான். அவனுக்குப் பிராமணத் தொழில் செய்ய அதிகாரமில்லை. பிராமணன் சூத்திர னுடைய தொழிலைச் செய்தாலும் அவன் உயர்குலத்த வனேயாவான். இப்படியே பிர்மா நிச்சயித்துள்ளார்.

- அத்: 10, சு: 75

- சூத்திரன் பொருளாசையால் உயர்குலத்தோர்க்குரிய தொழில்களைச் செய்தால் அவன் பொருள்களை எல் லாம் பறித்துக் கொண்டு அவனைத் துரத்திவிட வேண்டும்.

- அத்: 10, சு: 96

- பிராமணன், சத்திரியன், வைசியன் இவர்கள் தம் வருணத்திலும், தம் கீழ் உள்ள மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் மணம் செய்து கொள்ளலாம்.

- அத்: 3, சு: 13

- சூத்திரப் பெண்ணோடு சமமாய்ப் படுக்கும் பிரா மணன் நரகத்தையடைவான், அவளிடம் பிள்ளை உண்டு பண்ணுகிறவன் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான்.

- அத்: 3, சு: 17

பிராமணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பிராமணன் சொத்தில் உரிமையில்லை. அப்பிள்ளை சிரார்த்தம் செய்யலாகாது. அவன் உயிரோடிருப்பினும் பிணத்துக்குச் சமமானவன்

- அத்: 9, சு: 155-178

- பிராமண குலத்திற் பிறந்தவன் கர்மானுட்டான மில்லாதவனாயினும், ஒழுக்கங்கெட்டவனாயினும் அரசனைப்போலவே தீர்மானம் செய்யலாம். (ஆட்சி செய்யலாம், பிறரைத் தண்டிக்கலாம்) சூத்திரன் ஒரு பொழுதும் செய்யலாகாது.

- அத்: 8, சு: 20

- பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டுப் பொய் சொல்லலாம் குற்றமில்லை. பிராமணரல்லாதவரைக் கொன்றாலும் பரவாயில்லை.

- அத்: 8, சு: 112-143

- வைசியனும், சூத்திரனும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வைசியனுக்கு 250 பணங்களும், சூத்தி ரனுக்கு 500 பணங்களும் பொருள் தண்டனை விதிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 277

- பிராமணனைச் சூத்திரன் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணனுடைய ஜாதிப் பெயர்களை சொல்லித்திட்டும் சூத்திரன் வாயில் காய்ச் சிய இரும்புக்கம்பியை எரிய எரியச் சொருக வேண்டும்.

- அத்: 8, சு: 270-271

- சூத்திரன் மேல் ஜாதியாரை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.

- அத்: 8, சு: 280

- சூத்திரன் (பிராமணரல்லாதவன்) மற்ற மூன்று வரு ணத்தாருடைய மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர்போகும் வரை தண்டிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 359

குறிப்பு: பிராமணன் மற்றவர்களின் மனைவிமார் களைக் கற்பழித்தால் தண்டனை இல்லை போலும்

- தாழ்ந்த சாதிப்பெண் உயர்சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டிக்கக் கூடாது, உயர்ந்த குலப்பெண் ஒரு தாழ்ந்த சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டித்து வீட்டிலேயே அடக்க வேண்டும்

- அத்: 8, சு: 365

- உயர்குலப்பெண்ணைப் புணர்ந்த இழிகுலத் தோனை இறக்கும் வரையில் அடிக்க வேண்டும். கட்டுக் கடங்காமல் இட்டப்படி திரியும் பிராமணப் பெண்களை சூத்திரன் புணர்ந்தால் ஆண்குறியை அறுக்க வேண்டும். ஒருவர் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாய் வெட்டி அவன் பொருளை யெல்லாம் கொள்ளையிட வேண்டும்.

- அத்: 8, சு: 374

- பிராமணனுடன் சூத்திரன் சமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடுபோட்டாவது, பிட்டத்தை அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்திட வேண்டும்.

- அத்: 8, சு: 283

- பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும் அவனுக்குத் தூக்குத் தண்டனை ஏற்பட்டால் தூக்கில் இடக்கூடாது. அவன் தலையை மொட்டை அடித்தல் வேண்டும். அதுவே அவனுக்குத்  தூக்குத் தண்டனைக்கு ஒப்பாம். மற்ற வருணத்தார்க்குக் கொலையே தண்டனை.

- அத்: 8, சு: 379

- கொடிய குற்றம் செய்தவனாயினும் பிராமணனைக் கொல்லாமலும், வேறு எத்தகைய துன்பமும் செய்யாம லும் பொருளைக் கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும். எத்தகைய குற்றஞ்செய்தாலும் பிராமணனைக் கொல்ல அரசன் நினைக்கலாகாது.

- அத்: 8, சு: 80, 381

- பிராமாணம் கேட்கும்போது, பிராமணனைச் சத்தியமாகச் சொல் என்று கேட்க வேண்டும். சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும் அல்லது அவனைத் தண்ணீரில் அழுத்த வேண்டும். அவன் மனைவி, பிள்ளை இவர்கள் தலைகளில் ஓங்கி அடித்தும், பிரமாணம் சொல்லும் படிச் செய்ய வேண்டும். மழுவெடுத்த சூத்திரன் கை வேகாமலும், தண்ணீரில் அழுத்திய சூத்திரன் சாகாமலும், அடித்ததால் மனைவி மக்கள் தலையில் வலி தோன்றாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று கொள்ள வேண்டும்.

- அத்: 8, சு: 113-115

- சூத்திரன் இம்மையில் உயிர்வாழ்க்கைக்கும், மறுமையில் மோட்சமடையவும் பிராமணனையே தொழ வேண்டும். அதுவே அவனுக்குப் பாக்கியம்.

- அத்: 10, சு: 122

- சூத்திரன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும், தனக்கெனத் தனியாக பொருள் சேர்த்து வைக்கலாகாது. சூத்திரனிடம் பொருள் இருந்தால் பிராமணனுக்குத் துன்பம் வரும்.

- அத்: 10, சு: 129

குறிப்பு: பொருள் சேர்த்துப் பிராமணனுக்குக் கொடுத்துவிட வேண்டும்.

- பிராமணன் உண்டு மிகுந்த உணவும், கட்டிக்கிழிந்த உடையும், சுவையும் ஔதமுமற்ற தானியங்களையும் பிராமணன் பார்த்து சூத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.

- அத்: 10, சு: 125

- பிராமணன் வைசியனிடமுள்ள பொருளைக் கேட்டுக் கொள்ளாவிடில் வலிமையாலாவது களவினா லாவது யாகத்திற்கு வேண்டிய பொருளைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். வைசியனிடமில்லாவிடில் சூத்திரன் வீட்டிலிருந்து ஏராளமாக யோசனையின்றிக் கேளாமல் வலிமையினாற் கொள்ளையிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

- அத்: 11, சு: 12,13

- யாகம் செய்கிறவன் பொருள் தேவர்கள் பொருள் என்றும், யாகம் செய்யாதவர்களின் பொருள்கள் அசுரர்களின் பொருள்களென்றும் வேதம் ஓதுகின்றது. ஆதலால் அசுரர் பொருள்களைத் தேவர்களுடைய பொருள்களாக்குதல் தருமமேயாகும்.

- அத்: 11, சு: 20

- தரும சிந்தனையுள்ள அரசன் இவ்விதம் கொள் ளையிட்டு யாகம் செய்கின்ற பிராமணர்களைத் தண்டிக் கக் கூடாது. அரசனின் அறியாமையால் பிராமணன் பசித்துன்பத்தை அடைகிறான்,

- அத்: 11, சு: 21

குறிப்பு: இதனால் பிராமணன் எந்த விதத்திலும் பிழைக்கும்படி அரசன் வழிதேடி வைக்க வேண்டும். அவர்கள் சொல்லுவனவெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

- பிராமணனுக்கு வேதம் ஓதலே தவம்; சத்திரியனுக்கு இந்நூலில் சொன்னபடி ஆட்சி செய்தலே தவம். வைசியனுக்கு வர்த்தகம் செய்தலே தவம். சூத்திரனுக்குப் பிராமணனுக்குப் பணிவிடை செய்தலே தவம் ஆகும்.

- அத்: 11, சு: 235

- இதில் சொல்லும் கருமங்களில் தவறிய அரசன் மலம், பிணம் இவைகளைத் தின்னும் கடபூதம் என்னும் பேயாகப் பிறப்பான். மேற்சொன்ன வேதஸ்மிருதிகளுக்கு அடங்காமல் விரோதமாக நடக்கும் சூத்திரன் சீலைப் பேனைத் தின்னும் பேயாகப் பிறப்பான்.

- அத்: 12, சு: 71,72

குறிப்பு: ஆதலால் இதில் சொன்னபடியே அரசன் பிராமணர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும்,. சூத்திரன் பிராமணர்களுக்குத் தொண்டு செய்து நடக்க வேண்டும் என்பது தான் மனுநீதி.

மனுநீதியின் அறநெறியைப் பார்த்தீர்களா? பார்ப்பான் எதையும் தின்னலாம். எந்த குற்றங்களையும் செய்யலாம். யார்வீட்டுப் பெண்களையும் கற்பழிக்கலாம். யார் பொருளையும் கொள்ளையிடலாம். கொலையும் செய்யலாம். அவனுக்குக் குற்றத் தண்டனை கிடையாது. நாவிதக் கூலியில்லாமல் மொட்டையடித்துப் பொருள் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்புவதே தண்டனை. அங்கும் குற்றம் செய்தால் அப்படியே; எப்படியுள்ளது மனு (அ) நீதி?  ஜாதிக்கொரு நீதி! மன்னன் மனுநீதிப்படியே மற்றவர்களை தண்டித்து அவர்களை ஆதரித்து அரசாள வேண்டும். இல்லையேல் அரசனையும் தொலைத்துக் கட்ட மனுவில் இடமுள்ளது.

விடுதலை நாளேடு, 4,5.12.18
- இரா.கண்ணிமையின் 'வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்?' என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.

செவ்வாய், 13 நவம்பர், 2018

காயத்ரி மந்திரம் என்னும் அருவருப்பும் ஆபாசமும் அடங்கிய மந்திரம்!

நாம் அனைவரும் காயத்ரி மந்திரம் என்னும் ஒன்றை அவ்வப்போது கேட்டிருப் போம், அந்த காயத்ரி மந்திரம் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது, இந்த காயத்ரி மந்திரம் பற்றி தற்போது ஊடகங்கள் மற்றும் பார்ப்பனர்கள் விடும் கதை எல்லாம் பொய், இந்த மந்திரம் கொச்சையான பாலியல் சொல்லாகும். முதல் முதலாக ஒரு ஆணும் பெண்ணும் கூடும் போது இந்த மந்திரத்தை உச்சரிப்பார்கள். இப்படி கொச்சையான ஒரு மந்திரத்தைத் தான் அவர்களாகவே வார்த் தைக்கு வார்த்தை புரட்டான விளக்கத்தைக் கொடுத்து தினமும் அனைவரையும் காலையும் மாலையும் சொல்லவைக்கிறார்கள்.

"ஓம் பூர்: புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்"

இதில் உள்ள ஒவ்வோர் உச்சரிப்பிற்கு தனித்தனி உச்சரிப்புகள் உள்ளது.

கட்டத்தில் உள்ள சமஸ்கிருத வார்த் தைகள்- மீண்டும் ஒருமுறை விடுதலை குழுவினரால் மத்திய அரசின் சமஸ்கிருத பொருள் விளக்க இணையத்திற்கு சென்று சரிபார்த்த பிறகு பதியப்படுகிறது.

இதன் உண்மையான பொருள் விளக்கம்

ஓ தேவி, இந்த பூமியில் நீ படுத்துக்கொள்வாயாக, பார்ப்பனர்களின் செழுமையான தொடைகளை நினைவில் கொண்டு, காம உணர்வுகள் பொங்க அவர்களைத் தழுவுவது போன்று நினைத்துக்கொண்டு உன் எதிரில் உள்ள ஆணுடன் கூடி உன்னை அவனிடம் இன்பப்படுத்துவாயாக! வேதகாலம் என்று சொல்லப்படும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகான காலத்தில் அவர்களால் எழுதப்பட்டது அனைத்துமே பெண், பெண்களை அனு பவித்தல், அழகுபடுத்துதல், பலபேருடன் கூடுதல், விலங்குகளுடன் கூடுதல், முறையற்ற உறவுகள் போன்றவை தான் அதிகம் இருந்தது, இது புராண நூல்களில் கொட்டிக்கிடக்கின்றன.

காயத்ரி மந்திரம் என்பது யோனி மந்திரம் ஆகும், இந்த மந்திரத்தைத்தான் இன்று சக்திமிகுந்த மந்திரம் என்று கூறுகின்றனர். இதையே அனைவரையும் கூறவைக்கின்றனர். இதை இன்று பார்ப்பனரல்லாதோர் தங்கள் வீடுகளில் தினமும் கூறி வருவதைக் காண்கிறோம், அதுமட்டுமல்லாமல் காலையில் தங்கள் வீடுகளில் தொடர்ந்து பூசை அறையில் ஒலிக்க விடுகிறார்கள், பலர் மொபைல் போன்களில் ரிங்டோன்களாக வைத்திருக்கின்றனர்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;

கடவுளை பரப்பியவன் அயோக்கியன்

என்றால் -

அதை (கடவுளை) வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார்  சொன்னதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு அல்லவா!

- விடுதலை ஞாயிறு மலர், 10.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

கிழித்தெறிக கீதையை!

இன்றைக்கும்கூட கீதையை தேசிய நூலாகக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

வெளியுறவு அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் வெளிப்படையாகவே சொல்லுகிறார் (8.12.2014 டில்லியில்)

ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடியவர் (அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பச்சையாகவே சொல்லுகிறார்)

“பகவத் கீதையை தேசிய தர்ம சாஸ்திரமாக அறிவிக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கு பகவத்கீதை மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. அனைத்துப் பிரிவு மக்களும் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் கீதையில் உள்ளன” (தீக்கதிர் 13.9.2017 - நீதிபதி எஸ்.என்.சிறீவத்ஜா).

“ராஜஸ்தான் மாநிலத்தில் 211 மாடு களுக்குப் பகவத் கீதையை 211 பூசாரிகள் படித்துக் காட்டினர்” என்பது இன்னொரு செய்தி.

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அந்தக் கீதைதான் பெண்களும், வைஸ்யர் களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள். (அத்தியாயம் 9, சுலோகம் 32) என்கிறது - ஆன்மீக அரசியலின் நோக்கம் இன்னுமா புரியவில்லை?

ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியினுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தி னாலும், அது நன்மையைப் பயக்காது.

தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவு குற்றமில்லை. ஆனால் பிற ஜாதியானின் தொழிலைச் செய்யக்கூடாது (‘கீதை’ அத்தியாயம் 3, சுலோகம் 35)

- தகவல்: க.பழநிசாமி

தெ.புதுப்பட்டி

- விடுதலை ஞாயிறுமலர், 27.10.18

வியாழன், 1 நவம்பர், 2018

யார் அந்த சண்டாளர்கள்?

சண்டாளர்கள் தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேட்போருக்கு...

யார் அந்த சண்டாளர்கள்?

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.
ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?
இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.
முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம். சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.
அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.
திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.
அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர்என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார். என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, ‘உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள். கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.
எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.
இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.
தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.
பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர்.
அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.
இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை"
என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.
முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.

-நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:-40-43

குறிப்பு: அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியின் முக்கிய ஆலோசகர்.
சங்கராச்சாரியாரின் வேண்டுகோள்படி, அம்பேத்கரை சந்தித்து அரசமைப்புச்சட்டத்தில் மதப் பாதுகாப்புகுறித்து வேண்டுகோள் வைத்தவர்.
- கவிஞர் கலி.பூங்குன்றன் முக நூல் பக்கம்(31.10.18)