புதன், 31 டிசம்பர், 2025

ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (1)


கட்டுரை

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (1)


வழக்குரைஞர் அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்களும்” என்ற நூலில், பகவத் கீதையின் சுலோகங்களுக்குத் தமிழ் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பக்தி வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபுபாதாவின் ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தமிழில் செய்திகளைத் தந்துள்ள வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, ஜாதி – வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் பகவத் கீதை குறித்த அரியதொரு முன்னுரையைத் தந்துள்ளார். அதனை அப்படியே வாசகர்கள் படிக்கத் தருகிறோம்.

முன்னுரை

A.C. Bhakthi Vedanta Swami

Prabhupada என்ற வேதங்கள், இதிகாசங்களை நன்கு கற்றறிந்த சமஸ்கிருத அறிஞர் பகவத் கீதையை “Bhagavad-Gita as it is” பகவத் கீதை உள்ளது உள்ளபடி என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீண்ட விளக்க உரைகளுடன் எழுதியுள்ளார்.

அதில் அவர் ஒவ்வொரு சமஸ்கிருத வார்த்தைக்கும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு தந்துள்ளார். உலகம் போற்றும் உன்னத கருத்துகளைக் கொண்ட பகவத் கீதையைப் பகவான் கிருஷ்ணரே அருளினார் என்று மகாபாரதத்தை எழுதிய வேத வியாசர், மகாபாரதத்தின் வைரமாக பகவத் கீதையை இடம் பெறச் செய்துள்ளார்.

அதை சுவாமி Prabhupada ஆங்கிலத்தில் எழுதி ‘The Bhakti Vedanta Book Trust’ வெளியிட்டுள்ளது (1972-1986).

தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தேவநாகரி எழுத்துக்களைப் படிக்க, எழுதத் தெரிந்ததால் பகவத் கீதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிய, ஆங்கில மொழிபெயர்ப்பையும் தேவ நாகரியில் பகவத் கீதையையும் படிக்க நேரிட்டது.

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றாலும் வேத விற்பன்னரின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தேவநாகரி வார்த்தைகளை அறிய முடிந்தது. அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதும் முயற்சியே இந்த நூலாகும். வடமொழிச் சொற்கள் பல தமிழ் பேச்சு வழக்கில் முன்பே இருந்ததால் அவற்றை அப்படியே வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக எழுதியுள்ளேன்.

நல்வாய்ப்பாக மகாகவி பாரதியார் பகவத் கீதையை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து எழுதி பாரதி பிரசுராலயம் திருவல்லிக்கேணி பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட ஒரு பிரதி கிடைக்கப் பெற்று, இரண்டு நூல்களையும் படித்து, ஒப்பிட்டு, “பகவத் கீதை உள்ளது உள்ளபடி” என்ற இந்த நூலை அடியேன் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் எழுதியுள்ளேன்.

இதற்கு முன்பு பகவத் கீதையைப் படிக்க வாய்ப் பில்லாமல் போய் விட்டது. பகவத் கீதையை படிக்கப் படிக்க, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எவ்வளவு அறிவார்நத முற்போக்கான சமூகமாக வாழ்ந் திருக்கிறர்கள் என்பது தெளிவானது.

மிகவும் தொன்மையான நூலான தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியரே இதற்கு முன் வாழ்ந்திருந்த தமிழறிஞர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

நவீன கருத்தியலான உலக மயமாதல் (Globalisation) என்பதை தமிழர்கள் அன்றே அறிந்ததற்குச் சான்றாக கணியன் பூங்குன்றனார்,

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்”

என்று பாடி வைத்துள்ளார்.

சங்க காலத்தில் சாதிகளற்ற முற்போக்கான சமூகமாக தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்குச் சங்க காலப் பாடலான,

“யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழியறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே”

என்று பெயர் தெரியாத புலவர் ஒருவர் பாடிச் சென்றுள்ளார்.

தமிழ்ச் சமூகம் பெண்களைச் சமமாக மதித்து வந்தமைக்கு சங்க காலத்திலேயே மிகச் சிறந்த பெண் புலவர்கள் இருந்துள்ளனர் என்பது சான்று.

அவ்வையார், அள்ளூர் நன்முல்லயார், ஆதிமந்தி, இளவெயினி, ஒக்கூர் மாசாத்தியார், அணிலாடு முன்றிலார், காக்கைப் பாடினி, நச்செள்ளையார், பெருங்கோப்பெண்டு போன்ற பெண் புலவர்கள் தங்கள் பாடல்களால் தங்கள் ஆளுமையை நிலைநாட்டிச் சென்றுள்ளார்கள்.

தமிழ் இலக்கியத்தின் ஒளிரும் வைரமாக இன்றைய நவீன யுகத்திற்கும் ஏற்ற கருத்துகளை அடக்கி மிகச் சிறந்த இலக்கிய ஆளுமையான திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைக் குறிப்பிடலாம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.”

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.”

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக உலகியற்றியான்.”

“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய் வருத்தக் கூலி தரும்.”

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.”

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.”

“நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன்றி அமையாத ஒழுக்கு.”

போன்ற ஏராளமான குறள்கள் தமிழர்களின் முற்போக்குச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

உலகம் போற்றும் உன்னத கருத்துகளைக் கொண்ட நூல் பகவத் கீதை என்ற கருத்திற்கு மாறாக, கீதையில் சொல்லப்படும் கருத்துகள், அறிவியலுக்குப் புறம்பாக அல்லது அறிவியலால் நிரூபணம் ஆகாத, மூட நம்பிக்கைகள் நிறைந்ததாகவே உள்ளன என்பது என் தாழ்மையான கருத்து

பகவத் கீதை முழுக்க முழுக்க ஸநாதன தர்மத்தை நிலைநாட்ட, வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை வலியுறுத்த, ‘பிராமணர்’களின் மேம்பாட்டிற்காக எழுதப்பட்ட நூலாகவே அடியேனின் சிற்றறிவிற்குப் புலனாகிறது.

பகவத் கீதையைப் படித்த ஆல்பெர்ட் அய்ன்ஸ் டெய்ன் தன் கருத்தை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“When I read Bhagawad Gita I found it to be a useless source of casteism and superstition completely contrary to scientific approach and progressive thinking”

“பகவத் கீதையைப் படித்த பொழுது அது ஜாதிகளைப் பற்றிய மூட நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு பயனற்ற ஆதாரமாகவும், அறிவியலுக்குப் புறம்பான முற்போக்கு சிந்தனைக்கு மாறான கருத்துகளைக் கொண்டதாக இருப்பதாக உணர்கிறேன் ” என்கிறார்.

பகவத் கீதையில் அறிவியலுக்குப் புறம்பான அல்லது அறிவியலாய் நிரூபணம் ஆகாத கருத்துகளைக் கூறும் பாடல்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

யுத்த களத்தில் சேனையின் அணி வகுப்பு

அத்தியாயம் 1 – ஸ்லோகம் 40

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः ।

स्त्रीषु दुष्टासु वाष्र्णेय जायते वर्णसङ्करः ॥

அத4ர்மாபி44 வாத்க்ருஷ்ண ப்ரது3ஷ்யந்தி குலஸ்த்ரிய:।

ஸ்த்ரீஷு து3ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: । ।

பொருள்: ஓ கிருஷ்ணா! எப்பொழுது அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுது குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். ஓ வார்ஷணேயா! மாதர் கெடுவதினால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது. அதன்படி பெண்கள் சபலமுடையவர்களாகக் காட்டப் படுகிறார்கள். அதைவிட ஜாதிகளில் கலப்பு ஏற்பட்டு விடக் கூடாது எனும் வருத்தம் மேலிடுகிறது.

ஸ்லோகம் 41

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च ।

पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः ।।

ஸங்கரோ நரகாயைவ குலக்4னானாம் குலஸ்ய ச ।

பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ33கக்ரியா: ||

பொருள்: அத்தகைய தேவையற்ற ஜனத் தொகை அதிகரிப்பால் குல நாசம் செய்பவர்களும், குடும்பப் பாரம்பரியம் கொண்டவர்களும் நரக வேதனையடை வார்கள். அவர்கள் பித்ருக்களுக்குப் பிண்டம், ஜலம் இடுவதை நிறுத்துவதால் பித்ருக்கள் வீழ்ச்சியடை வார்கள்.

மேற்காணும் கருத்து அறிவியலால் நிரூபணம் ஆகாத கருத்தெனப்படுகிறது.

ஸ்லோகம் 42

दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः ।

उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः ॥

தோ3ஷைரேத குலக்4னானாம் வர்ணஸங்கரகாரகை: |

உத்ஸாத்3யந்தே ஜாதித4ர்மா: குலத4ர்மாஸ்ச ஸாஸ்வதா:||

பொருள்: தங்களுடைய தோஷச் செயல்களால் குல மரபுகளை அழிப்பவர்களால், விரும்பத் தகாத குழந்தைகள் வர ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள் சாஸ்வதங்கள் சீரழியும்.

மேற்கண்ட பாடல் ஜாதிகளைப் பாதுகாக்கும் பாடலாகவே தெரிகிறது.

ஸ்லோகம் 43

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन ।

नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम ।।

உத்ஸன்னகுலத4ர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்த3ன |

நரகே நியதம் வாஸோ ப4வதீத்யனுஸுஸ்ரும ||

பொருள்: ஓ ஜனார்தனா! நான் அறிந்த வகையில் குல தர்மங்களைக் கெடுக்கும் மனிதர்கள் எப்பொழுதும் நரகத்தில் வாழ்வார்கள்.

மேற்கண்ட கருத்து அறிவியலால் நிரூணபமாகாத ஒன்று.

கீதையின் கருத்துகளின் சுருக்கம்

அத்தியாயம் 2: – ஸ்லோகம் 2

श्रीभगवानुवाच

कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।

अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥

ஸ்ரீ ப43வானுவாச

குதஸ்த்வா கஷ்மலமித3ம் விஷமே ஸமுபஸ்தி2தம் |

அனார்யஜுஷ்டமஸ்வர்க்3யமகீர்த்திகரமர்ஜுன ||

பொருள்: ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் சொன்னார்: ஓ அர்ஜுனா! இந்த இக்கட்டான சூழலில் உன் மனதில் எங்கிருந்து சோர்வு வந்தடைந்தது (கஷ்மலம்)? வாழ்க்கையில் மதிப்பை அறிந்த ஆர்யனான உனக்கு இது அழகல்ல. அது உனக்கு மேன்மையைத் தராமல் இகழ்ச்சியையே தர வல்லது.

பகவான் கிருஷ்ணனே அர்ஜுனனை ஆர்யன் என்று அழைக்கிறார். இது ஆர்யர்களின் இதிகாசம் என்பதற்குச் சான்று.

ஸ்லோகம் 46

यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके ।

तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः ॥

யாவாநர்த்த2 உத3பானே ஸர்வத: ஸம்ப்லுதோத3கே |

தாவான்ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜானத: II

பொருள்: ஒரு கிணற்று நீரின் எல்லாப் பயன்களும் ஒரு பெரிய நீர்நிலையில் உடனே கிடைக்கும். அது போல வேதக் கருத்துகள் அனைத்தும் நன்கு கற்றுணர்ந்த பிராமணனிடம் கிடைக்கும்.

இந்தப் பாடல் பிராம்மணனின் மேன்மையைக் குறிக்கிறது.

கர்ம யோகம்

அத்தியாயம் 3 – ஸ்லோகம் 14

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः ।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः ॥

அன்னாத்34வந்தி பூ4தானி பர்ஜன்யாத3தன்னஸம்ப4வ:।

யஜ்ஞாத்34வதி பர்ஜன்யோ யஜ்ஞ: கர்மஸமுத்34வ: ।।

பொருள்: உயிரினங்கள் உணவு தானியங்களால் வாழ்கின்றன. தானியங்கள் மழையினால் உற்பத்தியா கின்றன. வேள்விகள் செய்வதால் மழை பெய்கிறது. வேள்வி விரிக்கப்பட்ட கடமைகளாக உருவாகின்றன.

வேள்வியால் மழை பெய்கிறது என்பது அறிவிய லுக்குப் புறம்பான கருத்து. வேள்விகள் செய்யாத மற்ற நாடுகளிலும் மழை பெய்கிறது.

ஞான யோகம்

அத்தியாயம் 4 – ஸ்லோகம் 1

श्री भगवानुवाच

इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् ।

विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ।।

ஸ்ரீ ப43வானுவாச

இமம் விவஸ்வதே யோக3ம் ப்ரோக்தவானஹமவ்யயம் |

விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிஷ்வாகவே (அ)ப்3ரவீத் ||

பொருள்: நான் அழிக்க முடியாத யோக விஞ்ஞானத்தை விவாஸ்வான் என்ற சூரியக் கடவு ளுக்குப் போதித்தேன். விவாஸ்வான் அதை மனுவிற்குப் போதித்தார். மனு அதை இக்ஷ்வாகுவிற்குப் போதித்தார்.

யோகத்தைக் கடவுள் போதிக்க மனுவிற்கு வந்து இக்ஷ்வாகு வரை நீடித்தது.

ஸ்லோகம் 7

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।

अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥

யதா3யதா3 ஹி த4ர்மஸ்ய க்3லாநிர்ப4வதி பா4ரத: |

அப்4யுத்தா2னமதா4ர்மஸ்ய ததா3த்மானம் ஸ்ருஜாம்யஹம் ||

பொருள்: எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் தர்ம நடவடிக்கைகள் குறைகிறதோ, அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்வேன்.

பகவான் பரத கண்டத்தில் மட்டும் தோன்றுகிறார்.மற்ற நாடுகளில் அதர்மம் இல்லையா என விளங்கவில்லை.

ஸ்லோகம் 8

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।

धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥

பரித்ராணாயா ஸாதூ4னாம் வினாஸாய ச து3ஷ்க்ருதாம் |

4ர்மஸம்ஸ்தா2பநார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3யுகே3 ||

பொருள்: பக்தர்களை விடுவிக்க, துஷ்டர்களை அழிக்க, தர்மத்தை நிலைநாட்ட ஒவ்வொரு யுகத்திலும் அவதரிப்பேன்.

அவதாரங்கள் பரத கண்டத்தில் மட்டுமே தோன்றுகின்றன. ஏனைய நாடுகளில் தோன்றாத காரணம் விளங்கவில்லை.

ஸ்லோகம் 13

चातुर्वर्ण्य मया सृष्टं गुणकर्मविभागशः ।

तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ।।

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு3குணகர்மவிபா43ஸ।

தஸ்ய கர்தாரமபி மாம் வித்3த்4யகர்தாரமவ்யயம் ।।

பொருள்: நானே சதுர் வர்ணங்களாக சமூகத்தைச் செயல்களின், குணங்களின் அடிப்படையில் பிரிவுகளாகச் சிருஷ்டி செய்துள்ளேன். அவற்றின் கர்த்தாவாகிய என்னாலேயே அவற்றை மாற்ற முடியாது.

பகவான், குழந்தைகள் கருவில் இருக்கும். பொழுதே குணங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக சிருஷ்டி செய்தாரா? அல்லது பிறந்த பின் அவ்வாறு பிரித்தாரா என்பது விளங்கவில்லை.

கருவில் இருக்கும் பொழுதே சதுர் வர்ணங்களாகப் படைத்தால் அதற்குப் பகவானே பொறுப்பாவார். பிறந்த பின் நான்கு வர்ணங்களாகப் பிரித்தாலும் அவரே குற்றவாளி. ஏனெனில், அவனன்றி ஓரணுவும் அசையாது. பகவான் இது போன்ற வர்ணப் பிரிவுகளை மற்ற நாடுகளில் ஏன் ஏற்படுத்தவில்லை என்பது விளங்கவில்லை.

ஸ்லோகம் 24

ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।

ब्रह्मव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ।।

ப்3ரஹ்மார்பணம் ப்3ரஹ்ம ஹவிர்ப்3ரஹ்மாக்3னௌ

ப்3ரஹ்மணா ஹுதம் |

ப்3ரஹ்மைவ தேன க3ந்தவ்யம் ப்3ரஹ்மகர்மஸமாதி4 னா ||

பொருள்: நெய்யை அக்னியில் அர்ப்பணித்து பிரம்மத்திற்கு வேள்வி செய்தால் அது முழுவதுமாகப் பிரம்மத்துடன் சேர்ந்து ஒருவன் பரம்பொருளுடன் சேர்வது நிச்சயம்.

மேற்கண்ட செயல் அறிவியலுக்குப் புறம்பானதாகக் கருதப்படலாம்.

(தொடரும்)

 விடுதலை நாளேடு, 31.12.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக