வியாழன், 9 மார்ச், 2023

திரிநூல் தினமலரின் தில்லுமுல்லு திருகுதாளம்! (மனுதர்ம சாஸ்திரத்தில் விபச்சாரிகளின் மகன்கள்)

 

மின்சாரம்

சாரை விறுவிறுத்தால் அது யாரையோ கூப்பிடுமாம். அந்தப் பட்டியலில் 'தினமலருக்கு' முதலிடத்தைக் கொடுத்து விடலாம்.

'இது உங்கள் இடம் என்ற பகுதி' - என்பது உண்மையிலேயே வாசகர்களின் பகுதி என்பதைவிட அவாளே எழுதிக் கொள்ளும் பகுதிதான்.

(எடுத்துக்காட்டுக்கு பெட்டி செய்தி காண்க!)

இன்று வெளிவந்த 'தினமலர்' ஏட்டில் 'இது உங்கள் இடம்' என்ற பகுதியில் ஒரு கடிதம்.

(1) மனுதர்ம சாஸ்திரத்தில் ஹிந்துக்கள் அனைவரும் விபச்சாரிகளின் மகன்கள் என்று குறிப்பிட்டு இருப்பதாக புளுகுகிறார் எம்.பி. 

ஆ. ராஜா என்று குறிப்பிட்டுள்ளது 'தினமலர்'.

அறிவு நாணயம் இருந்தால் ஆதாரத்தைக் காட்டட்டும். அவர் உரை ஒலிப்பதிவு செய்யப் பட்டது 'விடுதலை' ஏட்டிலும் முழுமையாக வெளி வந்துள்ளது (12.9.2022)

அவர் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி வயிறு வளர்ப்பதும் ஒரு பிழைப்பு தானா?

அவர் பேசியது என்ன?

"இந்துவாக இருக்கின்றவரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கின்றவரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்றவரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கின்றவரை நீ தீண்டத்தகாதவன்" என்று தானே பேசினார்.

இதற்கு ஆதாரமாக மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டுகிறார் (மனுதர்ம சாஸ்திரம் 1919 பதிப்பு - திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளைய வில்லி இராமாநுஜாசாரியார் - ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது - பெட்டிச் செய்தி காண்க)

இந்த மனுதர்ம சாஸ்திர நூல் எட்டாம் அத்தியாயம்  - 415, 417 (பக்கம் 234) இவற்றினை ஆதாரம் காட்டி தான் பேசினார்.

தினமலருக்கு அறிவு நாணயம் இருந்தால் இந்த அத்தியாயத்தையும், சுலோகங்களையும் எடுத்துக் காட்டியல்லவா மறுக்க வேண்டும்.

இதற்கு மாறாக பொய்யில் புழுத்த கேவலத்துக்குப் பொட்டு வைத்ததுபோல "ஹிந்துக்கள் அனைவருமே விபச்சாரி மகன்கள்" என்று ஆ. இராசா பேசினார் என்று  சொல்லுவது பச்சையான அயோக்கியத்தனம் அல்லவா?

2). திராவிட கழகம் சார்பில் (அதில்கூட பித்தலாட்டம் - திராவிடர் கழகமே தவிர திராவிட கழகம் அல்ல) "கி.வீரமணி எழுதி விடுதலை பதிப்பகம் வெளியிட்ட அசல் மனுதர்மம் என்ற புத்தகத்தை காட்டுகிறார், அசல் மனுதர்மம் என்றால் "டூபிளி கேட்' மனுதர்மம் என்று ஒன்று உள்ளது போலும்" என்று 'தினமலரி'ல் எழுதப்பட்டுள்ளது.

அசல் மனுதர்மம் என்று போட்டதற்கே காரணம்   (மேலே எடுத்துக்காட்டியபடி)

திராவிடர் கழக அலுவலகத்தில் டைப் செய்யாமல் (ஞிஜிறி) ஒரிஜினல் மனுதர்மத்தை ஸ்கேன் செய்து அப்படியே வெளியிட்டது. 

'தினமலர்' உண்மையிலேயே அவர்கள் கூறும் அந்த அசல் மனுதர்மத்தைக் கொண்டு வந்த காட்டி, எடுத்துக்காட்டி, வீரமணி சொல்லுவதுபோல சூத்திரன் என்பதற்கு அந்த அர்த்தம் கிடையாது என்று நிரூபிக்கட்டுமே பார்க்கலாம் - இதனை சவால் விட்டே கேட்கிறோம்!

3) "மனுதர்ம சாஸ்திரம் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்ட தொகுப்பாகும். தி.க. வீரமணிக்கு சமஸ்கிருதம் எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது, புரிந்து கொள்ளவும் தெரியாது."

"ஒரு மொழியை சுத்தமாக தெரியாதவர் எப்படி அந்த மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலின் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்?" என்று அதிபுத்திசாலியாக தம்மை நினைத்துக் கொண்டு, அக்கப் போராக எழுதுகிறது இனமலர் ஏடு!

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணம், கீதை எல்லாம் தமிழில் வெளி வரவேயில்லையா?

அவற்றை மேற்கோள் காட்டுவதே கிடையாதா?

திராவிடர் கழகம் அப்படியே அசல் எடுத்து வெளியிட்ட மனுதர்ம சாஸ்திர நூலை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய இராமானுஜாசாரியார் சமஸ்கிருதம் தெரிந்தவர்தானே - அதற்குச் சாற்றுக்கவி கொடுத்தவர் வே. வேதாந்தாசாரியார்தானே.

ஹிந்து மதமும், அதன் சாஸ்திரங்களும் பெரும் பாலான மக்களை சூத்திரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றால் தேவடியாள் மக்கள் என்றும் கூறி இருப்பதை அம்பலப்படுத்தி, ஹிந்து மதத்தின் மேலாதிக்க பார்ப்பனர்களின் சதியையும் வெளிப்படுத்தி வெகு மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால், தங்கள் ஆதிக்கத்தின் ஆணிவேருக்கு ஆப்பு என்பதைப் புரிந்து கொண்டதால்தான் 'தினமலர்' 'துக்ளக்' கும்பல் 'லபோ துபோ!' என்று ஆத்திரம் கொப்பளிக்கக் குதியாட்டம் போடுகிறது.

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்ற முழக்கத்தை முன் வைத்தார் தந்தை பெரியார்.

அதற்குப் பிறகு தான் அந்த உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத் திமிர் அடங்கியது. மீண்டும் பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாத மக்களை 'தினமலர்' கூட்டம் இழிவுபடுத்த ஆசைப்பட வேண்டாம் அவர்களின் ஆத்திரத்தைத் தூண்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

தினமலரின் பித்தலாட்டத்தைப் பாரீர்! 'தினமலர்' ஏடு, 'காலைக் கதிர்' என்ற ஏட்டையும் நடத்தி வருகிறது.

தினமலரில் உங்கள் இடம் என்ற பகுதியில் ஒரு கடிதம் வரும். அதனை எழுதியவரின் பெயர், ஊர் எல்லாம் இருக்கும். அதே கடிதம் அதன் காலைக் கதிர் ஏட்டில் வெளிவரும். அதில் எழுதியவர் பெயரும், ஊரும் வேறாக இருக்கும்.

எடுத்துக்காட்டுக்குச் சில:

தினமலர் 31.1.2004

தலைப்பு: "பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு"

எழுதியவர்: ஆர். ராஜகோபால் விருதுநகரிலிருந்து...

காலைக்கதிர் 4.2.2004

தலைப்பு: "பலத்தைக் காட்டுவோம் ராமதாசுக்கு"

எழுதியவர்: மு. ரஜினிபித்தன், கரூர்

இரண்டும் அட்சரம் பிறழாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் 30.1.2004 

தலைப்பு: "ரஜினி ரசிகர்களே - எம். சுரேஷ் கடலூரிலிருந்து" 

காலைக் கதிர் 3.2.2004

தலைப்பு : "ராமதாசுக்கு பாடம் புகட்டுவோம்"

எழுதியவர்: ம. முத்துக்குமார் ஈரோடு

இரண்டும் அட்சரம் அரைப்புள்ளி மாறாமல் அதே மேட்டர். எடுத்துக்காட்டுக்கு இவை.

தினமலரின் ஆள் மாற்றுவேலை; திரிபு திரிபுதாள பித்தலாட்டம் புரிகிறதா? 

வந்தாரய்யா கோயபல்சு குருமூர்த்தி வழிக்கு!

ஆ.இராசா இப்படிப் பேசலாமா? "அத்திரிபாச்சா கொழுக் கட்டை!" என்று துள்ளிக் குதித்த கூட்டம் கடைசியில் 

ஆ. இராசா வழிக்கே வந்து சலாம் போட்டு விட்டது. 

நேற்று வெளிவந்த 'துக்ளக்' 11ஆம் பக்கத்தைப் பாருங்கள்.

கேள்வி: 'நீ கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக, பெர்சியனாக, இல்லை என்றால் ஹிந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார். அவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளதா?

பதில்: அப்படிக் கூறுவது உச்சநீதிமன்றம் அல்ல, நமது அரசியல் சாஸனம். அதற்கு விசுவாசத்துடன் இருப்பேன் என்று அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன்கீழ் உறுதிமொழி எடுத்திருக்கிறார் ஆ. இராசா.

('துக்ளக்' 5.10.2022 பக்கம் 11)

உச்சநீதிமன்றம் சொன்னதா, அரசியல் சாசனம் சொன்னதா என்பதல்ல பிரச்சினை - இன்னும் சொல்லப் போனால் 

ஆ. இராசா சொன்னது மேலும் வலிமை பெற்றதாகி விட்டது.

ஆக, 'ஆ.இராசா சொன்னது உண்மை - உண்மை  - உண்மைதான்!'  அரசியல் சாசனத்தில் உளளதைத்தான் 

ஆ. இராசா கூறியுள்ளார் என்று சலாம் போட்டு ஒப்புக் கொண்டு விட்டார் கோயபல்சு குருமூர்த்தி. ஹி.... ஹி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக