மின்சாரம்
இந்த வார 'துக்ளக்' இதழில் (28.9.2022 பக்கம் 7) இவ்வாறு எழுதியுள்ளார்.
"சூத்திரனை வேசி மகன் என்று மனுஸ்மிருதி கூறுவதான வாதம் தவறு. அப்படி எங்கும் கூறப்படவில்லை. மனுதர்மம் அத்தியாயம் 8 - ஸ்லோகம் - 415, ஏவலர்களாக பணிபுரியத்தக்கவர்கள் எழு வகையினர் யாவர் என்றே விளக்குகிறது.
போர்க் கைதிகள், பக்தித் தொண்டு செய்ய வந்தவர்கள், வைப்பாட்டியின் மகன், விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள், பிறரிடமிருந்து பெறப்பட்ட அடிமைகள், பரம்பரையாகப் பணி செய்பவர்கள், அபராதத் தொகையை வேலை செய்து தீர்ப்பவர்கள் என்பது அந்த ஏழு வகை. இந்தப் பட்டியலில் வைப்பாட்டியின் மகன் என்று இருப்பதை 'வேசியின் மகன்' என்று கருதிக் கொண்டும் ஏவலர்கள் என்பதை சூத்திரர்கள் என்று நினைத்துக் கொண்டும் ராசா பிதற்றியிருக்கலாம். பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்பதெல்லாம் அவரின் கற்பனை."
- என்று தன் மனம் போன போக்கில் கிறுக்குகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
நாம் எதைச் சொன்னாலும் ஆதாரத்தை எடுத்துக்காட்டும் அறிவு நாணயம் உள்ளவர்கள்.
உண்மையிலேயே மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி யாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
'பார்த்தீர்களா? மனுதர்மத்தில் தொழிலாளர்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறது. இவர்கள் சூத்திரர்கள் என்று கூறுவது எப்படி' என்று அவசரப்பட வேண்டாம் முந்திரிக்கொட்டையாக!
அதே எட்டாம் அத்தியாயம் 417ஆம் சுலோகம் அந்தத் தொழிலாளர்கள் யார் என்பதை மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்தும் சொல்லி விட்டது. அது இதோ:
பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.
ஆதாரம்: திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியரை புதுவை நா. முத்துரங்க செட்டியார் கேட்டுக் கொண்டபடி, அவர் தமிழில் மொழி பெயர்த்து வசன ரூபமாகச் செய்த தருமநூலை செட்டியார் சகோதரராகிய முத்துகோவிந்த செட்டியார்.
பு.க. சுப்பராய முதலியாரால் பிழைத்திருத்துவித்த சுத்த பிரதிக்கிணங்க, சென்னை ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. (1919) இதன் விலை ரூ.2லு.
உண்மை இவ்வாறு இருக்க மனுதர்மம் எட்டாம் அத்தியாயம் 415ஆம் சுலோகத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்களைத் தங்களுக்கே உரித்தான திரிபுதனத்தின் அடிப்படையில் பொருள் மாறும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
தன்னுடைய தேவடியாள் மகன் என்று இருப்பதை வைப்பாட்டி மகன் என்று திருத்துவது ஏன்?
இதைவிட பித்தலாட்டம் என்ன தெரியுமா?
இங்கே தெரிந்து கொள்ள வேண்டியது சூத்திரர் களை வைப்பாட்டி மக்கள் அல்லது தேவடியாள் மக்கள் என்று சொல்வது மனுதர்மமே தவிர, ஆ. இராசா அல்ல - என்பதை திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஒப்புக் கொண்டு விட்டாரே!
உண்மை இவ்வாறு இருக்கும்போது மானமிகு ஆ. இராசாமீது அவதூறு பரப்புவது கடைந்தெடுத்த பித்தலாட்டமா இல்லையா? அப்பட்டமான பொய்யா இல்லையா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.
குருமூர்த்திகள் எழுதியுள்ளபடியே பார்த்தாலும் மனி தர்களை இப்படி இழிவுபடுத்துவதை ஏற்க முடியுமா?
நான்கு வர்ணங்களும் வாழ்வு முறைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவையாம்.
மேலே கூறப்பட்ட ஏழு வகைத் தன்மை கொண்ட சூத்திரனுக்குத்தான் இவ்வளவு கேவலமான வரையறைகளா?
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக் கும் உபயோகமான தருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனு - அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87)
பிர்மா படைக்கும் போதே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்துவிட்ட பிறகு, வாழ்வு முறைக்கு ஏற்பவும், குண நலன்களுக்கு ஏற்பவும் அமைந்திருப்பதுதான் வர்ண தர்மம் என்று சாதிக்க முயலுவது பார்ப்பனப் புத்தி தானே! இம்மைக்கு மட்டுமல்லவாம். மறுமைக்கும் இதே நிலைதானாம் - எவ்வளவு ஜாதி ஆணவத் திமிரின் உச்சம்!
"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப் பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது"
-இவ்வாறு கூறுவது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13).
அவசரப்படாதீர்கள். அவாளின் முகத்திரையை பகவான் கிருஷ்ணனின் ஆயுதத்தைக் கொண்டே கிழிப்போம்!
"பெண்களும் வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 16 - சுலோகம் 44)
ஒரு கடவுளின் வாயிலிருந்து எவ்வளவு சாக்கடைத் தனமான சொற்கள்.
ஆகப் படைக்கும் போதே இந்த வருணங்களை ஏற்படுத்தி விட்ட பிறகு - வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணம் கர்மங்களில் அடிப் படையில் என்பதே என்று புளுகுவது எவ்வளவு அயோக்கியத்தனம் - போக்கிரித்தனம்!
பிர்மாதான் படைத்தான் நான்கு வருணங்களை என்று மனு கூறுகிறது. கிருஷ்ணன்தான் படைத்தான் என்று கீதை கூறுகிறது. ஏனிந்த முரண்பாடு?
வேறு ஒன்றும் இல்லை. தந்தை பெரியார் என்ற சகாப்தத் தலைவர் தோன்றி ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளையும், தில்லுமுல்லுகளையும், ஜாதி ஆணவத் திமிரையும் தோலுரித்துத் தொங்க விட்ட நிலையில், அவர்களின் சாஸ்திரத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும் திராணி இல்லை.
திரிபு வேலை செய்து, உள் குத்து செய்து எதையாவது உளறித் தப்பிக்கும் தந்திரம் என்பதல்லாமல் வேறு என்ன?
குருமூர்த்தி கூட்டமே சரக்கு இருந்தால் மிளகு முனை அளவுக்கு அறிவு நாணயமிருந்தால் ஆதாரத் தோடு மறுப்பு சொல்லுங்கள் பார்க்கலாம்!
எதிர் பார்க்கலாமா?
சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு! இல்லையேல் சலாம் போட்டு ஓடி விடு!