ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

வேதம் வேறு ஆகமம் வேறு


ஆகமங்களைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் என்று உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு - இரண்டு நீதிபதி கள் கொண்ட அமர்வு கூறியதை மிகப் பெரிதாக ஊதி விட்டு, தமிழ்நாடு (தி.மு.க.) அரசு முன்பு கொண்டு வந்து, இரண்டாவது முறையாக 2006 இல் நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சமூக சீர்திருத்த ஆணை - சட்டம் செல்லாது என்று  உச்சநீதிமன்றம் கூறி விட்டது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உரு வாக்கி வைத்துள்ளன - பார்ப்பன உயர்ஜாதி - ஆதிக்க ஊடகங்கள்.
‘தலைகுப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை’ என்று கூறியவன் கதையாக, இப்போது ஆகமம், ஆகமம் என்று அதை ஒரு பெரிய சட்டப் பூச்சாண்டி போல சித்தரிக்கக் கிளம்பியுள்ளார்கள்.
எனவே, அந்த ஆகமங்கள் என்பனவற்றின் வரலாறு, கொள்கை, தத்துவம், நடைமுறை இவைகளைப்பற்றி விளக்கவேண்டியது நமது கடமையாகிறது.
சென்னைப் பல்கலைக் கழக முந்தைய வரலாற்றுத் துறை பேராசிரியரும், பன்மொழி அறிஞருமான பி.டி.சீனுவாச அய்யங்கார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு (History of the Tamils) நூலாகும். 1929 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூல் இந்நூல்.
இதன் தமிழாக்கத்தை தமிழ் மண் பதிப்பகம் 2007 இல் வெளியிட்டது. அதற்கு அணிந்துரை அளித்தவர் பேரா சிரியர் முனைவர் ஆய்வு அறிஞர் மதுரை தமிழண்ணல் அவர்களாவர்.
அந்த அணிந்துரையில்,
‘‘இச்சூழ்நிலையில், இத்தமிழர் வரலாறு போன்ற நூல்கள் அனைவரையும் சென்றடையவேண்டும்.’’
‘‘இத்தகைய தவறான தீர்ப்புகளை (2007 இல் முந்தைய நிலைபற்றியது இது) ‘உண்மைதான்!’ என்று எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்களே!
இந்நூல் இயல் 8 இல், ‘ஆகமங்கள்’பற்றி வருவன வற்றை எல்லோரும் படித்துப் பார்க்கவேண்டும்.
முக்கியமாக, இன்றைய சூழ்நிலையில், இந்நூலில் வரும் இரண்டு பகுதிகள் நம் நீதிமன்றத் தலைவர்களுக்கும், திருமடங்களின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுப் பாடமாகச் சொல்லித் தரப்படவேண்டும்.
The Rise of the Agamas -
Tha Agamas vs The Vedas
pp.103-115 of English Original
(தமிழாக்க நூலில் பக்கங்கள் 131-139 வரை)
இதன்மூலம் - வேதம் வேறு ஆகமம் வேறு என்பதை நிறுவுகிறார் சீனுவாசர். இன்று ‘வேதாகமம்’ என்று சேர்த்துப் பேசி குழப்புவர்களுக்கும், ஆகமப்படி வட மொழியை வழிபாட்டுச் சடங்கு மொழி எனச் சாதிப்ப வர்களுக்கும் முகத்தில் பலமுறை அறைந்தாற்போன்ற விடைகள் இதில் உள்ளன.
ஆகமச் சடங்குகளில் வேத மந்திரங்களுக்குத் தொடர்பில்லை; இவை ‘‘தஸ்யூக்கள் உடையவை; ஆரிய வேத வேள்விகள் வேறு; ஆகம வழிபாடு முறைகள் வேறு. கோவிலையும், உருவ வழிபாட்டையும் அத் துவைத வேத வைதீகர்கள் வெறுத்த காலமுண்டு; வேள் விகள் குறையக் குறைய, இந்த வேதாந்திகள் வருமானம் கருதியே, கோவில்களில் நுழைய முற்பட்டனர் என்பது போன்ற, தெளிவான கருத்துகள் இதிலுள.’’
அப்பகுதியை கீழே தருகிறோம்:
இயல் 8:
‘ஆகமங்களின் தோற்றம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பி.டி.சீனுவாசய்யங்கார் எழுதுகிறார்:
‘‘இன்றைய இந்து சமயம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங் களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சங்கூட அடிப்படையாகக் கொண்டது  அல்ல.
இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது 1899) எனது இந்திய ‘இந்திய மெய்யியல் சுருக்கம்’ என்ற நூலில் குறித்துள்ளேன்.
1. மாபாரதப் போருக்குப் பின்னர் வேத முறை வழிபாடு மறையத் தொடங்கியது. இன்று ஏறத்தாழ முற் றிலும் ஒழிந்துவிட்டது. ‘‘ஸ்ரௌத கர்மம்’’ பெரும்பகுதி போய்விட்டது. சிற்சிலர் ஆங்காங்கு சில நேரங்களில் அக்னி ஆதானம், எளிய வாஜபேயம், கருட சாயனம், சோமயாகம் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர். ஸ்மார்த்த கருமமும் விரைவாக மறைந்து வருகிறது. மூன்று தலைமுறைகளாக அக்னி வழிபாடு செய்யாத பிராமணக் குடும்பம் பிராமணத் தன்மை இழந்துவிடும் என்பது சாத்திர விதி. அதன்படி பார்த்தால், இந்தியாவில் இன்று உண்மையான பிராமணக் குடும்பங்கள் ஒரு சிலவே இருக்கக்கூடும்! சமயத்தில் ஊறியது இந்தியா. ஆனால், அந்தச் சமயம் ஆகமச் சமயமேயொழிய வேத சமயம் அன்று.
2. ‘ஆகமத்தின்’ வேர்ச் சொற்கள் ‘‘தொன்று தொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்தவசனம் - அதாவது மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது; ஆப்த வசனங்களில் தலைமை சான்ற வேதத் தையும் சில நேரங்களில் ஆகமம் என்று அழைப்பர். எனினும், சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரை வழிபடும் தந்திர நூல்களையே ‘‘ஆகமம்’’ பொதுவாகக் குறிக்கிறது. (புத்த, சமண, சமய நூல்களும் ஆகமம் எனப்பட்டன) அனைத்து ஆகமங்களும் தொடக்கத்திலிருந்தே வேதங் களுக்கு அதாவது கர்ம காண்டத்துக்கு எதிராக உரு வானவை. சைவ ஆகமங்கள் மகேஸ்வரம், பாசுபதம் எனப்பட்டன. வைணவ ஆகமங்கள் பாகவதம் (பக வானைப் பற்றி யவை), சாத்த வாதம் (சாத்தவாத அரச பரம்பரையி னர் ஆதரித்தது?), பாஞ்சராத்திர என அழைக்கப் பட்டன. (பாஞ்ச ராத்திர என்றால் விஷ்ணு வழிபாட் டின் சிறப்புச் சடங்கு என்றும் பொருள் உண்டு. அது வைகானச = கான கத்தில் வாழும் துற விகள் சார்ந்தது) சடங்கிலிருந்து மாறுபட்டது.
3. வேதச் சடங் குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக்கொன்று போட் டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்துவிட்ட நிலையில், அவை வேறு பட்டவை என்பது இன்று மறந்துவிட்டது. ‘‘ஆகமங்கள் வேதங்களிலிருந்து பெறப்பட்டவை. தற்காலத்திற்கேற்ப வேதக் கருத்துக்களை விரிவாக்கி அல்லது மாற்றி உருவாக்கப்பட்டவை’’ என்று கூடச் சிலர் கருதுகின்றனர். வேத மந்திரங்கள் இயற்றப்பட்ட காலம் முடிந்ததும் அவை அபௌருஷேயம் - அதாவது காலம், இடம் இவற் றையெல்லாம் கடந்தவை. அநாதி எனக் கருதப்பட்டன;
யாரும் உருவாக்கியவையல்ல, ‘புருஷன்’ ஆன ஈஸ்வரன் கூட வேதங் களை உருவாக்கியவன் அல்லன். ஆனால், ஆகமங்கள் சிவன், விஷ்ணு வெளியிட்டவையாகையால் அவை பௌருஷேயம் தான். வேதசம்ஹிதை மந்திரங்களை வேதச் சடங்குகளில் ஓதவேண்டும். ஆனால், சிவன், விஷ்ணு வழிபாட்டில் பின்பற்றவேண்டிய சடங்குகள், யோகக் கோட்பாடுகள், மெய்யியல் கருத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டவை. ஆகமங்கள், வேதங்களின் (வேத மந்திரங்களும் சரி, பிராமணங்களும் சரி) கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகியவற்றுக்கு மீமாம் சம் தேவை. ஆனால், சடங்குத் தொகுப்பு நூல்களான ஆகமங்களுக்கு உரை விளக்கம் மட்டுமே தேவை. வேத மந்திரங்கள் ‘‘சந்தஸ்’’ மொழியில் உள் ளன. ஆகமங்கள் ‘‘பாஷையில்’’ (அதா வது கி.மு.1000-க்குப் பின்னர் இருந்த வடமொழியில் உள்ளன.
4. சடங்குகளைப் பொருத்தவரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்னிச் சடங்குகள். ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங் களுக்குச் செல்கின்றன. ஆகம வழி பாட்டில், அக்னிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத் துக் காட்டிவிட்டு எடுத்துவிடலாம். தெய்வம் சூக்குமமானவற்றையே ஏற்கும்; தூலமானவற்றையல்ல;’ ஆகை யால் வழிபடுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன்படுத்தலாம்,
பிறருக்கும் தரலாம். அக்னிச் சடங்கில் பல்வேறு காரியங் களுக்கும் தனித்தனிப் பொறுப்பு வகிக்கும் பல்வேறு தெய்வங்களுக்கும் வழிபாடு உண்டு. ஆகம வழிபாட்டில் அனைத்துக்கும் பொறுப்பேற்ற ஒரே தெய்வத்திற்கே வழிபாடு நடைபெறு கிறது. (அதாவது யெகோவாவை வழிபடுவது போல). வேதச் சடங்குகளில் ஒவ்வொரு செயல் செய்யும்பொழுதும் அதற்கென்று ஒரு மந்திரம் சொல்லப் படுகிறது. சோமம் கொண்டுவர வண்டியில் காளையைப் பூட்டுதல்; அக் காளையை ஓட்டக் குச்சி வெட்டுதல்; ஒரு பொருளைக் கையால் பிடித்தல், பால் காய்ச்சுதல்; மோர் கடைதல், ஒவ் வொன்றுக்கும் ஒரு மந்திரம் உள்ளது. ஆகம வழிபாட்டில் மந்திர சடங்கு களுக்கு இடம் இல்லை. ஆகம வழி பாட்டில் ஆங்காங்கு ஓரிரு மந்திரங்கள் ஓதுகிறார்கள். ஆனால், மடத்தனமாக தூ (பீலீu) எனத் தொடங்கும் மந்திரத்தை (வண்டியின் நுகத்தடியைத் தூக்கும் பொழுது சொல்ல வேண்டியது!) சாம் பிராணி காட்டும்பொழுது ஓதுகிறார்கள்.
ஆகம வழிபாட்டில் பெரும்பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நமஹ (நான் வணங்கு கிறேன்) என்று சொல்வதுதான். வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப் பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்பு வது; ஆனால், ஆகம வழிபாடு உப சாரமே - அதாவது நீராட்டி, அலங் கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தினனாக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வதுபோல. வேதச் சடங்கில் கடவுள் உருவாரம் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லாக் கடவுள்களுக்கும் நெருப்புதான் முகவர். ஆகம வழிபாடானது எந்தக் கடவுளை வழிபடுகிறோமோ அதன் படிமம் அல்லது அதனை நினைவூட்டுவதும் கட்புலனாவதுமான ஒரு பொருளுக்கு முன்னர்த்தான் செய்யப்படவேண்டும்.
அக்கடவுளைக் குறிக்கும் தாயத்து, கருவி (வேல், தடி), உயிருள்ள மரம் / மரக்கட்டை, கல், ஆறு / ஓடை, லிங்கம், சாளகிராமக்கல் என்று எதை வேண்டு மானாலும் வழிபடலாம். குறிப்பாக வழிபடுபவர் அக்கடவுளுக்கு என்ன உருவத்தைக் கற்பித்துக் கொள்கிறார் களோ அந்த வடிவம் வரைந்த ஓவியம் அல்லது அவ்வடிவத்தில் அமைந்த உருவாரம் (செங்கல் - சுண்ணாம்பு, கல் = சமஸ்கிருதத்தில் சிலை, மாழை எதில் வேண்டுமானாலும் செய்யப்பட்டது) இவையே வழிபடப்படுகின்றன.
வேதாந்தம் வேதம் + அந்தம் = வேதாந்தம்
5. வேதத்தின் இறுதிப் பயன் வேதாந்தம். வைதீக கர்மத்தின் பயன் ஞானம். ஞானத்தின் மூலமாகவே சாகா நிலை, முக்தி எய்தலாம்.
தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்யாஹ் பந்தா அயனாய வித்யதே
(அவனை அறிந்தால் சாகா நிலை அடையலாம்; அவனை அடைய வேறு வழியில்லை) ஆகம வழிபாட்டின் பயன் பக்தி; இடைவிடாது அவனை நினைத்து வந்தால் சாகா நிலை அடையலாம். கிருஷ்ணன இதனை ‘‘ஏகபக்தி’’ என்கிறான். இவ்வாறு முக்தி அடைய வேண்டுமானால் உபநிஷத்துக்கள் கூறும் 32 வித்யை (முறை)களில் சிலவற்றைக் கைக்கொண்டு ஒழுக வேண்டும். ஆகமங்களின் சரியா, கிரியா (முதல், இரண்டாவது) புத்தகங்கள் சிவன் / விஷ்ணுவை வழிபடும் முறை களைத் தருகின்றன. பக்தியுடன் சிலருக்கு யோகமும் (ஓகமும்) தேவை யென்பதால், எந்த ஆகமத்திலும் மூன்றாம் பகுதி யோகம் பற்றியது.
நான்காம் பகுதி ஞானம் பற்றியது. ஆகமங்களின் ‘‘ஞானம்’’ மேற்சொன்ன வேதாந்த ஞானம் அன்று; ஆகமக் கோட்பாடுகளின் படியமைந்த மெய் யியல் கொள்கைகளுக்கிசைந்த ஞானமே. வேதாந்தத்தின்படி புவியில் (பிரபஞ்சத்தில்) உள்ள ஒரே ஒரு மெய்மை பிரம்மம் மட்டுமே. ஆகமக் கொள்கையோ, தத்துவதிரயம் ஆகும்; அதாவது ஈசுவரன், சிவாத்மா, பிரகிருதி ஆகிய மூன்று மெய்மைகள் உள்ளன. ஒவ்வொரு ஆகமத்திலும் யோகம், ஞானம் பற்றிய பகுதிகள் உள்ளன வாயினும் ஆகமங்களே பக்தி மார்க் கத்தின் ஆதாரமான புனித நூல் களாகும் (வேதாந்த ஞானமார்க்கத்தின் ஆதாரமான புனித நூல்களாகிய உப நிஷத்துக்கள் போல). ஆகமங்கள் மக்கள் அனைவருக்குமானவை, எளி யவை. உபநிஷத்துக்கள் மிகச் சிலருக்கே பொருந்துபவை; அவை காட்டும் வழி கடினமானது. கீதையில் கிருஷ்ணன் சொல்வது ‘‘வெளிப்படையாகத் தெரி யாத பிரமத்தைத் தேடுபவன் அடைவது பெருந்துன்பம். அதனைத் தேடும் மார்க்கம் உயிரிகளுக்குத் தருவது துயரமே.’’
6. வேத சமயப்படி வருணங்கள் நான்கு; நான்காவது சூத்திரவருணத் தினர் வேதம் - வேதாந்தம் பயிலக் கூடாது. இதனால் வருணாசிரம முறை உருவானது. ஒவ்வொரு வருணத்துக் கும் விதிக்கப்பட்ட நடைமுறை வேறு. சன்னியாசம் பிராமணர்களுக்கு மட் டுமே உரியது. சன்யாசத்தின் பின்னரே முக்தி கிட்டும்; ஆக பிராமணருக்கு மட்டுமே முக்தி. ஆகமக் கொள்கை இதற்கு மாறானது.
யாரும், சண்டாளன் உள்பட, விஷ்ணு, சிவன் உருவாரத்தை வைத்துப் பூசை செய்யலாம். (காள ஹஸ்தி) சிவனுக்கு ஊன் படைத்து முக்தி பெற்றான் வேடன் கண்ணப்பன்; பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆன கி.பி. 8 ஆம் நூற்றாண்டுத் திருப் பாணாழ்வார் (திருவரங்கம் கோவிலுக் குள் நுழைந்தாலே தீட்டு உண்டாக்கும் சாதியினர்) ஆகமங்கள் நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்கவில்லை. வேதங்களின் பகுதியான வேதாந்தமோ சூத்திரர்களுக்குரியதல்ல. பதராயணன் வேதாந்த சூத்ரம் மி (வீவீவீ) 35 - 38 ல் ‘சூத்திரனுக்கு சம்ஸ்காரங்கள் உரிய வையல்ல; எனவே, வேதம் படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது’ என்கிறான்.
ஆகமங்களோ அனைத்து மக்களுக்கும் உரியவை. இன்றும் சிவதீக்கை பெற்ற பறையன் பிராமணனுக்கு தீக்கை கொடுத்து அவனுக்கு குரு ஆகலாம். ஆகம சமயத்தார் அனைத்து ஜாதி யினரிடமும் சன்யாசமும் பரவியது. (வைணவத் துறவி ஏகாந்தி; சைவத் துறவி சிவயோகி). ஆகமக் கோட்பாட் டின்படி முக்தி பெற சன்யாசியாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை; பக்தி அனைத்துச் சாதியினருக்கும் பொது, இல்லறத்தானும் பக்தி செலுத் தியே முக்தி பெறலாம். சில பக்தர் துறவிகளானது ஏன்? ஆகமங்களின்படி, யோக மார்க்கமும் முக்திக்கு ஒரு வழியாகும். துறவி வாழ்க்கை யோக மார்க்கத்துக்கு உகந்தது; எனவே, யோக மார்க்கத்தின் மூலம் முக்தி பெற விரும்பிய பக்தர்களும் துறவிகளாயினர்.
வைதீர்களுக்கும் ஆகமவாதிகளுக்குமிடையே போட்டி
7. பழங்காலத்தில் வைதீகர்களுக் கும், ஆகமவாதிகளுக்கும் இடையே பெரும் அளவுக்குப் பகை இருந்து வந்தது. ஆகமவாதிகள் தெய்வத்தின் பெயரால் யாகங்களில் ரத்தம் சிந்துவது, ஊனுண்ணல் (குறிப்பாக மாடுகளின் ஊனை உண்ணல்) ஆகியவற்றை எதிர்த்தனர். அவர்கள் எதிர்ப்பை மாபாரதமும் குறிப்பிடுகிறது. பிற்காலத் தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப்பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு, மாடு களுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ பயன்படுத்தப்பட லாயின.
ஆகமவாதிகளின் ஒரு பிரிவினரான பாகவதர்களின் புனித நூலே பகவத் கீதை ஆகும். பாகவதர் களின் பக்தி, வேதாந்த ஞானம், சாங்கி யர்களின் நுண்ணிய மெய்யியல் இவை யனைத்தையும் இணைத்து ஒரே மெய்ம்மையின் தனித்தனி வடிவங்களே இம்மூன்றும் என்றவாறு அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் கண்ணன். எனி னும் ஆகமக் கொள்கையின் காரத்தை விடாமல் வேத கர்ம காண்டத்தை கீதை கடுமையாகக் கண்டிக்கிறது.
‘‘ஞானமற்றவர்கள் வோதந்த அடிப்படையில் ஏட்டுச் சுரைக் காயாக ‘‘கர்ம காண்டம் ஒன்றே வழி’’ என்பர். எனினும் அவர்கள் நெஞ்சில் உள்ளது ஆசை. கரும பலனாக சுவர்க்க போகத்தையும் மறுபிறவி யையும் இச்சித்து எண்ணற்ற சடங் காசாரங்களைப் பின்பற்றுகின்றனர். போகமும், அதிகாரமும் அவர்கள் நெஞ்சை ஆட்டிப் படைப்பதால் அவர்கள் புத்தி சாந்தமான சிந்தனை யையும், ஞானத்தையும் நாடு வதில்லை. முக்குண வசப்பட்டவற் றையே வேதம் விளம்புகிறது. அர்ச் சுனனே நீ முக்குணவசப்பட்டவற் றுக்கு மேலானவற்றையே நாடு வாயாக.’’
வைதீகர்கள் ஆகமவாதிகளை மிக இழிவாகக் கருதினர். மந்திரம் ஓதாத வரும் ‘‘ம்ருத்ரவாச’’ரும் ஆன தஸ்யூக் களை ஆரியர் இழிவாகக் கருதினர் அன்றோ. அதன் தொடர்ச்சியே இது. யமுனாசார்யர் காலத்திலிருந்தே வைதீக, ஆகம மார்க்கங்கள் இணைந்து விட்ட போதிலும் பழைய உணர்வு இன்றும் உள்ளது. சிவன் / விஷ்ணு கோவில் பூசை செய்பவர்களை வேதாந்திகள் இன்றும் தங்களை விடக் கீழ்ச் சாதியினராகவே கருதுகின்றனர். எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கு முன்வரை (அதாவது 1880 இல்) அத் வைத வேதாந்தக் கொள்கையினர் எந்தக் கோவிலுக்குள்ளும் செல்லார். வேதாந்தக் கொள்கையே ஆகம வழிபாட்டைக் கண்டித்தது. பதராயணன் பாசுபதம், பாஞ்ச ராத்திரம் இரண்டை யும் கண்டித்துள்ளான்.
ஆகமங்கள் எப்பொழுது தோன்றின?
8. முதல் உலகப் போரில் (1914-18) சில கோடி மக்கள் செத்த பின்னர் இன்று உலகில் பல்துறை மாற்றங்களைக் காண்கிறோம். அதுபோல பாரதப் போரில் ஏற்பட்ட பெரும் உயிரிழப் புக்குப் பின்னர் இந்திய மக்கள் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ரிஷிகள் காலம் போயே போய்விட்டது. வேத கர்ம காண்டம் இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக் குமெனக் கூறிய கருமபலனாகிய புல னுகர்ச்சியின்மீது மக்களிடம் வெறுப்புத் தோன்றியது.
மாறும் பிருகிருதி நடுவே மாறாது நிலையாக உள்ள பரபிரம்மம் மீது சிந்தனை செலுத்திய ஞானிகள்.  உபநிஷத்துக்களில் 32 வழிகளை (வித்யா) உருவாக்கினர். உபநிஷத்துக் கள் கர்ம காண்டத்தில் பிறந்தவை; எனவே, அக்காண்ட வாசனை சாந் தோக்ய, பிரஹதாரண்ய உபநிஷத் துக்கள் கூறும் ‘‘வழிகளில்’’ உள்ளன. மக்களுள் பெரும்பாலோர் எளிமை யானவர்; உபநிஷத்துக்கள் கூறும் மித மிஞ்சிய தத்துவக் கருத்துக்களும், வழிமுறைகளும் அவர்கள் கைக் கொள்ளக் கூடியன அல்ல. அவர் களுக்காகவே ஆகமக் கருத்துக்களும், வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன -
சாதாரண உலகியல் வாழ்க்கையிலி ருந்து, ஆசானையும் - அரசனையும் போற்றும், வழிபடும் முறையைப் பின் பற்றிக் கடவுள் வழிபாட்டு முறைகளும், ஆகமங்களில் உருவாயின. பாரதப் போர் முடிந்த காலகட்டத்தில் உபநிஷத் துக்களும் தோன்றின; ஆகமங்களில் முதன்மையானவையும் தோன்றின.
ஆகமங்கள் எதிலிருந்து தோன்றின?
9. இதற்கு விடை தருவது சற்றுக் கடினம். ஆகம வழிபாட்டில் அக்னிக்கு இடமில்லை; வேத மந்திரமும் இல்லை. எனவே, அது தஸ்யூக்களிடமிருந்து உருவாகியிருக்கவேண்டும்; ஆரிய வழிபாட்டு முறை உருவாவதற்கு முன் னர் தஸ்யூக்கள் வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும். வேதங்களும் அவற்றிலிருந்து உருவான மாபெரும் வேதாங்க சாத்திரங்களும் நம் கண்முன் மலைபோல் நிற்பதால் வேத காலத்தில் தஸ்யூ வழிபாட்டு முறையின் நிலை என்ன என்று நாம் நினைப்பதில்லை.
(அய்ரோப்பிய அறிஞர்களும் ஆரியர் - தஸ்யூக்கள் சச்சரவுபற்றியும், முன்னவர் பின்னவரோடு எப்படிக் கலந்திருப்பர் என்று உன்னிப்பது பற்றியுமே கவனம் செலுத்துகின்றனர்!) வேத வழிபாடு சார்ந்த ஸ்ரௌத யக்ஞங்கள் என்றும் பெரும்பான்மை மக்கள் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை. பிராமண ரித்விக்குகள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். அந்த யக்ஞங்களை நடத்தும் செலவை அரசர்களும், வணிகர்களும் ஏற்ற போதிலும் அவர்கள் யக்ஞம் நடத்து வதில் பங்கேற்க இயலாது. இல்லத்தில் நடத்தும் அக்னிச் சடங்கு மந்திரங்களை அதர்வண வேதம் தந்த போதிலும் அவற்றை மக்களுள் பெரும்பான்மை யினர் பின்பற்றியதற்கு ஆதாரமில்லை.
வேத காலத்திலும் பொதுமக்கள் தஸ்யூ வழிபாட்டு முறையையே பின்பற்றி வந்திருக்கவேண்டும். அவ்வழிபாட்டு முறை எப்படி இருந்திருக்கும்? தமிழ் நாட்டின் தொன்மைச் சமய வழிபாடு பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். அதுபோன்றுதான் வட இந்தியாவிலும் தஸ்யூக்கள் வழிபாட்டு முறை இருந்தி ருக்கவேண்டும். பாட்டு, கூத்துச் சடங்குகளுடன் இன்றும் தம் தெய் வத்துக்கு உணவு படைத்து வணங் கும் வழிபாட்டு முறை போன்றே தஸ்யூ வழிபாட்டு முறை இருந்திருக்கும். சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்ட பொழுது நடந்த சமயச் சடங்குகளை வால்மீகி வருணிப்பது தஸ்யூக்கள் வழிபாட்டு முறைதான்.
10. மாபாரதப் போர் முடிந்த பின்னர் அக்னிச் சடங்குகள் குறைந்து கொண்டே வந்தன; அதனால், தொழில் இழந்த பிராமணர் அக்னி சாராத ஆகம வழிபாட்டு முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டி ருக்கவேண்டும். நுண்ணிய ஏட்டுச் சுரைக்காய் மெய்ம்மைகளையே கைக் கொண்டு வாழும் உயர்ந்த மனநிலை யுடையோர் எப்பொழுதும் ஒரு சிலரே. எளிய உருக்கமான மனநிலை கொண் டோரே பெரும்பாலோர், அவர்களை பக்தி மார்க்கம் கவர்ந்தது. இதுவும் பிராமணர் பக்தி மார்க்கத்திற்குள் புகுந்ததற்கு ஒரு காரணமாகலாம். புகுந்த பின்னர் திரி மூர்த்திக் கோட்பாட்டை உருவாக்கினர்
(பிர கிருதியின் முக்குணம் பற்றிக் கூறிய சாங்கியக் கோட்பாட்டைப் போன்று) விஷ்ணுவின் அவதாரங்கள் பல (பாகவத புராணப்படி 22) என்று கூறினர்; சிவன் அவ்வப்பொழுது தற்காலிகமாக மனித உருவம் எடுப்பான் என்றனர். வைணவ ஆகமங்கள் 108, சைவ ஆகமங்கள்; (பின்னர் எழுந்த) சாக்த ஆகமங்கள் 77, ஆகியவற்றை உருவாக்கினர். படைப்பதுடன் பிரமன் வேலை முடிகிறது; அவன் முக்தி தருபவன் அல்லன். எனவே, பிரமனை வழிபட ஆகமங்கள் ஏற்பட்டில. சிவன் / கிருஷ்ண வழிபாட்டைப் பாணினியே குறிப்பிட்டுள்ளார்.
11. மெதுவாக, படிப்படியாக வேதாந் தக் கோட்பாடும், ஆகமக் கோட்பாடும் ஒன்றை ஒன்று நெருங்கின. புராணங் களில் அவை இரண்டும் காணப்படு கின்றன; ஆனால், ஒன்றாக இணைய வில்லை. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு சார்ந்த சங்கராச்சாரியின் காலத்தில்கூட அவை ஒன்றாகவில்லை; பதராயணன் வேதாந்திர சூத்திரத்திற்கு உரை எழுதும் அவர் பதராயணனைப் போலவே கூறுகிறார் -
பாசுபதமும் பாஞ்சராத்திரமும் பதித சமயங்கள் என்று. எனினும் அவருடைய பிரபஞ்ச ஹ்ருதயம் ஆகம வழிபாட்டு நூலே என்பதுடன் அவரை சண்மதஸ்த பனாச்சார்யர் என்று அழைப்பதையும் கருதுக. விஷ்ணு, சிவன், சக்தி, கணபதி, சுப்ரஹ்மண்யன், சூர்யன் இவர்கள் அறுவரின் வழிபாட்டு முறைகளை அவர் ஒழுங்குபடுத்தி தாம் தொடங்கிய மடங்களிலும் அம்முறைகளை நிலை பெற வைத்தார். அவர் வேதாந்த வழிபாட்டையும், ஆகம வழிபாட்டை யும் தனித்தனியாகவே வைத்தார். விசிஷ்டாத்வைதம் எனப்படும் வைஷ் ணவ வேதாந்தத்தை நிறுவிய யமுனா சாரியார்தான் முதன்முதலாக வைஷ் ணவ (சாத்விக) ஆகமங்களும் வேதங் களையொத்த பிராமணங்கள் தாம் என்று வாதிட்டவர்; அவரைத் தொடர்ந்த ராமானுஜாச்சாரியார் இரு வழிபாட்டு முறைகளையும் முதன் முதலில் ஒன்றாக இணைத்தவர். ஆயி னும் தென் இந்தியாவிற்குள் ஆகம வழிபாட்டு முறை பரவி வெகு காலம் கழித்தே இது நடந்தது; எப்படிப் பரவி யது என்பதைப் பின்னர்க் காண்போம்.
12. ஆகம வழிபாட்டு முறை வடநாட்டில் தொடங்கியதை இதுவரை விரிவாகக் கண்டோம். (ஆரியருக்கு முந்தி இந்தியாவில் வழங்கிய வழி பாட்டு முறைகளிலிருந்து தழைத்த) அம்முறை கி.பி. 5 - 6 ஆம் நூற்றாண் டுகளில் தென்னாட்டு மக்கள் மனதை யும் கைப்பற்றியது; அது மட்டுமல்ல, பின்னர் வேதாந்தக் கலப்புடன் அது வடநாட்டிலும் பரவி 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதுமே ‘‘வாழும் இந்து மதத்தின்’’ வழிபாட்டு முறையாக ஆகம வழிபாடே விளங்கி வருகிறது என்று ‘‘தமிழர் வரலாறு’’ எனும் நூலில் பி.டி. சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு தெளிவற்ற நிலையில் பல்வேறு பரிமாண மாற்ற நிலைகளைக் கொண்டதுதானே இன்றுள்ள ஆகம வழிபாடு?
அதையும் எத்தனைக் கோவில்கள் கடைப்பிடிக்கின்றன!
ஆகமப்படி உள்ளவர்கள்தானா இன்றைய பிரபல கோவில்களில் அர்ச் சகராக உள்ள பார்ப்பனர்கள் என்பதை யும் ‘ஆகமப் பூச்சாண்டி’ காட்டுவோர் சிந்திக்கவேண்டும்.
இதன் பிழிவையும், இதேபோல் மற்ற சில அறிஞர்கள் - ஆய்வாளர்களது கருத்தை நாளையும் தொடர்ந்து தருவோம்.
-விடுதலை,23.12.15

ஆகமங்கள்படி பார்ப்பனர் கோயில்களில் நுழைய உரிமை இல்லை


- பி. சிதம்பரம் பிள்ளை

இந்துக் கோவில்கள் எக்காலத்திலும் சகல சாதி மதஸ்தர்களுக்கும் உரித்தான தாகவேயிருந்தன. இந்த நோக்கத்துடன் தான் அவை ஸ்தாபிக்கப்பட்டன. நேற் றுத்தான் இதில் சச்சரவுகள் ஏற்பட்டன.
ஆகமங்களை நாம் சரிவரப் படித்துணர்ந்தால், பிராமணனுக்கு ஒரு கோவிலிலாவது நுழைந்து வழிபட உரிமையில்லை யென்பதையும். இங்கிலீஷ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை சட்டத்தையும் பாமர மக்களின் அறியாமையையும், மூட நம்பிக்கை யையும் தனக்குச் சாதகமாக்கி உபயோ கப்படுத்தியதால் அவன் அடைந்துள்ள சகல உரிமைகளையும், இழக்க நேரிடுமென்பதையும் அறியலாம். இந்தக் காரணத்தால்தான், பிராமணர்களுக்கு ஆகமங்கள் மீது பயம் ஏற்படுகின்றது.
ஆகமங்களுக்கும். ஸ்மிருதிகளுக்கு முள்ள வித்தியாசமென்ன என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும். இதைப் பற்றி விரிவாக திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களும், திரு.பி.டி. சீனிவாசய்யங்கார் எம்.ஏ. எல்.டி. அவர்களும் எழுதியிருக்கிறார்கள்.
"ஸ்மிருதிகளின் உற்பத்தி வேத மாகும். ஆகமங்களின் உற்பத்தி திராவிட மாகும். இந்த வித்தியாசம் மிக முக்கிய மானது." இருபிறப்பாளர் மட்டுமே வேதங்களைப் பயிலலாம். ஆனால் சகல சாதி மதஸ்தர்களும் ஆகமங்களைப் பயிலலாம். அதாவது ஒருவன் பறையனாகிலும் சரி, சக்கிலியனாகிலும் சரி, சண்டாளனாகிலும் சரி ஆகமங் களைச் சரிவரக் கற்றுக் கொள்ள அவ னுக்கு உரிமை உண்டு. வேதங்களையும், ஸ்மிருதிகளையும் பயில்வதிலிருப்பது போன்ற கட்டுப்பாடு எதுவுமில்லை.
ஆகையினால், ஆகமங்களைத் தழுவிய பிராமணர்களைப் பிராமண சமூகத்தில் கடைப்பட்டவர்களென வேதியர்கள் கருதுவார்கள். அது மட்டுமல்ல; பிறப் பினால் ஸ்மிருதிகளையும், புராணங் களையும் படிக்கத் தகுதியற்றவர்களாக இருப்பவர்களுக்கே ஆகமங்கள் ஏற்பட்டன வென்றும் அவர்கள் சொல் கிறார்கள் ஆகமங்கள் சர்வ சமய சமரச மான பரந்த நோக்கமுடையவை களாகவும், வேதங்கள் மிகக் குறுகிய நோக்கமுடையவைகளாகவுமிருப் பதைக் கண்டு. கல்கத்தா ஹைக்கோர்ட் நீதிபதியாக இருந்த சர் ஜான் உட்ராப் என்பவர் அதிசயிக்கிறார்.
ஆகம முறைப்படி வழிபாடு நடை பெறுகின்ற கோவில்களெல்லாம் தென் னாடு முழுவதும் இம்முறைதான் கைக் கொள்ளப்படுகிறது - இரு பிறப்பாளருக்கு மட்டுமென்ற வரையறையின்றி எல்லா வகுப்பினருக்கும். எல்லா சாதியினருக்கும் பொதுவானவையென்பது மேலே எடுத்துக்காட்டப்பட்டவற்றினின்றும். இனிக் கூறப் போவதனின்றும் அறியக் கிடக்கின்றது. நான் இதை இன்னும் தெளிவுபடுத்துகிறேன்.
பணகுடி ஆலய வழக்கில் ஜஸ்டிஸ்-கதாசிவ அய்யர் அவர்கள் குறிப்பிட்ட இரண்டு விஷயங்களை இங்கே கவனிக்க வேண்டும்:
1) “கர்ப்பக்கிரகத்தைப் பொறுத்தமட்டி லும், கோவில் பூசாரியினத்தைச் சேர்ந்த பார்ப்பனருக்கு மாத்திரந்தான் கர்ப்பக் கிரகத்துக்குள் நின்று வழிபட உரிமை யுண்டு. சாதாரண பார்ப்பனர்களும், பிள்ளைமார்களும், முதலியார்களும் வெளி மண்டபத்தில் நின்றுதான் தொழ உரிமை உடையவர்கள்”
2) சாதாரண பார்ப்பனர்கள் கர்ப்பக் கிரகத்தினுள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டதில்லை. ஏனெனில், தீட்சை பெறாத பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிப்பதனால் அவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் விக்கிரகத்துக்குத் தீட்டு ஏற்படுவதாகக் கருதப்பட்டு வந்தது.
ஆகவே, ஆகமங்களைப் பற்றிச் சிறிதேனும் தெரிந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரவர்களின் அபிப்பிராயப்படி சாதாரண பிராமணன் கர்ப்பக்கிரகத்துக் குள் பிரவேசிக்கக் கூடாது பிரவேசித்தால் "தீட்டு ஏற்படும். அவ்விதம் பிரவேசிக்க உரிமையுள்ளவர் அவருடைய அபிப் பிராயப்படி கோவில் பூசாரி இனத்தைச் சேர்ந்த பார்ப்பனர்தான். இந்தக் கோவில் பூசாரி இனத்தைச் சேர்ந்த பார்ப்பனர் யாரென்று ஆராய்வோம்.
கோவில் பூசாரிகள் பார்ப்பனர்களில் மிகக் கேவலமானவர்கள் என்று கருதப் படுகிறார்கள். மனு காலத்திலிருந்தே இந்த உணர்ச்சியிருந்து வருவதாகத் தெரிகிறது என்று அறிவு முதிர்ந்த திரு. பி.ஆர். கணபதி அய்யர் அவர்கள் கூறுகிறார்.
ஜஸ்டிஸ் சேஷகிரி அய்யர் அவர்கள் (பிரிவு கவுன்ஸில்வரைச் சென்ற ஒரு வழக்கில்) இவ்வாறு கூறுகின்றார்:- பிரதிவாதியின் குடும்பஸ்தர்கள் (அதாவது கவுண்டர்கள், வெள்ளாளர் அல்லது சூத்திரர்கள் இந்தக் கோவில் அர்ச்சகர்கள். ஆனால், இவர்கள் கோவில் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களல்ல வென்பது உண்மை தான். எனினும் இன்ன வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் கோவிலில் பூசை செய்யலாமென்பதாக விதி எதுவுமில்லை”.
பேர் பெற்ற சிதம்பரம் க்ஷேத்திரத்தில் ஏராளமான தீட்சதர்களிருக் கின்றார்கள் அவர்கள் பூசை செய்யும் கடவுளோடு தாங்களும் பூலோகத்துக்கு இறங்கி இந்துவிட்தாகக் கூறுகிறார்கள் ஆனால் இந்த தீட்சதர்கள் சாதாரண கோவில் அர்ச்சகர் வகுப்பைச் சேர்ந்தவர்களல்ல.
சுருங்கச் சொல்லுமிடத்து, சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் பார்ப்பனர்களல்ல. கோவில் பூசாரி பிராமணனாக இருக்க வேண்டுமென்பதில்லை. எந்தக் குறிப் பிட்ட வகுப்பையோ, சாதியையோ சேர்ந் திருக்க வேண்டுமென்ற நியதியுமில்லை.
ஜஸ்டிஸ் சேஷகிரி அய்யரவர்களின் மேற்சொன்ன அபிப்பிராயத்தை பிரிவி கவுன்ஸிலர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர் ஒரு இந்துப் பொதுக் கோவிலில் பூசாரி யாக இருப்பது ஒருவேளை நூதனமாகத் தோன்றலாம். ஆனால், சென்னை மாகாணத்திலுள்ள சில இந்துப் பொதுக் கோவில்களில் சூத்திரர்கள் பூசாரிகளாக இருப்பது வெளிப்படை' ஆகையினால் ல்ட்கோவில்பூசாரி பார்ப்பனர்கள்' என்று ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர். அவர்கள் சொன்னதை மற்றொரு பிராமண உரை யாசிரியரான பி.ஆர். கணபதி அய்யர் அவர்கள் “தாழ்ந்த பிராமணர்கள்” என்பதாகத் சொன்னர் ஜஸ்டிஸ் சேஷகிரி அய்யரவர்களும் பிரிவி கவுன்ஸிலர் களும் பிராமணரே அல்ல வென்பதாகவும் ஆனால், சூத்திரரென்றும் சொன்னார்கள்.
இத்தகைய சூத்திரனுக்குத்தான் கர்ப் பக்கிரகத்தினுள்ளே பிரவேசிக்க உரிமை யுண்டு சாதாரண பார்ப்பனனுக்குப் பிர வேசிக்க உரிமையில்லை. சங்கராச்சாரி யார் கூடப்பிரவேசிக்க ஆகமப்படி உரிமையில்லை. ஏனெனில் அவர் தீட்சை பெற்றவரல்ல, ஆகையினால் ஆகமப்படி, பிராமணன் தொழுவதனால் விக்கிரகத் துக்குத் தீட்டு ஏற்படுகின்றது. சூத்திரன் பூஜை செய்வதனால் கடவுளுக்குத் திருப்தி உண்டாகின்றது. இன்னும் அனேக விஷயங்களிலிருக்கின்றன.
1) தீட்சை பெற்ற பிராமணன் கூட சைவக் கோவில்களிலிருக்கும் விக்கிர கங்கள் எதையும் தொடக் கூடாது. ஆனால், மடப்பள்ளியில் சமையற் காரனாகவோ அல்லது வேறு தாழ்ந்த வேலைகளைச் செய்பவனாகவோ இருக்கலாம்.
2) தீட்சை பெற்ற பறையன்கூட தீட்சை பெறாத பிராமணன் கையிலி ருந்து உணவோ தண்ணீரோ பெறக் கூடாது.
(3) 'தீட்சை பெறாத பிராமணனை அன்னிய மதஸ்தனென்று கருத வேண்டும்.'
சகல இந்துக்களுக்கும் - தீண்டத் தக்கவர்க்கும், தீண்டத் தகாதவர்க்கும் - ஆகம முறைப்படி தென்னிந்தியக் கோவில்கள் எல்லாம் திறந்திருந்தன வென்பது மேலே குறிப்பிட்டவற்றினின் றும் இன்னும் குறிப்பிடப்படுவன வற்றினின்றும் விளங்கும். உண்மை யிலேயே அந்தக் காலத்தில் ஆலயப் பிரவேசத்தில் யாருக்கும் எவ்விதமான தடையுமிருந்ததில்லை என்பது ஆக மங்களைச் சரிவரப் படித்தவர்களுக்குப் புலனாகும். இன்று ஏற்பட்டுள்ள தடை யானது ஆகமத்துக்கு முரணானதும், மதத்துக்கு விரோதமானதும், அரசியல் காரணமாக ஏற்பட்டதுமாகும்.
ஆகமத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரியார் கூறுவதாவது: சைவ மதமும், வைஷ்ணவ மதமும், பறையர்கள் உள்ளிட்ட் சகல சாதிக்காரர்களையும் தம்மிடம் உட்படுத்திக் கொள்ளும் படியாகத் தீட்சை யென்ற சம்பிரதா யத்தைக் கைக்கொண்டிருக்கின்றன. ஒரு பறையனுங்கூட - அவன் இந்த சமயங் களில் சேர்ந்தவனாகவும் பரிசுத்தமான பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ப வனாகவுமிருந்தால் - ஆலயத்தினுள் பிரவேசிக்கலாம். வர்ணாசிரம தர்மமே பஞ்சமர்களை ஆலயத்தில் நுழைய வொட்டாமல் தடுத்தது.
(நூல் ஆலயப்பிரவேச உரிமை - அத்தியாயம் 10 - ப: 74-77)
(தொடரும்)

- பி. சிதம்பரம் பிள்ளை

ஆகமங்களின் அடிப்படையான கொள்கைகள் அடியில் வருமாறு:
1) வைதிகப் பார்ப்பானைக் கோவிலில் நுழையாமல் புறக்கணிப்பது மட்டுமன்றி, அவனை அன்னிய மதஸ்தன் என்றும் கருத வேண்டும்.
2) கோவில் பூசாரியாவதற்குரிய சோதனை தீட்சையொன்று தான்; சாதியோ, வகுப்போ அல்ல.
3) தீட்சை பெறாத பிராமணன் கோவிலுக்குள் சமையற்காரன் போன்ற வேலைக்காரனாகக்கூட இருக்க முடி யாது. அவன் விக்கிரகத்தைத் தொடக் கூடாது; கர்ப்பக் கிரகத்துக்குள் பிரவே சிக்கக் கூடாது.
4) பிராமணனுக்குத் தீட்சை பெற அருகதையிருப்பதுபோலவே, ஒரு பறை யனோ, சண்டாளனோ தீட்சை பெறலாம்.
5) ஆகமப்படி கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கும், வழிபடு வதற்கும், சாதி, வர்ணம், வகுப்பு இவற்றைப் பற்றிக் கவனிக்க வேண்டியதில்லை. கடவுள் சந்நிதானத்தில் சாதி இந்துக்களும், சாதி இந்துக்களல்லாதவர்களும் ஒன்றுதான். இதுதான் ஆகமங்களின் தத்துவம்.
6) ஆகமங்கள் ஒரு வகுப்பாருக்கு உயர்வும்.மற்றொருவகுப்பாருக்குத் தாழ்வும் கற்பித்ததில்லை. .
சுருங்கச் சொல்லுமிடத்து. சகல கோவில்களையும், எல்லா மக்களுக்கும் எவ்வித வித்தியாசமுமின்றி இந்த ஆகமங்கள் திறந்து விட்டன. எல்லா மக்களும் தீட்சை பெற்று வழிபட வேண் டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. இதைத் தவிர, வேறு மாறுபாடான பொருள் கற்பிப்பது அசம்பாவிதமாகும்.
அவ்வாறு கற்பிப்பதற்கு இடமில்லை; ஏனெனில், அன்னிய மதஸ்தராகக் கருதப்பட வேண்டிய வைதிகப் பார்ப் பனரைக் கூடக் கோவிலுக்குள் நுழைய ஆகமங்கள் அனுமதியளித்தது. அவர் களும் தீட்சை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்றி வேறல்ல. கோவிலுக்குள் சென்று வழிபட்ட பிறகும் வைதிகப் பார்ப்பனர்கள் தீட்சை பெறா திருந்தால், அவர்களை யாரும் வெளியி லாக்கினதில்லை. ஆனால், விக்கிரகங் களைத் தொடவும், கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையவும், பூசாரிகளாக இருக்கவும், வேறுவிதமான வேலைகள் செய்யவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இன்றையத் தினம் இந்துக் கோவில் களில் பிராமணர்கள் நுழைந்திருப்ப தினின்றும் பண்டைக் காலத்தில் எல்லா மக்களுக்கும் ஆலயப் பிரவேச உரிமை தாராளமாக அளிக்கப்பட்டிருந்தது என்பது வெளிப்படையாகின்றது. ஆகவே, ஆகமங்களுக்கு விரோதமான வைதிகப் பார்ப்பனரைக் கூடக் கோவிலுக்குள் நுழையவிட்டிருந்தார்களென்றால், அக்காலத்திலிருந்த சமண மதஸ்தரையும், புத்த மதஸ்தரையும், பறையரையும், பிராமணரையும், எல்லா பேர்களையும் தீட்சை பெறும் பொருட்டு கோவிலுக்குள் நுழைய விட்டிருப்பார்கள் என்பது உறுதியாகின்றது.
அதாவது, இப்பொழுது மகமதியப் பள்ளிகளும், கிறிஸ்தவக் கோவில்களும் இருப்பது போன்று, அக்காலத்தில் இந்துக் கோவில்கள் எல்லா மதஸ்தர்களுக்கும் திறந்தேயிருந்தன என்பதாகும்.
“தமிழர்களின் சரித்திரம்” என்ற மிக ருசிகரமான புஸ்தகத்தில் (History of the Tamils by Mr. P.T.Srinivasa Iyengar, Reader of Indian History to the Madras University)
ஆகமங்களைப் பற்றி அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:
“வைதிக சாஸ்திரங்கள் மக்களை நான்கு வருணங் களாக வகுத்து, நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர் களை வேதம், வேதாந்தங்களைப் படிப்ப தினின்று நீக்கவும் செய்தன. மக்களை நான்கு வர்ணங்களாக வகுத்ததனின்றும் வர்ணாசிரம தர்மம் ஏற்பட்டு தர்மங்கள் வருணங்கட்கிடையே வகுக்கப்பட்டன. இதன் முடிவு பிராமணன் மட்டும் சன்னி யாசியா கலாமென்றும் சன்னியாசத்தைப் பயின்றால் மட்டுமே மோட்சம் கிடைக்கு மென்றும் ஏற்பட்டது. அதாவது வைதிக முறைப்படி, பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலாமென்பதாகும். ஆகமங் களோ இந்தக் கோட்பாடுகளையெல்லாம் எதிர்த்து நின்றன. ஒரு சண்டாளனுங்கூட, ஆகமப்படி விஷ்ணு அல்லது சிவனு டைய விக்கிரகத்தைப் பெற்று அதற்குப் பூஜை செய்யலாம்.
தாழ்ந்த வகுப்புகளைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவன் கோவிலுக்குள் சென்று தரிசித்திருப்பதைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. கண்ணப்ப நாயனார் காளகஸ்தி கோவிலில் சிவனுக்கு இறைச்சியைக் கொடுத்தார். எட்டாவது நூற்றாண்டிலிருந்த பாணனாழ்வார் மிகக் கேவலமான வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வகுப்பார்கள் சிறீரங்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெரு வீதிகளிற் கூட நடக்கக் கூடாது. ஆனால், அவரை யும் ஆழ்வாராக்கிக் கோவிலில் வைத்துப் பூஜித்து வருகின்றார்கள். நான்கு சாதிப் பாகுபாட்டை ஆகமங்கள் அங்கீகரிக்க வில்லை. ஆனால் வேதத்தில் ஒரு பகுதியான வேதாந்தமோ சூத்திரர்கள் பயிலக் கூடாததாக இருந்தது. கிரியைகள் மூலம் பரிசுத்தமடைய சூத்திரர்களுக்கு உரிமை இல்லையாதலால், அவர்கள் வேதங்களைக் கேட்கவோ, படிக்கவோ கூடாதென பாதராயணர் எழுதியிருக் கின்றார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக ஆகமங்கள் எல்லா பேரும் படிக்கக் கூடிய விதத்தில் திறந்தனவாக இருந்தன. ஆகையால் இன்றுகூட தீட்சை பெற்ற ஒரு பறையன் தான் பெற்ற உபதேசத்தை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கவும், அந்தப் பிராமணனுக்குக் குருவாக வரவும் முடியும்.”
அதே புஸ்தகத்தில் திரு. சீனிவாசய் யங்கார் அவர்கள் அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-
“வேதியர்கள் ஆகாமியர்களை மிகவும் இழிவாகக் கருதி வந்தார்கள். இது முன் காலத்தில் ஆரியர்கள் இந்நாட்டிலிருந்த மக்களோடு காண்பித்த வெறுப்பின் தொடர்ச்சியாகும். இந்த வெறுப்பின் தொடர்ச்சியினால் இப்பொழுதும் கோவில் பூசாரிகளை இழிவான பிராமணர்கள் என வேதாந்திகள் கருதுகிறார்கள். 50 வருஷ காலத்திற்கு முன்னால் வரையிலும் ஒரு கோவிலுக்குள்ளும் பிரவேசிக்காத வேதியர்கள் நான் அறிய இருந்து வந்தது எனக்குத் தெரியும். வேதாந்தம் ஆகம வழியைப் பலமாகக் கண்டித்தது.
ஆகையினால், ஆகமங்கள் வருணா சிரம தர்மத்துக்கு விரோதமானவை யாகும்.
எமிலி ஸெனார்ட் (Emile Senart) என்னும் பிரஞ்சு தேசத்து சமஸ்கிருதப் பண்டிதர் கூறுவதாவது:- ஆரிய சமுதாயம் இரு பிரிவா ஏற்பட்டுள்ளது. உயர்ந்த மூன்று சாதிகள் முதற் பிரிவிலும், நான்காவது சாதி மட்டும் இரண்டாவது பிரிவிலும் அடங்கின.
“முதல் வகுப்பில் இரு பிறப் பாளர்களான (Dvijas) ஆரியர்கள் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு இயற்கைப் பிறவியோடு மத சம்பந்தமாக உபநயனத்தினால் மற்றொரு பிறப்பும் ஏற்படுகின்றது. உபநயனத்தினின்றும் சூத்திரர்கள் விலக்கப்பட்டிருக்கின்ற மையால் - அதாவது இரண்டாவது பிறப்பு சூத்திரர்களுக்கு இல்லாதபடி யால் - சாஸ்திரங்களைக் கற்பதிலோ, கல்வி பயில்வதிலோ, உயர்ந்த மூன்று சாதியார்க்கும் ஏற்பட்டுள்ள யாகங்களி லும், சடங்குகளிலும் கலந்து கொள்வ திலோ அவர்களுக்குப் பங்கு கொள்ள இடமில்லை”.
“சில குறைந்த சடங்குகளை மட்டும் சூத்திரர்கள் செய்து கொள்ள சம்மதிக்கப் பட்டிருக்கிறதனால், ஆரிய சமூகத்தில் சூத்திரர்களுக்கு ஒரு தாழ்மையான இடமே கொடுக்கப்பட்டிருக்கின்றது”.
உபநயனத்தால் மட்டுமே ஒருவன் ஆரிய வருணத்தை அடைய முடியும் உபநயனம் பெறுவது வரையிலும் ஆரியன் சூத்திரனாகவே இருக்கின்றான் என்று மனு குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே, இம்மாதிரிப் பாகுபாடானது மத சம்பந்தமான பாகுபாடேயன்றி, கேவலம் சமூக சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு பிரிவல்ல.
உயர்ந்த மூன்று சாதியைச் சேர்ந்த ஒருவனது பிரேதத்தை ஒரு சூத்திரன் தூக்கிச் சென்றால், அந்த உயர்ந்த சாதிக்காரனுடைய ஆத்மா மோட்சம் அடைவதில்லை. பார்ப்பனர்களுக்குள் சில குற்றங்கள் ஏற்பட்டால் அவர் களைக் கண்டிப்பது அவர்கள் சூத்திரர் களாகி விட்டார்கள் என்ற காரணத் தாலேதான். அதாவது அவர்கள் சாதிப் பிரஷ்டர்களாகி விட்டார்கள் என்று பொருள்படும். சூத்திரன் செய்யக்கூடிய பெருங்குற்றம் - பாதகம் - ஒன்றுமே யில்லையென்று மனு மேலும் கூறுகிறார். “கொடும்பாதகம் செய்யக் கூடிய நிலை சூத்திரனுக்கு இல்லையென்பது மனு வின் கருத்தாகும். சூத்திரனுக்கு அளிக் கப்பட்டிருக்கும் அந்தஸ்து மிகத் தாழ்வானது. எனவே, அவன் எத்தகைய பெரிய குற்றத்தைச் செய்த போதிலும் அதைவிடத் தாழ்வான நிலை எய்தப் போவதில்லை. அவன் மேற்செல்ல வழியில்லாததால் கீழ் நிலையும் அடைய முடியாது”.
(நூல் ஆலயப்பிரவேச உரிமை - அத்தியாயம் 11 - ப: 78-82)
-விடுதலை,19,20.12.15