நான்கு வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், ஆகம நூல்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையெல்லாம் இந்து மத நூல்களாக மெத்தப் படித்த பண்டிதர்களும் இப்போதெல்லாம் ஒத்துக் கொள்வதில்லை. மேலுள்ள நூல்களில் உள்ள அபத்தங்களையும், ஆபாசங்களையும், அநீதிகளையும், வன்மத்தையும் எழுதினால், இப்போது இந்த நூல்களை யார் அறிவார்கள்? இவையெல்லாம் கட்டுக் கதைகள் என்கிறார்கள். பின் எந்த நூல்தான் ஹிந்து மதத்திற்கான நூல் என்று கேட்டால் இவர்களின் பதில், ‘பகவத் கீதை’ என்பதாகத்தான் இருக்கிறது.
பகவத் கீதையிலுள்ள முரண்பாடுகளை அபத்தங்களைப் பல கட்டுரைகளில் எழுதியிருந்தாலும் கீதையிலுள்ள இன்னுமொரு மிக முக்கியமான ஸ்லோகம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அந்த ஸ்லோகம் இதுதான்.
தஸ்மாச்சாசுஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திகதௌ |
ஜ்ஞாத்வா ஸாசுஸ்த்ரவிதா 4 நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ||
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ । -பகவத்கீதை:16:24
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥१६- २४॥
எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ தர்ம சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து தர்ம சாஸ்திர விதிகளில் கூறியபடி செய்யக் கடவாய்.
அதாவது, உனது சுய அறிவைப் பயன்படுத்தாது, சிந்திக்காமல், தர்ம சாஸ்திர நூல்களில் உள்ள விதிகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது.
அந்த தர்ம சாஸ்திர நூல்கள்தான் ரிஷிகளின் பெயர்களில் வழங்கிவரும் 18 நூல்கள் இதில் மநு, வஸிஷ்டர், கௌதமர், ஆபஸ்தம்பர், பராசரர், தேவலர், யாக்ஞவல்கர், ஹரிதர், அத்ரி, வியாசர் என பல ரிஷிகள் பெயரிலுள்ள நூல்கள் அடக்கம். இதோடு உப சாஸ்திர நூல்களும் பல உண்டு. இந்தச் சாஸ்திர நூல்கள் அனைத்தும் இருபிறப்பாளர்களுக்கு அதிலும் முக்கியமாக பிராம்மணர்களுக்குச் சாதகமாகவே எழுதப்பட்டவை.
வேதம், வேதங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்திற்கும் ‘சாஸ்திரம்’ என்று பெயர் என கீதா தத்வவிவேசனீ கூறுகிறது. (கீதை 10.23).
பகவத்கீதையை உயர்த்திப் பிடிக்கும் சூத்திரர் பலருக்கு தர்ம சாஸ்திர நூல்கள் பற்றித் துளியளவும் தெரியாது. மேலுள்ள ஸ்லோகத்தின்படி கீதை 16:24, கிருஷ்ணன் தர்ம சாஸ்திர நூல்களே பிரமாண நூல்களாகக் கொள்ள வேண்டும் என்கிறார். அப்படிப் பார்த்தால் மநு தர்ம சாஸ்திரத்தையும் மற்ற தர்ம சாஸ்திர நூல்களையும் நீதி நூலாகவும் வழிகாட்டியாகவும் கொள்ளல் வேண்டும். மநு தர்ம சாஸ்திர நூலில் உள்ள அநீதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதனால் அதைத் தவிர்த்து, மற்ற தர்ம சாஸ்திர நூல்களில் உள்ள ஓரிரு ஸ்லோகங்களைக் கீழே தருகிறேன்.
“அக்னியில் வேள்வி கர்மங்களைச் செய்யும் வைதீகர்கள் (பிராம்மணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) அது முடியும் வரை சூத்திரப் பெண்களை நெருங்குதல் கூடாது. கருப்பு இனத்தவளான அவள் நாய் போன்றவள். காம இச்சைக்குத் தவிர, அவளை வேறு எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயங்களிலும் ஈடுபடுத்துதல் ஆகாது!”
வசிஷ்டா சம்ஹிதா (அத் 16)
“ருதுவுக்கு (ரஜஸ்வலையாகுமுன்) முன்பே கன்யா ப்ரதானம் (விவாஹம்) செய்துவிட வேண்டும்”
“அந்தப்படி ருதுவுக்கு முன் வரனிடம் கன்னியைக் கொடுக்காதவன் தோஷ முள்ளவனாவான்”
“கன்னியை லஜ்ஜை அறிந்து வஸ்திரம் கட்டிக் கொள்ள ஆரம்பிக்கும் முன்பே கன்யாதானம் (விவாஹம்) செய்துவிட வேண்டுமென்று சிலர் சொல்லுகிறார்கள்”
கௌதம மஹரிஷியின் தர்ம சாஸ்திரம் XVIII
“சூத்ரன், பதிதன் (வர்ணாசிரமத்தைத் கடைப்பிடிக்காதவன்) ஆகிய இருவர் விஷயத்தில் ஸ்மசானத்திற்குச் (சுடுகாடு) சொன்னபடி நியமம். இவ்விருவர்களின் ஸமீபத்தில் அத்யயனம் செய்யக்கூடாது.”
“சூத்ரனோ, பதிதனோ இருக்கும் ஒரு கட்டிடத்தில் அத்யயனம் செய்யக் கூடாதென்று சில ஆச்சார்யர்கள் நினைக்கிறார்கள்.”
ஸ்ரீ ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்,
முதல் ப்ரஸனம்
மூன்றாவது படலம் ஒன்பதாவது கண்டிகை.
“வேதங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் அறிந்த நான்கு பிராம்மணர்கள் பரிஷத் எனப்படுவர். அல்லது மூன்று வேதங்களையும் அறிந்த மூவராவது பரிஷத் எனப்படும். அந்த பரிஷத் எதைச் சொல்லுமோ அது தர்மமாகும். அல்லது அத்யாத்ம சாஸ்திரமும் (தர்ம சாஸ்திரமும்) அறிந்தவரில் சிறந்த ஒருவனாவது எதைச் சொல்வானோ அது தர்மமாகும்”
– யாக்ஞயவல்கியர் தர்ம சாஸ்திரம்
“வேதம் முழுவதும் கற்றவர்கள் நால்வர் அல்லது மூவர் எதைச் சொல்லுவார்களோ அது தர்மமாகும். மற்றவர் (வேதம் கற்காதவர்) ஆயிரம் பேர்கள் சொன்னாலும் தர்மமல்ல.
தர்மசாஸ்திரமெனும் தேரில் ஏறியவரும், வேதமெனும் கத்தியைத் தரித்தவருமாகிய பிராம்மணர்கள் விளையாட்டிற்காகவாவது எதைச் சொல்லுவாரோ அது சிறந்த தர்மமெனப்பட்டுள்ளது.”
– பராசரர் எழுதிய தர்ம சாஸ்திரம்
“கலியுகத்தில் சாந்தர்களும், வித்வான் களுமாகிய பிராம்மணர்களின் கூட்டமே சிறந்ததெனப்படுகிறது.”
– தேவலர் எழுதிய தர்ம சாஸ்திரம்
உதாரணத்திற்கு ஒரு சில ஸ்லோகங் களை மட்டுமே இக்கட்டுரையில் எழுதி யிருக்கிறேன். கடலில் விழுந்த மழைத்துளி அளவே நான் கொடுத்திருக்கும் உதாரணங்கள். 18 தர்ம சாஸ்திர நூல்களிலும் உள்ளவை அனைத்தும் அநீதியே, அறமில்லாத விசயங்களே.
ஒரு காலத்தில் இந்த நூல்களையே நீதி நூல்களாக ஆட்சியாளர்கள் பயன் படுத்தினார்கள்.
இப்போதும் உயர்நீதி மன்றங்களின் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் மநு சாஸ்திர நூல், மற்றும் பிற தர்ம சாஸ்திர நூல்கள் மேற்கோள் காட்டப்படுவது வழக்கமாவே இருக்கிறது.
தர்ம சாஸ்திர நூல்களில் சில மட்டுமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. முழுமையாக எல்லா தர்ம சாஸ்திர நூல்களும் விருப்பு வெறுப்பின்றி, உள்ளது உள்ளபடி வெளியிடப்படுமானால், அவற்றைப் படிக்கும் வைதிகர்களே சனாதனத்தை வெறுத்து ஒதுங்கி விடுவார்கள். அவற்றை வாசிக்கும் இளைய தலைமுறை வேதியர்களே அவற்றில் உள்ள விதிகள் எதையும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.
இப்பேற்பட்ட “தர்ம சாஸ்திர விதிகளில் கூறியபடி செய்யக் கடவாய்” எனக் கூறும் பகவத்கீதையை எப்படி ஒப்புக் கொள்ள இயலும்?
ஆதார நூல்கள்:
- ‘கீதா-தத்வவிவேசனீ’ – கீதா பிரஸ் – கோரக்பூர்.
