திங்கள், 12 அக்டோபர், 2026

அகத்தியர்,யாக்யவல்கியர்,வசிஷ்டர் போன்ற ரிஷிகள் பலரும் மாமிசம் உண்பவர்கள்!

அகத்தியர்,யாக்யவல்கியர்,வசிஷ்டர் போன்ற ரிஷிகள் பலரும் மாமிசம் உண்பவர்கள்! 

ரிக் வேதத்தின் நான்காவது மண்டலத்தை இயற்றிய மகா தவசீலர் வாமதேவர். தீவிரமான பஞ்சத்தில் பசியால் தன் உயிரும், தன் மனைவியின் உயிரும் போகும் நிலை வந்தபோது, அவர் நாயின் குடலைச் சமைத்து உண்டார் என்று ரிக் வேதம் (4.18.13) மற்றும் மனுதர்ம சாஸ்திரம் (10.106) குறிப்பிடுகிறது. ஆபத்துக் காலத்தில் உயிர் பிழைக்கச் செய்ததால் இவருக்குப் பாவம் சேரவில்லை என சாஸ்திரம் கூறுகிறது. 

ரிக் வேதம் 4.18.13 ல் வாமதேவன் கூறும் மந்திரம் இது,

‘ரிக் 4.18.13;நான் மிக்க வறுமையுடன் இருக்குங்கால் நாயின் குடல்களைச் சமைத்தேன். நான் தேவர்களின் நடுவே இந்திரனைத் தவிர என்னை சுகப்படுத்த எவனையும் காணவில்லை. அவமதிக்கப்பட்ட என் மனைவியைப் பார்த்தேன். பிறகு பருந்து - இந்திரன் - எனக்கு மதுவை ஏந்தி வந்தது. இனிய சலத்தைப் பொழிந்தது.’

விசுவாமித்திரர் (Sage Vishwamitra): ஒரு கொடிய பஞ்சத்தின் போது, பசியால் வாடிய விசுவாமித்திரர் பசி தாளாமல் ஒரு சண்டாளனின் (புலையன்) வீட்டில் புகுந்து, அங்கு தொங்கவிடப்பட்டிருந்த நாயின் தொடை மாமிசத்தைத் திருடி உண்ணத் துணிந்தார். இதை மனுதர்ம சாஸ்திரம் (10.108) மற்றும் மகாபாரதத்தின் சாந்தி பருவம் விரிவாக விவரிக்கிறது. 

யாக்யவல்கியர் (Sage Yagyavalkya): உபநிடதங்களின் முதன்மை ரிஷியான இவர், உபநிடதக் காலத்திற்கு முந்தைய 'சதபத பிராமண' (Shatapatha Brahmana 3.1.2.21) நூலில், "பசு மற்றும் எருதின் மாமிசம் மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருப்பதால் நான் அதை உண்பேன்" என்று குறிப்பிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Shatapatha Brahmana 3.1.2.21:

21. He (the Adhvaryu) then makes him enter the hall. Let him not eat (the flesh) of either the cow or the ox; for the cow and the ox doubtless support everything here on earth. The gods spake, 'Verily, the cow and the ox support everything here: come, let us bestow on the cow and the ox whatever vigour belongs to other species!!' Accordingly they be stowed on the cow and the ox whatever vigour belonged to other species (of animals); and there- fore the cow and the ox eat most. Hence, were one to eat (the flesh) of an ox or a cow, there would be. as it were, an eating of everything, or, as it were. a going on to the end (or, to destruction). Such a one indeed would be likely to be born (again) as a strange being. (as one of whom there is) evil report, such as 'he has expelled an embryo from a woman.' 'he has committed a sin²;' let him therefore not eat (the flesh) of the cow and the ox. Nevertheless Yâgñavalkya said, 'I, for one, eat it, provided that it is tender.'

‘இருப்பினும், யாக்ஞவல்கியர், 'இறைச்சி மென்மையாக இருந்தால், நான் அதை உண்பேன்' என்று கூறினார்’ என்பது முக்கியமானது.

அகத்தியர் (Sage Agastya): வாதாபி மற்றும் இல்வலன் என்ற அசுரர்களின் கதையில், இல்வலன் தன் தம்பியான வாதாபியை ஒரு ஆட்டுக்கடாவாக (சில நூல்களில் மாடாகவும் உருவகப்படுத்தப்படும்) மாற்றி சமைத்து அகத்தியருக்கு உணவாக அளிக்கிறான். ஞான திருஷ்டியால் அதை அறிந்தும் அகத்தியர் அதை உண்டு ஜீரணம் செய்தார்.

பண்டைய வேத காலத்தில் நடைபெற்ற 'அஸ்வமேத யாகம்' (குதிரை பலி) மற்றும் 'அக்னிஷ்டோமம்' போன்ற சோம யாகங்களின் போது (ஆடு பலி), யாகத்தை நடத்தும் ரிஷிகள் மற்றும் பிராமணர்களுக்கு பலியிடப்பட்ட விலங்கின் மாமிசம் 'பிரசாதமாக' (இதற்கு  'பஹுவதா' என்று பெயர்) வழங்கப்பட்டது. இதனை வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்ற ரிஷிகள் சடங்குகளின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதாக ஐதரேய பிராமணம் மற்றும் பல தர்மசூத்திரங்கள் (உதாரணமாக: வசிஷ்ட தர்மசூத்திரம் அத்தியாயம் 12) குறிப்பிடுகின்றன.

வசிஷ்ட சம்ஹிதை 12 கூறும் சங்கதிகள் சில:
‘வில்லேந்திய வேடன் ஒருவன் அளிக்கும் உணவை மறுக்கக்கூடாது. ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்ற ஒரு யாகத்தின்போது, ​​அகஸ்தியர் வேட்டையாடச் சென்றதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் விலங்குகள் மற்றும் பறவைகளின் இறைச்சியைக் கொண்டு சுவையான அப்பங்களைச் செய்திருந்தார்.’

என்றும்,

‘பால் தரும் பசுக்கள் மற்றும் காளைகளின் இறைச்சி வேள்விப் பலிக்கு ஏற்றது என்று வாஜசனேய சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.’
என்றும் குறிப்பிடுகிறது.

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில், காடுகளில் வாழ்ந்த சில ரிஷிகள் 'சிராத்தம்' (முன்னோர் வழிபாடு) செய்யும் போது, குறிப்பிட்ட காட்டுப் பன்றி (வராகம்) மற்றும் சில அனுமதிக்கப்பட்ட பறவைகளின் (புறா, கவுதாரி போன்றவை) மாமிசங்களை சாஸ்திர விதிகளின்படி படைத்து, பின்னர் அதை உண்டதாக குறிப்புபள் உண்டு. ஆபஸ்தம்ப தர்மசூத்திரத்திலும்  குறிப்புகள் உண்டு.

வசிஷ்ட தர்மசூத்திரம் (Vashistha Dharmasutra - 11.34):

आमन्त्रितस्तु यः श्राद्धे दैवे वा मांसमुत्सृजेत् ।
यावन्ति पशुलोमानி तावद्वर्षं नरकं व्रजेत् ॥

வசிஷ்ட முனிவராலேயே அருளப்பட்டதாகக் கருதப்படும் வசிஷ்ட தர்மசூத்திரத்தில், சிராத்த சடங்குகளில் அல்லது வழிபாடுகளில் அர்ப்பணிக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படும் மாமிசத்தை ஒரு அந்தணர் மறுக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுஸ்மிருதியின் ஐந்தாவது அத்தியாயம் (5.22 - 5.35):

5.22. புசிக்கத்தக்க பறவை, விலங்குகளையும், வேள்விக்கோ, தாய் தந்தையரின நன்மைக்கோ ஒருவன் கொல்லலாம். முன்னாளில் அகத்தியா் தமது தாய்-தந்தையரின் பொருட்டு உயிர்வதை செய்திருக்கிறார்.

5.23. ரிஷிகளின் தொன்மையான வேள்விகளில் உண்ணத்தக்க பறவை விலங்குகள் அவிசாகவே இருந்தனவாதலால் வேள்விகளில் உயிர்வதை புரியலாம்.

5.27. விதிப்படி வரிக்கப்பட்டும், ஆசார்யனால் பணிக்கப்பட்டும், இல்லையேல் உயிர் போய்விடும் என்ற நிலையிலும், மந்திர பூர்வமாகக் கொல்லப்பட்ட புலாலை ஒரு பிராமணன் உண்ணலாம்.

5.28. ஏனெனில், பிரமன் படைப்பு முழுமையும் சீவருக் குணவாகப் படைத்தார். ஆகையால், நெல் முதலான தாவரமும், விலங்கு முதலான உயிரினமும் சீவனுக்கு உணவாகவே அமைவன.

5.29. எப்படி யெனிலோ, அசையும் உயிர்களில் மான் போன்றவற்றிற்குப் புல் முதலியனவும், புலி முதலிய கோரைப் பற்களுடையவற்றிற்கு மான் முதலியனவும், கைகளுள்ள மானிடர் முதலானோர்க்குக் கரங்கள் இல்லாத மீன் முதலியனவும், சிங்க முதலிய கொடிய மிருகங்களுக்கு யானை முதலிய அஞ்சும் பண்புடையனவும் ஆகாரமாகும்.

5.30. எனவே, உரியவற்றை அன்றாடம் கொன்று தின்றாலும் பாவமில்லை. உண்ணத் தக்கனவும், கொல்லத் தக்கனவும் பிரமனால் படைக்கப் பெற்றிருக்கின்றன அன்றோ!

5.32. விலைக்கு வாங்கினாலும், தானே தேடிப் பெற்றாலும், பிறன் விரும்பி வழங்கினாலும், புலாலைப் பிதுர்க்களுக்கும், தேவர்க்கும் நிவேதனம் செய்துண்பவன் பழிப்புக்காளாகான்.

5.35. சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட அந்தணன், புலால் உண்ணலாகா தென்று எண்ணி மறுத்தால், இருபத்தோரு பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான்.

மனுஸ்மிருதியின் பத்தாவது அத்தியாயம் 
(10.101-113):

10.101. பிழைப்பில்லாமல் வருந்தும் அந்தணன், க்ஷத்திரிய வைசியத் தொழில்களை மேற்கொள்ளாமல், தனது குலத்தொழிலையே புரிய எண்ணினால், அதற்குரிய முறைகள் கூறப்படுகின்றன.

10.102. ஓங்காமல் குன்றிப்போன அந்தணன் சங்கர ஜாதியர் முதலிய தகாதாரிடத்தும் தானம் பெறலாம். அதனால் குற்றமில்லை. ஓடு நீர்க் கங்கையில் ஓடி வந்து விழும் தெருத்தண்ணீர் முதலியவற்றால் கங்கை கலங்குவதுண்டா?

10.103. குன்றிப்போன அந்தணன் தகாதவனுக்கு ஓதுவித்தல், வேள்வி புரிவித்தல், பழிப்பு மிக்க தானங்கள் பெறுதல் ஆகியவற்றாலும் குற்றம் வருவதில்லை. ஏனெனில் தீயைப் போலவும் நீரைப்போலவும் இயல்பாகவே தூய்மையுடையவன் அந்தணன்.

10.104. உயிர் போகும்படியான ஆபத்து வேளையில் பிரதிலோமர் முதலான எவருடைய உணவை வாங்கி யுண்ட போதிலும், ஆகாசத்தில் விட்டெறிந்த சேறு போல, பாவங்கள் அவனை அணுகாமற் சிதறிப் போகின்றன.

10.105. பசியால் வாடியிருந்த போது அஜீகர்த்தர் என்ற முனிவர், சுனச்சேபன் என்ற தனது பிள்ளையை நூறு பசுவுக்கு ஈடாகக் கொடுத்து, யாகப் பசுவாக அவனைப் பலியிடவும் சம்மதித்து, அவனை விற்றுவிட்டார். பசியின் கொடுமையைத் தணிப்பதற்காக அவ்விதம் செய்த காரணத்தால் அம்முனிவரைப் பாவம் அணுகவில்லை.

10.106. அறம், அல்லாதது இவற்றை நன்கறிந்த வாமதேவர் பசிப் பிணியால் வருந்தித் தன் உயிரைக் காத்துக்கொள்ளும் பொருட்டு நாய் மாமிசத்தைச் சாப்பிடவும் முயன்றார். அதனால் அவருக்குப் பாவம் வரவில்லை.

10.107. தவ முனிவரான பாரத்துவாஜர் தனது புத்திரனுடன் ஜன நடமாட்டமேயில்லாத பெருங்காட்டினிடையே பசியால் களைப்புற்று விருது என்னும் தச்சனிடத்தில் அநேகம் பசுக்களைத் தானம் வாங்கினார்.

10.108. தருமாதருமம் அறிந்த விசுவாமித்திரர் ஒரு சமயம் பசியால் வாட்டமுற்று, சண்டாளன் கையிலிருந்து நாயின் முழங்கால் மாமிசம் வாங்கிச் சாப்பிட முயன்றார். அதனால் அவருக்குப் பாவம் வந்து சேரவில்லை.

10.109. கேடுடையவனிடம் தானம் வாங்குதல், ஒழுக்கமற்றவனுக்கு வேள்வி செய்து வைத்தல், வேதம் ஒதுவித்தல் இம் மூன்றில் முற் கூறியது ஆகத்தாழ்வு. அது அந்தணனுக்கு நரகுய்க்கும் வழியாகும். எனினும் வேறெதனாலும் ஜீவிக்க வியலாத போது அதனையும் செய்யலாம்.

10.110. ஏனென்றால் யாகம் புரிவித்தல், ஓதுவித்தல் ஆகியவை உபநயன முதலிய உரிமைகள் உள்ளவனுக்கே செய்விக்கப்படும். தானம் வாங்குதல் சம்ஸ்காரமில்லாத யாரிடத்தும் வாங்கக் கூடியதாகையால் அது மிகவும் தாழ்ந்ததாகும்.

10.111. தகாதவனுக்குச் செய்விக்கும் வேள்வி, ஓதுவித்தல் முதலானவற்றால் விளையும் பாவம் ஜப ஹோமங்களால் போக்கத்தக்கது. தகாதவனிடம் பெற்ற தானத்தால் விளையும் பாவமோ, பெற்ற பொருளைத் தானம் செய்தால் மட்டுமே தீரும்.

10.112. எத்தாலும் அந்தணன் ஜீவிக்க முடியாத போது, (சிலம்) வயலில் சிந்திய நெற் கதிர்களைப் பொறுக்கியோ, அல்லது சிந்திக் கிடக்கும் நெல் மணிகளைச் சேகரித்தோ (உஞ்சம்) பிழைக்கலாம். கெட்ட தானம் வாங்கு வதைவிட சிலம், அதனைவிட உஞ்சமும் முறையே மேலானவையாகும்.

10.113. ஒழுக்க முடையவனும் ஓங்க முடியாதவனுமான அந்தணன், தன் குடும்ப வாழ்க்கைக்காக ஆடை, தானியம் இவற்றையும், வேள்விக்காகப் பொருளையும், நெறி நில்லா மன்னனிடத்தும் வாங்கலாம். ஆயின் அரசன் கருமித்தனத்தால் கொடாது கரத்தல் செய்தால், அவனிடம் இரத்தல் தகாது.

********************************************
நாங்கள் மாமிசம் உண்பதில்லை என்கிறவர்களையும்,மாமிசம் உண்ணுகிறவர்களை தினிசாகப் பார்க்கிறவர்களையும் நோக்கி கேள்வி எழுப்புங்கள். மனசாட்சி உள்ளவர்கள் தங்கள் நிலைப்பாட்டை அணுகுமுறையை சீர் அமைத்துக்கொள்ளட்டும்.

#சனாதனலீக்ஸ்
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு