• Viduthalai
தெற்கு உத்தரப்பிரதேசம் பாக்பககேரி குள்ளாரா என்ற பகுதியில் உள்ளவர் சாமி யாரிணி யாமினிசாகு. இவர் அப்பகுதி முழுவதும் சுற்றி பகவத் கீதை சொற்பொழிவை நடத்தி வருகிறார்.
இவர் சமீபத்தில் மகஸ்முந்த் என்ற பகுதியில் சொற்பொழிவாற்றினார். அந் தப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இவரது சொற்பொழிவில் பார்ப்பனர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இதனை அடுத்து சாமியார்கள் அமைப்பு "பார்ப்பனர்கள் இல்லாத இடத்தில் பகவத்கீதை சொற்பொழிவை ஆற்றி பெரும் பாவம் செய்துவிட்டார்" என்று கூறி அவருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் சாமியார் அமைப்பினர் சிலர் சாமியாரிணியின் ஆசிரமத்திற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, "இனிமேல் சாமியார் வேடம் எல்லாம் போட வேண்டாம். வேண்டு மென்றால் மேடையில் ஆபாச நடனம் ஆடு, கூட்டம் சேரும். புனிதமான பகவத் கீதையை பார்ப்பனர்கள் அல்லாத மக்களின் முன்பு கூறியதால் ஹிந்து மதத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
மேலும் "ஆசிரமத்தில் உள்ள பெண்களைக் கடத்தி விபச்சார விடுதியில் விற்றுவிடுவோம்" என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து யாமினிசாகு, குள்ளாரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிறகு உள்ளூர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "நான் என்னுடைய 10 வயதில் துறவறம் பூண்டேன்; சுமார் 17 ஆண்டுகளாக நாடுமுழுவதும் சுற்றி பகவத் கீதை குறித்து சொற்பொழிவாற்றி வருகிறேன், கடந்த வாரம் பாக்பககேரியில் சொற்பொழிவாற்றினேன். அதிக மக்கள் வந்து எனக்கு ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் என்மீது பொறாமை கொண்ட சாமியார் அமைப்பு, 'ஒரு பெண் எப்படி பகவத் கீதை சுலோகத்தை உச்சரிக்கலாம்' என்று கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நான் நடத்திய கூட்டத்தில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. 'பார்ப்பனர்கள் இல்லாத மேடையில் நீ எப்படி பகவத் கீதை குறித்து சொற்பொழிவாற்றலாம்' என்று கூறி மிரட்டி வந்தனர்.
இந்த நிலையில், எனது ஆசிரமத்தில் உள்ள பெண்களைக் கடத்தி விபச்சார விடுதியில் விற்று விடுவதாக மிரட்டுகின்றனர். மேலும் என்னை சொற்பொழிவாற்றுவதை நிறுத்தி விட்டு, 'அழகாக இருக்கிறாய், ஆகவே ஆபாச நடனம் ஆடு, கூட்டமும் அதிகம் கூடும், பணமும் அதிகம் கிடைக்கும்' என்று தொலைப்பேசியில் மிரட்டினர். இதனை 'பதிவு' செய்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன்" என்று கூறினார். இதனை அடுத்துசில நாள்கள் மட்டும் ஆசிரமத்திற்கு இரண்டு காவலர்களைப் பாதுகாப்பிற்கு காவல்துறை ஆய்வாளர் நியமித்திருந்தார்.
எல்லோரும் சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கூறிவருகிறது, கருநாடகா, உத்தரப்பிரதேசம், அரியானா, குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பகவத் கீதை பாடநூலாக வைக் கப்பட்ட நிலையில் பார்ப்பனர் அல்லாத மக்களிடையே பகவத் கீதை சொற்பொழிவாற்றிய சாமியாரிணி மீது சாமியார் அமைப்பு தீர்மானம் போட்டு மிரட்டல் விடுத் துள்ளது.
இதில் இரண்டு பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும்.
பகவத் கீதை என்பது பார்ப்பனருக்கானது - மற்றவர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் பகவத் கீதை சுலோகங்களைச் சொல்லக் கூடாது. பிரச்சாரம் செய்யக் கூடாது. பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறது பகவத் கீதை. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு, பகவத் கீதையைப் பிரச்சாரம் செய்த பெண்மணியும் சரி, அவர் உபதேசத்தைக் கேட்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் சரி, பகவத் கீதையை தங்களுக்கு எதிரான நூல் என்பதை உணர்ந்து புறக்கணிக்க வேண்டும்.
"ஒரு முட்டாளின் உளறல் கீதை" என்று கூறினார். அண்ணல் அம்பேத்கர். "பகவத் கீதை படிப்பதைவிட கால் பந்து விளையாடுவது நல்லது" என்று அவாள் தரப்பு விவேகானந்தர் கூறியதையும் இந்த இடத்தில் நினை வூட்டுகிறோம்.