அப்படியானால் சோவும், குருமூர்த்தியும்?
“பார்ப்பனருக்குத் தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? இல்லை. காரணம் என்ன? உழைக்கும் வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனராய் இருப்பினும்; கடவுள் பேரால் பாடு படாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்?
பிறவியின் பெயரால், ஜாதியின் பெயரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா?” (குடிஅரசு 28.5.1949 என்ற அர்த்தமுள்ள யதார்த்தமான வினாவைத் தொடுத்தார் தந்தை பெரியார்.
***
“பார்ப்பனர்களுக்குள்ளாகவே தங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு, அரசாங்கத்தை எதிர்க்கும் தேசியம் எனும் பேரால் ஒரு பிரிவும், சர்க்காரை ஆதரிக்கும் உத்தியோகம் பார்ப்பது என்னும் பேரால் ஒரு பிரிவும், மதங்களைக் காப்பாற்றும் வைதிகம் என்னும் பேரால் ஒரு பிரிவுமாகப் பிரித்து, மூன்று துறைகளையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு அவைகளுக்குத் தாங்களே கர்த்தர்களாய் இருந்து கொண்டு, மற்ற மக்களை எந்தத் துறையிலும் முன்னேறாதபடி தொல்லை விளைவித்து வருகிறார்கள்.
- தந்தை பெரியார்
(‘குடிஅரசு’ - 1 4.7.1935)
பார்ப்பனர்களை இந்த அளவுகோலால் எடை போட்டால்தான் அவர்களின் உண்மை உருவம் பளிச் சென்று துல்லியமாகத் தெரியும்.
சோவும், அவரின் மறைவிற்குப் பிறகு திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தியும் ‘துக்ளக்‘கில் வாரந்தோறும் கக்கும் நஞ்சும் எத்தகையது என்பதையும் தந்தை பெரியார் கூறும் மூன்று அளவுகோல்களால் எளிதாகவே அறிந்து கொள்ள முடியும்.
(1) கேள்வி: நாத்திகவாதி, பகுத்தறிவுவாதி என்ன வித்தியாசம்?
பதில்: உண்மையான நாத்திகவாதி அனைத்துக் கடவுள்களையும் மறுப்பார். நேர்மையான பகுத்தறிவு வாதி அனைத்து நம்பிக்கைகளையும் வெறுப்பார். திராவிட நாத்திக பகுத்தறிவுவாதி ஹிந்து கடவுள்களை மட்டும் வெறுத்து, ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் பழிப்பார்.
(‘துக்ளக்‘ 20.1.2021 பக்கம் 10)
ஒவ்வொரு வாரமும் ‘துக்ளக்‘ இதழிலும் ‘அவர் தந்த அனுபவங்கள்’ எனும் தலைப்பில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் படத்தையும் போட்டு பல பக்கங்களில் கட்டுரைகளைத் தீட்டுகிறாரே எஸ். குருமூர்த்தி அந்த மகா பெரியவாள் நாத்திகம் பற்றி என்ன சொல்லுகிறார்?
“நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்“
“அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்“
“வைதிக வழக்கையை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது - ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல” (‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் தொகுதி பக்கம், 407 -408).
நொடிக்கு ஒரு தடவை மகா பெரியவாள் என்றும், அவர் தான் அரசியலுக்கு, பதவிக்கு நான் செல்லுவதைத் தடுத்தவர் என்றும் கூறிக் கொள்ளும் குருமூர்த்திகளுக்கு - நாஸ்திகர் பற்றி அந்தப் பெரியவாள் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியாமல் ‘தத்துப் பித்து’ என்று உளறலாமா?
இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. கடவுள் பற்றிக் கூடக் கவலையில்லை. வேதங்களை எதிர்க்கக் கூடாது - அதுதான் அவாளின் கவலை.
அந்த வேதங்கள் தானே பிராமணனைப் பிர்மா தன் நெற்றியில் இருந்து படைத்தான் - சூத்திரர்களைத் தம் பாதங்களிலிருந்து படைத்தான் என்று எழுதி வைத்துள்ளது.
“தேவாதீனம் ஜெகத் சர்வம்
மந்த்ராதீனம் துதேவதா
தன்மந்த்ரம் பிரமணாதீனம்
பிராமணா மமதேவதா”
“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுபட்டவர்கள். மந்திரம் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமது கடவுள் அவர்களை வழிபட வேண்டும் என்று கூறுவது வேதம் தானே! (ரிக் வேதம் 62ஆம் பிரிவு - 10ஆம் சுலோகம்)
கடவுளை எது வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போங்கள் - வேதத்தின்மீது மட்டும் கல்லெறியாதீர்கள் - இதுதான் பார்ப்பனர்களின் கவலையும் அக்கறையும்! ‘துக்ளக்‘கில் குருமூர்த்தி அய்யர்வாள் குறிப்பிடும் இன்னொரு விடயத்துக்கும் வருவோம். மற்ற மதக் கடவுள்களை வெறுக்கமாட்டார்கள், ஹிந்துக் கடவுள் களைத் தான் பழிப்பார்கள் என்று மித்திர பேதம் செய்து பார்க்கிறார்.
இதுவும் எந்த வகையிலும் உண்மையல்ல. தந்தை பெரியார் சிலைப் பீடங்களில் கல்வெட்டுகளில் பொறிக் கப்படும்.
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
என்ற வாசகங்களில் ஹிந்து மதக் கடவுள் மட்டும்தான் என்று கூறி இருக்கிறோமா?
மற்ற மதக்காரர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாத நிலையில் ஹிந்து மதக் குருமூர்த்திகள் மட்டும் ஏன் பூணூல் அறுந்து விழக் குதிக்கிறார்கள்.
ஹிந்து மதக் கடவுளைக் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் எப்பொழுது ஏற்பட்டது?
பிர்மா என்ற ஹிந்து மதப் படைப்புக் கடவுள்தான் (ஆண்) பிராமணனைத் தன் முகத்திலிருந்து படைத்தான்; சூத்திரனைத் தன் பாதங்களில் இருந்து படைத்தான்; பிராமணனுக்காகவே இந்தஉலகைப் பிர்மா படைத்தார்; சூத்திரன் என்றால் வேசி மகன்; பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியஞ் செய்கிறவன் (மனுதர்மம் - அத்தியாயம் 8 - சுலோகம் 415) என்று ஹிந்து மதம் சொல்லும் நிலையில் அந்த ஹிந்து மதத்தையும், அந்த ஹிந்துக் கடவுளையும், அதன் வேதங்களையும் விமர்சிக்காமல் இருக்க நாங்கள் என்ன உஞ்சி விருத்திப் பார்ப்பனர்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா?
இதுதான் பிரச்சினை. தந்தை பெரியாரும் சரி, அவர்கண்ட இயக்கமும் சரி, அவ்வியக்கத் தொண்டர்கள் கூறும் கருத்து களும் சரி, அவற்றை மறைத்து விட்டு, தங்களிடம் ஊடக பலம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் ‘பாரீர், பாரீர்!’ இந்தப் பகுத் தறிவாளர்கள், நாத்திகவாதிகள், மற்ற மதங்களை விமர்சிப்ப தில்லை - ஹிந்து மதத்தையும், அதன் கடவுளையும்தான் குறை சொல்லுகிறார்கள் என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள் பழி சுமத்தி பக்திப் போதை ஏறிக் கிடைக்கும் மக்களைத் திசை திருப்புகிறார்கள்.
தந்தை பெரியார் பிறந்த மண் பார்ப்பனர்களின் மாய்மாலங்களைக் கண்டு ஏமாந்து போய் விடாது - அந்த அளவு இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்கது என்ன தெரியுமா? ஹிந்து மதத்தில் நாஸ்திகத்துக்கு இடம் உண்டு என்பதுதான்!
நாஸ்திகத்துக்கு இடம் உண்டு என்று ஒப்புக் கொண்ட பிறகு நாத்திகத்தின் கூர்மையைக் கண்டு குலை நடுங்கவானேன்? குடுமிகள் கூத்தாடுவது ஏன்? ஏன்?
*****
2) கேள்வி: தலை சிறந்த ஆன்மிகவாதியான சோ ஞான மார்க்கத்தில் ஈடுபாடு காட்டிய அளவுக்கு ஆலய வழிபாடு போன்ற பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு காட்டவில்லை. கர்ம யோகியாகத் திகழ்ந்தார். ஆலய வழிபாடு போன்றவற்றில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?
பதில்: சோ-வை பல முறை நான் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சந்தித்திருக்கிறேன். பல ஆண்டுகள் தவறாமல் அவர் கோயிலுக்குப் போயிருக்கிறார். அவருக்குப் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு இல்லை என்பது தவறு. எனக்கும் ஆலய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
- ‘துக்ளக்‘ 20.1.2021 பக்கம் 10
ரொம்ப சரி - ஆலய வழிபாடு, உருவ வழிபாடு என்று சிண்டைத் தட்டிக் கொண்டு சிருங்கார ரசத்தோடு எழுத முன் வருகிறார்களே!
இந்த ஆலய வழிபாடு, உருவ வழிபாடு என்பதுபற்றி இவர்களின் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தின் நிலைப்பாடுதான் என்ன?
பாரதத்தில் ஒரு பாகமாகிய உத்தர கீதை என்ன சொல்லுகிறது? துவிஜதர்களுக்குத் (இருபிறப்பாளனாகிய பார்ப்பனருக்கு) தெய்வம் அக்னியில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலைகளில்!
குருமூர்த்தி ‘துக்ளக்‘கில் எழுதுகிறார், நானும், சோவும் கோயில் வழிபாடுகளில், அந்தக் கோயில்களில் உள்ள தெய்வங்கள் என்று கூறப்படும் சிலைகளை வழிபடுவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். அப்படியானால் அவர்களின் ஹிந்துசாத்திரப்படி சிலைவழிபாடு செய்கிறவர். மூடர்களாக ஆகி விட்டார்களா இல்லையா?