இந்திய வரலாறு என்பது இரண்டாம் தமிழ்க்கழகம் என்னும் சிந்துவெளிக்காலத்திலும் மூன்றாம் தமிழ்க் கழகத்தின் தொடக்கக்காலம் வரை முற்றிலும் தமிழர் வரலாறாகவே இருந்தது.
இந்தியா முழுவதிலும் கிடைத்துள்ள சிந்துவெளி முத்திரைகளிலுள்ள தமிழ்ச் சொற்களே இவ்வுண்மைக்குச் சான்றாக உள்ளன. இப்பொழுது தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது. முற்காலத்தில் இந்தியா தமிழ்நாட்டில் இருந்தது. பாலி மொழியில் உள்ள ‘தமலிகா’ என்னும் சொல்லும் சுமேரிய மொழி வழங்கிய ‘மெலுகா’ என்னும் சொல்லும் ‘முழுமையாகத் தமிழர்களே வாழ்ந்த இந்திய நிலப்பரப்பைக் குறித்தது ‘ என்பது வரலாற்றில் இடம்பெற வேண்டிய செய்தியாகும்.
அக்காலத்தில் சாதிப்பிரிவுகள் தோன்றவில்லை. ‘அய்ந்திணை மக்கள் அனைவரும் உயர் குடிப்பிறப்பினரே’ என்பதால் தொல்காப்பியர் மக்கட்பிறப்பினரை ‘உயர் திணை’ என்று ஒரே பிரிவில் அடக்கினார். ஆனால் இந்தியாவில் புகுந்த ஆரியர் நிறவேறுபாட்டை காரணமாகக் கொண்டு நஞ்சான நால்வருண வேறுபாட்டை மண்ணின் மக்களிடம் வித்தூன்றி அவரின் ஒற்றுமையைக் குலைத்துச் சென்றனர்.
இருபிறப்பாளர்
விப்ரர், துவிசர் என்னும் சொல்லாட்சிகள் பிராமணரை மட்டும் குறித்தன. வேதமொழியில் இருபிறப்பாளர் என்னும் பொருளில் இச்சொற்கள் வழங்கினாலும் இவற்றைத் தம் ஜாதிப்பெயராக சொல்லிக் கொள்ளாமல் பிராமணர் என்னும் பெயரையே நிலைப்படுத்திக் கொண்டனர். பிராமணர் என்னும் சொல் புத்தமடத்துத் துறவிகளுக்கு மட்டும் வழங்கி வந்த பாலிமொழிச்சொல் என்பதை மறைத்து விட்டனர். ‘புத்தரின் தம்மபதம் நூலின் ஒன்பதாவது பிரிவுக்கு பிராமண (பாமண வக்க) வர்க்க’ (முனிவர் பிரிவு) என்றே பெயரிடப்பட்டுள்ளது.
ஆரியர்கள் ‘பூணூல் அணிவதற்கு முன்பு ஒருபிறப்பும், பூணூல் அணிந்து பின்னர் வேதம் ஓதத்தொடங்கும் போது ஒருபிறப்பும்‘ என இருபிறப்புக் கொண்டவர்களாகத் தம்மைத்தாமே பாராட்டிக் கொண்டனர். வேதம் ஓதுதல் என்பது செவி வழி கேட்டு மனப்பாடம் செய்து அப்படியே கிளிப்பிள்ளை போல் ஒப்புவிப்பதாகும். தெருக்கூத்தில் நடிப்பவன் படிக்காதவன் என்றாலும் பாட்டும் உரைநடையும் அழகாக விடிய விடிய ஒப்புவிக்கின்றான். இத்தகைய கேள்வி அறிவே வேதக்கல்வி எனப்பட்டது. இது ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதிப்படிக்கும் கல்வியறிவு ஆகாது.
திருவள்ளுவர் கல்விக்கு முதலிடம் தந்து கேள்வி அதிகாரத்துக்கு அடுத்த இரண்டாவது இடம்தான் தந்தார். அக்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (நீமீஸீsus) நடத்தியிருந்தால் வேதியர் அனைவரையும் எழுதப்படிக்கத் தெரியாதவர் பட்டியலில்தான் சேர்த்திருப்பார்கள். வெறும் கேள்வியறிவு மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்து நாகரிக மேம்பாடு அடைய உதவாது. கல்வி கற்ற இனமே நல்லதொரு நாகரிக முதிர்ச்சி பெற முடியும்.
முப்பிறப்பாளர்
இருபிறப்பாளர் என்பவர்களின் பார்வையில் தமிழினத்தை நோட்டமிட்டால் தமிழினத்தார் அவரினும் உயர்ந்த முப்பிறப்பாளர் என்பது தெளிவாகும். தமிழர்கள் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்படிக்கத் தெரிந்த இனமாக விளங்கினர். கல்வி கற்ற பாணரும் கூத்தரும், ஓதாளர் என்போரும் கல்லாத நாட்டுப்புற மக்களுக்கும் கேள்வியறிவு புகட்டினர். ”உலகம் பாதி ஓதாளர் பாதி” என்னும் பழமொழியும் இதை உணர்த்தும். எனவே “இயல்பான மாந்தப்பிறவியால் ஒரு பிறப்பும், கல்வியறிவால் இரண்டாம் பிறப்பும், கேள்வியறிவால் மூன்றாம் பிறப்பும் எனத்தமிழர் முப்பிறப்பு கொண்ட வர்கள்”. உயர்வு தாழ்வு காட்டும் மதிப்புறு துலாக்கோலில் எடையிட்டால் தமிழினத்தாரே பார்ப்பனரை விட உயர்ந்த பிறப்பினராவர்.
இந்த உண்மையை மூவேந்தர்கள் வலியுறுத்த மறந்தாலும் அறிவரான தமிழ்நாட்டுச் சித்தர்கள் ஆரியரின் பிறப்புவழி பிரிவினைக் கோட்பாடுகளை வன்மையாகக் கண்டித்தனர். இத்தகு உண்மைகளை இந்திய வரலாற்றில் இடம் பெறச் செய்ய வேண்டும். தன் வரலாற்றை மறந்த இனம் அடிமையாகவே இருக்கும். இக்கருத்தை “Ignorance of History will make the people slaves for ever” என்னும் ஆங்கிலப் பொன்மொழியும் சுட்டிக் காட்டுகிறது.
ஒரே சாதி - நூற்றுக்கணக்கான வேறு பெயர்கள்
தச்சன், கொல்லன் எனும் தொழிற்பிரிவினர்க்கு ஒரே சாதிப்பெயர் மட்டும் இந்தியாவில் நிலவுகிறது. ஆனால் “பார்ப்பனர்க்கு மட்டும் இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதிப் பெயர்கள் இருப்பது ஏன்?” என்று எவரும் வினா எழுப்ப வில்லை . வேதியரைக் குறிக்கும் ‘விப்ர’ என்றோ ‘துவிச’ என்றோ வடமொழி பெயர் சொன்னால் எவருக்கும் விளங்காது. அதனால் ‘பிராமணர்’ என்னும் பாலிமொழிச் சொல்லையும் சமண முனிவர்க்குத் தமிழில் வழங்கிய ‘அய்யர், பார்ப்பனர்’ என்னும் சொற்களையும் தமிழ் முனிவர்க்கு மட்டுமே வழங்கிய ‘அந்தணர்’ என்னும் சொல்லையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். வடநாட்டு மொழிகளிலும் உயர்ந்தவர்களுக்குரிய மதிக்கப்படும் குடிப்பெயர்களையேத் தமக்குரிய ஜாதிப்பெயர்களாகத் தேர்வு செய்துக் கொண்டனர்.
ஓகம் (யோகம்) செய்தால் தமிழன். யாகம் செய்தால் ஆரியன். தமிழர் ஓகம் பயிலும் மாணவப்பருவத்தில் தோளில் அணிந்த ஓகப்பட்டிகையைத் தமக்குரிய பூணூலாக்கிக் கொண்டனர். போலன் கணவாய் வழியாக ஆப்கானத்தானத்தில் புகுந்த ஆரியர் அங்குத் தமிழ்ப் பேசிய பிராகுவி மக்களோடு தங்கியிருந்தனர். பிராகுவி மொழி பேசும் மக்கள் தமிழர்களைப் போன்றே இன்றுவரை குழந்தைகளுக்கு முடி இறக்கிக் காதுகுத்தும் விழா நடத்துகின்றனர். இதனைக் கூட்டமாகவும் நடத்துவர். ஏதேனும் குறிப்பிட்ட காரணத்தால் அந்நிகழ்ச்சியைத் தள்ளி வைக்க நேர்ந்தால் உச்சியில் மட்டும் சிறிது முடியை ஒதுக்கி மொட்டையடித்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டு கழித்து காது குத்தும் நிகழ்ச்சி நடத்துவர். இதனைக்கூர்ந்து கவனித்த ஆரியப்பார்ப்பனர் தாமும் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டனர். ஆனால் கலப்பினப் பிராமணர்கள் விராத்திய பிராமணர்கள் (வேளாப்பார்ப்பனர்) என ஒதுக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழரிடை பாணர்கள் பாட்டுப்பாடி பொருள் திரட்டியதைப் பார்த்து இவர்களும் கூட்டாகப் பாட்டுப்பாடிப் பரிசு பெற்றனர். இந்தப்பாடல்களே இருக்குவேதப் பாடல்களாயின. சிந்துவெளி முத்திரையில் பெரும்பாணன் என்னும் பெயர்ச் சொல்லும் இடம் பெற்றுள்ளதை நான் படித்துக் காட்டியுள்ளேன்.
இந்திய மக்களோடு ஒட்டாமல் தனித்து தம்முள் ஒதுங்கிக் கொள்ளும் தன்னலம் பேணும் இயல்பால் இந்திய மண்ணில் இவர்களால் ஒற்றுமையை வளர்க்க முடியவில்லை. ஆனால் இந்திய மக்கள் தம்முள் ஜாதி வேறுபாடற்ற ஓரினமாக வாழவும் இவர்கள் விடவில்லை . இருபிறப்பாளர் என்னும் ஏணியில் தம்மை ஏற்றிக்கொண்டவர்கள் உண்மையில் எவ்வகையிலும் தமிழினத்தாரைவிட உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை வரலாறு உணர்த்துகிறது.
- பேராசிரியர் இரா. மதிவாணன்
- விடுதலை ஞாயிறு மலர் 15 2 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக