யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 - குடிஅரசிலிருந்து...
மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட் டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதி களும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசிய மாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலை யைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந் துள்ள இந்து மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என் பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.
1. பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. - அத்தியாயம் 8, சுலோகம் 20
2. சூத்திரர் நிறைந்த தேசம் எப் பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.
3. சூத்திரனாகவும், மிலேச்சனா கவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.
4. ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத் திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.
5. நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனைச் சத்திய மாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச் சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன் னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-115.
6. சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271.
7. சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும். - அ.8 சு.271.
8. பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லு கிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண் ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8 சு.272.
9. சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும். - அ.8 சு.281.
10. பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன் றவனுக்கு பாவமில்லை. - அ.8. சு.349.
11. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். - அ.8 சு.380
12. அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.
13. பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8 சு.413
14. பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்ற லாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.
15. சூத்திரன் பொருள் சம் பாதித்தால், அது அவனுடைய எஜமா னாகிய பிராமணனுக்குச் சேர வேண்டு மேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9 சு. 416
16. பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப் பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங் கில்லை. - அ.8 சு. 155.
17. பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9 சு.248.
18. பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம். - அ.9 சு. 317
19. பிராமணர்கள் இழி தொழில் களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக் கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.
20. பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.
21. சூத்திரனுக்கு பிராமணப்பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்தி ரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண் டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11. சு.12.
- விடுதலை நாளேடு 18 10 19