வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஆடு, பசு,எருது, குதிரை கறியையும், கஞ்சா பானத்தையும் ஆரிய பார்ப்பனர்கள் விரும்பி உண்டனர்!

அவர்களின் ரிக் வேதத்திலே ஆதாரங்கள்!

ராகுல சாங்கிருத்தியாயன் ‘ரிக்’ வேதகால ஆரியர்களுக்கு பசுக்கள், குதிரைகள், ஆடுகள், செம்மறியாடுகள் ஆகியவைதான் அவர்களுடைய பெருஞ் செல்வமாக இருந்தன. ஆகவே அவர்களிலே மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும், அவசியமான ஒன்றாகும். “புலால் இல்லாமல்’’ மதுயர்க்கமே (உணவே) இருக்க முடியாது என்று பிற்கால மதசூத்திரக்காரர்கள் (மத அனுஷ்டானங்களை அமைத்தவர்கள்) சொல்லியும் வைத்தார்கள். விருந்தாளி களுக்காகத் தயாரிக்கப்படும் உணவை ‘மதுயர்க்கம்’ என அழைத்தார்கள். வேதங்களுக்குப் பின்னர் பிராமண நூல்களின் காலத்திலும் (கி.மு.800) மாமிசம் ஆரியர்களின் முக்கிய உணவாகவே இருந்தது. புலாலைக் கொண்டு மந்திர-மாயங்களும் புழக்கத்தில் இருந்தன. “தன்மகன் புலவனாகவும், புகழ் பெற்றவனா-கவும், நல்ல பேச்சாளனாகவும், சபைகளிலே திறமையுள்ளவனாகவும், எல்லா வேதங்-களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும்’’ என்று ‘பிரகதாரண்யம்’ (6-_4_18) கூறுகிறது.

சற்றும் சந்தேகம் இருக்க வேண்டாமென் பதற்காக, ஆதி சங்கரரும் தன் விரிவுரையில் ‘மாமிசமும் வயது வந்த எருது அல்லது அதைவிட பசுவின் புலால் விஷயத்தில் இன்று எத்தனை அருவருப்பு இருப்பினும், பழங்காலத்தில் இப்படிப்பட்ட அருவருப்பு இருந்ததில்லை. புத்தர் காலத்திலும் பசு மாமிசம் அதிகமாகவே சாப்பிட்டு வந்தார்கள். பவுத்தமத நூலான  ‘மஜ்ஜிம் நிகாய்’ (3_5-4) கூறுகிறது.

“திறமையாகப் பசுவைக் கொல்லும் ஒருவன் அல்லது அவனது சீடன் பசுவை வெட்டும் சிறந்த கத்தியைக் கொண்டு பசுவிற்குள்ளிருக்கும் மாமிசத்தையும், தோலையும் பாழாக்காமல் அதனை வெட்டுவதைப் போல... கொத்தி, வெட்டி, வெளிப்புறத்தோலை உரித்து, அந்தத் தோலிலேயே அந்தப் பசுவின் உடலை மூடி, ‘இந்தப் பசு முன்னைப் போலவே தோலுடன் இருக்கிறது’ என்று சொல்வதைப்போல...’’

பசுவை வெட்டுபவன் பசுவின் இறைச்சியை வெட்டி, நாற்சந்தியிலே கூறுபோட்டு விற்பது பற்றிய குறிப்பும் இருக்கிறது. பசுவை வெட்டும் இடத்தைக் ‘கொலைக்களம்’ என்று சொன்னார்கள். அங்கே எலும்புத் துண்டு-களுக்காக நாய்கள் காத்திருக்கும் என்று மஜ்ஜிம் நிகாயே (2-_1_4) கூறுகிறது.

“வீட்டுச் சொந்தக்காரனின் பலவீனமான, பசிகொண்ட நாய் கொலைக்களமருகே நிற்பதைப்போல் நின்று கொண்டிருக்கிறாய்! திறமையுள்ள பசு வெட்டுபவன் அல்லது அவனது உதவியாளன் அந்நாய்க்கு ரத்தத்தில் தோய்ந்த வெறும் எலும்புத் துண்டை வீசியெறிகிறான். வீட்டு எஜமானனே, அந்த நாய் அந்த வெறும் எலும்புத் துண்டைத் தின்று தன் பசிப் பிணியைத் தீர்த்துக்கொள்ள இயலுமா?’’

பசுவை வெட்டும் கத்தியை ‘கோபிகர்த்தன்’ என்று குறிப்பிட்டார்கள். (‘மஜ்ஜிம் நிகாய்’ (2_4_5) ‘ரிக்வேத’த்திலும் (10_79_6) ரிஷி, “கத்தி பசுவைத் துண்டு துண்டுகளாக வெட்டுவதைப்போல...’’ என்கிறார். உண்மையில் ஆரியர்கள் வந்ததிலிருந்து கிருஸ்து நூற்றாண்டின் துவக்கம் வரை இவ்விறைச்சி உணவு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்பதில் அய்யமில்லை. ஆனால், ஆரியர்களுக்கு மிகப் பிடித்தமான இறைச்சி கொழுத்த செம்மறியாடும், ஆடும்தான்! “கொழுத்த ஆட்டை வீரர்கள் சமைத்தனர்’’ என்று ‘ரிக் வேதம்’ (10_27_27) சொல்கிறது.

அந்தக் காலத்தில் குதிரை மாமிசமும் சாப்பிட்டு வந்தார்கள். குதிரையின் சமைத்த மணங்கமழும் இறைச்சியை ஆரியர் மிகவும் விருப்பமுடன் சாப்பிட்டார்கள். “குதிரையின் மாமிசத்தை நன்கு சமைப்பதைப் பார்த்தவர்-களும், அதன் மணத்தைப் புகழ்ந்தவர்களும், அதனைச் சாப்பிட்ட வர்களும்...’’ என்று தீர்க்கதமா என்னும் ரிஷி (1_162-_12) கூறுகிறார்.

பலவிதமான பசு ரசமும் (பசுக் குழம்பும்) அவர்களுடைய முக்கிய உணவாக இருந்தது. நெய் முக்கியமானதென்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்களுடைய தேவர்களுக்கும் பிரியமான உணவுப் பொருளாகும். அது பாலும், ஏதாவதொரு தானியமும் சேர்த்துச் சமைத்ததாக இருக்கலாம். பிற்காலத்தில் பாயசம் இதன் வடிவாக இருக்கலாம். ஆனால் ‘ரிக்வேத’த்தில் எங்குமே அரிசி பற்றிய குறிப்பேதுமில்லை. பெரும்பாலும் சவ்வரிசி பற்றி மட்டும் சொல்லப்பட்டுள்ளது. மாடு மேய்ச்சலை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த ஆரியர்களின் உணவில் மாமிசமும், பாலும் அதிகமாக இருந்தன. மாமிசத்தில் மசாலாவைப் பயன்படுத்துவது மிகப் பிற்காலத்தில் ஆரம்பமாயிற்று. அவர்கள் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தினார்களா என்பதைப் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. நெய்யிலே வறுத்தல், பொரித்தலைத் தவிர வேறெந்த மசாலாவும் அவர்கள் உபயோகப்-படுத்தவில்லை. சப்த சிந்து பிரதேசத்தில் உப்பு மலை இருந்ததால் அது அவர்களுக்கு எளிதாகக் கிடைத்தது. அதையும் பயன்படுத்தியிருக்கக் கூடும். விவசாயம் தொடங்கப்படுவதற்கு முன்னாலிருந்தே இறைச்சியை நெருப்பிலிட்டு சுட்டுத்தின்பது பழக்கத்திலிருந்தது. ரிக்வேத காலத்தில் சமைப்பதற்கு அண்டா பயன்-படுத்தப் பட்டது. (1_162_13) ஆகவே வேகவைத்த மாமிசமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ‘சுரபி பக்வம் மாம்ஸ்’ (சமைக்கப்பட்ட மணங்கமழும் இறைச்சி) என்னும் சொற்றொடரும் இதையே தெளிவுபடுத்துகிறது.

 

 பானம்

ஆரியர் தேனை அறிந்திருந்தனர் (10_106_10). அவர்கள் இதை முதலிலிருந்தே அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்களின் தூரத்து உறவினர்களான ருஷியர்களின் முன்னோர் களும்கூட தேனைத் தெரிந்திருந்தனர். இரு மொழிகளிலும் இது ‘மது’ என்றும், ‘மேதோ’ என்றும் சொல்லப்படுவதால் இதை உணரலாம்.

சோமம்

ஆரியரின் மிகவும் பிரியமான பானம் ‘சோமம்’ ஆகும். சோமம் ரிக் வேதத்தின் ஒன்பதாம் அத்தியாயம் பூராவும், மற்ற நூற்றுக்-கணக்கான செய்யுட்களிலும் குறிப்பிடப்-படுகிறது. சோமம் ஒரு அரிதான பானமல்ல. அதை ஒரு சிலரே அருந்த முடியும் என்னும் நிலைமையும் இருந்ததில்லை. அது குடம் குடமாய் நிரப்பப்பட்டிருந்தது (9_20_6). சோமம் சல்லடையால் வடிகட்டப்பட்டது. வடிகட்டப்பட்ட சோமம் அக்கால ஆரியர்-களின் மிக விருப்பமான பானமாகும். அது அவர்களுக்கு ஒரு அற்புதப் பொருளாக விளங்கியது. ரிஷி மதுச்சந்தா கூறுகிறார் (9_1_1): “இந்திரன் பருக வடிகட்டப்பட்ட சோமமே, ருசிகரமான, மயக்கந்தரும் தாரையாகக் கொட்டு!’’ சோமபானம் மிக ருசிகரமானதாக மட்டுமல்லாமல், போதையூட்டுவதாகவும் இருந்தது. “நாங்கள் சோமம் அருந்தி அமரரானோம்’’ (8_48_3) என்றும் சொல்லப்-பட்டுள்ளது. கிடைத்தற்கரிய அமுத சஞ்சீவினி அல்ல சோமம். அது குடம் குடமாகத் தயாரிக்கப்பட்டது (9_20_6). “சாராய சோமம்’’ (8_21_5) ஆரியர்களின் தினசரி பானமாகும். சோம யாகத்தின்போது அதைப் பருகும் விசேஷ விதிமுறைகள் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டன. சமைக்கப்-பட்ட குதிரை இறைச்சியை ‘மணங்கமழும் இறைச்சி’ என ஆரியர் புகழ்ந்துரைத்ததை நாம் கண்டோம். இவ்விறைச்சி ‘அஸ்வமேதயாக’த்திற்கு மட்டுமே உட்பட்டதல்ல. அதே போல் சோமமதுவைப் பருகுவதும் சோமயாகம் வளர மட்டுமே இருந்ததில்லை. மாலை வேளைகளில் ஆரியர் பானம் அருந்துவதும், நாட்டியமுமாகத் தமது பொழுது போக்கினர். இது அவர்களுடைய கட்டுப் பாடற்ற, இன்பமயமான வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மாலை வேளைகளில் சோமம் குடம் குடமாகத் தேவைப்பட்டது.

சோமம் கஞ்சாதான் என்றால் பழமைவாதி-களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. பழங்காலத்தவர் அதைப் பற்றி எத்தனையோ சரடுகள் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். சந்திரனின் பெயரும் சோமன்தான்! அதனால் சந்திரனுடன் சோமத்தை இணைத்துச் சொல்கிறார்கள்:  

மூன்றரை ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குடம் குடமாய் சோம ரசம் தயாரிக்கப்-பட்ட தாவரம் இன்று முழுதாக மறைந்து-விட்டதென்றும் கூற இயலாது. உண்மை-யில் சோம பானத்துடன் இணைத்து விடப்பட்ட பல தெய்வீக சிறப்புகள் கஞ்சாவில் மருந்துக்குக்கூட இல்லை. கஞ்சா எங்குப் பார்த்தாலும் விளையும் வெட்கங்-கெட்ட தாவரம். அதை மக்கள் அலட்சியமாகப் பிடுங்கி எறிந்து விடுகிறார்கள். இந்நிலையில் தெய்வீக சோமம் கஞ்சாதான் என்றால் ஒப்புக் கொள்வார்களா? என்றாலும் உண்மையில் சோமம் கஞ்சாவேதான்! திபேத்தில் இன்னும் அதை ‘சோம ராஜா’ என்று கூறுகின்றனர்.
(ஆதார நூல்: 
‘ரிக்’ வேதகால ஆரியர்கள் )

 -உண்மை இதழ்,16-28.2.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக