திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சூத்திரன் குடிக்கத் தடை செய்யப்பட்ட மாட்டுப் பால்! -செ.ர.பார்த்தசாரதி


கட்டுரை, ஞாயிறு மலர்

வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்’ என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூறிய ‘இராமானுஜர்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று தமிழில் எழுதப்பட்ட வேத நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ மதத்தை பொ.பி.10ஆம் நூற்றாண்டில் பரப்பினார்.

அவர் வழியில் பிறகு வந்த திருவரங்கத்தை சேர்ந்த ‘மணவாள மாமுனி’ என்பவர் (பொ.பி.14ஆம் நூற்றாண்டு) தற்போது பின்பற்றப்படும் ‘தென்கலை’ பிரிவை தோற்று வித்தார். அதே ‘இராமானுஜர் வழியில் வந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த ‘வேதாந்த தேசிகர்’ என்பவர் (பொ.பி.13-14ஆம் நூற்றாண்டு) சமஸ்கிருத ‘நால் வேத’த்தை தான் அடிப்படையாக கொள்ள வேண்டும்’ என்று வைணவ மதத்தில் ஒரு பிரிவை ஏற்படுத்தினார். இதனால் அவர் ஏற்படுத்திய பிரிவுக்கு ‘வடகலை’ என்றும் கூறப்படுகிறது.

தமிழ் நூலான ‘நாலாயிரத் திவ்ய பிரபந்தத்’தைப் பரிந்துரைத்த இராமானுஜர் எழுதிய நூல்கள் அனைத்தும், சமஸ்கிருத நூல்களே! ஆனால், சமஸ்கிருத வேதத்தை பரிந்துரைத்த ‘வேதாந்த தேசிகர்’ பல தமிழ் நூல்களை இயற்றியிருக்கிறார்.

அதில் ஒன்று ‘தேசிகப் பிரபந்தம்’ என்ற வைணவ மத விளக்க நூலாகும்.

அந்த ‘தேசிக பிரபந்த’த்தில் ஒரு பகுதியாக ‘ஆகார நியமம்’ என்கின்ற பகுதி உள்ளது. அதில் எந்தெந்த உணவை உண்ணலாம், எப்போது உண்ணலாம், யார் யார் உண்ணலாம் என பட்டியல் போடப்பட்டுள்ளது.

அதில் உள்ள ஒரு பாடல் வருமாறு:

“சாதி குணம் ஆசிரமந் தேசங் காலம்

தர்மங்கள் நிமித்தங்கள் முதலாவோதும்

பேத முதலாக வொரு திரவியந் தான்

பிரிந்து நவந்தீங்கினையும் பெற்று நிற்கும்

பாதமிசைப் பிறந்தோர்க்குக் கபிலையின் பால்

பருகிடலாகா தென்று மறையோர் சொன்னார்.’’

– ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், ஆகார நியமம் – பாடல் 20

மனிதர்கள் எல்லோருக்கும், ஒரே வகையில் வேதத்தில் நீதி வகுக்கப்படவில்லை; ஜாதி குணத்திற்கு ஏற்றார் போல் நீதி வகுக்கப்பட்டுள்ளது; ‘ஒரு ஜாதிக்கு உகந்த உணவு வேறொரு சாதிக்கு ஆகாத உணவாகும். பார்ப்பனர்கள் மட்டுமே குடிக்க வேண்டிய ‘காராம்’ (கபிலை) பசுவின் பாலைக் கடவுளின் கால் பகுதியிலிருந்து பிறந்த சூத்திரர்கள் குடிக்கக்கூடாது; குடித்தால் நரகத்தை அடைவார்’ என்று ‘மறையோர்’ சொன்னதாக அதாவது ‘ஸ்மிருதிகள்’ சொன்னதாக இப்பாடல் வழியாக ‘வேதாந்த தேசிகர்’ கூறுகிறார்.

பார்ப்பனர்கள் மனிதர்களில் மட்டும் ஜாதி பிரிக்கவில்லை தனக்கு நெருக்கமான பல உயிரினங்களிலும் ஜாதிகளைப் பிரித்து வைத்துள்ளனர்.

கருப்பாக இருக்கும் உயிரினங்களைப் ‘பறை’ என்ற அடைமொழியாலும் மற்ற நிறங்களில் இருப்பவைகளைப் ‘பிராமண’ என்ற அடைமொழியாலும் அழைக்கின்றனர்.

வடமாநிலங்களில் ‘பிராமணப் பசு’ என்றும் ‘சூத்திரப் பசு’ என்றும் பிரித்து வைத்துள்ளனர்.

பொதுவாக பசுக்கள் கருப்பு, சிவப்பு, வெள்ளை போன்ற மூன்று வகையான நிறங்களைக் கொண்டவை.

‘காராம் பசு’ என்பது உடல் முழுவதும் கருமை நிறத்தை உடையதாகும். இவற்றிற்கு காரணம் சில மரபணு (ஜீன்) வகைகளாகும்.

‘காராம் பசு’வின் பால் சிறிது அடர்த்தியாக இருக்கும். அதற்கு ஏற்றால் போல் கூடுதல் சுவை இருக்கும்.

கருப்பாக இருப்பதனாலேயே எருமையை புறக்கணிக்கும் பார்ப்பனர்கள், ‘காராம் பசு’ கருப்பாக இருந்தாலும் அதன் பயன் கருதி மற்றவர்களைக் குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தாங்களே குடிப்பதற்காக, “வேதம் கூறுகிறது” என்று ஜாதி அடிப்படையில் சதித் திட்டம் வகுத்து வைத்தனர் என்பது இதனால் புலனாகின்றது.

- செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்,        09.08.2025

வியாழன், 17 ஜூலை, 2025

கைவல்ய சாமியார்

 சுயமரியாதைச் சுடரொளிகள்!



1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

  1. கைவல்ய சாமியார்

தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது அவருக்கு உற்ற தோழராக இருந்து பெரும் உதவி புரிந்தவர் கைவல்ய சாமியார். தமிழ் இலக்கிய புராண சாஸ்திரங்களில் ஆழ்ந்த புலமை கொண் டவர்.

‘குடிஅரசு’ ஏட்டில், இந்து மத புராணப் புரட்டுகளையும், விழாக்களையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி அவற்றின் பொய்களை அம்பலப்படுத்தினார்.

கைவல்யம் நூல்

ஜாதி ஒழிப்புக்காக போராடி, தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கினார். பார்ப்பனக் கொள்கைகளை தர்க்க ரீதியாக எதிர்த்து பேசி வாதாடும் வல்லமை பெற்றவர்.

கைவல்யசாமி கேரளத்தில் கள்ளிக்கோட்டையில் 1877ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் பொன்னுசாமி. தந்தை, சகோதரர்கள் வேதங்களை கற்றவர்கள்.

பாலக்காட்டில் சின்ன வயதில் படித்தார். பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். ஏழாம் வகுப்பு வரையே இவரது கல்வி நீடித்தது. பின்னர் மதங்களில் ஈடுபாடு ஏற்பட்டு கரூரில் மவுனசாமி மடத்தில் சேர்ந்து சமய இலக்கியங்களைக் கற்றார். மத நூல்கள் பலவற்றையும் படித்து வடநாட்டுக்கு சாமியாராக போய்விட்டு வந்தார்.

‘கைவல்யம்’ என்ற நூலைப்பற்றி மிக நுணுக்கமாகவும், நுட்பமாகவும் பேசியதால் அவரது பொன்னுசாமி என்ற பெயர் மறைந்து மக்கள் அவரை கைவல்யசாமியார் என்று அழைக்கத் தொடங்கினர். 1903ஆம் ஆண்டு ஈரோட்டில் தந்தை பெரியாரைச் சந்தித்தார். முதல் சந்திப்பே தர்க்கத்தில்தான் தொடங்கியது. ஆனாலும் இருவருக்கும் ஜாதி, மத சாஸ்திரங்களில் இருந்த கருத்து ஒற்றுமையால் நட்பு மலர்ந்தது.

இதுகுறித்து தந்தை பெரியார் கூறும்போது ‘‘கைவல்யத்துக்கும், எனக்கும் தொடக்கத்தில் தர்க்கம் தான் நடந்தது. பிறகுதான் ஒத்துக் கொள்ளும் இடங்கள் வந்தன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமண விருந்தில் பரபரப்பு

‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என்ற சொலவடைக்கு உயிரோவியமாய் திகழ்ந்தவர் கைவல்யசாமி.

ஒரு முறை திருச்செங்கோடு அருகே உள்ள ஏனம்பள்ளி ஜமீன்தார் வீட்டுக்கல்யாணத்திற்கு தந்தை பெரியாருடன் கைவல்ய சாமியும் சென்று இருந்தார். அப்போது அங்கு நடந்ததை தந்தை பெரியார் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.

‘‘ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்று இருக்கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத்  தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்த பார்ப்பானைப் பார்த்து ‘‘என்னடா  மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்’’ என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து ‘‘யாரடா சூத்திரன்?’’ என்று கேட்டார்.  அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.  இன்னும் இதுமாதிரி சம்பவங்களில் நாங்கள் கலந்து  இருந்ததுண்டு.

மற்றும், சாமியாரவர்கள் எப்போதும் தேர்த் திருவிழா, கோயில் செலவு, விக்கிரக பூஜை, சமுதாய வாழ்க்கையில் பல சடங்குகள் ஆகிய இவையே இந்த நாட்டுக்குப் பெரும்  ஷயரோகம் போன்ற வியாதிகள் என்று சதா சொல்லி வருவார்.

பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப்பட்டவர்களுடனும் தர்க்கரீதியாய் எடுத்துச் சொல்லி கண்டித்து வருவார்.

இவ்வளவு செய்தும் இவருக்குப் பொது மக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டியைத் தவிர, சாப்பாட்டைத் தவிர வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை, வைத்துக் கொண்டிருந்ததுமில்லை. ஆதலால் அவரைப்பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று’’ என்கிறார்.

கைவல்யசாமி கட்டுரைகள்

கைவல்ய சாமியார் ‘குடிஅரசு’, ‘திராவிட நாடு’ போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

1926ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் கைவல்யசாமி ‘குடிஅரசி’ல் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. அதில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 900க்கும் மேற்பட்ட பக்கங்களில் வந்து இருக்கிறது. கைவல்ய சாமியார்பற்றி பெரியார் எழுதி இருக்கிற ஒரு பக்கத்தை அந்தப் பக்கத்தில் முன்னுரையாக வெளியிட்டு உள்ளனர். அதில் அய்யா அவர்கள் சொல்கிறார்.

‘‘அவருடைய (கைவல்யசாமி) கட்டுரைகளுக்கு எல்லாம் நான் ஒரு முன்னுரை எழுத வேண்டும் என்றால் அவரைவிட நான் அறிவாளியாக இருக்க வேண்டும். ஆகையாலே நான் எழுதுவது பொருத்தமாக இருக்காது. அது மட்டுமல்லாமல் கைவல்ய சாமியாரை யாருக்குத் தான் தெரியாது. எல்லோருக்கும் தெரியும். ‘குடிஅரசு’ வாசகர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.’’

செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தபோது, கைவல்யசாமியார் ‘குடிஅரசு’ ஏட்டில், ‘‘நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒன்று சேர்ந்தால், ஒருமைப்பட்டுச் சிந்தையைச் செலுத்த முடிந்தால், ஒரே பாட்டைப் படித்தாரானால், ஒரே ஒரு கொள்கையை நினைக்க வல்லவர்களானால் எந்தக் காரியத்தையும் செய்து விடலாம்’’ என்று எழுதி மக்களுக்கு உணர்ச்சியூட்டி பல்லாயிரக்கணக்கான மக்களை செங்கல்பட்டுக்குப் பயணமாக வைத்தார்.

முதுமை காரணமாக கைவல்யசாமி கோபிச் செட்டிப்பாளையம் அருகில் உள்ள பங்களாபுதூரில் 1953ஆம் ஆண்டு காலமானார்.

-விடுதலை நாளேடு, 2.7.25

வியாழன், 17 ஏப்ரல், 2025

வர்ணஜாதி முறையை வலியுறுத்தும் ஸ்மிருதிகளும், வேதங்களும், பகவத் கீதையும்- அண்ணல் அம்பேத்கர்

 


விடுதலை நாளேடு
மற்றவை

(இந்து மதத்திற்கு ஆதாரமான வேதங்கள் (ஸ்ருதிகள்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), கீதை ஆகியன குறித்து அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே தந்துள்ளோம். மூலம் Dr. Babasaheb Ambedkar Writings and Speeches -Vol. 3 பக்கங்கள் 77-81)

இந்து மதத்தை மனித நேயம் கொண்டதெனக் கூறமுடியாது. அதன் காரணமாகவே, இந்து மதம் மக்களின் வாழ்வில் ஊடுருவிய போதும். மனிதத்தன்மை கொண்ட சாதாரண மக்களின் உள்ளுறை வாழ்வை ஒளிமயமானதாக அது ஆக்குவதில்லை. அது எதனையாவது செய்வதாக இருப்பின், மக்களின் வாழ்வை செயலற்றதாகவே ஆக்குகிறது எனக் கூறலாம். சாதாரண மக்களின் ஆன்மாக்களுக்கான உணவோ, துயரங்களுக்கான ஆறுதலோ, பொதுவான மனித பலவீனத்தைப் போக்க உதவியோ எதுவும் இந்து மதத்தில் இல்லை. பிறக்கவும், பயனற்ற ஒரு சில போராட்டத்துக்குப் பின் இறக்கவும், சிந்தனை அற்ற இயற்கை ஆற்றல்களை மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படி இந்து மதம் மனிதர்களை இருளில் விட்டுவிடுகிறது. மிகக் கொடிய ஒரு மதத்தினை விடக் கொடுமை நிறைந்ததாக, இந்து மதம் மக்களை கடவுளுடன் தொடர்பற்றவர்களாகச் செய்து விடுகிறது. இதுவே இந்து மதத்தின் தத்துவமாகும். அது உயர்ஜாதி மனிதர்களின் சொர்க்கமாகவும், சாதாரண மக்களின் நரகமாகவும் இருப்பதாகும்.

தர்மசாஸ்திரத்தை முதலில் எழுதிய கவுதமர், பவுதாயனா போன்றோருக்கு ரிஷி என்ற அந்தஸ்து எப்போதும் அளிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் மனுவும், யாக்ஞவல்கியரும் ரிஷிகள் எனவே கருதப் பட்டனர். ஸ்மிருதிகளின் அந்தஸ்து ஸ்ருதிகளின் அந்தஸ்துக்கு சமமானதாக ஆக்கப் பட்டதென்பதே இதன் பொருளாகும். இழந்துபோன ஸ்ருதியை நினைவிலிருந்து பெறப்பட்ட ஆவணமே ஸ்மிருதி என்று கருதப் பட்டது. ஸ்ருதியிலிருந்து மாறுபட்ட ஒன்று என்று ஸ்மிருதி கருதப்படுவதற்கு மாறாக, ஸ்ருதியும் ஸ்மிருதியும் ஒன்றே என்பது போலவும், ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுத்திக் காண இயலாதது என்றும் கருதப்பட்டது.

ஒருவர் ஸ்மிருதி, அல்லது வேதங்கள் அல்லது பகவத் கீதையை ஏற்றுக் கொள்கிறாரா என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஸ்மிருதிகள் கூறுவதில் இருந்து அடிப்படை யாக மாறுபட்ட எதனையாவது வேதங்கள் தெரிவிக்கின்றனவா? ஸ்மிருதியின் கட்டளைகளி லிருந்து கீதை எந்த விதத்திலும் மாறுபட்டதைக் கூறுகிறதா? ஒரு சில எடுத்துக் காட்டுகள் இதனை தெளிவு படுத்தும்.

புருஷசூக்தா என்றறியப்படும் பகுதியில் சதுர்வர்ணக் கோட்பாட்டை வேதங்கள் கூறுகின்றன என்பது மறுக்க இயலாத ஒன்று. இந்த புருஷசூக்தா இரண்டு அடிப்படைக் கொள்கைகளை அங்கீகரித்துள்ளது. சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது சரியானது என அது அங்கீகரிக்கிறது. இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் இடையே உள்ள உறவு அவர்கள் சமமற்றவர்கள் என்பதையும் அது அங்கீகரிக்கிறது.

மனுஸ்மிருதியைச் சுருக்கமாகக் கூறுவதே கீதை. வேதங்களும், கீதையும் பொதுக் கோட்பாட்டைப் பற்றி விளக்கும்போது, மனுஸ்மிருதி அந்தக் கோட்பாட்டினைப் பற்றிய விவரங்களை விவரித்துக்கூறுகிறது
பகவத் கீதை கூறுவதும் கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டதே ஆகும். கிருஷ்ணர் கூறியதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதை சுருக்கமாகக் கீழ்க்கண்ட நான்கு வகையாகப் பிரித்துக் கூறலாம்.

(1) நான்கு ஜாதிகளான பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமூகத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கும் ஏற்பாட்டை நானே உருவாக்கினேன். அவர்களது குல ஆற்றல்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பல்வேறு தொழில்களை நானே நிர்ணயித்துள்ளேன் இந்த சதுர்வர்ணத்தை உருவாக்கியவனே நான்தான் – கீதை -IV-13

(2) மற்றொரு வர்ணத்தினரின் தொழிலைச் செய்வது ஒருவருக்கு எளிதாக இருப்பினும், அவரவர் வர்ணத்துக்கான தொழில்களை, அவற்றை அவரால் திறம்படச் செய்ய இயலாத போதும், செய்வதே மிகவும் சிறந்தது. தனது வர்ணத்துத் தொழிலைச் செய்வதனால் இறப்பு நேர்ந்தாலும் அதனைச் செய்வதிலேயே மகிழ்ச்சி உள்ளது; ஆனால் மற்றொரு வர்ணத்தின் தொழிலைச் செய்ய முற்படுவது ஆபத்து நிறைந்தது – கீதை IIIசெ 35

13) தங்களது தொழிலின் மேல் பெரு விருப்பம் கொண்ட கல்வியறிவற்றவர்களின் நம்பிக்கையை, கல்வி கற்றறிந்தவர்கள் கெடுக்கக் கூடாது. கல்வி கற்றவர் தனது வர்ணத் தொழிலையே செய்வதுடன். மற்றவர்களையும் அவ்வாறே செய்ய வைக்க வேண்டும் கல்வி கற்ற ஒரு மனிதன் தனது தொழிலுடன் ஓட்டுதல் கொண்டவனாக இருக்கக் கூடாது. ஆனால், தங்களது தொழிலுடன் ஒட்டுதல் கொண்ட கல்வி அறிவற்ற, மந்த புத்தியுள்ள மக்களை

அவர்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ளும் தவறான பாதையைக் காட்டி கற்றறிந்தவர்கள் கெடுக்கக் கூடாது. கீதை II 1.26.29

(4) ஓ, அர்ஜூனா கடமைகள் தொழில்கள் என்னும் இம் மதம் (சதுர்வர்ண மதம்) எப்போ தெல்லாம் கீழ்நிலையை அடைகிறதோ, அப்போ தெல்லாம் நானே பிறந்து, அதன் அழிவுக்குக் காரணமானவர்களைத்  தண்டித்து, அதனை மீண்டும் நிலைநாட்டுவேன். – கீதை (V -7,8.

கீதையின் நிலைப்பாடு இதுதான் இதற்கும் மனுஸ்மிருதிக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது? மனுஸ்மிருதியைச் சுருக்கமாகக் கூறுவதே கீதை – மனுஸ்மிருதியை விட்டுவிட்டு ஓடி கீதையில் அடைக்கலம் தேட விரும்புபவர்கள் ஒன்று கீதையைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது மனுஸ்மிருதியைப் போலவே உள்ள கீதையின் மய்யக் கருத்தைக் கொள்ளாமல் புறந்தள்ளத் தயாராக இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

இந்து மதத் தத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு நான் எடுத்துக் கொண்ட மனுஸ்மிருதியில் உள்ளவற்றை வேதங்களும், கீதையும் கூறுவன வற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் அவற்றில் ஒருவர் என்ன வேறுபாட்டைக் காண முடியும்? வேதங்களும், கீதையும் பொதுக் கோட்பாட்டைப் பற்றி விளக்கும்போது. மனுஸ்மிருதி அந்தக் கோட்பாட்டினைப் பற்றிய விவரங்களை விவரித்துக் கூறுகிறது. ஆனால், ஸ்மிருதிகள். வேதங்கள் பசுவத் கீதை ஆகிய அனைத்தின் மய்யக் கருத்துமே. ஒரே நூலால் ஒரே மாதிரி நெய்யப்பட்ட ஒரே மாதிரியான துணியின் பகுதிகளாகவே உள்ளவையாகும்.

திங்கள், 17 மார்ச், 2025

வீட்டுக்கு வீடு பெரியார் படமும் -மனுதர்மமும்

 நீட்டி முழங்கும் நிதி அமைச்சர் மாண்பமை

நிர்மலா சீத்தாராமன் அவர்களே!
மின்சாரம்
பதிலடிப் பக்கம்

பெரியார் படத்தை ஏன் வீட்டுக்கு வீடு வைக்கிறார்கள்? அரசு அலுவலகங்களில் மாட்டி வைக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களே!
இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என்று ஒரே ஒரு கணம் சிந்தித்ததுண்டா?
நீங்கள் ஒரு பெண்மணிதானே! பெண்கள் தானே மாநாடு கூட்டி “பெரியார்” என்று பட்டம் சூட்டினார்கள் (13.11.1938)
இந்த உண்மையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் போற்றும் ஹிந்து ராஷ்டிரா பார்வையில் பெண்களுக்கான இடம் என்ன?
இந்தியாவுக்கு அரசியல் சட்டமாக மனுதர்மம் தான் அமைய வேண்டும் என்று நீங்கள் போற்றும் ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் கூறியுள்ளது உங்களுக்குத் தெரியுமா? (Bunch of Thoughts, அத்தியாயம், பக். 113)
அந்த மனுதர்மம் என்னென்னவற்றை எல்லாம் கூறுகிறது?
அதிலும் குறிப்பாகப் பெண்களைப் பற்றி – இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்குக் கூறி இருக்கிறதே – அவை பற்றி அறிவீர்களா?
இதோ சில எடுத்துக்காட்டுகள்.

மனுதர்மம் – அத்தியாயம் 5

சுலோகம் 147: பாலியமாகவிருந்தாலும், யௌவனமாகஇருந்தாலும், வார்த்திபமாகவி ருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.
சுலோகம் 148:பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டிய தேயல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.
சுலோகம் 154: கணவன் துர்ராச்சாரமுள்ள வனாக விருந்தாலும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குணமில்லாதவனாயிருந் தாலும் பதிவிரதையானஸ்திரியானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.
சுலோகம் 162: ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொருவனால் உண்டாக்கப்பட்ட பிள்ளை யும் சாஸ்திரத்தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்பட வில்லை.

சுலோகம் 163: தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்தவனான மற்றொரு வனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்த வளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.
சுலோகம் 164: ஸ்திரி விபச்சாரஞ் செய்கிற தினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண் குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.
மனுதர்மம் – அத்தியாயம் 9
சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.
சுலோகம் 15: மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாக வுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப் பினும் அவர்களை விரோதிக் கின்றார்கள்.
சுலோகம் 17: படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
சுலோகம் 18 :மாதர்களுக்கு ஜாதகர்ம முதலி யவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோப தேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.
சுலோகம் 19:மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டி ருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.
சுலோகம் 30:கணவன் சொற்படி நட வாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.
சுலோகம் 46 : கணவன் மனையாளைத் தள்ளி விட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.
சுலோகம் 52 :ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்றுமொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிரு வருக்கும் பொதுவாயிருக் கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப் போல் ஒருவன் மனையாளி டத்தில் மனையாளில்லாதமற்றொருவன் பிள் ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவேயிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்ததல்லவா?
சுலோகம் 53: நில விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொரு வனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற் பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்துகொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவி ருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.
சுலோகம் 59:பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக் குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.
சுலோகம் 60:விதவையிடத்தில் பெரி யோர் களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப் போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக் கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள் ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.
சுலோகம் 69:ஒரு பெண்ணை ஒருவ னுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத் தானம் செய்த பின் அந்த ஒருவன் இறந்து போனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.
சுலோகம் 70:அவனந்தப் பெண்ணை விதிப் படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ் திரமுடைய வளாயும், திரிகரண சுத்தியுடைய வளாயுமிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வரையிற் பார்த்து கருப்ப முண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமான வுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.
சுலோகம் 77: கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலிய வற்றை வாங்கிக் கொண்டுஅவளோடு பேசு தலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கவரத் தக்கதன்று.

சுலோகம் 78:கணவன் சூதாடுகிறவனயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளி யாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.
சுலோகம் 81:மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறு பவளை பத்து வருஷத்திற்கு மேலும், பெண் ணையே பெறுபவளை பதினொரு வருஷத் திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.
சுலோகம் 88: குலம், நல்லொழுக்கம் இவை களாலுயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ள வனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.
சுலோகம் 94: முப்பது வயதுள்ள வரன் அழகான பன்னிரெண்டு வயதுள்ள பெண் ணையும்,இருபத்தி நாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.

மேற்கண்ட சான்றுகள் 1919இல் வெளியிடப்பட்ட திருவைந்திபுரம், கோமாண்டூர், இளைய வில்லி இராமாநுஜாச்சாரியரால் மொழிபெயர்க்கப்பட்ட ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
இப்படி எல்லாம் பெண்களை இழிவுபடுத்திய மனுதர்ம சாஸ்திர நூலைக் கொளுத்தச் சொன்னது மட்டுமல்ல – 1927ஆம் ஆண்டே கொளுத்தச் செய்தவர் தந்தை பெரியார். (அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தைக் கொளுத்தினார் என்பதை அறிவீர்களா?)
பெண்களை இழிவுபடுத்தும் இந்தக் குப்பைகளை எதிர்த்ததாலும், மக்கள் தங்கள் வீடுகளில், அலுவலகங்களில் தந்தை பெரியர் படத்தை அலங்கரித்து வைக்கிறர்கள்.
நிதி அமைச்சர் மாண்பமை நிர்மலா சீத்தாராமன் அவர்களே.
ஹிந்துத்துவாவின் மனுதர்மத்தில் கூறியுள்ளதைக் கடைப்பிடித்தால் நீங்கள் படித்திருக்கவும் முடியாது பட்டம் பெற்றிருக்கவும் முடியாது – நிதி அமைச்சராகவும் வந்திருக்க முடியாது!
எதையும் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது! பெரிய பதவி… ஆனால் வெங்காயம் தின்னாத பரம்பரை என்று நாடாளுமன்றத்தில் சொன்னவர் தானே நீங்கள் – சிந்தியுங்கள்.
வருணதர்மப்படி பெண்களும் அவர்ணஸ்தர்கள் தாம் – பார்ப்பனப் பெண்களும் அடிமைகள் தான். பிறப்பின் அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்தும் அத்தனையையும் தவிடுப் பொடியாக்கினார் தந்தை பெரியார்.
அதனால்தான் அவர் படம் அங்கு இங்கு எனாதபடி – அவர் சிலைகளை நாடெங்கும் வைத்துக் கொண்டாடுகிறார்கள் – தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்! நிதி அமைச்சரே – நீங்களும் ஒரு பெண்தானே!

வெள்ளி, 29 நவம்பர், 2024

ஆரியர்களின் தீயும், திராவிடர்களின் தீபமும்! சுமன் கவி

 

விடுதலை நாளேடு

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

என்று வெவ்வேறு மதத்தவர்களின் வழிபாட்டு முறைகளை தனது கவிதையில் சொல்கிறார் பாரதியார்.

தான் ஒரு பார்ப்பனராக இருந்த போதும், பல இடங்களில் தன் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் ஸநாதனக் கருத்துகளைச் சொல்லிய போதும், சில இடங்களில் தன்னையும் அறியாமல் பார்ப்பனர்கள் குறித்து உண்மைகளை சொல்லிவிடுவார் பாரதியார்.

அப்படி சொல்லப்பட்ட ஓர் முக்கியமான உண்மைதான் மேற்குறிப்பிட்டது. இதில் தீயினைக் கும்பிடும் ஹிந்துக்கள் என்று குறிப்பிடாமல் பார்ப்பார் என்றே குறிப்பிடுகிறர். இது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

பிற மதத்தவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக மட்டும், நம்மை ஹிந்துக்கள் என்று ஒன்றுதிரட்டும் ஸநாதனவாதிகளுக்கு எதிராக, பார்ப்பனர்கள் வேறு, வெகுசன மக்கள் வேறு என்று சாட்சியம் கூறுகிறார் பாரதியார்.
ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் வெகுமக்கள், ஸநாதனம் பார்ப்பனர்களுக்கு முற்றிலும் விரோதமான கடைப்பிடிப்புகளை, சடங்குகளைக் கொண்டவர்கள் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று தீ வழிபாடு.

ஆரியப் பார்ப்பனர்கள் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்துவரும் ஆரியரல்லாத மக்களின் வழிபாட்டு முறைகள் விக்கிரகங்களை வழிபடுவது, நடுகற்களை வணங்குவது, முன்னோர் வணக்கம் என பல்வேறுபட்டதாக இருந்தது.
ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர், போலன் கணவாய் வழியே ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கே நுழைந்த ஆரியக் கூட்டம் தீயை வழிபடும் பழக்கமுடையவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்து வந்த மத்திய ஆசியப் பகுதிகள் மிகவும் குளிர் நிறைந்தவை. நிலத்தைக் கையகப்படுத்தி விவசாயம் செய்வதற்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த இயற்கைச் சூழலும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை.

ஓர் இடத்தில் நிலையாக தங்கி வாழ்ந்த மக்கள்தான், குறிப்பட்ட இடத்தில் சிலைகளையோ, நடுகற்களையோ அமைத்து வழிபட முடியும். நகர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிக் கூட்டத்தார் விக்கிரகங்களையோ, கோயில்களையோ அமைத்து வழிபடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஆரியர்கள் வாழ்ந்த சூழல் தீயை அருமையானதாகவும், மிகவும் போற்றத் தக்க ஒன்றாகவும் கருதிடக் காரணமாக அமைந்தது. இதைக் குறிப்பிடும் பேராசிரியர்

சுப.வீரபாண்டியன் “நெருப்பு குளிர் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. அதனால்தான் ஆங்கிலேயர்கள் ஒருவரை வரவேற்க ‘warm welcome’ என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். அதையே நாம் “குளிர்ந்த முகத்தோடு வரவேற்பு….” என்று கூறுகிறோம். ஏனெனில் வெப்பப் பகுதியில் வாழும் நமக்கு குளிர்ச்சி முக்கியமானது. இங்கு நாம் “ஒருவருக்கு சூடான வரவேற்பு கொடுக்கப்பட்டது” என்று சொன்னால். அது அவரை அடித்துப் புடைப்பதைக் குறிக்கிறது” என்கிறார் சுப.வீ.

புலம்பெயர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் கூடாரங்களை அமைப்பது, நெருப்பு மூட்டி கூட்டமாக இருந்து குளிர் காய்வது என்றிருந்தவர்கள் அந்த நெருப்பையே கடவுளை அடைவதற்கான வாசலாகக் கருதி வழிபட்டிருக்கின்றனர். அதில் பலியிடப்படும் விலங்குகள், பறவைகள் என அனைத்தும் சொர்க்கத்தை அடையுமென்று நம்பியிருக்கின்றனர். பசுக்கள், குதிரைகள் என தாங்கள் வளர்த்த எல்லா பிராணிகளையும் யாகத்தில் இட்டு அவற்றின் மாமிசத்தை ’அவிசு’ என்கிற பெயரில் உண்ணும் வழக்கம் கொண்டிருந்தனர். அவற்றில் ‘புருஷ மேத யக்ஞம்’ என்கிற பெயரில் நடத்தப்பட்ட வேள்வியில் மனிதர்களையே பலியிட்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.

புத்தம், சமணம் போன்ற சிரமண மதங்களின் எழுச்சிக்குப் பின் மாமிச உணவுகளை விட்டொழித்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம், தங்களது வேள்வி கலாச்சாரத்தை மட்டும் விட்டுவிடவில்லை. அதனால்தான் இன்றும் வேள்வியில், துணிகள், உணவுப் பொருட்கள், நெய் என எல்லாவற்றையும் கொட்டி வீணடிக்கிற வேலையைச் செய்கின்றனர்.

வேத வேள்விகளை பார்பனர்கள் போற்றிய அதே நேரத்தில், வேள்விகளை பெரிதென்று எண்ணாத, சிலைவழிபாடு கொண்ட திராவிடர்களின் தெய்வங்களை அவர்கள் திருடத் தொடங்கினர். தங்களது அதிகாரத்தை சடங்குகளோடு பிணைத்திருந்த பார்ப்பனக் கூட்டம் பல தெய்வ வழிபாடு கொண்ட வெகுமக்களின் வழிபாட்டு முறையோடு தங்களது யாக வேள்விகளை இணைத்துக் கொண்டனர்.

எல்லாநேரங்களிலும், எல்லா இடங்களிலும் வேள்விகளை நடத்த இயலாது என்பதனால் அதன் சிறு வடிவமான தீயை விக்கிரகங்களின் முன் காண்பிக்கிற வேலையைச் செய்தனர். இதுதான் ஆரியர்களின் வழிபாட்டு முறையும், ஆரியரல்லாத பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையும் சந்திக்கும் இடமாகும். கோவில்களில் வழிபடும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பாலோர் அதை தீபமாகவே காண்கின்றனர்: அதாவது ‘Light’ வெளிச்சமாக. ஆனால் இது ஆரிய தீ வழிபாட்டின் சிறு அடையாளமாகும்.
தீயை வழிபடுவதற்கும் ஒளியை வழிபடுவதற்கும் மாபெரும் வேறுபாடு உண்டு.

“அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்றார் வள்ளலார். அவர் இறைவன் ஒளி வடிவானவன் என்றார். அந்த ஒளியே எல்லா ஜீவன்களிலும் இருக்கிறது என்றார். இது ஒரு தத்துவார்த்த நிலை. ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் நெருப்பில் போட்டுப் பொசுக்கி அவை இறைவனைச் சென்று சேர்கின்றன என்று கருதும் ஆரிய கோட்பாட்டிற்கு சற்றும் தொடர்பற்றது இந்த ஒளி தத்துவம்.

ஒளியை இறையாக வழிபட்ட வள்ளலார், மறுபுறம் மனிதர்கள் இறந்த பின் எரிக்கின்ற வழக்கத்தைச் சாடுகிறார்.

“பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப்
பகர்கின்றேன் நீர்  சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்..!”

என்கிறார்.
தீயோடு தமது சடங்கு சம்பிரதாயங்களை பிணைத்து வைத்திருக்கும் ஆரியர்கள் அதே தீயில் இறந்த உடல்களையும் இட்டு அவர்கள் சொர்கத்திற்குச் செல்வதாகக் கருதினர். ஆனால் மறுபிறப்பு உண்டு என்று நம்பிய மக்களும், புதைப்பதற்கு நிலமும், மீண்டும் வந்து அதை வழிபடுவதற்கான வாய்ப்புகள் கொண்ட மக்களும் புதைப்பதையே தங்கள் மரபாக கொண்டிருக்கின்றனர்.
இன்றும் கூட பார்ப்பனரல்லாத பலரும் இறந்தவர்களை எரிக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதை பல வரிகளில் தொடர்ந்து இடித்துரைக்கிறார் வள்ளலார். சித்தர்கள் மரபில் புதைத்து அதில் ‘சமாதி’ எழுப்புவதே வழக்கமாக உள்ளது. ஜாதிய அடுக்கில் பிற்பாதியில் உள்ள பல சமூகங்கள் இன்றும் புதைப்பதையே மரபாக கொண்டிருக்கின்றனர்.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஒளி’யை வழிபடுவது வேறு, ‘தீ’யை ‘புனித’மென்று கருதுவது வேறு.
ஆரியர்களின் வேள்வி – யாகங்களை ஏற்றுக் கொண்ட பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்கிற மன்னன் இருந்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவதைக் காண்கிறோம். அதே வேளையில்,

“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.”

என்ற திருவள்ளுவர், “வேள்விகளை சிறப்பென்கிறீர்களே, அதைவிட ஓர் உயிரைக் கொலைசெய்யாமல் இருப்பதே சிறப்பு என்கிறார். அக்காலத்தில் வேள்விகளில் உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன என்பது இதில் மறைபொருளாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான வேள்வி எதிர்ப்பும், தீயின் ‘புனித’த்தை மறுப்பதும் ஆரியரல்லாத திராவிட மக்களிடையே மரபாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்த வேற்றுமையைத் தான் பாரதியாரும் முதலில் சொன்ன வரிகளில் குறிப்பிடுகின்றார்.
ஆனால் பல்வேறு கவிதைகளில் வேதத்தையும், வேள்விகளையும் வியந்தோதிப் பாடியவர் அவர். அதுதான் அவரின் ஆரிய உணர்வு.
இந்தப் பாகுபாட்டை அறியாமல், ‘ஹிந்து’ என்கிற சூழ்ச்சி வலைக்குள் நம்மில் பலரே வீழ்ந்துகிடப்பதுதான் வேதனை.


வியாழன், 28 நவம்பர், 2024

சிருங்கேரி சங்கராச்சாரியார் பராக்! பராக்!-கவிஞர் கலி.பூங்குன்றன்

விடுதலை நாளேடு
ஞாயிறு மலர்

 கடந்த ஒரு மாதமாக சிருங்கேரி சங்கராச்சாரியார் சிறீவிதுசேகர பாரதீ சுவாமிகள் என்று அழைக்கப்படுபவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உபந்நியாசம் செய்து அலைகிறார்.

ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள் நான்கு. வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

32 வயதே வாழ்ந்த ஆதிசங்கரர், போக்குவரத்து வசதியற்ற அந்தக் காலத்தில் இடைவெளி அதிக தூரம் உள்ள இந்த இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவி இருக்க முடியாது.

ஞாயிறு மலர்

அவர்களின் சீடர்கள்தாம் நிறுவியிருக்க முடியும் என்று அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுகிறார்.
ஹிந்து மதத்தில் இவர் ஒரு ‘அத்தாரிட்டி’ என்று கூறப்படுபவர். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் உற்ற நண்பர் – அவரின் தூதுவராகவும் கூடச் செயல்பட்டவர்.

நான்கு மடங்கள் என்பதுதான் முதலில் நிறுவப்பட்டது. அய்ந்தாவது மடமான இப்பொழுதுள்ள காஞ்சி மடம் பிற்காலத்தில்தான் நிறுவப்பட்டது. அதுகூட முதலில் கும்பகோணத்தில்தான் நிறுவப்பட்டது.

பிறகுதான் காஞ்சிபுரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது என்பதை விலாவாரியாக விளக்குகிறார் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

தொடக்கத்திலிருந்தே சிருங்கேரி மடத்துக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் ஏடாகூடாப் பொருத்தம்தான்.
இப்பொழுதுகூட காஞ்சிபுரம் சென்ற சிருங்கேரி சங்கராச்சாரியார், காஞ்சியில் சிருங்கேரி மடத்துக்கென்று உள்ள மடத்துக்குச் சென்றாரே தவிர, ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட காஞ்சி சங்கர மடத்துக்குச் (விஜயேந்திர சரஸ்வதி) சென்றார் இல்லை.
சிருங்கேரி மடத்துக்குள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது ஒரு சுவையான வரலாறு.
இதுபற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுவது கவனிக்கத்தக்கது.

“தமிழ் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும், மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் எனப் பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாகப் போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ, மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.
“நீங்கள் தமிழ் நாட்டில் பூர்விக பிராமணர்கள் தானே?”
“ஆமாம். அதற் கென்ன?”

ஞாயிறு மலர்

“நீங்கள் ஸ்ரீமடத்தின் எல்லைக்கு அப்பாற் பட்டவர்கள். அதனால் உங்களுக்கு இங்கே ஃப்ராப்தம் இல்லை” என்றனர் சிருங்கேரி மடத்துக்காரர்கள்.

“தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக்குட்பட்டதுதானே… நாங்களும் தென் தேசத்துக்காரர்கள்தானே…”
“பூகோள எல்லை கிடக்கட்டும்… உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்த்ர சம்பிர தாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள். இம்மடத்தின் வைதிக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதியில்லை.”
கர்நாடக மண்ணில் ‘தமிழர்கள்’ முதன்முதலாக அனுமதி மறுக்கப்பட்டது இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.”
(அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?”
என்ற நூல் பக்கம் 75)

இந்தச் சூழலில்தான் தங்களுக்கென்று கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஒரு மடத்தை உண்டாக்கினார்கள். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து அந்தக் கும்பகோண மடம் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டது.

ஆதிசங்கரரைப் பின்பற்றுவதாகச் சொல்லப்பட்டாலும் இவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது பூச்சியம்தான்.
இராமேசுவரத்தில் 14.2.2001 அன்று இராமநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரும், சிருங்கேரி சங்கராச்சாரியாரும் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாக் குழுவினர் சங்கராச்சாரியார்களுக்கு சிறப்பு செய்தபோது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது.

மதுரை ஆதீனம் தலையிட்டு, விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி, இரு மடங்களின் மடாதிபதிகளுக்குள் சமரசம் செய்து வைத்தார். (‘தினபூமி’ 15.2.2001)

இவர்கள் எல்லாம் முற்றும் துறந்த முனிபுங்கவர்களாம்.

மும்மலங்களையும் அறுத்தவர்களாம்! அதாவது ஆணவம், கன்மம் (தீவினை), மாயை (பொய்த்தோற்றம்). இவைகளைக் கடந்ததாகக் கூறப்படுபவர்களின் யோக்கிய தாம்சம் எப்படி இருக்கிறது? ஊருக்குத்தான் உபதேசம்!
இப்பொழுது தமிழ்நாட்டில் வலம் வரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரின் மூத்த குருநாதர் தந்தை பெரியாருக்கு ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதியதுண்டு. (‘குடிஅரசு’ 2.3.1930)

தந்தை பெரியாரையும், அவர்தம் தொண்டுகளையும் புகழ்ந்து எழுதி, தமது மடத்துக்குத் துணைவியாருடன் (தர்மபத்தினி) வர வேண்டும் என்று வேண்டுகோள் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்துக்கு தந்தை பெரியார் பதில் எழுதினார்.

“தங்களின் ஸ்ரீமுகத்தில் ஸநாதன தருமத்தைக் கெடுக்காமல், கரும கண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து, சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வகையில் என்கிற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதம் இல்லாமல் சில ‘சுவ தந்தரங்கள் அளிக்கப்படும்’ என்கிற வாசகங்கள் காணப் படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாக இருக் கின்றது” என்று மிகுந்த மரியாதை யோடு தந்தை பெரியார் பதில் எழுதினார்.

இதே சிருங்கேரி சங்கராச்சாரியார் தாழ்த்தப் பட்ட மக்கள் பற்றி என்ன அபிப்ராயம் கொண் டுள்ளார்?
The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style cannot remove from it its inlaid filth that has originated from the deep rooted contamination of the filthy inhereditary.
The provision for keeping the impure at a distance is strictly speaking a rule of segregation.
(‘The Hindu Ideal’ – Page – 230)

“உலகத்தில் உயர்ந்த வகை சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டாலும் பஞ்சமர்கள் என்று கூறப்படுவோர் (தாழ்த்தப்பட்டவர்) களுக்குப் பிறப்பின் அடிப்படையில் உள்ள – ஆழமாக வேரூன்றியுள்ள மிகவும் அசூயையான துப்புரவுக் கேடான தூய்மையற்ற தன்மைதான் – அவர்களைக் கிட்டே வராதே – தூர நில் என்று சொல்லுவதற்குக் காரணம்” என்கிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்.

(காஞ்சிபுரம் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மட்டும் என்ன வாழுது? “தீண்டாமை சேமகரமானது” என்று தி(தெ)ருவாய் மலர்ந்தவர்தானே! நூல்: (ஸ்ரீஜெகத்குருவின் உபதேசங்கள்)

அவர் வழிவந்த சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதீதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஸநாதனத்துக்கு ஏதேதோ விளக்கங்களை உபந்நியாசமாக அள்ளி விடுகிறார்.

“ஸநாதனத்தைக் காப்பாற்ற வேண்டும், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைத் தெரிந்துகொள்ள, வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். ஏனெனில், மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிந்து கொள்ள, அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள ஸநாதன தர்மத்தில்தான் உள்ளது.”

“மனிதன் சுக துக்கங்களை அனுபவிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதன் பலன்களை அனுபவிக்க, மனிதன் பல பிறவிகளை எடுத்தாக வேண்டும்.”

“எனவே, சாஸ்திரங்கள் காட்டும் வழியில் பயணித்து, இப்பிறவியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
(‘தினமலர்’ – 2.11.2024)

சுற்றிச் சுற்றி எங்கே வருகிறார் பார்த்தீர்களா?

அவரது குருநாதரை போகிற இடங்களில் எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்.

அவர் குருநாதர் எத்தகையவர் என்பதைத்தான் பார்த்தோமே! (‘The Hindu Ideal’). பஞ்சமர்களை எட்டி நில், கிட்டே வராதே என்பதற்குக் காரணம் அவர்களின் பிறவிதான் – பரம்பரைப் பரம்பரையாக வந்த தூய்மையற்ற தன்மைதான் என்ற சொன்னவரின் சீடர்தான் இப்பொழுது தமிழ்நாட்டில் உலா வருகிறார்.

பகவான் படைப்பில் அனைவரும் சமம் – பேதம் இல்லை – உயர்வு தாழ்வு இல்லை – ஜாதி கூடாது – தீண்டாமை பாவம் என்ற வகையில் ஒரே ஒரு சொல்லையாவது சிருங்கேரியாரின் சுற்றுப் பயணத்தில் உபந்நியாசம் செய்ததுண்டா?
என்னதான் அ(ம)ருள் உபதேசம் செய்தாலும், தந்தை பெரியார் மண்ணில் அந்தப் பருப்பு வேகாது – வந்தோமா – கடைகட்டி சென்றோமா –

என்று நடை கட்டுவதுதான் உத்தமம்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!

வெள்ளி, 8 நவம்பர், 2024

கீதை உபந்நியாசமாம்! (2)

பதிலடிப் பக்கம்: 

விடுதலை நாளேடு

 கவிஞர் கலி.பூங்குன்றன்

சென்னையில் இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்தர வகுப்பு நடத்தப்படுகிறது என்ற தகவலையடுத்து…
25.10.2024 அன்றைய ‘விடுதலை’யில் “கீதை உபந்நியாசமாம்” என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுதப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பழம்பெரும் சுயமரியாதை இயக்க எழுத்தாளர் பி.வி.ஆர். ‘விடுதலை’யில் 19.8.1956இல் எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது.

கிருஷ்ணன் அவதாரங்கள்
வெறும் கற்பனைக் கட்டுக் கதைகள்
லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேராசிரியர் ஜே.பி.எஸ்.ஹால்டேன் உலகத் தோற்றம்பற்றி வெளியிட்டுள்ள கருத்தில் நீந்துவன, ஊர்வன, விலங்குகளிலிருந்து மனிதர்கள் தோற்றமாயினர் என்றும், இந்துமத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரங்கள் இந்த உலக உயிரினத் தோற்ற வளர்ச்சி வரலாற்றையே குறிப்பிடுகிறதென்றும் பேராசிரியர் சாஹ்னி தெரிவித்த கருத்து உலகத் தோற்றம் பற்றி, இப்போது ஆராய்ச்சியாளர் கருத்துக்கு ஆதரவாகவுள்ளது என்றும், நீந்துவனவான மீனினத்திலிருந்து, ஆமை முதலிய ஊர்வனவும், ஆமையிலிருந்து பன்றி முதலிய விலங்குகளும், இந்த விலங்குகளிலிருந்து குள்ள மனிதர்களும், இந்த குள்ள மனிதர்களிலிருந்து பெரிய உருவமும் ஆற்றலுமிக்க சிம்மம் போன்ற மனிதர்களும் தோன்றினர் என்பதே இவரது விளக்கக் கருத்து என்றும், இந்த உலகத் தோற்ற உண்மையை அக்கால இந்திய மக்கள் தெளிவுற உணர்ந்து இருந்தனரென்று தான் என்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த அவதாரக் கதைகளின் வரிசைக் கோர்வையை கவனிக்குமிடத்து அடிநாள் இந்தியர் வெளியிட்டிருந்த கருத்துக்களைக் கொண்டு, பழக்கத்தின் மீது இக்கருத்துக் கொண்டு இப்படி பிற்காலத்தில் கதைகள் புனைந்துள்ளனர் என்றே எண்ணச் செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவதாரங்கள் வெறும் புரட்டு என்பதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உள்ளன.

தழுவல்
மச்சாவதாரம் என்பது பண்டைக்கால ரோமர் புராணக் கதைகளில் உள்ள ஜானஸ் என்ற இருமுக தேவனின் கதையின் தழுவல் என்று பிரிட்டன் தத்துவக்கழக உறுப்பினரான திருமதி எலிசபெத் ஏ ரீட் என்பவர் தாம் எழுதிய இந்து இலக்கியங்கள் அல்லது இந்தியாவின் பண்டைக்கால நூல்கள் என்பதில் விளக்கியுள்ளார். இந்த ஜானஸ்தேவனும் இவனது மனைவியும் தங்கை காமசேனியும் உடலின் மேல் பகுதி மனித உருவமாகவும் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மீன் உருவமுமாகக் கொண்டவர்கள்.
மற்றும் பாபிலோனிய புராணம். தேவன் ஒன்ஸ் என்பவனும் சிரிய நாட்டுக் கடவுளிச்சியான அதகாரிஸ் என்பவளும் மேல் உடல் பகுதி மனித உருவமும் கீழ் உடல் மீனுருவமும் கொண்டவர்கள்.
கிறிஸ்தவ சகாப்தம் மத்திய காலத்தில்தான் இந்த வேத பார்ப்பன இந்துமத புராணங்கள் எழுதப்பட்டு கிருஷ்ணன் ராமன் முதலியவர்கள் விஷ்ணு அவதாரங்கள் ஆக்கப்பட்டதாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது மற்றும் கிருஷ்ணன் நரி தந்திரங்கள் கொண்டவன் என்னும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாகரிக வெறிக்கதைகள்
சிவன், கிருஷ்ணன் பற்றிய கதைகள் எல்லாம் பிற்காலத் தொகுப்புகள் என்றும் அநாகரீக வெறியாட்டுக் கற்பனைகள் என்றும் மாக்ஸ்முல்லரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்துக் கடவுள்கள் தங்களுடைய அன்றாட உணவுக்கும் மனிதர்களை எதிர்பார்த்துக் கிடக்கின்றன என்று நையாண்டியும் செய்துள்ளார். இவர் இவ்வகை இந்த இந்து கடவுள்கள் என்பதெல்லாம் பொய் வெறும் கற்பனை சித்திரங்களும் மனிதர் செய்த சிலைகளுமேயாகும் என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்; மகாபாரதக் கதைகள் பைத்தியக்காரனின் கனவுகள் போன்றவை என்பதும் இந்த ஆராய்ச்சி மேதையான எலிசபெத்தின் தீர்ப்பு.
ஆந்திரப் பெரியார் வேமன்னா ராமாயணம் கொலைக்கதை பாரதம் குடும்ப பாசக்கதை என்கிறார்.

கிறிஸ்தவரிடம் சென்ற 3 பார்ப்பனர்
மேனாட்டு இலக்கிய சரித்திர ஆராய்ச்சிப் புலவர்களான வெப்பர், லேசன் என்பவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி நூல்களில் மற்றொரு கருத்தும் காணப்படுகிறது.
அதாவது கிறுஸ்தவ சகாப்தத்தின் துவக்க காலத்தில் மூன்று வட இந்தியப் பார்ப்பனர்கள் கிறிஸ்தவர்கள் வாழும் இடத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்தனர் என்றும், இம்மூவரும் தங்கள் ஊருக்குத் திரும்பியதும் தங்களுடைய பார்ப்பன வேத மதத்தில் மாற்றங்கள் செய்து கிருஷ்ண வாசுதேவ வணக்கத்தையும் நுழைத்தனர் என்கின்றனர் இவர்கள். மற்றும் மகாபாரதக் கதையில் சில 5 முக்கிய பகுதிகள் கிறிஸ்து பிறந்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது பல மேனாட்டு ஆசிரியர்களின் கருத்து.
திரு. காசிநாத திரும்பக்தெலாங் எம்.ஏ. என்ற இந்திய ஆசிரியரும் மகாபாரதக் கதையில், பிற்காலத்தில் இடைச்செருகல் நடந்திருப்பதை ஆமோதிக்கிறார். மகா பாரதத்தில் 37ஆவது அத்தியாயம் பதஞ்சலி என்ற சமஸ்கிருத பண்டிதன் காலத்தில் எழுதப்பட்டதென்கிறார்.
துரியோதனன் கதை முஸ்லிம் மத ஏடான குரானிலிருந்து எடுக்கப்பட்டது என்று டால்பாஸ் வீலர் என்பவர் கூறுகிறார்.
இதன்படி மகாபாரதம் கி.பி.7ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகிறது. இவற்றைக் கருதுமிடத்து இது அவதார வரலாறும் அல்ல, உண்மை சரித்திர வரலாறுமல்ல வெறும் கற்பனைக்கட்டுக் கதை என்றாகிறது.

பகவத்கீதை
பகவத்கீதையின் ஆசிரியர் யார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. இது ஒரு வைஷ்ணவப் பார்ப்பனனால் எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதும், பார்ப்பனர்களை உசத்திகாட்டவும், அவர்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் எழுதப்பட்டதென்பதும், பகவத் கீதையில் காணப்படும் கருத்துக்களே சான்று கூறுகின்றன.
மற்றும் மகாபாரத மூலக்கதை தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த கீதைப்பகுதி நுழைக்கப்பட்டுள்ள தென்பது, பாக்களின் நடைமாற்றமும், இரு நூல்களிலுமுள்ள கருத்துக்கள் பழமையும் புதுமையுமாக இருப்பதும் உறுதிப்படுத்தும். மேனாட்டுப் புலவர் டாக்டர் பர்ன் என்பவரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரிச்சார்டு சுர்லின்ஸ் என்பவர், கிரேட் பிரிட்டன் தத்துவக் கழகத்தில் ஆற்றிய ஆராச்சியுரையில், கி.பி. 3ஆம் நூற்றாண்டில்தான் பகவத் கீதை எழுதப்பட்டதென்று விளக்கியுள்ளார். சர்.மானியர் வில் லியமஸ் என்பவரும் இது பிற்காலத் தொகுப்புதான் என்கிறார்.

பல கிருஷ்ணர்கள்
கிருஷ்ணன் மனைவிகளை இந்திரன் கொன்றதாகவும், இதற்காக ஆரிய வேதப் பார்ப்பனர்கள் இந்திரனைப் போற்றும் ரிக் வேதத்தில் உள்ளதாகவும் மேனாட்டு ஆசிரியர் வில்சன், ஆங்கில மொழி பெயர்ப்பு. ரிக் வேதத்தில் முதல் தொகுப்பு 260ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் இந்திரன் 50,000 கிருஷ்ணன்களைக் கொன்றதாகவும், இந்திரன் ஆரிய வேதியர்களின் காவலன் என்றும், இந்திரன் தன் எதிரிகளைத் தீயிட்டுப்பொசுக்கிக் கோரக்கொலை செய்பவனென்றும், இந்த ரிக் வேதப் பாக்களில் காணப்படுவதாக இவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
அதாவது கிருஷ்ணன் என்ற அசுரன் 10,000 வீரர்களுடன் வந்ததாகவும் இந்திரனுடன் அம்சுமதி ஆற்றங்கரையில் சண்டை நடந்ததாகவும் வில்சன் எழுதிய ரிக் வேத மொழிபெயர்ப்பு தொகுதி 5 பக்கம் 191இல் காணப்படுகிறது.
அங்கிர நாட்டு முனிவன் கிருஷ்ணன் என்றும் ரிக் வேதத்திலுள்ளது என்றும் துரோபதைக்கும் கிருஷ்ணா – கிருஷ்ணவேணி என்ற பெயருள்ளது..
ஆரிய வேதங்களைத் தொகுத்தவரும் மகாபாரத – ராமாயணங்களைத் தீட்டியவருமான வேத வியாசருக்கும் கிரு்ஷ்ண தேவபாயனா என்றும் பெயர். இவரது காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
மற்றும் சண்டியோக உபநிஷத்திலும் ஒரு கிருஷ்ணன் கதாநாயகனாக்கப்பட்டுள்ளது. அருக்சுனனுக்கும் கிருஷ்ணன் என்றும் பெயருண்டு. ஆந்திரர் ஆட்சியில் ஹவிதேஹனா என்று மன்னனுக்கும் கிருஷ்னன் என்ற மகனிருந்ததாகவும் இவனைக் கதாநாயகனாகக் கொண்டும் ஒரு கதையுள்ளதாகவும் தெரிகிறது. அசுரர்கள் கருப்பு நிறமுள்ளவர். எனவே, அவர்களையும், கிருஷ்ணன் என்றே சில ஆரிய புராணங்களில் குறிப்பிட்டிருப்பதாகவும் வில்சன் சுட்டிக்காட்டுகிறார். எனவே அவதார கிருஷ்ணன் என்பவன் யார் என்பதே நிர்ணயிக்க முடியாதபடி ஆயிரக்கணக்கான கிருஷ்ணன்களும் கிருஷ்ணன் கதைகளுமுள்ளன.
கிருஷ்ணன் முதுமையுற்ற பின்னர் ஒரு வேடன் எய்த அம்பு இவனது காலில் பாய்ந்ததால் இவன் இறந்ததாக விஷ்ணு புராணத்திலுள்ளது. இது கிரேக்க வீரன் அச்சீலிஸ் (ட்ரோஜன் போர்) இறந்த வரலாற்றை ஒத்துள்ளதாகவும் இவர் எடுத்துக்காட்டுகிறார்.

கிருஷ்ணனையும் அவனது குடும்பத்தாரையும், பாண்டவருடன் தொடர்புபடுத்த பிற்கால ஆரிய மொழிப் பண்டிதர்கள் மகாபாரத பாகவதக் கதைகள் அடிக்கடி மாற்றி எழுதியுள்ளனர் என்பது மேனாட்டு ஆசிரியர் கே.டால்பாபஸ் வீலர் கருத்துத் தெரிவித்துள்ளார். பாரதக் கதை நகரமான அஸ்தினாபுரத்துக்கும் (டில்லி) கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் குஜராத் வட்டாரத்திலுள்ள துவாரகைக்கும், 700 மைல் தொலைவு .அப்படியிருக்க, விரைவான வண்டி வாகன வசதியற்ற அந்த அநாகரிகக் காலத்தில், கிருஷ்ணனும், பாண்டவரும் எவ்விதம் நெருங்கி தொடர்பு கொண்டிருந்திருக்க முடியும்? கிருஷ்ணனின் வரலாறு எனப்படும் புராணக் கதையான பாகவதம் 12ஆம் நூற்றாண்டின் வாமதேவா என்பவரால் தொகுக்கப்பட்டது என்று மற்றொரு வரலாறும் காணப்படுகிறது.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோசாயினனிகள் எழுதிய பிரம்ம வைவர்தா என்றதிலும், அய்ந்தாம் நூற்றாண்டில் எழுதிய பத்ம புராணத்திலும் இந்த கிருஷ்ணனுடைய வரலாறுகள் வெவ்வேறாக உள்ளன.
கிருஷ்ணன் தேவகியின் 8ஆவது குழந்தை என்றும், இதற்கு முன் ஆறு குழந்தைகள் தேவகிக்கும் இரண்யகசிபுவுக்கும் பிறந்தவர்கள் என்றும் விஷ்ணு புராணத்தில் (பக்கம் 498) உள்ளது.

கிருஷ்ண வணக்கம் ஆரிய வேதத்திலுமில்லை என்றும், வில்சன் கூறுகிறார். கிருஷ்ணன், குழந்தைப் பருவத்தில் திருடனாக இருந்ததாகவும், ஒழுங்கீனமான சண்டைக்காரனென்றும் காமத் திருவிளையாடல்காரனென்றும் புராணங்களில் விவரித்திருப்பது இந்திய மக்களுக்கே மானக்கேட்டை விளைவிப்பதாகும் என்று திருமதி எலிசெபத் ரீட் சுட்டிக் காட்டுகிறார்.
16,000 மனைவிகளைக் கொண்டவன் என்பது, மக்களுக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்காது என்றும், கிருஷ்ணனைப் பற்றியவற்றை எல்லாம் வெளிப்படையாக விவரிக்கவும் அசங்கியமாகவும் அவருவருப்பாகவும் இருப்பதாகவும், இந்த பகவத் கீதை வரலாற்றிலும் கிருஷ்ணன் போக்கு நேர்மையாக இல்லை என்றும் இவர் விளக்குகிறார்.
(பி.வி.ஆர்.)

எப்படி இருக்கிறது – வியாசர் விருந்து எழுதிய ராஜாஜியே பாகவதம் பற்றியும் கிருஷ்ண லீலைகள் குறித்தும் அசூயை அடைகிறார் என்றால், கிருஷ்ணனின் தராதரத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
இந்தக் கிருஷ்ணனால் அருளப்பட்டதாகக் கூறப்படும் கீதையும். சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒரு கடவுள் – தன்னால் எழுதப்பட்ட கீதையில் குறிப்பிடுவது எல்லாம் நாகரிகமானதா?
இந்தக் கீதை பற்றிய உபந்நியாசம் தான் ஞாயிறுதோறும் சென்னை மயிலாப்பூரில் நடத்தப்படுகிறதாம்!
அய்யய்ய.. வாயால் சிரிக்க முடியவில்லையே!