வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

மனுதர்மத்தை கொளுத்த வேண்டும் ஏன்?

காலில் பிறந்தவன் சூத்திரன்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவை களினின்று  உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உப யோகமான கருமங்களைத் தனித்தனியாய் பகுத்தார்.                                                                                                       -

(அத்யாயம் 1 :சுலோகம் 87 )

முதல் படிப்பு பிராமணனுக்கே


பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம் வாங் குதல் ஆகிய இவ் ஆறு தொழிலையும் ஏற்படுத்தினார். -

( அத்யாயம் 1 : சுலோகம் 88 )

சூத்திரனுக்கு அடிமைத்தொழில்


சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணிசெய்வதை முக்கியமான தரும மாய் ஏற்படுத்தினார். இதனால் அவனுக்கு தான முதலிய வையுண்டென்று தோன்றுகிறது.

- ( அத்யாயம் 1 : சுலோகம் 91 )

சூத்திரனுக்கு தாழ்வான பெயர் சூட்டுக


பிராமணனுக்கு மங்களத்தையும்; க்ஷத்திரியனுக்கு பலத்தையும்; வைசியனுக்கு பொருளையும்; சூத்திரனுக் குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண் டியது.

- ( அத்யாயம் 2 : சுலோகம் 31 )

பிராமணனுக்குக் சர்ம்மவென்பதையும்; க்ஷத்திரி யனுக்கு வர்மம் என்பதையும்; வைசியனுக்கு பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென் பதையும் தொடர்ப்பேராக இடவேண்டியது.

- ( அத்யாயம் 2 : சுலோகம் 32 )

கீழ்ஜாதி - சூத்திரனுக்கு பூணூல் உரிமை இல்லை.


பூணூல் கூட பல வகை (அடுக்குப்படி)


பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரி யனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயி ராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.

- ( அத்யாயம் 2 : சுலோகம் 44 )

சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம் பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.

- ( மூன்றாம் அத்தியாயம்: சுலோகம் 241)

சூத்திரனுக்கு சோறு போட்டால் நரகம் எவன் சிரார்த் தஞ்செய்து மிகுந்த அந்ந முதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.

- ( அத்யாயம் 3 : சுலோகம் 249)

சூத்திரன் என்றால் பெருமையா? யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தி யினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக் கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

- ( அத்யாயம் 8 : சுலோகம் 415)

சூத்திரனுக்கு எதுவும் சொந்தமில்லை


பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத் துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

- ( அத்யாயம் 8: சுலோகம் 417)

விபசாரத்திற்கு அனுமதி?


ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந் தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன், அப்பயிர் நம்மிருவருக்கும் பொது வாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடு கிறாற்போல், ஒருவன் மனையாளிடத்தில் மனை யாளில்லாத மற்றொருவன் பிள்ளை யையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடைய வனைச் சாருமென்பது பிரத்தியக்ஷமாகவேயிருக்கிறது. ஏனெனில், பீஜத்தைவிட நிலமுயர்ந்ததல்லவா.

- ( அத்யாயம் 9 : சுலோகம் 52)

மனுதர்மம் எரிந்த வரலாறு


1922 திருப்பூர் காங்கிரசு மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்குப் பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.


1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.


1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து 'சூத்திரன்' என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார்.


1927 திசம்பர் 4 அன்று வடார்க்காடு மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.


1927 திசம்பர் 25 அன்று அம்பேத்கர் தலைமையில் மராட்டிய மாநிலத்தில் மகத் நகரில் மனுதர்மம் எரிக்கப்பட்டது.


வரும் 17.05.1981 அன்று திராவிடர் கழக சார்பில் நாடெங்கும் மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து சாம்பலாக்கியது. 10.03.2017அன்று திராவிடர் கழக மகளிரணியினரே முற்றிலும் பங்கேற்று தமிழ்நாடெங்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.


07.02.2019 அன்று மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. சூத்திர இழிவுப்பட்டம் ஒழிய பெண்ணடிமை ஒழிய கொளுத்துவீர்! கொளுத்துவீர்!! மனுதர்மத்தை!


பிராமணனையே தொழவேண்டும்


சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.

- ( அத்யாயம் 10 : சுலோகம் 122)

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கக் கூடாது.

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத்தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற் குபயோகமானதைவிட மிகவுமதிக பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டிவரும்.

- ( அத்யாயம் 10  : சுலோகம் 129)

பெண் அடிமைத்தனம்


பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.

- (அத்யாயம் 5 - சுலோகம் 148)

கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலை பவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனா யினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!

- (அத்யாயம் 5 - சுலோகம் 154)

கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக் குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டை யடித்தலே தண்டனையாகும்.

- (அத்யாயம் 8 - சுலோகம் 379)

பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- (அத்யாயம் 9 - சுலோகம் 19)

ஆணுறுப்பு,பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.

- (அத்யாயம் 9 - சுலோகம் 35)

மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!

- (அத்யாயம் 9 - சுலோகம் 52)

விதவையிடத்தில் பெரியோர்களினநுமதி பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன்தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டானவிடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை யுண்டுபண்ண வேண்டியது இரண்டாம் பிள்ளையை ஒருபோதும் உண்டு பண்ணக்கூடாது.

- ( அத்யாயம் 9 : சுலோகம் 60)

கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனா யிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லை யென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.                                                                                                                      -

(அத்யாயம் 9 - சுலோகம் 78)

முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.   -

(அத்யாயம் 9 - சுலோகம் 94)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல் லுதல் பாதகமாகாது

(மனு அத்தியாயம் 11, சுலோகம் 65)

-  விடுதலை நாளேடு, 1.2.19

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

குருமூர்த்திகள் எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும்...



இந்தக் கார்ட்டூன் மூலம் துக்ளக் வழியாக திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் என்ன சொல்ல வருகிறார்?

கோயில் ஒன்றுக்குச் சென்ற ராகுல்காந்தி அர்ச்சகர் பார்ப்பனர் கேட்ட கோத்திரம் உள்ளிட்டவைகளுக்கு, நான் காஷ்மீர் கவுல் பிராமணர், தாத்தாத்ரேய கோத்ரம் என்று சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒருவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், திமுக தலை வர் மு.க.ஸ்டாலினும் ஆதரிக்கிறார்களாம்.

இதற்காகத் திருவாளர் குருமூர்த்தி அய் யர் கேலி சித்திரம் வரைந்து தள்ளியுள்ளார்.

இவர்கள் விரும்பும் ஹிந்து ராஷ்டிரம் என்பது கூடக் கடவுள் நம்பிக்கையற்றவரான சாவர்க்கர் கண்டு பிடித்ததுதான். அதை வைத்து நாம் கூட கேலிச்சித்திரம் வரைய முடியுமே!

அதுசரி, திருவாளர் கு.அய்யர் என்ன ஜாதி ஒழிப்பு வீரரா? தன் முதுகுப் பூணூலை அறுத்து எறிந்தவரா?

இன்னும் தங்களுடைய பிராமணத் திமிரை கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்க முன்வராத மூர்க்கத்தனம் பிடித்தவர்களுக்கு ஜாதி குறித்துப் பேசத் தகுதி உண்டா?

சென்னை நாரத கான சபையில் தாம் ப்ராஸ் எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங் கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் எனும் நூலை வெளியிட்ட இவாளின் ஜெகத்குரு - கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந் தவரான திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்?

எந்த ஆட்சியாக இருந்தாலும்; அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீக்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவர். ஆண்டவன் கூட அப்புறம்தான் - அந்தணன் தான் முதலில் (நக்கீரன் 15.11.2002)

இந்த ஜாதி - வருணத்திமிர் பிடித்த கூட்டம்தான் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல சலங்கை கட்டி ஆடுகிறது.

காங்கிரசை ஆதரிப்பது, ராகுலை ஆதரிப்பது எல்லாம், இந்தப் பார்ப்பன ஆதிக்க - மனுதர்மக் கொடியினை கையில் ஏந்தி புறப்படுகின்ற ஹிந்து வெறி பிடித்த பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்து வதற்குத்தான் - சங்பரிவார் வட்டாரத்தின் வாலை ஒட்ட நறுக்கத்தான் என்பதைக் குருமூர்த்திகள் நெஞ்சில் குறித்து வைத்துக் கொள்ளட்டும்!

- - -


2.1.2019 நாளிட்ட துக்ளக் இதழில் கீழ்க் கண்ட கேள்வி பதில் இடம் பெற்றிருக்கிறது.

கே: ஹிந்து மதத்தில் வர்ணம்தான் உண்டு, ஜாதி இல்லை' என்கிறார் திரு.சோ. ஆனால், காஞ்சிப் பெரியவரோ, 'டிவிஷன் ஆஃப் லேபர் பிரச்னையை ஜாதி - மூலம் ஹிந்து மதம் அழகாகச் சரி செய்தது' என்கிறார். முரணாக உள்ளதே?

(Division of Labour அல்ல; Division of Labourersதொழிலையல்ல - தொழிலா ளர்களை பிரிக்கிறது இந்து மதவர்ணம் என்றுதான் அண்ணல் அம்பேத்கர் சொல் லுகிறார் - அதனைத் தலைகீழாகப் புரட்டு வது ஏன்?)

ப: மகாத்மா காந்தியும், காஞ்சி பெரிய வரும் வர்ணத்தைப் பற்றி ஒரே மாதிரி கருத்து கூறுகிறார்கள். - சோவும், திலகரும் வேறு மாதிரி கருத்து கூறுகிறார்கள். - "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி'' ('உண்மை ஒன்றே. அதை விஷய மறிந்தவர்கள் பலவிதமாகப் பார்க்கிறார்கள்) என்று கூறுகிறது ரிக் வேதம். அதுபோலத்தான் காஞ்சிப் பெரியவரும், காந்தியும்; திலகரும் சோ-வும் கூறுவது முரணாகத் தோன்றுகிறது. உலக விஷயங்களில் மாற்றுக் கருத்து, மாற்று நடத்தை எல்லாமே முரணாகவே தோன்றும். இதை சோ பலமுறை கூறியிருக் கிறார். உதாரணமாக, தந்தைக்குப் பணிந் தான் ராமன், அதனால் அவன் உயர்ந்தவன். தந்தையை மீறினான் பிரஹலாதன், அதனால் அவன் உயர்ந்தவன். கணவனை வணங்கினாள் சீதை, அதனால் அவள் உயர்ந்தவள்.

கணவனை மீறினாள் மீரா, அதனால் அவள் உயர்ந்தவள். அண் ணனை மீறினான் விபீஷணன், அதனால் அவன் உயர்ந்தவன். அண்ணனுக்குப் பணிந்தான் கும்பகர்ணன், அதனால் அவன் உயர்ந்தவன். எனவே எது சரி, எது தவறு என்பது தர்ம சங்கடமான விஷயம். தர்மம் என்றாலே தர்மசங்கடம்தான். இந்த வேறு பாடுகளைப் புரிந்து கொள்ள, மற்றவர் களின் கருத்துக்களை ஏற்கா விட்டாலும், சகித்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் ஹிந்து மதத்துக்கு சகிப்புத்தன்மை இயற்கையாக உருவாகியது. ஒரு கருத்து மட்டுமே சரி என்று கூறும் சித்தாந்தங்கள் காரணமாக உலகில் இரத்த ஆறுதான் ஓடியது. எனவே, இரு முரணான கருத்துக் களை ஏற்கும் நமது சித்தாந்தம், நமக்கு சகிப்புத்தன்மையை வளர்த்தது. - இதுதான் துக்ளக்கின் குருமூர்த்தியாரின் பதில்.

ஹிந்து மதத்தில் வர்ணம் உண்டு - ஜாதி இல்லை என்று சொல்லிவிட்டாராம் சோ - இதை விடப் பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியாது. சோ கூட்டமும் குருமூர்த்தி கும்பலும் அய்யர், அய்யங்கார்கள் பற்றிக் கேள்வி பட்டதில்லையா? தந்தை பெரியா ராலும், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தாலும் இவர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை வெட்டிக் கொண் டாலும் இவாளின் தோப்பனார் பெயர்களில் ஒட்டியிருந்த அய்யர் வா(ல்)ள் என்பது ஜனாதிபதி வழங்கிய பத்மசிறீ பட்டமா?

காந்தியார் தீண்டாமை ஒழிக என்று சொன்னாரே தவிர, வர்ணம் - ஜாதிகளில் நம்பிக்கை உள்ளவர் தானே! காந்தியாரையும், சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியையும் ஒப் பிட்டு எழுதுகிறதே துக்ளக் - இது எவ்வள வுப் பெரிய மோசடி - பாஷாணத்தில் மூழ்கி எழுந்த போக்கிரித்தனம்.

இதே சங்கராச்சாரியாரை பாலக்கோட் டில் காந்தியார் சந்திக்கவில்லையா? (15.10.1927) மாட்டுக் கொட்டகையில் வைத்து காந்தியாரை அந்த சங்கராச்சரியார் சந்திக்க வில்லையா? தீண்டாமை ஒழிப்புக்கு சங்கராச்சாரியார் ஒத்துழைக்க காந்தியார் வேண்டுகோள் வைத்தபோது, இவாளின் யோகக்குருவான சங்கராச்சாரியார் அதனை நிராகரிக்கவில்லையா? (ஆதாரம்: தமிழ் நாட்டில் காந்தி: பக்கம் 575-576)

இந்த நிலையில் காந்தியாரையும், சங்க ராச்சாரியாரையும் ஒப்பிடுவது யாரை ஏமாற்றிட?

ஹிந்துமதத்தில் வர்ணம் உண்டு, ஜாதி யில்லை என்று சோ கூறிவிட்டாராம். குருமூர்த்திகளின் - ஆர்.எஸ்.எஸ்.காரர்க ளின் குருநாதரான கோல்வாக்கர் ஜாதிபற்றி என்ன கூறுகிறார்?

"நீண்டகாலமாக ஜாதி அமைப்பு முறையை சிலர் எதிர்த்து வருகிறார்கள். பழங்காலத்திலேயே ஜாதி அமைப்பு முறை இருந்து வந்திருக்கிறது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால் ஜாதி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட் டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது; உண்மையில் சொல்லப்போனால் இந்த ஜாதி அமைப்பு என்பது சமூகத்தில் ஒற்றுமை யைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது என்ற தமது “BUNCH OF THOUGHTS” என்ற நூலில் கோல்வாக்கர் எழுதிய தற்கு என்ன பதில்?

சோ சொல்லுவது சரியா - கோல்வாக்கர் சொல்லுவது சரியா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட்டும் குருமூர்த்தி அய்யர் வாள்.

குணத்தின் அடிப்படையில் தான் வருணம் என்று சாதிக்க முற்படும் சோ என்ன சொல்லுகிறார்?

"இந்த நிலையிலே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப் பட்டனர். இது பற்றி 'எங்கே பிராமணன்' தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ் விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற் படுகிற பிரிவுகளாக உருவெடுத்து விட்டன'' என்று சாதிக்கிறார். சோவின் கட்டுரையில் பிற்பகுதி முழுவதுமே இதனை மய்யமாக வைத்தே புனையப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி  கொடுத்து விட்டாலே அந்த எல்லா வற்றிற்குமே போதுமானதாகிடும்.

வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படை யிலானது அல்ல என்பது சோலின் வாதம்.

இது அடிப்படையிலேயே தவறானது என்பது இந்து மதத்தின் அடிப்படை ஆதா ரங்களைக் கொண்டே தகர்த்து விடலாம். 'சோ' குறிப்பிடும் வேதங்களுள் 'யஜுர் வேதம் ஒன்று; அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ''ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய: க்ருத: 1 ஊரூத்தஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(கடவுளின் முகத்தினின்றும் பிராமணன் பிறந்தான், தோள்களினின்றும் க்ஷத்திரியன் பிறந்தான், துடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான்.) அதர்வண வேதம் என்ன கூறுகிறது? ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்யோபவத் 1

மத்யம் ததஸ்ய யத் வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(அத்தியாயம் 19 சுலோகம் 6) யஜுர் வேதத்தில் கூறப்பட்ட அதே பொருள்தான் இதற்கும்.

மனுர்வையத் கிஞ்சிதவத் தத் பேஷஜம் - இதன் பொருள் மனு எதைச் சொன்னாரோ அது மருந்து என்பதாகும். பதினெட்டு ஸ்மிருதிகள்; மனுஸ் மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத்தக்க தன்று என்று மனுதர்ம சாத்திரம் பீடிகை கூறுகிறது. அவ்வளவுப் பெரிய அந்தஸ்து மனுதர்ம சாத்திரத்துக்கு!

அந்த மனுவானப்பட்டவரும் என்ன கூறுகிறார்?

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத் தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று முண்டான பிராமண ஷத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனி யாகப் பகுத்தார் (அத்தியாயம் ஒன்று சுலோகம் 87) வேதங்களும், மனுதர்ம சாத்திரமும் இதன் மூலம் எதை உறுதிப்படுத்துகின்றன?

பிரம்மா என்ற கடவுள் படைப்பிலேயே பிறப்பின் அடிப்படையிலேயே தன் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பிராம ணன், சத்திரியன், வைசியன், சூத்திரர்க ளைப் படைப் பித்து இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெளிவாக்கப் பட்டுள் ளதா இல்லையா?

படைக்கப்படும் போதே இந்தப் பிரிவு களை பிறப்பின் அடிப்படையில் பிரம்மா படைத்து விட்டார் என்று இந்து மத வேதங்களும், ஸ்மிருதியும் கூறிவிட்ட நிலையில், பிறப்பின் அடிப்படையில் இவை உண்டாக்கப்படவில்லை என்று சோ கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். வேதங்களையும் ஸ்மிருதிகளையும் மறுக்கும் மகா புரட்சி யாளராக சோ மாறி விட்டாரா? அல்ல - அல்ல! வேதங்கள், ஸ்மிருதிகள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விவாதிக்க முயற்சித்தால் அவாளின் இந்துத்துவா கபாலம் கழன்று விடும் என்பது அவர்களுக்கு மிக நன்றா கவே தெரியும். கடவுளேயானாலும், காந்தி யாரே ஆனாலும் அவர்களைப் பொருத்த வரை அவர்கள் காரியத்துக்கு எந்த அள வுக்குப் பயன்படும் என்பதைப் பொறுத் ததேதான்.

சோ வியாக்கியானம் செய்வது போலவே வேறு சிலரும் இந்தக் காரியத்தில் ஈடுபடு கிறார்கள். இதற்கு ஆப்பு அடிக்கும் வகை யில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார் விளக்க மாகவே கூறி இருக்கிறார். இந்து மத சமாச்சாரங்களுக்கு வியாக் கியானம் கூற சோவைவிட சங்கராச்சாரி யார் தான் தகுதியானவர் என்பதை சோவே மறுக்க முடியாதே!

காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்' - முதல் பாகம் (பக்கம் 1001-1003) என்ன கூறுகிறது?.

"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை: ஆனால், பிறப் பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்கு மேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநு சரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந் தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வரு ஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்து விட்டுப் பிறகு அவற்றில்தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண் டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான - காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப்  பேசியிருப்பாரா?

அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆத ரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? - "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்துமித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக்கொள்வதைவிட, ஆண்டிப் பரதே சியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்த னையோ மேல், என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக் ரஹம் பண்ணிவிட்ட அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்?. "நீ க்ஷத்ரிய ஜாதி யில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை - போடு சண் டையை" என்றுதான் அவனைவிடப் பிடி வாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

அப்படியானால் தர்ம புத்திரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விட வேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்தி லிருந்து இருந்து வந்திருக்கிறார்?. அவரை யும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அனுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் "ஸ்வதர்மம் என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று தான் அர்த்தமாகும். பிராமணராகப் பிறந்தும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக் காட்டிப் பேசியபோதெல்லாம் பகவான் ஆக்ஷேபித் ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் குணகர்ம விபாகச: என்றார் என்றால்,

இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றே தான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று - வெவ்வேறு விஷயங் களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை . என்று சங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்கிறார் திரு வாளர் சோ? குணத்தின் அடிப்படையில் வர்ணம் - அதற்குரிய தொழில்கள் என்பது சாத்தியமில்லை என்று பாஷ்யம் கூறி விட்டாரே - இதற்குமேல் சோவோ, குரு மூர்த்திகளோ முண்ட முடியுமா?

ஜாதி வேறு வர்ணம் வேறு என்று பிரிக்க முயலுவதற்கும் இதில் பதில் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?

ஆகா - இந்த முரண்பாடுகளை எவ்வளவு சாமார்த்தியமாக சப்பைக்கட்டுக் கட்டி பம்மாத்து வேலை பண்ணுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்!

தர்மம் என்றாலே தர்ம சங்கடம் தானாம், இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ள மற்றவர்களின் கருத்துக்களை ஏற்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டுமாம்!

திருவாளர் குருமூர்த்தி அய்யர் அவர் களே! வேறு பாடு என்பது வேறு, முரண் பாடு என்பது வேறு, இங்கே சோ கூறுவது - சங்காராச்சாரியார் கூறுவது முரண்பாடே தவிர வேறுபாடல்ல. இதனை நாணயமாக ஒப்புக்கொள்ளும் ஒழுக்கம் குருமூர்த்திக்கு இல்லாததை நாம் புரிந்து கொள்ள முடியும். அவாளிடம் முரண்பாடு ஏற்பட்டால் அதைச் சகித்துக் கொள்ள வேண்டு மாம், எப்படி?

காரணம் சோவும், சங்கராச்சாரியாரும் அவாள் அல்லவா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பற்றை யும் தாண்டிய வெறித்தனம் என்பது.

ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப் பானை விட்டுக் கொடுக்க மாட்டான் என் கிறபோது குருமூர்த்தி அய்யர் மட்டும் எப்படி விட்டுக் கொடுப்பார் என்று எதிர்ப் பார்க்க முடியும்? இதைத்தான் நம்மின மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், குருமூர்த்திகள் என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும் பெரியார் மண் அவர்களின் முகத்திரையை கிழித்தே தீரும் என்பது நினைவில் இருக்கட்டும்!

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19